Published:Updated:

சக்தி சங்கமம்

”நான் ஆஸ்திகனும் அல்ல நாஸ்திகனும் அல்ல... ஹாஸ்திகன்!”வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் கிரேஸி மோகன்

சக்தி சங்கமம்

”நான் ஆஸ்திகனும் அல்ல நாஸ்திகனும் அல்ல... ஹாஸ்திகன்!”வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் கிரேஸி மோகன்

Published:Updated:

குபீர்ச் சிரிப்புக்கும் நாகரிக நகைச் சுவைக்கும் அக்மார்க் கியாரண்டி தருபவர், கிரேஸி மோகன். பேரைக் கேட்டதுமே, சட்டென்று அருவியாய்க் கொட்டும் அவரின் வார்த்தை ஜால காமெடிகள் நினைவுக்கு வந்து, நம்மை இடம்பொருள் பார்க்காமல் சிரிக்கச் செய்துவிடும். கலகல காமெடிக்குச் சொந்தக்காரரான கிரேஸி மோகனின் இன்னொரு பக்கம் அப்படியே நேர்மாறாக இருக்கிறது. அமைதி, ஆன்மிகம், தத்துவம், மகான்கள், அவர்களின் அறிவுரைகள் என்று கிட்டத்தட்ட கதாகாலட்சேபமே பண்ணுகிற அளவுக்கு, அதில் தேர்ந்தவராக இருக்கிறார்.

ஒரு மாலை வேளையில்... சக்தி சங்கமத் துக்காக, வாசகர்களுடன் அவரைச் சந்தித் தோம். சக்தி சங்கமத்தை சந்தோஷ சங்கம மாக்கிவிட்டது அவருடனான சந்திப்பு!

உற்சாகத்துடன் வரவேற்று உபசரித்தார் கிரேஸிமோகன். வாசகர்கள் எல்லோருமே 25 வயதுக்கு உட்பட்டவர்கள். ''மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பான்னு தைரியத்தைக் குழந்தைப் பருவத்திலேர்ந்தே ஊட்ட ணும்னு பாரதி ஆசைப்பட்டான். அது மாதிரி, ஆன்மிகத்தைப் பற்றி எந்த வயசுக்காரங்ககிட்ட பேசணுமோ அவங்களை சரியா செலக்ட் பண்ணிக் கூட்டி வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்!'' என்றபடி உரையாடலுக்குத் தயாரானார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுமார் இரண்டரை மணி நேரம், சிரிப்பும் சிறப்புமாகக் கழிந்த 'கலகல’ உரையாடல், இதோ...!

சக்தி சங்கமம்

? நீங்க எப்பவுமே உற்சாகமா புத்துணர்ச்சியோடு இருக்கீங்களே, எப்படி சார்? இதற்கும் ஆன்மிகத்தும் ஏதாவது தொடர்பு உண்டா? - முதல் கேள்வி வந்து விழுகிறது வாசகர் ராஜசேகரிடம் இருந்து.

''அடடா! உங்களோட இந்தக் கேள்வியே என் உற்சாகத்தை, புத்துணர்ச்சியை ரெட்டிப்பாக்கிடிச்சு, போங்க! ஆன்மிகம், நகைச்சுவை இரண்டுமே ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைங்க மாதிரி. எல்லா ஆன்மிகவாதிகளிடமும் நகைச்சுவை உணர்வும் இருக்கும்.

பகவான் ரமணரிடம் ஒருத்தர் வந்து, 'என்ன சாமி, எப்படி இருக்கீங்க?’ன்னு நலம் விசாரிச்சாராம். அதற்கு ரமணர், 'நாலு பேர் தூக்கவேண்டிய உடம்பை நான் ஒருத்தனாவே தூக்கிண்டிருக்கேனே! அதுக்கு மேல என்ன?’ன்னாராம். தத்துவம் கலந்த நகைச்சுவை இல்லையா, இது?!

நாமெல்லாம் ரொம்பவும் முன்ஜாக்கிரதைப் பேர்வழிகள்! என்னையே எடுத்துக்கோங்களேன்... நான் எழுதும் வெண்பாக்கள் பத்திரமா இருக்கணும்னு செல்போனில் பதிஞ்சு, கம்ப்யூட்டரில் ஸ்டோர் செஞ்சு, சி.டி-யாகவும் பேக்கப் செஞ்சு வைச்சிருக்கேன். ஆனா, வள்ளுவர் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் வெறும் ஓலைச் சுவடியில் எழுதிவெச்ச திருக்குறள், இன்னமும் அழியாம இருக்கு! ஏன்னா, ஆன்மிகச் சத்தும் சத்தியமும் நிறைஞ்சது அது!

சக்தி சங்கமம்

ரமணர் எழுதும் பல பாடல்களை, அவரோட உதவியாளர் பக்கிரிசாமி பிரதியெடுப்பார். ஒருமுறை, சில காகிதங்கள் காத்துல பறந்துபோயிடுச்சு. பக்கிரிசாமி பதறிட்டார். ரமணரோ நிதானமா, 'பரவாயில்லை, விடு. வேற எழுதிக்கலாம்’னாராம். அதுதான் பக்குவம்; அதுதான் ஞானம்! நமக்கெல்லாம் தேவை ஐபேடு. ரமணருக்கு இல்லை ஐயப்பாடு! சந்தேகமே இல்லாம இருந்ததாலதான் அவர் சந்தோஷமாக இருந்தார். யோக்கியமா இருந்தா ஆரோக்கியம் தன்னால வரும். ஆரோக்கியம் வந்துட்டா சந்தோஷம், உற்சாகம், புத்துணர்ச்சி எல்லாம் ஒவ்வொண்ணா வந்து சேர்ந்துக்கும்!''

? வழிபாட்டைப் பொறுத்தவரைக்கும் முதலில் பிள்ளையார், அடுத்தது குலதெய்வம், பிறகு இஷ்டதெய்வம்னு பெரியவங்க வரிசைப்படுத்தி வைச்சிருக்காங்க. உங்களோட இஷ்ட தெய்வம், குலதெய்வம் பத்தி தெரிஞ்சுக்கலாமா, சார்? - இது, வாசகர் நாராயணனின் கேள்வி.

''எனது இஷ்டதெய்வம் பிள்ளையார்தான்! ஆய கலைகள் அறுபத்து நான்கில் காமெடியும் ஒன்று. சந்தானம், வடிவேல், கிரேஸி மோகன், நாகேஷ் இவங்களுக்கெல்லாம் முன்னாடியே 'ஸ்லேப்ஸ்டிக்’ காமெடி என்பதை பிள்ளையார்தான் ஆரம்பிச்சு வெச்சார்!'' என்று சொல்லி கிரேஸிமோகன் சற்று நிறுத்த, ''என்ன சார் சொல்றீங்க... காமெடிக்கு முன்னோடி கணபதியா?'' என்று வியப்புடன் கேட்டார் வாசகர் சதீஷ்.

''ஆமாம்! ஒரு தடவை மகாவிஷ்ணு, கயிலாசத்துக்குப் போனார். அப்ப, விஷ்ணுவோட கையில் இருந்த சக்கரத்தை எடுத்துப் பிள்ளையார் விழுங்கிட்டார். எவ்வளவு கெஞ்சியும் அதைத் துப்ப மறுத்துட்டார். என்ன பண்றது, பெரிய இடத்துப் புள்ளையாச்சே! வேற ஏதாவது செஞ்சுதான் சக்கரத்தைத் திரும்பப் பெறணும்னு விஷ்ணு முடிவு பண்ணினார். தன்னோட நாலு கைகளாலும் காதைப் பிடிச்சுக்கிட்டு, தரையில் உட்கார்ந்து எழுந்தார் மகாவிஷ்ணு. திரும்பத் திரும்ப இப்படிச் செய்தார். அதுவே பின்னாடி தோப்புக்கரணம் ஆயிடுச்சு. அவரோட செய்கையைப் பார்த்து குழந்தை கணபதி விழுந்து விழுந்து சிரிக்க, சக்கரம் அவரோட வாயிலிருந்து வெளியே வந்து விழுந்துது. விஷ்ணு சட்டுனு அதை எடுத்துக்கிட்டார். ஆக 'ஹ்யூமருக்கு’ ஆதி கடவுள் விநாயகர்தான். எனக்கு ரொம்பவும் பிடித்த கடவுளும் அவரே!''

? புராணங்களில் உங்களுக்குப் பிடித்த நகைச்சுவை கதாபாத்திரம் யார், சார்? - இது வாசகி உதய சாதனா.

''கிருஷ்ணன்தான்!'' என்றார் கிரேஸி மோகன் சட்டென்று. ''அவரிடம் இருக்கும் 'வாத்சல்யம்’ எனக்குப் பிடிக்கும். துரியோதனனைப் பார்க்கப் போனார். அப்பவும் ஏழையான விதுரரோட வீட்டில்தான் தங்கினார். தெய்வம் என்று தெரிந்தும் மனிதனாக வாழ்ந்தவர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா; தெய்வம் என்பதையே மறந்து மனிதனாகக் கஷ்டப்பட்டவர் ஸ்ரீராமர்.

'நான் சிரித்தால் தீபாவளி’ன்னு பாடறோம். தீபாவளி என்பதை சிரிப்புக்குத் தொடர்புபடுத்தி விட்டோம். நரகாசுரனைக் கொன்றதால் வந்தது தீபாவளி. அவனை வதம் செய்தவர் கிருஷ்ணர். நரகாசுரன் என்ற பகைச்சுவையைக் கொன்ற நகைச்சுவைக் கடவுள் ஸ்ரீகிருஷ்ணர். அதுமட்டுமா. பால பருவத்தில் கிருஷ்ணன் செய்த நகைச்சுவைக் குறும்புகள் எத்தனை எத்தனை?! அதே பெயரில் இருந்த என்.எஸ். கிருஷ்ணனும்கூட ஒரு பெரிய நகைச்சுவை ஜாம்பவான்தானே!''

சக்தி சங்கமம்

? தெரிந்துகொள்ளுதல், தெரியாமல் இருத்தல்... எது ப்ளஸ்? எது மைனஸ்? - வாசகர் பிரகாஷ் இப்படி ஒரு விசித்திரமான கேள்வியை முன்வைக்க... ''இந்தக் கேள்விக்கு என்னோட பதிலை நீங்க தெரிஞ்சுக்கணுமா, வேணாமா?'' என்று மடக்கி னார் கிரேஸிமோகன். வாசகர்களிடம் பலத்த சிரிப்பு! கிரேஸிமோகன் தொடர்ந்தார்...

''தெரிந்துகொள்ளுதல் என்பது மைனஸ்! தெரியாமல் இருத்தல்தான் ப்ளஸ். அதாவது, எங்களுடைய நாடகத்தை விழுந்து விழுந்து சிரித்து ரசித்துவிட்டு, 'அப்புறம் வீட்டுக்குப் போனதும் நினைத்துப் பார்த்தோம். ஒன்றுமே நினைவுக்கு வரவில்லையே, சார்’ என்பார்கள். எதற்கு நினைவுக்கு வரவேண்டும் என்கிறேன். சிரிக்கவேண்டும். சிரித்தாயிற்று. அத்தோடு விடவேண்டியதுதானே!

'Ignorance is bliss’ என்பார்கள். அறியாமையே ஆனந்தம்! நமக்கு ஒரு வியாதி இருக்குன்னு தெரிஞ்சுக்கிறதேகூட மைனஸ்தான். டாக்டரிடம் போனா, அவர் வியாதியைச் சொல்வார். அவர் கொடுக்கும் மருந்தைக் கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால் அது ப்ளஸ்! அதை விட்டுட்டு,நட்டில் சென்று அந்த மருந்தைப் பத்தித் தெரிஞ்சுக்க முயன்றால், அது மைனஸ்! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... அறுபதுகளைக் கடந்த நான், இதுவரைக்கும் ரத்தப் பரிசோதனையே செய்துகொண்டது கிடையாது. ரத்தப் பரிசோதனை செஞ்சு, ரிசல்ட் தெரிஞ்சு அதிர்ச்சியில் மயக்கம்போட்டு விழறதுக்குப் பதிலா, மயக்கம்போட்டு விழுந்ததுக்கப்புறம் ரத்தப்பரிசோதனை செஞ்சுக்கலாமேன்னு விட்டுட்டேன்!

இப்போ விழிச்சுக்கிட்டிருக்கும்போது, நமக்கு எல்லாம் தெரியும்னு நினைக்கிறோமல்லவா, அதுதான் அறியாமை! இந்த அறியாமையிலிருந்து விழித்தெழவேண்டும். விழித்திரு! இன்னும் வேடிக்கையாகச் சொன்னால்... தூங்கும்போதேகூட தூக்கத்தில் கனவு வருவதைப் போல, கனவுக்குள் ஒரு கனவு காண்போம். முதலில் அந்தக் கனவிலிருந்து எழுந்திருக்க வேண்டும்.  அப்புறம் தூக்கத்திலிருந்து எழுந்து உட்காரவேண்டும். சிற்றின்பங்கள் வழியாகப் பேரின்பங்கள் கிடைக்க கடவுள் வழிசெய்கிறார். ஒரு டீ சாப்பிடும்போது கிடைக்கும் சந்தோஷம், பின்னாடி ஃபைவ் ஸ்டார்  ஹோட்டல்ல முந்திரி பக்கோடாவோடு டீ சாப்பிடும்போது இன்னும் அதிகமா கிடைக்கும். ஆனா, டீயே சாப்பிடாம இருக்கும்போதும் கிடைக்கிற இன்பம்தான் பேரின்பம்! விழித்துக்கொண்டிருக்கும்போது நம்மை யாராவது திட்டினா கோபம் வரும். ஆனா, தூங்கும்போது நம்மை யார் என்ன சொல்லித் திட்டினாலும் கோபம் வராது. நமக்குத்தான் தெரியாதே!

ரமணரின் முன்னால் வேத விற்பன்னர்கள் சிலர் தர்க்கம், மீமாம்சம் னெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்களாம். 'நல்லவேளை! நான் இதெல்லாம் படிக்கலை. அதனால எனக்குக் குழப்பமே இல்லை’ன்னு சொல்லிச் சிரிச்சாராம் ரமணர். ஆக, அறியாமைதான் பேரின்பம்.''  

? கடவுள் இருக்கிறாரா, இல்லையா... இதற்கு உங்கள் பதில் என்ன சார்? - வாசகி ராஷ்மிராஜா நேரடியாக விஷயத்துக்கு வர, புன்னகையுடன் பதில் சொல்கிறார் கிரேஸிமோகன்.

''இருக்காரா, நீ பார்த்திருக்கியா என்றால், இல்லை. ஆனா, நமக்கு ஒரு பயம் வேணும். அது இருந்தால்தான் நாம் நல்லமுறையில் நடந்து கொள்வோம். கடவுள் என்ற வாகனத்தின்மீது பாரத்தைப் போட்டுவிட்டுப் பயணம் செய்யுங்கள். விபத்து இல்லாமல் இலக்கை அடையலாம்.  

உங்களை மாதிரியே ஒருத்தர் வாரியார் ஸ்வாமிகளிடம், 'கடவுள் இருக்கிறாரா?’ன்னு கேட்டாராம். வாரியார் ஸ்வாமி, 'இருக்கிறார்’னதும், 'நீங்க பார்த்திருக்கீங்களா?’ன்னு கேட்டாராம். வாரியார் 'இல்லை’ன்னு சொல்லி யிருக்கார். 'அப்புறம் எப்படி நம்புறது?’ன்னு கேட்டிருக்கார் அந்த அன்பர். 'உன் முதுகை உன்னால பார்க்க முடியுதா? சரி, உன் முகத்தையாவது உன்னால பார்க்க முடியுதா? உன் முதுகையும், உன் முகத்தையும் பார்க்கவே உனக்கு ஒரு கண்ணாடி தேவைப்படுறப்போ கடவுளை சுலபமா பார்த்துட முடியுமா?

சக்தி சங்கமம்

பக்தி, ஞானம் என்கிற இரண்டு கண்ணாடிகள் வழியாதான் இறைவனைக் காண முடியும்!’னாராம் வாரியார்.

'நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த கலைஞனடா’ன்னு கண்ணதாசன் பாடியிருக்கார்! கடவுள் ஒரு பெரிய கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு எல்லோரையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அது, நமக்குத் தெரியவில்லை! என்னை நாஸ்திகனா, ஆஸ்திகனா என்று யாராவது கேட்டால், நான் 'ஹாஸ்திகன்’ என்பேன். ஹாஸ்யத்தை நம்புவதால் ஹாஸ்திகன்!'' -  - கிரேஸிமோகன் சொல்லிமுடிக்கவும் வாசகர் களிடம் அப்படியொரு சிரிப்பும் குதூகலமும்! ''அருமையா சொன்னீங்க, சார்! இது... இதுதான் உங்க டச்!'' என்று வாசகி உதய சாதனா சொல்ல, மற்றவர்கள் கைதட்டி ஆமோதித்தார்கள்.

? உங்களுக்கு சென்டிமென்ட்டில் நம்பிக்கை... - வாசகர் சரவணன் கேட்டு முடிப்பதற்குள் பளிச்சென்று பதில் வருகிறது கிரேஸி மோகனிடம் இருந்து!

''நிச்சயம் உண்டு! நான் உபயோகிக்கும் சென்ட்டிலும் சென்டிமென்ட் பார்ப்பேன். ஒரே சென்ட்டைத்தான் உபயோகிப்பேன்!'' என்று கிரேஸி மோகன் சொல்ல, மீண்டும் குபீர்ச் சிரிப்பு, வாசகர்களிடம்!

''ஒரு முறை, அமெரிக்காவில் ஓரிடத்தில் நாடகம் முடிந்து, வேறோர் இடத்தில் நாடகம் போட வேண்டும். அப்போது எனது டவலை அங்கேயே விட்டுவிட்டேன். ஒரு ஆள் மூலமாக அந்த டவல் வந்து சேர்ந்தபிறகுதான் நிம்மதியாயிற்று. இத்தனைக்கும் அது அரதப்பழசான டவல்! புதிய டவல் வாங்கித் தருவதாகச் சொல்லியும் பிடிவாதம் பிடிச்சு பழைய டவல் வந்த பிறகே மனசு திருப்தியாச்சு! இவ்வளவு அலைக்கழிப்புக்குப் பிறகு, 'கிருஷ்ணருக்கு குசேலர் அவல் கொடுத் தார்; நீங்க எனக்கு டவல் கொடுத் துட்டீங்க!’ன்னு பேசி, சமாளிச்சேன்!

சக்தி சங்கமம்

தாத்தா- பாட்டி உள்பட பழைய விஷயங்களைத் தூக்கி எறிவதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. அதேபோல், நாம் தினசரி உபயோகிக்கும் பொருட்களையும் மதிக்கவேண்டும் என்பதில்  உறுதியாக இருப்பேன். உட்காரும் நாற்காலிக்கும் நாம் நன்றி செலுத்தி னால், அடுத்த தடவை நமக்கு உட்கார சுலபமாக இடம் கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இதை, 'டொமினோ தத்துவம்’ என்பார்கள். இந்தத் தத்துவத்தை உதாரணத்தோடு உங்களுக்கு விளக்கினால்தான் புரியும்.

நான், டிவிஎஸ் நிறுவனத்தில் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டதற்குக் காரணம் நாடகம், சினிமா ஆசை என்றெல்லாம்தான் பலரும் நினைச்சுட்டிருக்காங்க. ஆனா, உண்மை வேறு! நாய் பயம்! ஒவ்வொரு நாளும் நைட் ஷிஃப்ட் முடிஞ்சு வீடு திரும்பும் போது, ஒவ்வொரு ஏரியாவிலும் நாய்கள் என்னைத் துரத்திவந்து அடுத்த ஏரியாவில் விட்டுச் செல்லும். தினந்தோறும் திகில்! என் சங்கடம் புரிஞ்சு, நண்பன் ஒருவன் என்னைக் காப்பாற்ற வந்தான். என் ஸ்கூட்டருக்குப் பின்னால் ஒரு தடியோடு உட்கார்ந்து, துரத்தி வந்த நாய்களையெல்லாம் சாத்து சாத்துன்னு சாத்தித் துரத்தினான்.

சக்தி சங்கமம்

சமீபத்தில், அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். ஒரு வீட்டில் பெரிய நாய் இருந்தது. அது, எல்லோரையும் விட்டுவிட்டு, என்னை  மட்டும் பார்த்து முறைத்தது. 'எங்க உறவுப்பசங்களை ஆள் வெச்சு அடிச்சவன்தானேடா நீ’ன்னு என்னைக் கோபமா முறைக்கிற மாதிரியே இருந்துது. ரிஸ்க் வேண்டாம்னு நைஸா பேசி, அங்கிருந்து எஸ்கேப் ஆகிட்டேன். எதுக்குச் சொல்றேன்னா, நாம எப்போதோ செய்தது நமக்கே ஒருநாள்  திரும்ப வரும்.  இதுதான் டொமினோ  தத்துவம்!

உருவத்தைக் கண்டு ஏளனம் செய்யக் கூடாது என்பதிலும் தீர்மானமாக இருப்பேன். எனது முதல் வசனமே, 'தம்மாத்தூண்டு பையன் நீ, என்னைக் கொல்ல வரயாடா?’ இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதாக இப்படி எழுதியிருப் பேன்... 'திருக்குறள்கூட ரெண்டே அடிதான். ஆனா, அதில் எவ்ளோ அர்த்தமிருக்கு!’. இந்த வரிகள் கமல் சாருக்கு ரொம்பப் பிடிக்கும். அதேபோல், 'நாம் இல்லைன்னா இந்த ஆபீஸே இயங்காது; இந்த உலகமே ஸ்தம்பிச்சுடும்னு நினைக்கிறதும் தப்பு. இன்று நான்; நாளை எனக்குப் பதில் வேறு யாரோ! இப்படி நினைச்சுட்டா, நிம்மதியாக இருக்கமுடியும்.''

சக்தி சங்கமம்

தொடர்ந்து...

? உங்கள் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு ஜானகி, மைதிலி என்றே பெயர் வைக்கிறீர்களே... ஏன்?

? எழுத்தாளர் என்ற முறையில் சொல்லுங்கள். சிறந்த படைப்பாளி யார்? வேத வியாசரா? வால்மீகியா?

- இப்படி, அனுபவம், ஆன்மிகம்  எனப் பல்சுவையாக வாசகர்கள் முன்வைத்த இன்னும் பல கேள்விகளும், அவற்றுக்கு கிரேஸிமோகன் தனது பாணியில் தந்த ஹாஸ்ய- சுவாரஸ்ய பதில்களும்  அடுத்த இதழிலும் தொடரும்.

- படங்கள்: 'கிளிக்’ ரவி

புராண நாடகங்களில் தேர்ந்தவரான  நாடகக் காவலர் ஆர்.எஸ்.மனோகருடன் பழகியது உண்டா? ?

- பி.பானுமதி, காரைக்குடி

அவர் நாடகங்கள் நிறைய பார்த்திருக் கிறேன். அவரும் எனது நாடகங்களுக்கு வந்திருக்கிறார்.  லேசர், கம்ப்யூட்டர் இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு இப்போது மேடையில் பல மேஜிக்குகளெல்லாம் செய்யலாம். ஆனால் இவையெல்லாம் இல்லாத காலத்திலேயே, மாலிக்காபூர் நாடகத்தில் சாளரத்தைத் திறந்து பார்த்தால் வெளியே குதிரை ஓடுவதைக் காண்பித்தார்.  இதெல்லாம் எப்படிச் சாத்தியம் என்றே தெரியவில்லை!

சக்தி சங்கமம்

'மன்னித்தலும், பொறுமை காத்தலும்கூட சில தருணங்களில் மிகப்பெரிய வீரம்தான்!’ என்பது பாண்டிச்சேரி அன்னையோட அருள்வாக்கு. நீங்க மதரோட பக்தர். நீங்கள் சொல்லுங்கள் சார்... எல்லாவற்றையும் மறந்து, மன்னிக்க முடியுமா?

- ஹேமா நாராயணன், பெங்களூரு

''நிச்சயமா முடியும்! காத்திருத்தல் என்பதும் கூட சுகமானதே! அதாவது காத்திருத்தல் என்ற வார்த்தையில் நடுவில் நான்கு எழுத்துக்களை எடுத்துவிட்டால் 'காதல்’  என்று ஆகிவிடும். அது காதலிக்காக இருந்தாலும் சரி! தமிழுக்காக இருந்தாலும் சரி. காத்திருந்துதான் ஆகவேண்டும்.  நான் இரவு பத்துமணிக்கு எழுத ஆரம்பித்து விடியற்காலை ஐந்து மணி வரையில் ஒரு ஜோக்குக்காக காத்திருந்திருக்கிறேன். என்னுடைய 'மேரேஜ் மேட் இன் சலூன்’ என்ற நாடகத்தில், சிகை அலங்காரம் செய்யும் கதாபாத்திரம் டாக்டராக நடிப்பார். ஹீரோயின் 'உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே’ என்று சொல்வாள். அதற்கு அவர் என்ன பதில் சொல்லவேண்டும் என்பதற்கு இரவெல்லாம் விழித்து யோசித்ததில், விடியற்காலையில்தான் எனக்கு ஜோக்காக ஒரு பதில் கிடைத்தது. 'என்னை நீங்க பார்த்தே இருக்கமுடியாது. நான் ஒன்லி ஃபார் ஜெண்ட்ஸ்’ என்பார். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு! பொறுமைக்குப் பலன் கிடைத்தது. நிச்சயம் கிடைக்கும்.

'தெய்வம் மனுஷ்ய ரூபேண’ என்பார்கள். என்னைப்பொறுத்த வரையிலும் மனிதன்தான் கடவுளே! ராமரும், கிருஷ்ணரும் கூட வாழ்ந்து காட்டிய மனிதர்கள் தான். நாம் அவர்களை உதாரண புருஷர்களாகக் கொண்டு வாழ்ந்து காட்டவேண்டும். லார்வா, பியூப்பா என்ற பருவத்திலிருந்து பட்டுப் பூச்சி உருவாவதைப் போன்று, பல நிலைகளைக் கடந்து நாமும் மனிதர்களாக உருவாக வேண்டும். உனக்கும் இறக்கை முளைக்கும். வானத்தில் பறக்கலாம். மனிதனாக உயரலாம். அதற்கு பொறுமை காத்தலும், மன்னித்தலும் மிக மிக முக்கியம். பெட்டிக்கடை வைத்தாலும் பொறுமையோடு இருந்தால், பின்னர் பெரிய டிபார்ட் மென்ட்டல் ஸ்டோர் ஆரம்பிக்க முடியும். ஷீர்டி பாபாவின் இரண்டு வாசகங்கள், 'சபூரி ஷ்ரத்தா’ என்பதாகும். 'பொறுமையுடன் நம்பிக்கை யுடன் இரு’ என்பதுதான் இதன் பொருள்.  

வாசகர்களே! அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களுடன் கலந்துரையாடப் போகிறார்...

சக்தி சங்கமம்

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 1.7.14-க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள். சிறந்த கேள்விகளை எழுதியனுப்பிய வாசகர்களில் சிலர், 'சக்தி சங்கமம்’ கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism