Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 15

வாழ்க்கை ஒரு வாய்ப்பு! சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

விதைக்குள் விருட்சம் - 15

வாழ்க்கை ஒரு வாய்ப்பு! சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:

வாழ்க்கை ஒரு _

அரிய வாய்ப்பு; பயன்படுத்திக்கொள்!
அழகான கவிதை; பாராட்டு!
கனவு; உணர்ந்துகொள்!
போராட்டம்; துணிந்து போராடு!
கடமை; அர்ப்பணிப்போடு செய்!
விளையாட்டு; மகிழ்ச்சியோடு விளையாடு!
வாக்குறுதி; தவறாமல் நிறைவேற்று!
துயர மேடை; துணிந்து நில்!
சங்கீதம்; இனிமையாகப் பாடு!
குழப்பம்; அதைப் புரிந்துகொள்ள முயல்!
ஒரு சோகப் புயல்; எதிர்த்து நில்!
அதிர்ஷ்டம்; பற்றிக்கொள்!

- அன்னை தெரஸா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டல், மனம், அறிவு, ஆன்மா ஆகியவற்றின் கூட்டுப்பொருள்தான் மனித வாழ்க்கை. 'உடலைப் பேணு. மனத்தைக் கட்டுப்படுத்து. அறிவைப் பயன்படுத்து. ஆன்மாவின் சக்தியை உணர்ந்துகொள்’ என்று பெரியோர்கள் வழிகாட்டியுள்ளனர். அப்படி, ஆன்மாவின் சக்தியை அறிய உதவுபவையே நமது சமயங்களின் வழிகாட்டுதல்கள்.

மானுட தர்மம் எனப்படுவது ஆன்மாவின் தன்மையை வைத்தே அமைகிறது. 'இவன் என் நண்பன், இவன் என் உறவினன்’ என்று எண்ணிச் செய்யும் கடமைகள் எல்லாம் உடல், மனம், அறிவு சம்பந்தப்பட்டவை. 'இவன் ஒரு மனிதன்: இவனுள் நிறைந்திருப்பது ஒரு ஜீவன். அந்த ஆத்மாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஒன்று உண்டு’ என்று எண்ணிச் செயல்படும்போதுதான், உண்மையான மானுட தர்மம் வெளிப்படுகிறது.

ஆன்மாவைப் பற்றிய ஞானம் ஏற்படும்போது, துன்பங்களுக்குக் காரணமான ஆசை, பேராசை, கோபம், பொறாமை, வெறுப்பு ஆகிய துர்குணங்கள் தாமாகவே மறைந்துவிடுகின்றன.

விதைக்குள் விருட்சம் - 15

மானுட வாழ்வில் லட்சியம்!

த்வைதம் என்ற சித்தாந்தம், ஜீவாத்மா என்ற மனித ஆத்மாவையும் பரமாத்மா எனும் இறைவனையும் குறிப்பிடுகிறது. ஜீவாத்மாக்கள் அனைத்தும் புண்ணிய ஆத்மாக்களாக மாறும்போது, அவை பரமாத்மாவின் திருவடிகளை அடைகின்றன என்பது த்வைதம். 'பரமாத்மாவின் அம்சமே ஒவ்வொருவருள்ளும் ஜீவாத்மாவாக நிறைந்துள்ளது’ என்பது அத்வைதம். 'இரண்டும் ஒன்றே’ எனக் கருதினாலும், 'இரண்டும் ஒன்றாகக் கலக்கவேண்டும்’ என்று சொன்னாலும், மனித வாழ்க்கையைப் பயனுறச் செய்வதில், ஆத்மாவுக் குள்ள சம்பந்தமே இங்கு உணர்த்தப்படுகிறது.

'உடல் அழியும். அப்போது மனமும் அறிவும் மறையும். ஆனால், ஆத்மா அழியாது’ என்று பகவத் கீதையில் தெளிவாகக் கூறியுள்ளார் ஸ்ரீகிருஷ்ணன். அழிவில்லாத ஆத்மாவைப் புனிதமாக வைத்துக்கொள்ள உடலால் தூய்மையும், மனத்தால் ஒழுக்கமும், அறிவாற்றலால் தர்மங்களைக் காக்கும் பணியையும் மேம்படுத்திட வேண்டும். 'Religion’ என்ற ஆங்கில வார்த்தைக்கு, இறைவனோடு மீண்டும் கலத்தல் என்று பொருள். Ligion என்றால் 'Link’ - ஒன்றுசேருதல் என்று பொருள். Re-ligion என்பது, 'மீண்டும் ஒன்று சேர்தல்’ என்பதைக் குறிக்கும். மானிடராகப் பிறந்தவர்கள் உடல், அறிவு, மனம் ஆகியவற்றால் கிடைக்கும் சக்திகளை ஒன்றுபடுத்தி, அதையே ஓர் ஆன்மிக சக்தியாக உருவாக்கவேண்டும். ஆன்மாக்கள் சரீரத்தில் இருந்து விடுதலை அடையும்போது, அவை மீண்டும் ஒரு சரீரத்தைச் சென்றடைந்து, உயரிய ஆன்மிக சக்தியாக மாற வழிவகுக்க வேண்டும். இதுவே மானிட வாழ்க்கையின் லட்சியம்.

விடை சொல்லும் கீதை

ஆன்மாவின் சக்தியை உணர்வதே ஆன்மிகம். நமது வேதங்கள், சமய நூல்கள், இதிகாச- புராணங்கள் ஆகிய அனைத்தும் ஆன்மாவின் சக்தியை வளர்க்கவும், அதனைக்கொண்டு வாழ்வில் வெற்றி பெறவுமே வழிகாட்டுகின்றன. ராமாயண நாயகன் ஸ்ரீராமனின் மானிட உடலும், அதனுள் அடங்கியிருந்த அறிவாற்றலும் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால், ராமனின் ஆத்மா இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பதை நம்மால் மறுக்கமுடியாது. சத்யம், தர்மம், அன்பு ஆகிய உன்னத பண்பாடுகளுக்கு இலக்கணமாகத் திகழும் ஸ்ரீராமனின் ஆத்மா, இன்றும் அவன் திருநாமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அதுபோலவே, கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணன் நிகழ்த்திய லீலைகளும், அவன் உரைத்த கீதையும் என்றும் அழியாமல், நமது ஜீவாத்மாக்களை இன்றும் வழிநடத்திச் செல்கின்றன.

ஆத்மா என்பது எது? அது மனித உடல், மனம், அறிவு ஆகியவற்றுடன் என்ன சம்பந்தம் வைத்திருக்கிறது? உடல் அழியும்போது ஆத்மாவும் அழிந்துவிடுமா? அப்படி அழியாவிட்டால், அது எங்கே சென்று சங்கமமாகிறது? இம்மாதிரியான கேள்விகள் எல்லோர் மனத்திலும் தோன்றுவது இயல்புதான். இதற்கெல்லாம் விடை, பகவத் கீதையில் அடங்கியுள்ளது. கீதையின் சாரத்தைத் தெரிந்துகொண்டால், ஆன்மாவின் தத்துவம், அதன் வலிமை, வழி காட்டுதல் ஆகியவற்றை உணர்ந்துகொள்ளலாம். 'உபநிஷதங்களைப் பசுவாக்கி, கோபாலனான ஸ்ரீகிருஷ்ணன் கறந்த, அமிர்தம் போன்ற பால்தான் பகவத் கீதை’ என்று கீதையின் சிறப்பு விளக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் கீதை

பல தருணங்களில், நமது நாட்டிலும் வீட்டிலும் உள்ள பல சிறப்பான அம்சங்கள் நமக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும், அதை முக்கியம் என்று நாம் கருதுவது இல்லை. அவற்றின் பெருமையைப் புரிந்து, கொண்டாடுவது இல்லை. யாராவது வெளிநாட்டு அறிஞர்களோ, விஞ்ஞானிகளோ அதைப் பற்றி உயர்வாகச் சொல்லும்போதுதான், அதன் சிறப்பு நமக்குப் புலனாகிறது.

ஒருமுறை, தக்ஷிணேஸ்வரத்துக்கு வந்த அன்பர் ஒருவர், ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சென்று, ''குருவே, திடீரென நேற்று எனக்கு ஒரு ஞானம் ஏற்பட்டது. ராமநாமத்தின் பெருமை என்ன என்பது தெரிய ஆரம்பித்தது'' என்றார். உடனே பரமஹம்சர், ''ஏன்... யாரேனும் வெளிநாட்டுக்காரர் வந்து அதுபற்றிச் சொன்னாரா?'' என்று நகைச்சுவையாகக் கேட்டாராம். இந்த நிலை இன்றும் இருப்பதை அனைவரும் அறிவர்.

அந்த வகையில், ஸ்ரீமத் பகவத் கீதையின் பெருமையை உலகுக்கும், குறிப்பாக இந்தியர்கள் பலருக்கும் எடுத்துச் சொல்லக் காரணமாக இருந்தவர், லார்டு வாரன் ஹேஸ்டிங்ஸ். பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலான இவர் (கி.பி 1773-1784), தம்முடன் பணியாற்றிய ஓர் இந்தியர் மூலம் கீதையின் தத்துவங்களைத் தெரிந்து கொண்டார். அத்துடன், கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச்செய்து, உலகனைத்தும் பயன் பெற வழிசெய்தார். அவரது வேண்டுகோளின்படி, சார்லஸ் வாகின்ஸ் என்னும் ஆங்கிலப் பேரறிஞரே, பகவத் கீதையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூலுக்கு வாரன்ஹேஸ்டிங்ஸ் வழங்கிய முன்னுரை முக்கியத்துவம் வாய்ந்தது.

‘The writers of the Indian philosophies will survive when the British dominion in India shall long have ceased to exist.
 

I hesitate not to pronounce the Gita’s performance of great orginality of sublimity of conception. Reasoning and diction almost unequalled and a single exception amongst all the known religions of mankind.’

'இந்தியாவிலிருந்து, ஆங்கிலப் பேரரசின் ஆட்சி ஒருநாள் முடிவுறும். அப்போதும் இந்தியாவின் தத்துவப் பொக்கிஷங்களை வழங்கிய எழுத்தாளர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். பகவத் கீதையின்மூலாதார தத்துவங்கள், கருத்துச் சுருக்கங்கள், காரண காரிய ஆராய்ச்சிகள், மொழிச் சிறப்பு ஆகியவற்றுக்கு உலகில் ஈடு இணை கிடையாது. உலகம் அனைத்தும் அறிந்த மனித இனத்துக்கான சமய நூல்களில் இது ஒரு விதிவிலக்கு! இது மிக்க சிறப்புடையது ஆகும். இதைக் குறிப்பிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.’

- வாரன் ஹேஸ்டிங்ஸ்’

இதைத் தொடர்ந்து, மேலைநாட்டு அறிஞர்கள் பலரும் பகவத் கீதையைப் பாராட்டியுள்ளனர். அன்னிபெசன்ட் அம்மையார் இதனை மீண்டும் ஒருமுறை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, உலகறியச் செய்தார். இதையெல்லாம் இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், 'மேல்நாட்டவரின் சிந்தனைகளே விஞ்ஞானபூர்வமானவை. அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நம்மவர்களிடம் அத்தனை சிந்தனை வளம் இல்லை’ என, இன்றைக்கும் பலரின் மனத்தில் பதிந்து கிடக்கும் தவறான எண்ணத்தைப் போக்கவே!

(விருட்சம் வளரும்)

விதைக்குள் விருட்சம் - 15

ஆதிசங்கரர் பெற்ற ஞானம்...

வ்வொருவருக்குள்ளும் பிரம்மம் அடங்கியுள்ளது என்பதை, 'அஹம் பிரம்மாஸ்மி’ என்ற அத்வைத தத்துவத்தின் மூலம் உலகுக்கு எடுத்துக்காட்டியவர், ஜகத்குரு ஆதிசங்கரர்.

ஒருமுறை, காசி மாநகரத்து வீதியில் அவர் சென்றுகொண்டிருந்த போது, புலையன் ஒருவன் எதிர்ப்பட்டான். அழுக்கான மேனி, பரட்டைத் தலை, கந்தல் துணிகள் அணிந்தவனாக, நான்கு நாய்கள் பின்தொடர வந்தான் அவன். அவனை தூரத்திலேயே கவனித்துவிட்ட ஆதிசங்கரர், குளித்துமுடித்து திருநீறு பூசி, ஜபம் செய்துவிட்டு வரும் தன்னுடைய புனிதமான மேனி, அவன்மீது தீண்டி மாசு அடைந்துவிடக் கூடாது என்று எண்ணினார். எனவே, பாதையில் இருந்து சற்று விலகி,  அந்தப் பாதையில் சிறிது தீர்த்தம் தெளித்துவிட்டு, மேலே நடந்தார். அதைக் கவனித்த புலையன், சட்டென்று அவரை வழிமறிப்பதுபோல் எதிரில் வந்து நின்றான்.

''எதைப் பார்த்து தாங்கள் விலகினீர்கள்? என் உடலைப் பார்த்தா? தோற்றத்தைப் பார்த்தா? அல்லது, ஆன்மாவைப் பார்த்தா?'' என்று கேட்டான்.

'அஹம் பிரம்மாஸ்மி எனக் கூறும் தாங்கள், எல்லா உடல்களிலும் ஆன்மாவாக நிறைந்திருப்பவன் இறைவனே என்ற அத்வைத தத்துவத்தைக் கூறும் நீங்கள், என்னைக் கண்டு ஏன் விலகினீர்கள்?’ என்று அவன் கேட்டதுபோல் ஆதிசங்கரருக்குத் தோன்றியது. அந்த நிமிடம், அவன் புலையனாகத் தோன்றாமல், சாட்சாத் பரமேஸ்வரனாகவே அவர் கண்களுக்குத் தோன்றினான்!

உடல்களில், அறிவாற்றல்களில், மனங்களில் பேதங்கள் தோன்றினாலும், ஆன்மா என்பது ஒன்றுதான். அது தெய்வீக சக்தியின் அம்சம். அதில் பாகுபாடுகள் இல்லை. அதை ஆதிசங்கரர் உணர்ந்தார். அதையே பின்னர் உலகம் அனைத்துக்கும் உணர்த்தினார்.

ஒவ்வொருவருக்குள்ளும் அழிவில்லாத தெய்வ சக்தியாகத் திகழ்கிறது ஆன்மா. அதனைக் கொண்டு நாம் செய்யும் சாதனைகளே அமானுஷ்யமான மானுட சக்தி!