Published:Updated:

வாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்!

சிவ... சிவ.. சிவ... மஹேந்திரவாடி உமாசங்கரன்

வாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்!

சிவ... சிவ.. சிவ... மஹேந்திரவாடி உமாசங்கரன்

Published:Updated:

சுகக்ஷேத்திரம், கரிவேட்டுக்களத்தூர், காந்தை, களந்தாபுரி, தென்களந்தை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் ஒப்பற்ற திருத்தலமான களத்தூர், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ளது.

வியாசரின் மகனான சுகப்பிரும்ம ரிஷி பூஜித்த சிவ லிங்கங்கள் மிகக் குறைவு. அவற்றில் இரண்டு லிங்கங்கள், தமிழகத்தில் உள்ள இரண்டு திருத் தலங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. ஒரு திருத்தலம் சேலத்திலும், மற்றொன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள களத்தூரிலும் உள்ளது.

சேலம் மாநகரில் உள்ள திருக்கோயில் மிகப் புகழோடு விளங்குகிறது. அங்கே, ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீசுகவனேஸ்வரர். களத்தூரில் குடிகொண்ட ஈசனின் திருநாமம் ஸ்ரீசுகநாதேஸ்வரர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுகநாதர் பதிற்றுப்பத்தந்தாதியில் உள்ள 36-வது பாடலில்,

அகத்தி யர்முத லந்தணர் போற்றவும்
மகத்து வம்பெற வாழ்காந் தைப்பதி
இகத்து வாழ்வினில் இச்சை யுறாமலே
சுகத்தில் வைத்தா னிவன்சுக நாதனே

என்று பாடப்பட்டுள்ளதால், அகத்தியரும் இங்கு வழிபட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது. 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்து தாமல் கோட்டத்து, தாமல் நாட்டு, விக்ரமசிங்க சதுர்வேதி மங்கலத்து மகாதேவர்’ என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் மிகப் பழைமையான கிராமம் இது. கி.பி. 540-ம் ஆண்டில் களப்பிரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பிறகு பல்லவர்கள், சோழர்கள், ராஷ்டிரகூடர்கள், விஜயநகர மன்னர்கள் எனப் பல ஆட்சியாளர்கள், இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.

வாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்!

கி.பி. 942-ல் மன்னன் கன்னரத்தேவனும், கி.பி. 1032-ல் முதலாம் ராஜேந்திரனும், கி.பி. 1123-ல் விக்கிரமனும், கி.பி.1360-ல் புக்கனும், கி.பி.1485-ல் சாளுவனும், கி.பி. 1515-ல் கிருஷ்ணதேவராயரும் தானங்கள் வழங்கியதை கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கருவறைக்கு முன் உள்ள துவாரபாலகர்களின் விக்கிரகங்கள், பல்லவர்கள் காலத்தில் வடிக்கப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

சுமார் 1400 ஆண்டுகள் பழைமையான இத்திருக்கோயில் தற்போது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. சுமார் 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ய திருப்பணிக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

கோயிலில், ஸ்வாமி புறப்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள், கோயில் மதில், கொடிமரத்துக்கு அருகே உள்ள மண்டபம் ஆகியவை முற்றிலும் சிதிலம் அடைந்த நிலையில் உள்ளன. அதேபோல், சுகப் பிரம்ம மகரிஷி உருவாக்கிய சுகதீர்த்தக் குளமும் சீரமைக்கவேண்டிய நிலையில் உள்ளது.  களத்தூர் பிரதான சாலையில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். கோயிலுக்கு ராஜகோபுரம் இல்லை. நான்கு தூண்களுடன் கூடிய ஒரு மண்டபம் நுழைவாயிலை அழகு செய்கிறது. இரு பக்கமும் திண்ணைகள், மேற் கூரையின் கோடியில் இருபுறமும் நந்தி பகவான் வீற்றிருக்க, நடுப்புறம் ரிஷபத்தில் வீற்றிருக்கும் சுதைச்சிற்பங்கள்... இவை அனைத்துமே சிதைந்திருக்கின்றன. நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி பகவானை தரிசிக்கலாம்.

தவிர, வாகன மண்டபமும், மற்றொரு மண்டபமும் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றன. கொடிமரமும் பிரம்மோற்ஸவம் கண்டு ஆண்டுகள் பல ஆகிவிட்டதால், பழுதுபட்டுக் காணப்படுகிறது.

கோயில் பிராகாரத்தை வலம் வரும்போது, தென் கிழக்கு மூலையில் சூரியன் மேற்கு நோக்கியும், தென்மேற்கு மூலையில் ஸ்ரீகணபதியும், மேற்குப் பிராகாரத்தின் நடுவில் நாகங்களும், அதையடுத்து ஸ்ரீகயிலாசநாதரும், அடுத்து முருகப்பெருமானும், வட மேற்கு மூலையில் ஷண்முகரும் சந்நிதி கொண்டிருக்கின்றனர்.

வாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்!

அருகில் தேவியர் இருக்க, மயில்மீது அமர்ந்திருக்கும் ஸ்ரீஷண்முகர் நீண்ட காலமாக அபிஷேக ஆராதனைகள் இன்றி, பராமரிப்பின்றிக் காட்சி தருவதைப் பார்க்க, பதறிப் போகிறது மனசு. மயிலானது சற்று வித்தியாச மாக, தலைப்பகுதியை ஷண்முகரின் இடப்பக்கத்திலும் தோகையை அவரின் வலப் பக்கத்திலும் வைத்தபடி நிற்கிறது. அடுத்து, நவகிரக சந்நிதியும் பைரவர் சந்நிதியும் இருக்க, கோஷ்டத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதிருமால், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதுர்கை ஆகியோர் காட்சி தருகின்றனர். இங்கே, ஸ்ரீசண்டிகேஸ்வரரும் சற்றே வித்தியாசமாகக் காட்சி தருவது சிறப்பு எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். திருவாசியுடன் கூடிய சிலையில், சிங்கம் ஒன்று வாலைக் குழைத்துக்கொண்டு அம்மனின் காலடியில் கிடக்கிறது.

தாமரைப் பீடத்தில் நிற்கிறாள் ஸ்ரீதுர்கை. வலது காலை சற்று  முன்னே நகர்த்தி, ஒய்யார மாகக் காட்சி தரும் துர்கையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். பெண்ணின் நளினம், ஸ்ரீதுர்கைக்கே உண்டான வீரம் என இரண்டையும் கலந்து சிற்பி வடித்திருக்கும் திறமைக்கு ஒரு சபாஷ்! எண்கரங்களில் மரயோகச் சக்கரம், சங்கு, சூலம், கேடயம், வில், அம்பு, கத்தி போன்ற ஆயுதங்களோடு, வலது திருக்கரத்தில் கிளியையும் ஏந்தியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. பல்லவர் காலத்து பொக்கிஷம் இந்தத் திருமேனி! முறையாக அலங்காரம் செய்யப் பட்டு, பூஜைகளும் குறைவின்றி நடந்தால், கும்பகோணம் பட்டீஸ்வரம், திருத்தணி மத்தூர் தலங்கள் போலவே இந்த துர்கையின் தலமும் எல்லோராலும் போற்றப்படும்.

கருவறையில், ஸ்ரீசுகநாதேஸ்வரரின் லிங்கத் திருமேனி கொள்ளை அழகு! பாணம் உயர்ந்தும், வட்ட வடிவ ஆவுடையாராகவும் காணப்படும் திருமேனியைத் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்.

கிளியோடு காட்சி தரும் ஸ்ரீதுர்கை வாசம் செய்யும் தலம். கிளி வடிவ முகம் கொண்ட முனிவர் பூஜித்த சிவலிங்கம் என ஸ்தல புராணம் தெரிவிக்கிறது. கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு பகவானின் சந்நிதிக்கு மேலே உள்ள மகர தோரணத்தில் அழகிய காட்சி ஒன்று தென்படுகிறது.

கிளி முகம் கொண்ட சுகப்பிரம்ம முனிவர், தேர் ஒன்றில் சிவலிங்கத்தை வைத்து இழுத்து வருவது போன்ற காட்சி அது. தேருக்கு அருகில் மன்னன் ஒருவன் நிற்கிறான். தொண்டை மண்டல சதகத்தில், 63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனாரைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது. அவர், தென்காந்தைப் பகுதியை ஆட்சி செய்தார் என்பார்கள். இங்கே, தேருக்கு அருகில் நிற்பது, அந்த மன்னர் கூற்றுவ நாயனாரே என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

வாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்!

கொள்ளை அழகுடன் காட்சி தரும் உத்ஸவ மூர்த்திகள் சோழர் காலத்தவை. இங்கே உள்ள திரிசூலத்தில், ரிஷபாரூடராக சிவ-பார்வதி காட்சி தருவது காணக் கிடைக்காத ஒன்று. திரிசூலத்தில் காட்சி தரும் ரிஷபாரூடரை வேறு தலத்தில் காண்பது அரிது என்கிறார்கள்.  

பல்லவர் காலத்துக் கோயில்களில் அம்பிகைக்குத் தனிச் சந்நிதி இருக்காது. பின்னர் வந்த மன்னர்கள் அம்பிகைக்குச் சந்நிதி ஏற்படுத்தி னார்கள். இங்கே, ஸ்ரீசௌந்தரவல்லி அம்பாள், முகமண்டபத்தில் சந்நிதி கொண்டிருக்கிறாள்.

பாலாற்றில் நீர் பெருக்கெடுத்து வந்தபோது, இந்தக் கிராமம் நில வளமும் நீர்வளமும் கொண்டு செழிப்புடன் திகழந்ததாம். எங்கு பார்த்தாலும் வயல்கள் நிறைந்திருக்கும். அதேபோல, எங்கு திரும்பினாலும் களத்து மேடுகள் இருக்குமாம். அதனால்தான் இந்த ஊருக்குக் களத்தூர் என்றே பெயர் வந்ததாகச் சொல்வர். செழிப்புமிக்க இந்த ஊரில் புலவர்கள் பலர் வாழ்ந்து, சமயத் தொண்டு செய்தார்களாம்.

சுகநாதர் பதிற்றுப் பத்தந்தாதி, தத்தீஸ்வரர் கலித்துறை அந்தாதி, களந்தை கயிலாயநாதர் அந்தாதி என மூன்று அந்தாதிகள் பாடிய புலவர் இந்த ஊரில் வாழ்ந்திருக்கிறார். மேலும் அவர், கச்சி ஏகம்பன் மீதும் பதிற்றுப் பத்தந்தாதி பாடியுள்ளார். மொத்தம் 400 அந்தாதிகள் பாடப்பட்டுள்ளன.  ஆவினன்குடி கயிலாயநாதர் பதிற்றுப் பத்தந்தாதி என்ற நூல் தொட்டிக்கலை ஸ்ரீசுப்ரமணிய முனிவரால் பாடப்பட்டுள்ளது.

இங்கே, ஸ்ரீசுகநாதர் கோயில் மேற்குப் பிரகாரத்தில் கயிலாசநாதருக்கு சந்நிதி உள்ளது. தனிக்கோயிலாக ஸ்ரீகயிலாசநாதர் கோயிலும் உள்ளது. சுகநாதர் கோயிலில் ஷண்முகர் சந்நிதியும், கயிலாசநாதர் கோயிலில் முருகப் பெருமான் சந்நிதியும் உள்ளது. தவிர, கந்தனுக்குத் தனிக்கோயிலும் இங்கே உள்ளது. எனவே, தொட்டிக்கலை ஸ்ரீசுப்ரமணிய முனிவர் குறிப்பிடும் திருவாவினன்குடி, களத்தூராக இருக்கலாம் என்கின்றனர் பக்தர்கள்.

வாழ்வில் சுகம் அருளும் களத்தூர் சுகநாதேஸ்வரர்!

மேலே குறிப்பிட்ட 400 அந்தாதிகள் இயற்றிய புலவர் யார் என்பது இன்றுவரை தெரியாத புதிராகவே இருக்கிறது.

உன்மத்தம், வைப்பு, மகோதரம், சூலை
    ஒருதலை நோய்
குன்மம் உறுவலியாவும்,
    களந்தையங் கோயினுள்
பொன்மொத்த வேணி சுகலிங்கர்
    தாள்தனை போற்றிடினே
கன்மத்துடன் கதிர்கண்ட பனி
    என கட்டறுமே

என்று ஓர் அந்தாதிப் பாடல் கூறுகிறது.

இன்றைக்கு, மனநோயாலும், மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலி யாலும் பலர் துன்புறுகின்றனர். இன்னும் பலர் வயிற்றுவலியால் அவதிப்படுகின்றனர். வலி தீர்க்கும் பெருமானை இங்கு வந்து வழிபட்டால், சூரியனைக் கண்ட பனிபோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், சென்னையிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில் ஆவலூரில் இருந்து இடது பக்கம் திரும்பி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. சென்றால் களத்தூரை அடையலாம்.பூக்கள் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் கோயிலுக்கு அருகில் கிடைக்க வாய்ப்புகள் குறைவு. எனவே, உங்கள் ஊரில் இருந்தே அவற்றை வாங்கிச் செல்வது உத்தமம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism