மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மாம்பலத்தில் மஹா பெரியவா..! எஸ்.கண்ணன்கோபாலன்

''இந்த விழா மேடையை குருக்ஷேத்திரத்துக்கு ஒப்பிட்டுக் கூறலாம். ஆனால், துவாபரயுகத்து குருக்ஷேத்திரத்துக்கும் இந்தக் கலியுகத்து குருக்ஷேத்திரத்துக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அந்த குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனும் பீஷ்மரும் போர்க்களத்தில் எதிரெதிராக நின்றார்கள். இந்த குருக்ஷேத்திரத்திலோ அர்ஜுனனும் பீஷ்மரும் ஒன்றாக நட்பு உணர்வுடன் அமர்ந்திருக்கிறார்கள். காரணம் என்ன தெரியுமா?  நடமாடும் தெய்வமாய், நம்மிடையே அருளளி பரப்பி, நம்மையெல்லாம் புனிதர்களாகச் செய்யும் காஞ்சி முனிவரின் கருணைத் திறம்தான். ஆம். ஆதிசங்கரரின் அவதாரமாகவே பக்தர்களால் போற்றப் பெறும் காஞ்சி மஹா ஸ்வாமிகளின் சந்நிதியில் பகைமைக்கும் வெறுப்புக்கும் இடம் ஏது?''

13.6.1992 அன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மஹா ஸ்வாமி ஜயந்தி நூற்றாண்டு தொடக்க விழாவின்போது, அந்த விழா மேடையில் அன்றைய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன்சிங், அன்றைய தமிழக ஆளுநர் பீஷ்மநாராயண் சிங் இருவரும் கலந்துகொண்டு அருகருகே அமர்ந்து இருந்ததையே சாதுர்யமாக இப்படி வர்ணித்தார், புதுவை மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்த கி.வெங்கடசுப்பிரமணியம்.

உண்மைதான். காஞ்சி மகானின் கருணை நிழலில் அன்பும் கனிவும் தழைத்துச் செழிக்கும்; அங்கே கோபமும் வன்மமும் எப்படி இருக்கும்?

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மஹா ஸ்வாமிகள் தம் ஸ்தூல சரீரத்தை விட்டு இருபது வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், இன்னும் அவர் உடலும் உணர்வுமாய் தங்களுடனே இருப்பது போன்ற பாவனையில்தான் அவரைப் போற்றி வழிபட்டு வருகிறார்கள் அவரின் பக்தர்கள். மாதம்தோறும் வருகிற அனுஷ நட்சத்திரம் மற்றும் வைகாசி மாதம் வரும் ஸ்வாமிகளின் ஜயந்தி நட்சத்திர தினங்களில்  மஹா ஸ்வாமிகளை விசேஷமாக பூஜித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு வைகாசி அனுஷத்துக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு. ஸ்வாமிகள் 120 ஆண்டுகளுக்கு முன், ஒரு ஜய வருட வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில்தான் அவதரித்தார். சரியாக 120 வருடங்கள் முடிந்து 121-வது ஜயந்தி விழா என்பதால், மஹா அனுஷ ஜெயந்தியாக நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சென்னை மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தில் மேச்சேரி பட்டு சாஸ்திரி அவர்களால் ஸ்ரீ சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட் சார்பில், ஜூன் மாதம் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை மஹா ஸ்வாமிகளின் ஜயந்தி விழா கொண்டாடப்படுவதாக அறிந்து, ஸ்வாமிகளின் ஜன்ம நட்சத்திர தினமான ஜூன் 12-ம் தேதி அன்று மாம்பலம் அயோத்தியா மண்டபத்துக்குச் சென்றோம். அங்கே சென்ற பிறகுதான், மாம்பலம் காஞ்சி காமகோடி பீட கோசாலையிலும், சீனிவாசன் தெருவில் உள்ள முருகாஸ்ரமத்திலும் ஸ்வாமிகளின் மஹா அனுஷ ஜயந்தி கொண்டாடப்படுவது தெரியவந்தது. அந்த இரண்டு வைபவங்களையும் சேர்த்தே தரிசித்துவிட நினைத்தோம்.

காலை 9 மணிக்கு  அயோத்தியா மண்டபத்துக்குச் சென்றபோது, மஹா ருத்ர ஹோமத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஹோமம் தொடங்க நேரம் இருந்ததால், காமகோடி பீட கோசாலையில் நடைபெறும் வைபவத்தை தரிசித்து வரப் புறப்பட்டோம்.

கோசாலையில், மஹா அனுஷம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பெற்ற வைபவத்தில் அன்று மஹா ருத்ர ஹோமமும், ஸ்ரீ சண்டி ஹோமமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட அந்த வைபவத்தில், முந்தின தினம் பெரிய அளவில் கோபூஜையும், கணபதி ஹோமமும், தொடர்ந்து மஹா ஸ்வாமிகளுக்கு 121 இளநீர் மற்றும் பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றதாக பக்தர்கள் நம்மிடம் கூறினார்கள்.

சற்று நேரம் அங்கே இருந்து ஹோமத்தை தரிசித்துவிட்டு, திரும்பவும் அயோத்தியா மண்டபத்துக்கு வந்து சேர்ந்தோம். அப்போது 121 வேத விற்பன்னர்கள் ஸ்ருதி சுத்தமாக ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்து கொண்டிருக்க, ஒருபுறத்தில் ஸ்ரீ மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. காலை 11 மணி அளவில் தொடங்கிய ஸ்ரீ ருத்ர பாராயணம் பூர்த்தியாக மதியம் 1 மணி ஆகிவிட்டது. தொடர்ந்து வசோர்த்தாரையும், பூர்ணாஹுதியும் நடைபெற்றன. வந்திருந்த பக்தர்களுக்கு சிறப்பான முறையில் பிரசாத விநியோகமும் நடைபெற்றது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அடுத்து, மாலையில்தான் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்பதால், கிடைத்த இடைவெளியில், இந்த 12 நாள் வைபவத்தை சிறப்பாக நடத்துவதில் முனைப்புடன் செயல்பட்ட மௌலி அவர்களிடம் விழா பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்டோம்.

''23 வருடங்களாக காஞ்சி பரமாச்சார்யர் ஜயந்தி விழாவை விமரிசையாகக் கொண்டாடி வருகிறோம். இன்றைக்கு மஹா ஸ்வாமிகளின் ஜன்ம நட்சத்திரம் என்பதால், ஸ்ரீ மஹா ருத்ர ஹோமம் நடைபெற்றது. இன்று இரவு புஷ்ப ரதத்தில் மஹா ஸ்வாமிகளின் திருவுருவச் சிலை வீதி உலாவும் நடைபெற இருக்கிறது. ஸ்ரீ ருத்ர ஹோமத்தைச் சிறப்பாக நடத்துவதில் ஸ்ரீ மஹா ருத்ர ஜப சமிதி டிரஸ்டைச் சேர்ந்தவர்கள் பெருமளவு உதவி செய்தனர்'' என்றார் மௌலி.

தவத்திலும் யோகத்திலும் தம்மைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொண்டவர் மஹா ஸ்வாமிகள். அதன் காரணமாகத்தான், ஸ்ரீதட்சிணாமூர்த்தி சொல்லாமல் சொல்லி சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்ததுபோல், மஹா ஸ்வாமிகளும் இருந்த இடத்தில் இருந்தபடி உலகளாவிய ஞானம் கைவரப் பெற்றிருந்தார். உலக நாடுகளுக்கெல்லாம் செல்லாமலேயே அத்தனை நாடுகளின் சமயம், வரலாறு போன்றவை குறித்த விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்தார். அவரை தரிசித்து உரையாடும் பேறுபெற்ற பால் பிராண்டன் போன்ற அயல்நாட்டு வரலாறு மற்றும் தத்துவப் பேராசிரியர்கள், பரமாச்சார்ய ஸ்வாமிகளின் உலகளாவிய ஞானம் குறித்து தங்கள் வியப்பைப் பதிவு செய்திருக்கிறார்கள். எங்கும் செல்லாமல், ஏதொன்றும் கற்காமல், எல்லாம் தெரிந்திருப்பவர் இறைவனாகத்தானே இருக்கமுடியும்? அந்த வகையில் மஹா ஸ்வாமிகளை 'நடமாடும் தெய்வம்’ என்று பக்தர்கள் அழைத்துப் போற்றுவது சரிதானே! பக்தர்கள் அவரை நடமாடும் தெய்வமாகக் கொண்டாடினாலும், அதை மஹா ஸ்வாமிகள் எப்படி எடுத்துக் கொண்டார்? அதுபற்றிப் பிறகு பார்ப்போம்.

மாலையில் அயோத்தியா மண்டபத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குமுன், மாம்பலம் சீனிவாசன் தெருவில் ஸ்ரீ முருகாஸ்ரமத்தில் நடைபெறும் வைபவத்தையும் தரிசித்து வரலாமே என்று எண்ணி, அங்கே சென்றோம்.

ஸ்ரீ முருகாஸ்ரமத்தில் மஹா ஸ்வாமிகளின் ஜயந்தி விழாவுடன் புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளின் ஆராதனை விழாவும் சேர்ந்தே நடைபெற்றது. வேத பாராயணம், அஷ்டபதி பஜனை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் போன்ற நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றன. அன்று இரவு 7 மணிக்கு பரமாச்சார்ய ஸ்வாமிகளின் திருவுருவப்பட ஊர்வலமும் நடைபெற்றது. நாமும் ஊர்வலத்தில் பங்கேற்றோம். அதன்பின் மீண்டும் அயோத்தியா மண்டபம் வந்தோம். வாசலில் பரமாச்சார்யர் திருவுருவத்துக்கு மலர்ச் சரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

புஷ்ப ரத ஊர்வலம் புறப்படுவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கிறபடியால், அதற்குள், மஹா ஸ்வாமிகளை பக்தர்கள் தெய்வமெனக் கொண்டாடுவதை அவர் எப்படி எடுத்துக்கொண்டார் என்பதைத் தெரிந்துகொள்வோம்.

இதோ தெய்வத்தின் குரலாய் ஒலிப்பதைக் கேளுங்களேன்...

''தெய்வம் சில இடங்களில் பிரத்யட்சமாகத் தெரிவதாக மக்கள் நினைக்கிறார்கள். அதேபோல், என்னிடமும் தெய்வம் பிரத்யட்சமாக இருப்பதாக நினைத்து, எனக்கு தியான மரியாதை கொடுத்து, என்னிடம் தங்கள் குறைகளைச் சொல்வது தெய்வத்திடம் சொல்வது போலாகும் என்ற எண்ணத்தில், தங்கள் குறைகளை என்னிடம் கூறுகிறார்கள். அதனாலேயே அவர்கள் ஆறுதலும் அடைகிறார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையையும், அதனால் அவர்கள் ஆறுதல் பெறுவதையும் நான் எப்படித் தடை செய்ய முடியும்? பகலோ இரவோ ஆனால்தான் என்ன... என்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டு அவர்களுக்கு ஆறுதல் சொல்லவே இந்தச் சரீரம் ஏற்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு தரிசனம் தருவதிலும், அவர்களுக்கு இதம் தரும் விதமாகப் பேசுவதிலும் சரீர பலம் குறைந்தாலும் பரவாயில்லை; என் உள்ளத்துக்கு இதுவே பலம்.

பக்தர்கள் என்னை தெய்வமாக எண்ணி வணங்குவதில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடோ பெருமையோ இல்லை. ஆனால், தெய்வத்திடம் முறையிடுவதுபோல் ஒளிவு மறைவின்றி உள்ளதை உள்ளபடி முறையிடுவது சந்தோஷமாக இருக்கிறது. நான் தெய்வமாக இல்லாவிட்டாலும், என்னை முன்னிட்டு மக்கள் பெறும் தெய்விக உணர்ச்சி என்னைப் பரவசப்படுத்துகிறது. அந்த தெய்விக உணர்ச்சியுடன் அவர்கள் செய்யும் எந்தக் காரியமும் எனக்கு சந்தோஷம் தருவதாகவே இருக்கும்!''

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ராமாவதாரத்தில் மகாவிஷ்ணு தன்னை சாதாரண மனிதனாகவே காண்பித்துக் கொண்டார். ஓரிடத்தில்கூட கடவுளுக்குரிய தன்மையை அவர் வெளிப்படுத்தவில்லை. அதுபோல, சாட்சாத் ஈஸ்வரனே நமது மஹா ஸ்வாமிகளாக அவதரித்து, தன்னை சாதாரண மனிதனாக வெளிப்படுத்திக் கொண்டார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இரவு 8.30 மணி. மஹா ஸ்வாமிகளின் திருவுருவச் சிலை இருந்த இடத்தில் இருந்தபடி இருக்க, நம் கண்கள் புஷ்ப ரதம் எங்கே என்று தேடியபடி இருந்தன. மஹா ஸ்வாமிகளின் புஷ்ப ரத பவனியை தரிசித்துவிட வேண்டும் என்பதில்தான் நமக்கு எத்தனை துடிப்பு? நமக்கு மட்டுமல்ல, அங்கிருந்த பக்தர்களின் மனங்களிலும் அத்தகைய துடிப்பு இருந்ததை அவர்களின் முகமே பிரதிபலித்தது. எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, மஹா ஸ்வாமிகளின் புஷ்ப ரத பவனியை தரிசிக்காமல் செல்லப்போவதில்லை என்ற வைராக்கியத்துடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருந்த இடத்தைவிட்டு இம்மியும் நகராமல் காத்திருந்தார்கள்.

ஒருவழியாக 9 மணி அளவில், அன்பர்கள் சிலர் மண்டபத்துக்கு வந்து, அங்கிருந்த மஹா ஸ்வாமிகளின் திருவுருவச் சிலையை எடுத்துத் தங்கள் தோள்களில் சுமந்தபடி, மண்டபத்தை அடுத்திருந்த தெருவில் நிறுத்தப்பட்டிருந்த புஷ்ப ரதத்தில் கொண்டுவந்து வைத்தனர். உடனே திரை போடப்பட்டு, மஹா ஸ்வாமிகளுக்கு  மலர் அலங்காரங்கள் நடைபெற்றன. 9-30 மணி அளவில் அலங்காரங்கள் முடிந்து திரை விலகவும், ஜெனரேட்டர் உதவியுடன் மின் விளக்குகள் பளிச்சிடவும் சரியாக இருந்தது.

பக்தர்களின் 'ஜய ஜய சங்கர... ஹரஹர சங்கர’ முழக்கமானது  அந்தப் பகுதி முழுவதும் எதிரொலித்தது.

விண்ணுலகத்து புஷ்பக விமானம்தான் மஹா ஸ்வாமிகளை நகர்வலம் அழைத்துச்செல்ல வந்துவிட்டதோ என்று நினைக்கும்படியாக நம்மை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது புஷ்பரதம். அந்த அளவுக்கு வண்ண மலர்களால் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தது அது. அந்த ரதத்தில் மஹா ஸ்வாமிகளை சர்வாலங்கார பூஷிதராக தரிசித்த மாத்திரத்தில், அத்தனை நேரம் காத்துக் கொண்டிருந்த பக்தர்களின் சோர்வெல்லாம் இருந்த இடம் தெரியாமல் போனதுடன், அவர் களின் முகங்களில்தான் எத்தனை பேரானந்தம்! எத்தனை பரவசம்!

பாமரர்க்கும் பாதிக்கப்பட்டவர்க்கும் கால நேரம் பாராமல் கருணை மழை பொழிந்தவர் அல்லவா நம் காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள்!

அவர்தம் திருவடிகள் தங்கள் வீடுகளில் பதியாதா என்று எத்தனை எத்தனையோ செல்வச்சீமான்கள் காத்துக் கிடக்க, பாதிக்கப்பட்ட பாமரர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதல் சொல்லவும் அனுக்கிரஹம் செய்யவும் அந்த மகானின் திருவடிகள் பாமரர்களை நோக்கியே சென்றன. அவர்தம் அந்த அருள்திறம்தன்னைப் போற்றி வணங்குவதுபோல் இருந்தது அங்கிருந்த பக்தர்களின் முகங்களில் தெரிந்த பக்திப் பரவசம்!

மூவகை ஆசைகளைத் துறப்பதும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதுமே சந்நியாச ஆஸ்ரமத்தின் தர்மம் என்று எடுத்துச் சொல்வதுபோல், துறவு என்ற சொல்லுக்கே இலக்கணம் வகுத்த அந்த மஹா ஞானி, தேசத்தின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஓர் அரசாங்கம் எதன் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் தெரியுமா?

1927-ம் ஆண்டு, தம்மை தரிசிக்க வந்த அண்ணல் காந்தியடிகளிடம் மஹா ஸ்வாமிகள் உரையாடுகையில் இப்படிச் சொன்னார்...

''இறைவன் மீதான நம்பிக்கையை அடிப்படை ஆதாரமாகக் கொண்டே, ஓர் அரசாங்கம் அமையவேண்டும். மாறாக, ஆத்ம சக்தியைப் புறக்கணித்துவிட்டு, மனித சக்தியை மட்டுமே பயன்படுத்தி அமையும் எந்த அரசாங்கமும் விரைவில் மறையவே செய்யும்.'' எத்தனை சாசுவதமான சத்திய மொழிகள் அவை!

இறைவனின் கடைக்கண் பார்வை தன்மேல் படாதா, கவலைகள் தீராதா என்று பக்தர்கள் நினைப்பது உண்டு. மஹா ஸ்வாமிகள் இன்று ஸ்தூல சரீரத்துடன் நம்மிடையே இல்லை என்பதால், அவரின் திருவுருவை தரிசித்த மாத்திரத்திலேயே நம் பாவவினைகள் யாவும் இல்லாமல் போவதுடன், நம் வாழ்க்கையில் சந்தோஷமும் சாந்தியும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

படங்கள்: ஆ.முத்துகுமார், ஜெ.வேங்கடராஜ்