சாயி நாமம்... சந்தோஷ ராகம்! எஸ்.கண்ணன்கோபாலன்
அது ஒரு வியாழக்கிழமை. சென்னை, மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ சாயிபாபா கோயிலில், 175-வது வாரமாக பாபாவின் அற்புதங்கள் பற்றிய சொற்பொழிவு நடைபெற இருப்பதாக, அன்பர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.
'அகில இந்திய சாய் சமாஜம்’ என்ற அமைப்பினரால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வகிக்கப்பட்டு வரும் அந்தக் கோயிலில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்றுவரும் சொற் பொழிவின் 175-வது சொற் பொழிவைக் கேட்பதுடன், ஸ்ரீ சாயிபாபாவையும் தரிசித்து அந்த அனுபவங்களையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.
அன்றைய தினம் காலையிலேயே சென்றுவிட்டோம், ஸ்ரீசாயி கோயிலுக்கு! மயிலை வெங்கடேச அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள அந்தக் கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.
வடக்குப் பார்த்து அமைந்திருந்த ஆலயம். உள்ளே நுழைந்ததும் பாபாவின் சந்நிதி. பக்தர்கள், வரிசையில் அமைதியாக நின்று, பாபாவை தரிசித்து வணங்கியபடி வந்தனர். எங்கு பார்த்தாலும் ஜே... ஜே-வென பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டாலும், கொஞ்சம்கூட ஆரவாரம் இல்லாமல், நிசப்தமாக இருந்தது அந்த இடம். பாபாவிடம் பக்தர்கள் கொண்டிருந்த பூரண பக்திதான் அவர்களை அந்த அளவுக்குக் கட்டுப்பாடாக வைத்திருந்தது.
இன்றைக்கு உலகம் முழுவதும் கோடானு கோடி பக்தர்களைக் கொண்டு, ஒரு மாபெரும் ஆன்மிக சாம்ராஜ்யத்தையே நிர்வகித்துக் கொண்டிருக்கும் பாபாவைப் பற்றி, கோயிலைச் சுற்றிப் பார்ப்பதற்கு முன், கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே!

உலகிலேயே மகான்களின் ஜனன பூமியாக வும், உலகம் முழுமைக்கும் ஆன்மிக ஞானத்தை அள்ளி வழங்கும் அட்சய பாத்திரமாகவும் திகழும் புண்ணிய பூமி இந்தியா என்பதில் மாற்றுக் கருத்து எவருக்குமே இருக்கமுடியாது. இந்தப் புண்ணிய பூமியில்தான் எத்தனை எத்தனை மகான்கள் அவதரித்திருக்கிறார்கள்! அதனால்தான் தியாகைய்யர், 'எந்தரோ மகானுபாவலு, அந்தரிகி வந்தனமு!’ என்று புண்ணிய பாரதத்தில் தோன்றிய அத்தனை மகான்களுக்கும் வந்தனம் செய்திருக் கிறார். அப்படி, மகான்கள் பலர் தோன்றிய நம் நாட்டில், 19-ம் நூற்றாண்டில், மகாராஷ்டிர மாநிலம் ஷீர்டியில் தோன்றிய மகான் ஸ்ரீ சாயிபாபா. பெற்றவர் யார் என்றும், பிறப்பிடம் எதுவென்றும் தெரியாதபடி, அமைதியான அந்த ஷீர்டி கிராமத்தின் எல்லையில் இருந்த வேப்ப மரத்தின் அடியில், நிஷ்டையில் அமர்ந்திருந்த கோலத்தில்தான், ஷீர்டி மக்கள் அவரை முதன் முதலாகக் கண்டனர்.
அவர் ஒரு பெரும் சித்தபுருஷர் என்பதோ, அவரால் அந்த ஷீர்டி கிராமமே புனிதத் தலமாக திகழப்போகிறது என்பதோ, அப்போது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒருசில தினங்களிலேயே அதைப் புரிந்துகொண்ட ஷீர்டி மக்களுக்கு, அவரிடம் குறையாத அன்பும், மாறாத பக்தியும் ஏற்பட்டுவிட்டது.
சாயிபாபா, ஷீர்டி மக்களின் குறைகளை எல்லாம் தீர்க்கும் குருவாகவும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றும் கற்பகவிருட்சமாகவும் திகழ்ந்தார். பல மாதங்கள் வரை அவர் அந்த வேப்பமரத்தின் அடியில்தான் அமர்ந்திருந்தார். ஒருநாள், இரவு பெருமழை பெய்தது. ஊரெங்கும் வெள்ளம்! இருந்தும்கூட, பாபா தாம் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு அங்கே இங்கே ஒரு இம்மிகூட நகரவே இல்லை.
பொழுது விடிந்தது; மழையும் ஓய்ந்தது. அப்போதுதான் ஷீர்டி மக்களுக்கு பாபாவின் நினைவு வந்தது. தங்களின் குறைகளையெல்லாம் தீர்த்து அருள்புரிந்த அந்த மகானை, இரவெல்லாம் மழையில் தவிக்கும்படியாக விட்டுவிட்டோமே என்று தங்களையே கடிந்துகொண்டவர்களாக, பாபா அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்றனர். நிச்சலனமான நிலையில் தியானத்தில் இருந்த பாபா, சற்றுப் பொறுத்து கண்விழித்தார்.

பெருமழையில் இரவெல்லாம் பாபா தவிக்கும்படியாக விட்டுவிட்ட தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த மக்கள், அவரை ஊருக்குள் வந்து தங்கும்படி கேட்டுக்கொண்டனர். அவர்களின் கோரிக்கைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த பாபா, அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே, ஊருக்குள் இருந்த ஒரு பழைய கட்டடத்தில் வந்து தங்கினார். அதுவே துவாரகாமயி. 1918-ம் ஆண்டு வரை அங்கிருந்தபடியே எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தி, பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள் புரிந்தார் பாபா.
பக்தர்கள் பலர் ஏராளமான செல்வத்தை அவர் காலடியில் கொண்டு வந்து குவித்தும்கூட, தமக்கென எதுவுமே வைத்துக்கொள்ளாமல், கடைசி வரை ஒரு பக்கிரியாகவே வாழ்ந்து சமாதி ஆன ஸ்ரீசாயி, தமக்குப் பின்னால் ஒரு சீடரைக்கூட வைத்துக்கொள்ளவில்லை. 'என்னுடைய சமாதிக்குள் இருந்தும் நான் பக்தர்களைக் காப்பாற்றி அருள்புரிவேன்’ என்பதுதான் அவருடைய அருள்மொழி. அப்படியே இன்றளவும் நடைபெற்று வருவதை நம்மால் நிதர்சனமாகக் காணமுடிகிறது.
பக்தர்களிடம் அவர் கேட்கும் தட்சணை என்ன தெரியுமா? பொறுமை மற்றும் நம்பிக்கை ஆகியவைதான்.
சமாதிக்குள் இருந்தபடியே தம்முடைய பக்தர்களைக் காப்பாற்றுவதாக பாபா கூறியிருந்தாலும்கூட, பின்னாளில் அவருடைய சமாதிக்கு வருகை தரும் பக்தர்கள் பெருமளவு குறைந்து போயினர். எனில், பாபாவின் அருள்திறம் அவ்வளவுதானா?
இல்லை. உலகம் உய்விக்க வந்த மகான்களில் அவரும் ஒருவர் அல்லவா? அவருடைய வாக்கு எப்படிப் பொய்க்கும்? உரிய காலத்தில், ஸ்ரீசாயி மகிமைகளை உலகுக்கு எடுத்துக் கூற, ஒருவர் தோன்றவே செய்தார்.
அவர்தான் பாபாவின் அஷ்டோத்திர சத நாமாவளியை இயற்றியவர். அவரைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன், வாருங்கள்... கோயிலை ஒரு சுற்று வலம் வந்துவிடுவோம்!

வரிசையில் சென்று பாபாவை நமஸ்கரித்துவிட்டு, கோயிலை வலம் வருகிறோம். ஓரிடத்தில் பக்தர்கள் வரிசையாக இருப்பதையும், அவர்களுக்கு எதிரில் மாடம் போல் இருந்த ஓர் அமைப்பில் அக்னி சுடர்விட்டு எரிந்துகொண்டிருப்பதையும் காண்கிறோம். அதுதான் 'துனி’ என்று அழைக்கப்படுவது. பாபா துவாரகாமயியில் இருந்த காலத்தில், எப்போதும் மட்டைத் தேங்காய்களையும் வேறு பல சமித்துக்களையும் போட்டு, அணையாமல் எரியவிட்டுக் கொண்டே இருப்பார். அதில் இருந்து கிடைக்கும் பஸ்பத்தையே 'உதி’ என்ற பெயரில் பிணி தீர்க்கும் மருந்தாகவும், வேண்டும் வரம் அளிக்கும் பிரசாதமாகவும் பக்தர்களுக்குக் கொடுத்து அருள்வார்.
அந்த வழக்கம், இன்று எங்கெல்லாம் பாபா கோயில் இருக்கிறதோ அங்கெல்லாம் கடைப்பிடிக்கப்படுகிறது. கோயிலில் பாபா திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்படும்போதே, உரிய பூஜைகளுடன் இந்த துனியும் எரியவிடப்படுகிறது. அனைத்து பாபா கோயில்களிலும், இந்த துனியில் இருந்து பெறப்படும் பஸ்பமே உதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.
அப்போது, துனி பூஜை நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தினசரி காலை 9 மணி அளவில் நடைபெறும் இந்த துனி பூஜையில், ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அன்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். எரியும் துனியில் 9 மட்டைத் தேங்காய்கள், நவதானியங்கள், பழங்கள், இனிப்பு வகைகள் போன்றவை ஸ்ரீ சாயி காயத்ரி பாராயணத்துடன் சமர்ப்பிக்கப்படும். துனி பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதத்துடன், உதியை நெய்யில் குழைத்து அஞ்சனமாகவும் தரப்படுகிறது.

துனி பூஜையைத் தரிசித்துவிட்டு வலம் வந்த நாம், அடுத்து குருஸ்தான் என்ற பெயரில் அரச மரத்தின் அடியில் பாபா காட்சி தந்து கொண்டிருப்பதை தரிசித்தோம். தொடர்ந்து செல்லும்போது, சுவாமிஜி குடில் நம் பார்வையில் படுகிறது. அங்கே, ஸ்வர்ண பாபா என்ற பெயரில் ஸ்ரீ சாயியின் திருவுருவமும், வெண்பளிங்கினால் ஆன ஒரு பெரியவரின் திருவுருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததைக் கண்டோம். அவர் யார் என்று அறிய, அப்போது அங்கே இருந்த அகில இந்திய சாயி சமாஜத்தின் தற்போதைய தலைவரான தங்கராஜ் என்பவரிடம் கேட்டோம்.
''அவர்தான் ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜி. ஈரோடு மாவட்டம் பவானியில் 1874-ம் ஆண்டு பிறந்த அவர், வழக்கறிஞராகப் புகழ்பெற்று விளங்கினார். பின்னர் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு, இல்லறத்தைத் துறந்து, யாத்திரை மேற்கொண்டார். அவருடைய யாத்திரையின்போது, மகாராஷ்டிராவில் இருந்த உபாசனி பாபா என்பவரைக் கண்டார். பாபாவின் ஜீவிய காலத்தில் அவருடன் பழகக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருந்தவர் உபாசனி பாபா. அவர் நரசிம்ம சுவாமிஜிக்கு சாயி பாபாவின் மகிமைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். முதலில் நரசிம்ம சுவாமிஜிக்கு பாபாவின் பேரில் அவ்வளவாக ஈடுபாடு ஏற்படவில்லை. உபாசனி பாபாவின் வற்புறுத்தலின் காரணமாக ஷீர்டிக்குச் சென்று, பாபாவின் சமாதி மந்திரில் தியானம் செய்தபோது, பாபா அவரைப் பரிபூரணமாக ஆட்கொண்டு விட்டார்.
தாம் பிறந்ததன் நோக்கமே ஸ்ரீசாயிபாபாவின் அருள்திறம் பற்றி உலகமெங்கும் பிரசாரம் செய்வதற்குத்தான் என்பதைப் புரிந்துகொண்ட ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி, 1939-ல் 'சாயிபாபா- ஓர் அறிமுகம்’ என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டார். தொடர்ந்து, 1941-ல் அகில இந்திய சாயி சமாஜம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பாபாவின் அவதார நோக்கம் பற்றியும், அவருடைய அருள்திறம் பற்றியும் பரவலான பிரசாரத்தை மேற்கொண்டார்.
1953-ம் ஆண்டு, மயிலாப்பூரில் இதோ இப்போது நாம் தரிசித்துக்கொண்டிருக்கும் இந்தக் கோயிலை ஸ்தாபித்தவர் அவர்தான். பாபாவைப் பற்றிப் பல நூல்களை எழுதியிருக்கும் ஸ்ரீநரசிம்ம சுவாமிஜிதான், இன்று பாபாவின் கோயில்களில் அர்ச்சனைக்கு உரிய மந்திரமாக விளங்கும் ஸ்ரீ சாயிபாபா அஷ்டோத்திர சத நாமாவளியையும் இயற்றினார்.''
ஸ்ரீ நரசிம்ம சுவாமிஜியைப் பற்றியும், ஸ்வர்ண பாபாவைப் பற்றியும் தங்கராஜ் சொல்லி முடிக்கவும், ப்ரியா கிஷோரின் 'சாயி சத் சரிதம்’ 175-வது வார சொற்பொழிவு தொடங்கவும் சரியாக இருந்தது.
அன்றைய சொற்பொழிவில், சாயிபாபா ஒரு மருத்துவராய் எப்படியெல்லாம் தம் பக்தர் களின் நோய்களைத் தீர்த்திருக்கிறார் என்பது பற்றிப் பல நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டுப் பேசினார் ப்ரியா கிஷோர். காலை 11 மணிக்குத் தொடங்கிய சொற்பொழிவு, சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. சொற்பொழிவு நிறைவு பெற்றதும், சாயிபாபாவுக்கு ஆரத்தி எடுத்துப் பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, கோயிலுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. அக்காரவடிசல், புளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் என அறுசுவை விருந்து போல் இருந்தது அன்னதானம்.
அடுத்து, பாபா கோயிலின் பின்புறம் இருந்த கட்டடத்தின் முதல் தளத்துக்குச் சென்றோம். அங்குதான் தியான மண்டபம் உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 300 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். தியான மண்டபத்தில் சற்று நேரம் கண்களை மூடி, தியானம் செய்துவிட்டுக் கீழே வருகிறோம். வியாழக்கிழமைகளில் பகலில் நடை சார்த்தப்படுவதில்லை என்பதால், பக்தர்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். அன்னதானமும் தொடர்ந்து நடைபெறுகிறது.
மாலை 4 மணிக்கு, சாகுல் ஹமீது என்பவர் கோயிலுக்கு வந்து, ஒரு மணி நேரம் குர்ஆன் ஓதினார். பாபா, துவாரகாமயி எனப்படும் மசூதியில் இருந்தபடியாலும், சதாசர்வ காலமும் 'அல்லா மாலிக்’ என உச்சரித்தபடி இருந்ததாலும், கோயிலில் இந்த 'குர்ஆன்’ ஓதும் நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக தங்கராஜ் தெரிவித்தார்.
மாலை 6 மணிக்கு ஆரத்தி. பாபாவுக்கு பால், தேங்காய்த் துருவல், சர்க்கரை சேர்த்த அவல் ஆகியவை நைவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. நேரம் செல்லச் செல்ல, பக்தர்களின் கூட்டமும் அதிகரித்தபடியே இருந்தது. அத்தனை பேருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டுக்கொண்டே இருந்ததைக் கண்ட போது, 'என்னிடம் வரும் பக்தர்களுக்குப் பசி என்னும் பிணி உள்பட, எந்தப் பிணியும் இருக்காது’ என்ற பாபாவின் வாக்கு நம் நினைவில் தோன்றியது. ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும், பிரசாதங்கள் விதம்விதமாக மாறிக்கொண்டே இருந்தன.

இரவு மணி 9-ஐக் கடந்த பிறகும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டேதான் இருந்தது. கோயிலுக்கு பக்தர்கள் வருகிறார்களே தவிர, யாரும் திரும்பிச் செல்வதாகத் தெரியவில்லை. அத்தனை பேர் முகங்களிலும் அப்படி ஒரு பரவசம்! வியாழக் கிழமைகளில் நடைபெறும் இரவு ஆரத்தியை தரிசிக்கப்போகிறோம் என்பதால் ஏற்பட்ட பரவசம் அது.
இரவு 10-45 மணிக்கு, ஷீர்டி ஆரத்தி தொடங்கு கிறது. அப்போது பழம், கல்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பால் நைவேத்தியம் செய்யப்படுகிறது. ஆரத்தி நிறைவு பெற்றதும், பாலும் பழமும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
இரவு 11-30 மணியளவில் நடை சார்த்தப் படுகிறது. பாபாவின் அலங்காரங்கள் களையப் பெற்று, கதராடையும் ருத்திராட்ச மாலையும் அணிவிக்கப்படுகின்றன. புழுங்காமல் இருப்பதற்காக ஒரு மின் விசிறியும், சிறிய பாத்திரத்தில் பாபா இரவு குடிப்பதற்கு குடிநீரும் வைக்கப்பட்டதைக் கண்டு, அவர்களின் பாவபூர்வமான பக்தியை அறிந்து சிலிர்த்துப் போனோம்.
ஆலயத்தை விட்டு வெளியே வருகிறோம். அன்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தபடி பரபரப்பாகக் காணப்பட்ட சாலைதானா அது என்று நாம் திகைக்கும்படியாக, சாலை வெகு அமைதியாகக் காணப்பட்டது.
அந்த ஒரு நாள் முழுவதும் சாயி பக்தர்களின் பரவச முகங்களைக் கண்டதன் பயனாக, அந்தப் பரவசம் நம்மையும் பற்றிக்கொள்ள, அன்றைய பொழுதெல்லாம் நம் காதுகளில் ஒலித்த வண்ணம் இருந்த சாயி நாமம் சந்தோஷ ராகமாகி நம் மனத்தில் திரும்பத் திரும்ப ஒலித்து சாந்தியும் சந்தோஷமும் நிலவச் செய்தது.
சாயிநாதர் திருவடி போற்றி! போற்றி!!
படங்கள்: பா.ஓவியா, க.பாலாஜி