அருட்களஞ்சியம்

மதுவிரி கோதை மடவரற்(கு) அம்ம
புது விருந்துண்ண உண்ண் ண
அதிசயம் விளைக்கும்நின்
அற்புதக் கூத்தே!
- குமரகுருபரர்
சிவானந்த நடனம்!
எல்லா வஸ்துக்களுக்குள்ளும் இறைவன்தான் இருக்கிறான் என்று சொன்னால் ஆட்சேபம் ஒன்றும் இல்லை. எல்லா பூண்டுகளுக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்றும் சொல்லலாம். எல்லா பிராணிகளுக்குள்ளும் அவன் இருக்கிறான் என்றும் சொல்லலாம். ஆனால் நமக்குள்ளேயும் இறைவன் இருக்கிறான் என்று சொல்லும்போது வருகிறது ஆபத்து!
நம்முடைய உடல், உயிர் (உடலில் நிகழும் மாறுபாடுகள்), உணர்ச்சி ஆகிய மூன்று தத்துவங்களும் இறைவனது தத்துவங்கள் என்று சொல்லவரும்போது நமக்கே ஆபத்து வந்துவிடுகிறது. அதன் பலனாக, நம்முடைய சொந்த தத்துவங்கள் எல்லாம் இல்லாமல் போய்விடுகின்றன. அதாவது எரிபட்டு போகின்றன!
இந்த விஷயத்தை நம்மவர்கள் சொல்லும்போது, 'இறைவன் அக்னிமயமாயிருக்கிறான்.'' என்று சொன்னார்கள்.

பேரண்டத்தை நிறைத்துக்கொண்டிருக்கும் அண்டங்கள் எல்லாம் எங்கும் நிறைந்ததாயுள்ள அந்த அக்னிக்கு இரையாகிவிடுகின்றன. பேரண்டத்தையே சுற்றிச் சுழன்று வரும் அக்னிப் பிரவாகமாக இறைவனுக்கு உருவங் கொடுத்தார்கள் நம் பெரியோர்கள். சிவபெருமானது நடனம் அந்த உருவமேயாகும்.
இப்படி எல்லாவற்றையும் இறைவன் நிர்மூலம் பண்ணினாலும் அதனால் ஆன்மா அடைவது பேரானந்தமே!
ஆகவே, அக்னிமயமான நடராஜ தத்துவத்துக்குள் அருளாகிய தாய் தத்துவமும் இருக்கவே செய்கிறது. தாயான பார்வதிதேவி அந்த நடனத்தைக் கண்குளிர பார்த்து அனுபவிக்கிறாள்.
கலை வல்லார் கனுதேசாய், இந்தப் படத்தில் சிவபெருமானது ஆனந்த நடனத்தை அக்னிப் பிரவாகமாகவும், பார்வதிதேவியின் கருணையைத் தண் தாமரையோடு ஒட்டிய நீலமேக வர்ணமாகவும் சித்திரித்திருக்கின்றார்.
குமரகுருபரரின் பாடலும் அந்த உண்மையையே நன்றாக எடுத்துச் சொல்கிறது. அக்னி மயமான சிவபெருமானுடைய அற்புத நடனத்தைப் பார்க்கப் பார்க்கப் பார்வதிதேவிக்கு எவ்வளவு புதிய புதிய அதிசயங்களும் ஆனந்தங்களும் ஏற்படும் என்பதை நினைக்கும்போது குமரகுருபரருக்கு ஒரே வியப்பாகப் போய்விடுகிறது. அந்த வியப்பு பாடலின் அமைப்பிலும் அற்புதமான முறையில் வெளியாகிறது.
ஸோபான பஞ்சகம்
ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் கைவல்யத்தை அடையும் காலத்தில், சிஷ்ய கோடிகள் அவரை வணங்கி, ''தாங்கள் எங்களுக்குச் சுலபமாக நல்வாழ்வு நடத்தி மேன்மை பெரும் வழியைச் சுருக்கமாகக் கூற வேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டார்கள். அது சமயம் ஆசார்யாள் 'ஸோபான பஞ்சகம்’ என்னும் ஐந்து சுலோகங்களில், கடமைகளையெல்லாம் விவரித்தார்கள். அவை:
நித்யம் வேதம் ஓது. அவ்வேதத்தின் விதிக்கிணங்க கர்மத்தை நன்கு செய். அக்கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூசனையைச் செய். இதைத் தவிர, வேறு காம்ய பலன்களில் புத்தியைச் செலுத்தாதே! பாபப் பெருக்கை உதறித் தள்ளு. உலகப் பற்றையொட்டிய இன்பங்களெல்லாம் முடிவில் துயரங்களாகவே மாறுகின்றன என்னும் உண்மையை இடையறாது மனத்தில் இருத்திக் கொள். தன்னைத்தான் அறிவதில் ஆவலை வளர்க்க முனை. குறுகிய தன்னலப் பற்றிலிருந்து மீட்டுக்கொள்.
நல்லோர்களிடத்தே உறவு கொள். பகவானிடத்தில் அசையாத அன்பை நிலை நிறுத்து. தன் புலன்களை அடக்குதல் முதலிய உத்தம குணங்களைத் தீவிரமாகப் பழகிக் கொள். தாமதியாமல் இல்லறத்திற்குரிய கர்மங்களை விடுத்துத் துறவறத்தை மேற்கொண்டு ஆத்மஞானியை குருவாக நாடி, அன்னார் திருவடித் தொண்டை இடையறாது மேற்கொள். அன்னாரிடம் ப்ரணவோப தேசத்தை வேண்டிக்கொள். வேதங்களின் முடிவான பொருளையுரைக்கும் வாக்கியங்களைக் கேட்டு அறி.

மறைமுடி வாக்கியங்களின் பொருளை நன்கு ஆராய்ந்து கண்டறிந்து, அம்முடிவையே மேற்கொள். வீண் தர்க்கவாதங்களில் ஈடுபடாதே! வேதத்தின் முடிவான பொருளை அறிவதற்குத் துணை செய்யும் நியாயமான காரணங்களை மாத்திரம் நன்கு ஆலோசித்துக்கொள். எங்கும் நிறைந்த பரம்பொருளே இவ்வுடலிலும் நானெனும் அறிவுப் பொருளாக நிற்பது என்ற உண்மையை இடைவிடாது நினைவிலிறுத்திக் கொள். நான் ஞானவானென்னும் கர்வத்தை அறவே ஒழி. இவ்வுடலே நானென்ற எண்ணத்தையும் விடு. படித்த மேதாவிகளுடன் வாதம் செய்ய வேண்டாம்.
நாள்தோறும் பீடிக்கும் பசியெனும் பிணிக்கு பிக்ஷையாம் அன்னத்தை மருந்தாக உட்கொள். ருசியுள்ள ஆஹாரத்தைத் தேடாதே. தெய்வ வசத்தினால் தானாகக் கிடைத்ததைக் கொண்டு சந்தோஷம் அடை. குளிர், உஷ்ணம் போன்ற ஒன்றுக்கொன்று மாறிவரும் இடைஞ்சல்களை, பொறுமையை மேற்கொண்டு, பொருட்படுத்தாமல் இரு. பயனில்லாமல் ஒரு வார்த்தைகூட வாயினின்றும் வெளிவராதிருக்கும்படி ஜாக்கிரதையாயிரு. எவ்விஷயத்திலும் பற்றற்ற நடுநிலையை விரும்பு. உலக ஜனங்களின் போற்றுதலையோ தூற்றுதலையோ மனத்தில் வாங்கிக்கொள்ளாதே.
தனித்திருக்கும் நிலையாம் ஏகாந்த வாஸத்தின் வாழ்வை நாடு. உயர்வினும் உயர்வான பரம்பொருளிடம் சித்தத்தை லயிக்கச் செய். எங்கும் நிறைந்து எல்லாமாய் நின்ற ஒரே பொருளான ஆத்மாவை அந்தப் பரிபூர்ண நிலையில் பார். ஆத்மா ஒன்றே உண்மையில் எல்லாமாய் நிற்பதால், இப்பிரபஞ்சம் எனப்படும் எல்லாப் பொருள்களும் வெறுந்தோற்றமே எனும் தெளிவையடை. இவ்விதத் தெளிவினால் முன் செய்வினை களையெல்லாம் அழித்து விடு. இவ்விதத் தெளிவின் பலத்தினால் வரும் காலத்தில் நேரிடும் கர்மங்களிடம் ஒட்டாமல் இரு. இந்த ஜன்மத்தின் சுக துக்கங்களை சந்தோஷத்துடன் ஏற்று அனுபவித்துவிடு.
இவ்வளவு வினைகளையும் கடந்த நீயே பரம்பொருள்.
- 1951 விகடன் தீபாவளி மலரில் இருந்து...