Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 7

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 7

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளைப் பற்றி தாம் இயற்றிய அஷ்டோத்திர சத நாமாவளியைக் கேட்டு, சுவாமிகள் ஒன்றும் சொல்லாமல், முகத்தில் எந்த ஒரு பாவமும் காட்டாமல் நிச்சலனமாக இருந்தபடியால், மைசூர் மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார், தாம் ஏதேனும் தவறாகக் குறிப்பிட்டுவிட்டோமோ என்று சற்றே மனக்கலக்கம் கொண்டார்.

மன்னரின் மனக் கலக்கத்தை மேலும் அதிகப்படுத்த விரும்பாதவர்போல் சுவாமி கள், ''இது எனக்குப் பொருத்தமான தாக இல்லை'' என்றார்.

''என்ன குறை இருக்கிறது என்று சுவாமிகள் எடுத்துச் சொன்னால் திருத்திக் கொள்கிறேன்'' என்றார் மன்னர் பவ்வியமாக.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அஷ்டோத்திர சத நாமாவளி என்னவோ பிரமாதமாகத்தான் இருக்கிறது. ஆனால், இதில் என்னை மட்டும் பிரத்யேகமாகக் குறிப்பிடக்கூடிய ஏதேனும் ஒரு நாமா இருந்தால்தானே இதை எனக்கான அஷ்டோத்திர சத நாமாவளி என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியும்?'' என்றார் சுவாமிகள்.

சுவாமிகளின் துஷ்ட நிக்ரஹ சிஷ்ட அனுக்ரஹ சக்தியைப் பற்றியும், சத்ய சங்கல்பம் பற்றியும், சுவாமிகள் ஒன்றைச் செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் எப்படியும் அதைச் செய்தே முடிக்கக்கூடியவர் என்பது பற்றியும் நன்கு அறிந்தவரான மன்னர், சுவாமிகளின் இந்த குணாதிசயத்தைக் குறிப்பிடும்படியாக 'ப்ரதிஷார்தசாதக’ என்றொரு நாமாவையும் சேர்த்திருந்தார். எனவே, வேறு எந்த நாமாவைச் சேர்த்தால், அது சுவாமிகளுக்கான பிரத்யேக நாமாவளியாக அமையும் என மன்னர் குழம்பினார்.

துங்கா நதி தீரத்தில்... - 7

சுவாமிகளின் வயது காரணமாக, கேட்கும் திறன் சற்றே குறைந்திருந்தபோது, 'நான் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதை நான் கேட்க முடியாது’ என்று விளையாட்டாகவும் நகைச்சுவையுடனும் அவர் குறிப்பிடுவது உண்டு. இதை மனத்தில் கொண்டுதான், ''என்னை உத்தேசித்து எழுதப்பட்ட இந்த ஸ்தோத்திரத்தில், மற்றவர்களிடம் இல்லாமல் என்னிடம் மட்டுமே காணப்படுகிற ஒரு லட்சணத்தைக் குறிக்கும் ஒரு நாமா இருந்தால்தானே இது எனக்கான ஸ்தோத் திரம் என்று சொல்லமுடியும்?'' என்று கேட்டார்.

மன்னரும், சுவாமிகள் என்ன நாமாவைச் சேர்த்துக் கொள்ளச் சொன்னாலும் சேர்ப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறினார்.

''சொல்கிறேன். ஆனால், நான் சொல்லும் நாமாவை நீங்கள் சேர்த்துக் கொள்ளமாட்டீர்கள்'' என்று சொல்லிப் புன்னகைத்தார் சுவாமிஜி. தொடர்ந்து, ''சண்டீஸ்வர க்ருபாலந் பாதிர்யபரிபூஷித:'' என்ற நாமாவைக் குறிப்பிட்டுக் கூறினார். 'சண்டீஸ்வரருடைய கிருபையால் கிடைக்கப்பெற்ற செவிட்டுத் தன்மையால் அலங்கரிக்கப்பட்டவர்’ என்பது இதன் பொருள். தம்முடைய குறையைக்கூட நகைச்சுவையாக இப்படிக் குறிப்பிட்டார் சுவாமிஜி. சுவாமிகளின் விருப்பத்தின்படியே அந்த நாமா ஸ்தோத்திரத்தில் சேர்க்கப்பட்டது.

சிவஸ்வாமிக்கு யோகப்பட்டம் கொடுப்பதற் கான நாள் நிச்சயம் செய்யப்பட்டது. அதன்படி, அட்சய வருடம், ஆடி மாதம், சஷ்டி திதி கூடிய சுபதினத்தில், காலை 6 மணிக்கே அரண்மனையில் இருந்து பல்லக்கு, சாமரம், பரிவாரங்களை லக்ஷ்மிநரசிம்ம சாஸ்திரிகளின் இல்லத்துக்கு அனுப்பி, தக்க மரியாதைகளுடன் அரண்மனைக்கு வரவழைத்தார்கள்.

ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளின் ஆக்ஞையின் பேரில், லக்ஷ்மிரமணர் கோயிலில் சிவஸ்வாமிக்கு யோகப்பட்டம் அளிப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்னர் அங்கிருந்து 'மைசூர் காளஞ்சி ஏரி’ என்ற பெரிய குளத்துக்கு அழைத்துச் சென்றனர். சுவாமிகளும் அவ்விடம் வந்து சேர்ந்தார்கள். சிவஸ்வாமி, அங்கு நீரின் மத்தியில் நின்று, செய்யவேண்டிய சம்பிரதாயச் சடங்குகளைச் செய்து முடித்து, சந்நியாச ஆஸ்ரமம் மேற்கொள்வதற்கு உரிய காவி வஸ்திரங்களைப் பெற்று, மறுபடியும் லக்ஷ்மிரமணர் கோயிலுக்கு வந்து சேர்ந்தார். அங்கே சிவஸ்வாமிக்கு, ஆச்சார்ய சுவாமிகளால் மஹா மந்த்ரோபதேசம் செய்யப்பட்டது.

அடுத்தபடியாக, யோகப்பட்டம் கொடுக்க வேண்டும். அவருக்கு என்ன தீக்ஷா நாமம் கொடுக்கவேண்டும் என்று சுவாமிகள்தான் முடிவு செய்யவேண்டும். தம் குருவான அபிநவ சச்சிதானந்த பாரதி சுவாமிகளின் பெயரைச் சூட்டவேண்டும் என்று சுவாமிகளும், தம்முடைய குருவான ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளின் பெயர் இருக்கவேண்டும் என்று மன்னரும், சிவஸ்வாமி பிறப்பதற்கு முன்பே அவருக்கு சங்கல்பித்துக் கொண்ட சிவநாமம் சம்பந்தப்பட்டிருக்கவேண்டும் என்று அங்கிருந்த பண்டிதர்களும் அபிப்பிராயம் கொண்டிருந்தார்கள். எல்லோரும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளும்படியாக, சிவஸ்வாமிக்கு 'சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்ம பாரதி’ என்று யோகப்பட்டம் கொடுக்கப்பட்டது.

துங்கா நதி தீரத்தில்... - 7

இப்படியாக ஸ்ரீசாரதையின் திருஉளப்படியும், ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளின் சங்கல்பத்தின்படியும், சிவஸ்வாமி ஸ்ரீசாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக நியமனம் செய்யப்பட்டு விட்டார்.

ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகளின் தபோ வலிமையும் யோகசித்தியும்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்றால், அது சற்றும் மிகையில்லை. சுவாமிகளின் தபோவலிமை மற்றும் ஆற்றல் குறித்து நன்கு அறிந்திருந்தபடியால்தான், மைசூர் மன்னர் நம் சுவாமிகளிடம் மிகுந்த விநயத்துடன் கூடிய பக்தி கொண்டிருந்தார்.  சுவாமிகளிடம் பாராமுகமாக இருந்த மன்னர்களும்கூட ஒரு கட்டத்தில் சுவாமி களைச் சரணடைந்த சம்பவங்களும் உண்டு.

சிருங்கேரி சாரதா பீடத்தை அலங்கரித்த ஆசார்ய ஸ்வாமிகள் அனைவரும், 'ராஜ ரிஷிகள்’ என்று சொல்லும்படியாக, மன்னர்களால் மதிக்கப் பெற்றவர்கள். சிருங்கேரி சாரதா பீட ஆசார்ய சுவாமிகள், ஏதேனும் ராஜாவின் சமஸ்தானத் துக்குச் செல்வதாக இருந்தால், முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படும். அதன் பேரில் சமஸ்தானத்தின் மன்னர் கோட்டை வாசலுக்கே வந்து, சுவாமிகளை உரிய மரியாதைகளுடன் வரவேற்று, சுவாமிகள் எழுந்தருளி இருக்கும் பல்லக்கை சுமக்கும் பாவனையாகப் பிடித்துக் கொண்டு சற்று தூரம் நடந்து வருவது மரபு.

ஒருமுறை, சுவாமிகள் அன்றைய மத்தியப் பிரதேசத்தின் தலைநகரமான நாக்பூருக்கு விஜயம் செய்ய இருந்தார். சுவாமிகளின் விஜயம் குறித்து முன்கூட்டியே அப்போது இருந்த மன்னருக்குத் தகவலும் அனுப்பப்பட்டுவிட்டது. எனினும், மன்னர் கோட்டை வாசலுக்கு வந்து சுவாமிகளை முறைப்படி வரவேற்கவில்லை. காரணம், சுவாமிகளிடம் அவருக்கு பக்தியோ நம்பிக்கையோ கொஞ்சம்கூட இல்லை.

அவருடைய தாயார் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும்கூட மன்னர் கேட்கவில்லை. மன்னர் நேரில் வந்து முறைப்படி வரவேற்காதபடியால், சுவாமிகள் நகருக்குள் செல்லாமலே, காமடீலஷ்கர் என்ற இடத்தில் தங்கிக் கொண்டு, ஸ்ரீமடத்தின் செலவிலேயே ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜை முதலான பணிகளை நிறைவேற்றிக் கொண்டார். இதற்கிடையில் சுவாமிகள் தங்கியிருந்த இடத்துக்கு வந்த அரண்மனைப் பணியாளர்கள், ''உடல்நலம் சரியில்லாததால்தான் மகாராஜாவால் கோட்டை வாசலுக்கு வந்து சுவாமிகளை உரிய மரியாதைகளுடன் வரவேற்க முடியவில்லை'' என்பதாக சமாதானம் கூறினார்கள்.

சுவாமிகள் ஒன்றும் பேசவில்லை. பதிலுக்கு, 'அப்படியா?’ என்பதுபோல் தலையை மட்டுமே அசைத்தார். ஸ்ரீசாரதைக்கும், ஸ்ரீசுவாமிகளுக்கும் தெரியாதது என்று ஒன்று உண்டா என்ன? சுவாமிகளிடம் பொய்யான தகவலைக் கூறலாமா? அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? நாக்பூர் மன்னருக்கு என்ன நேர்ந்தது என்பதே இதற்குச் சரியான உதாரணம்.

அரண்மனைப் பணியாளர்கள் சுவாமிகளிடம் இவ்விதம் சொல்லிச் சென்றதுமே, மன்னருக்கு எதிர்பாராதபடி பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, அவர் மிகுந்த சிரமம் அனுபவிக்கும்படி நேரிட்டது. அரண்மனை வைத்தியர்கள் என்ன சிகிச்சை செய்தும் மன்னரின் நோய் தீர்ந்தபாடில்லை.

மன்னர் உடல்நலம் பெற என்ன செய்வது என்று எவருக்கும் புரியாத நிலையில், ஒருநாள்...

- தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி படம்: ஜெ.வேங்கடராஜ்