Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

ர்க்கடக ராசியில் பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இருக்கும் வேளையில், செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், தனது சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கமாட்டாள் என்கிறது ஜோதிடம் (ஸ்வச்சந்தா). ஆனால் அந்த சுதந்திரமானது  நட்பு, பகை, துணிவு, மெதப்பு போன்றவற்றில் தலைதூக்குவது அல்ல; அது அவளுடைய இயல்பு. அதேநேரம், சுயமரியாதை என்றும் எடுத்துக்கொள்ள முடியாது. அது, விருப்பப்படி செயல்படத் தயங்காது. துணிந்து செயல்படும்.

இப்படியும் சொல்லலாம்... பின்விளைவுகளை ஆராய்ந்து செயல்படும் பக்குவம் இல்லாமல், 'விரும்பினேன்; செயல்பட வேண்டும். அதில் எனக்கு சுதந்திரம் இருக்கவேண்டும்’ என அவள் மனம் விரும்பும். வழிதவறிய நிலையில், திருத்த முற்பட்டாலும் ஏற்க மாட்டாள். 'எனது சுதந்திரம் பறிபோகிறதே’ என்ற அவளுடைய சிந்தனையே வெல்லும்.

சுயமானவர்கள்... சுதந்திரமானவர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விளம்பரங்களில் பெண்களின் பங்களிப்பு - பயன்பாடு அதிகம். பெண்மைக்கு உரிய மரியாதை அளிக்காமல் விற்கும் பொருட்களின் மதிப்பை அதிகரிக்க முனைந்து செயல்படுபவர்களும் உண்டு. ஒரு காரியத்தில் ஈடுபடும்போது பெண்மையின் தரம் தாழ்ந்துவிடுமே என்பதை எண்ணாமல், 'என் சுதந்திரம் வென்றுவிட்டது’ என்ற நினைப்பில் செயலாற்றுபவர்களும் 'ஸ்வச்சந்தா’ என்ற சொல்லில் அடங்குவார்கள். 'பெண்மை என்று காரணம் காட்டி எனது சுதந்திரத்தைப் பறிக்கிறீர்கள்’ என்ற எண்ணம் மேலோங்க, தனது சுதந்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கும் ஆர்வம் மேலோங்கியிருக்கும் என்றும் சொல்லலாம். தனக்கு வரும் இழுக்கையும் மறந்து, சுதந்திரத்தைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பவள் என்னும் கருத்தில், 'ஸ்வச்சந்தா’ என்ற சொல் தனிச்சிறப்புடையது. 'சுருங்கச் சொல்ல முற்பட்டாலும் கருத்தின் விரிவு குறையாமலும் இருக்கும்’ என்று வராஹமிஹிரர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் (ஸ்வல்பம் விருத்தவிசித்திரமர்த்தபகுளம்).

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

செவ்வாயும் ரஜோ குணமும்...

செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அதன் தாக்கத்துக்கு இலக்காவது இயல்பு. ஆராயாமல் செயல்பட வைப்பவன் செவ்வாய். எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், தனது விருப்பத்தை சடுதியில் செயல்பட வைப்பவன். செவ்வாயை ரஜோ குணத்துடன் இணைந்தவனாக சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம். ஆக, இந்தப் பெண்கள் சீண்டினால் படமெடுக்கும் பாம்பைப் போல் செயல்படுவதால், பல இழப்புகளைச் சந்திக்கும் சூழலை ஏற்படுத்திக்கொள்வர். இதையெல்லாம் ஆராயாமல், பஞ்சாங்கத்தில் தென்படும் சான்றில்லாத செவ்வாய் தோஷ அட்டவணையை நம்பி, சேர்த்துவைக்கப்பட்ட தம்பதிகள் தினம் தினம் சண்டை-சச்சரவோடு நரக வேதனையில் உழல்கிறார்கள். இப்படியான துயரத்துக்கு, 'நமது சுதந்திரம் பறிபோகிறதே’ என்ற எண்ணமும் காரணமாவது உண்டு.

பூமியின் புதல்வன்...

பூமியின் புதல்வன் செவ்வாய் என்று ஜோதிடம் விளக்கும் (குஜ:).  இறுக்கத்தில் ஏற்பட்ட சூடு பூமியில் இருக்கும். வெளியே தென்படும் சூடானது, காற்று மற்றும் இடைவெளியின் (ஆகாசம்)  தாக்கத்தால் இறுக்கம் தளர்ந்திருக்கும். செவ்வாயின் சூடு தளராத நிலையில் இருப்பதை சுட்டிக்காட்ட, 'பூமி புத்திரன்’ என்ற விளக்கம் பொருத்தமாக இருக்கிறது. வெப்பக்கிரகத்தின் வரிசையில் குறிப்பிடப்பட்டாலும்,  செவ்வாயின் வெப்ப தரத்தின் மாறுதலை வெளியிடும் வகையில், 'பூமியில் உறைந்த நிலையில் இருக்கும் வெப்பத்தை உடையவன் செவ்வாய்’ என்ற விளக்கம் உண்டு. இது, அவனது தனி இயல்புக்கு அடையாளம். ஆக, தனித்தன்மைக்கு உகந்தவாறு சுதந்திரத்தில் பிடிப்போடு இருக்கவைக்கிறான் செவ்வாய்.

குரூர பார்வை....

ஜாதகத்தில் 7-ல் இருக்கும் செவ்வாய், லக்னத்தை 7-ம் பார்வையாக முழுமையாகப் பார்ப்பதால், தனது சுதந்திரம் பறிபோவதை பொறுக்காமல் இணைப்பைத் துண்டிக்க துணிந்து விவாகரத்தை ஏற்கிறாள். இங்கு ஆராயாமல் முடிவெடுக்கும் துணிவை செவ்வாய் தனது பார்வையின் வாயிலாக அளித்துவிடுகிறான். 'க்ரூரத்ருக்’ - குரூரமான பார்வையை உடையவன் என்று செவ்வாயை குறிப்பிடுகிறது ஜோதிடம். மற்ற கிரகங்களின் பார்வையைவிட இவனது பார்வை வலுவானது என்கிறது ஜோதிடம். ஜாதகத்தில் 12, 1, 2, 4, 5 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் வேளையில், 7 மற்றும் 8-ஐ பார்ப்பதால் தோஷம் ஏற்படுகிறது என்றும் விளக்கும்.

எந்த விஷயத்திலும் மென்மையான அணுகுமுறை இல்லாமல் கடினமான அணுகுமுறையை ஏற்க வைப்பான். பொல்லாத கணவனிடம் சிக்கிய மனைவியானவள், தன் கணவனைவிட்டு வெளியேற ஒத்துழைப்பான். இந்த இடத்தில்... பெண்மையை அடமானம் வைக்கும் எண்ணம் எழாது. அடங்காப்பிடாரி என்று எண்ணுவதும் தகாது. தன்மானம் தேயும்போது துயரத்தைச் சந்திப்பதால், அதில் இருந்து விடுபடத் துடிப்பவள் அவள். அவளது விடுதலைக்கு ஒத்துழைப்பான் செவ்வாய். அதேநேரம், துயரம் துரத்தினாலும் மனைவி என்ற தகுதியை நிலைநாட்ட கணவனோடு இணைந்து வாழும் முயற்சிக்கும் ஊக்கமளிப்பான்.

செவ்வாயும் வெம்மையும்!

கிரகங்கள் வரிசையில் சூரியன், செவ்வாய் என்று சூரியனிடம் நெருக்கம் இருப்பதை உறுதி செய்யும் (விண்வெளியில் சந்திரன், புதன், சுக்கிரன், சூரியன், செவ்வாய், குரு, சனி என்ற வகையில் அவர்களின் சுற்றுப்பாதை அமைந்திருக்கும். அதில் சூரியனும் செவ்வாயும் அடுத்தடுத்த பாதைகளில் பவனி வருவார்கள்).  தினம் தினம் சூரியனின் வெப்ப தாக்கம் பூமிக்கு இருக்கும். பூமியில் விதைக்கப்படும் விதையானது, அதன் வெப்பத்தில் நீரின் துணையோடு முளை விடும். அதேபோன்று புது மழையின் சந்திப்பில், பூமி நீராவியை வெளியிடுவதைப் பார்த்திருக்கிறோம். அந்த பூமியின் தொடர்பு செவ்வாய்க்கு இருப்பதை 'பூமி புத்திரன்’ (குஜன்) என்ற சொல் சுட்டிக்காட்டும். நெருப்பின் நேரடி தொடர்பில் ஏற்படும் வெப்பத்தைவிட, இரும்பில் ஏறிய நெருப்பின் வெப்பம் இருமடங்காக வளர்ந்துவிடும். அதேபோல், வெப்பக்கிரகமான செவ்வாய் பூமியின் தொடர்பில் தனது வெப்பத்தை இருமடங்காக வளர்த்துக்கொள்கிறான். மாறுதலுக்கு வெப்பத்தின் பங்கு அவசியம்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

செவ்வாயின் பங்களிப்பும் விளைவுகளும்!

செவ்வாயின் த்ரிம்சாம்சகத்தின் தொடர்பில், அவளது இயல்பானது தன்னிச்சையாகச் செயல்படும் திறனை வலுவடையச் செய்கிறது. சட்டம் இருந்தும் அதை மீறிச் செயல்படும் துணிவு, விபரீத விளைவுகளை கோடிட்டுக் காட்டினாலும் அதையும் மீறி தன்னிச்சையாக செயல்படும் எண்ணம், தனது விருப்பத்துக்கு எதிரான வாதத்தைக் கேட்க மறுப்பது, தோல்வியைச் சந்தித்தாலும் பச்சாதாபப்படாமல் வெட்கத்தை மறந்து ஏற்றுக்கொள்வது முதலான இயல்புகள் செவ்வாயின் தாக்கத்தில் தோன்றக்கூடியவை. விவாகரத்தைச் சந்தித்த பெண்கள் பலரிடமும், செவ்வாயின் தாக்கத்தால் அந்நிகழ்வு விளைந்தது உண்டு.

இழப்பா? பிரிவா?

'ஸ்வைரிணீ’ - விருப்பப்படி செயல்படுபவள் என்ற கருத்தும் 'ஸ்வச்சந்தா’ என்ற சொல்லில் அடங்கும் என்கிறது ஜோதிடம். விருப்பப்படி செயல்படும் எண்ணம் மேலோங்கும்போது, எடுத்துக்கொண்ட விஷயத்தின் தராதரம் சிந்தனையில் எட்டாது. நீக்குப்போக்கோடு இணைந்து வாழும் பாங்கு அறவே அகன்றுவிடும்.

'ஆண் ஜாதகத்தில் 7-ல் செவ்வாய் தென்பட்டால், மனைவி இழக்கப்படுவாள்; பெண் ஜாதகத்தில் கணவன் இழக்கப்படுவான்’ என்ற கண்ணோட்டம் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லாதது. விவாகரத்து நடைமுறைக்கு வராத காலங்களில், பெண்ணானவள் வாழாவெட்டியாக தகப்பன் குடும்பத்தில் சரணடைவாள். அங்கு மனைவி இழப்பு இருக்கவில்லை. 7-ல் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள், பிரிவில் துயரத்தைச் சந்திக்கவைக்குமே தவிர, அவர்களது ஆயுளை முடிவுக்குக் கொண்டுவராது. 'களத்ர தோஷம்’ என்ற சொல்லுக்கு, 'கணவன் இழப்பு’, 'மனைவி இழப்பு’ என்று பொருள் இல்லை. அது, தாம்பத்திய சுகம் அனுபவத்துக்கு வராமல் போவதைச் சுட்டிக்காட்டும். 7-ல் இருக்கும் செவ்வாய், எல்லா ஜாதகங்களிலும் ஆயுளை முடித்துவைக்க மாட்டான்.

லக்னத்தில் இருந்து- சந்திரனில் இருந்து 8-க்கு உடையவன், 8-ல் இருந்து 8-க்கு உடையவன் (அதாவது மூன்று), 8-க்கும் 3-க்கும் பன்னிரண்டில் இருப்பவன் (அதாவது ஏழும் இரண்டும்)... அதில் இருப்பவர்களும், அதற்கு அதிபதிகளும் ஆயுளை நிர்ணயிக்கும் தகுதி பெற்றவர்கள் என்கிறது ஜோதிடம். இப்படியிருக்க, 7-ல் செவ்வாய் எனில் கணவன் இழப்பு, மனைவி இழப்பு என்ற முடிவுக்கு வருவதை ஜோதிடம் ஏற்காது. அதேபோல், 'இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருந்தால் வாழ்க்கை இனிக்கும்’ என்பதற்கும் சான்று இல்லை. ஜோதிடத்தை அறிமுகம் செய்த முனிவர்கள் இப்படியொரு தகவலை வெளியிடவில்லை. 'தோஷஸாம்யம்’ என்கிற கோட்பாட்டை அவர்கள் வெளியிடவில்லை. பிற்பாடு வந்த புது ஜோதிடர்களின் கணிப்பில் தென்பட்டு, பாமரர்களில் வேரூன்றியதன் காரணமாக அதற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது! செவ்வாயை வைத்து விளையாடும் எண்ணமானது, தம்பதிகள் பலரது விவாகரத்துக்கு ஊக்கமளிக்கிறதே தவிர, அவர்கள் வாழ்வை செம்மையாக்கவில்லை.

தோஷங்களும் ஜோதிடமும்!

ஜோதிடம் ஆண் - பெண் ஜாதகங்களை தனித்தனியாக அலசி ஆராயும். இரண்டு ஜாதகங்களிலும் தென்படும் தோஷத்தை, இணைப்பின் குணமாகச் சொல்வதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. வேத காலத்தில் அன்பு, பண்பு, அறம் ஆகியவற்றின் அளவுகோலில் திருமணத்தில் இணைந்தார்கள். இன்று பட்டம், பதவி, இளமை, அழகு, பொருளாதாரம் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து இணைபவர்கள்தான் ஏராளம். அன்பும், பண்பும், அறமும் ஒதுக்கப்பட்டதால் விவாகரத்து முளைத்தது. தாம்பத்ய இணைப்பின் இறுக்கத்தை முன்நிறுத்தி, அவர்களது இயல்பை வரையறுத்து, அன்பு, பண்பு, அறம் ஆகியவற்றில் பிடிப்பு இருப்பதை உறுதி செய்து, பிறப்பின் குறிக்கோளை அவர்களுக்கு எட்டவைக்கும் நோக்கில் தம்பதியாக இணைய பரிந்துரைக்க வேண்டும்.

சேர்ந்து சுவைக்கும் இன்பம் திருமணத்தின் குறிக்கோள். குடித்தனம் நடத்த திருமணம் தேவையில்லை. தற்கால சூழலில், ஒருவன் இந்த நாட்டின் குடிமகனாக இருந்தால் போதும். அவன் அமைச்சன் ஆகலாம். ஜோதிடராகவும் ஆகலாம். நாளேடுகள் எல்லாம் அவர்களை விளம்பரப்படுத்தி உயர்த்திவிடும்!

செவ்வாய் என்றாலே தோஷமா?

தற்போது, செவ்வாய் தோஷத்தை குறையாகப் பார்க்கும் எண்ணம் வலுத்திருக்கிறது! இணைந்த தம்பதியை பிரியாமல் செய்வதிலும் செவ்வாய்க்கு பங்கு உண்டு. எடுத்த காரியத்தில் இடையூறுகள் தென்பட்டாலும், அதை முறியடித்து  சுறுசுறுப்பை யும் உத்வேகத்தையும் அளிப்பவன் செவ்வாய். வாழ்வில் கசப்பு, சலசலப்பு தென்பட்டாலும் அதை முறியடித்து வெற்றி பெற செவ்வாயின் பங்கு பலன் அளிக்கும்.

சமுதாயத்துடன் இணைந்து வாழும் ஆர்வம் தகவல்களை ஊடுருவி ஆராய்ந்து முடிவை எட்டும் திறன், சட்டதிட்டத்துக்கு மதிப்பளிக்கும் இயல்பு, இணைந்து செயல்பட வேண்டிய விஷயங்களில் நீக்குப்போக்கோடு இணைந்த அணுகுமுறை, துயரத்தில் துவளாமல் இருக்கும் மன உறுதி,  இன்பத்தில் வசமிழக்காமல் இருத்தல் ஆகியன குறித்து திருமணச் சேர்க்கையின்போது ஆராய்ந்து செயல்பட்டால், இணைப்பைத் துண்டிக்கும் அவசியம் இல்லாமல், வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியை சுவைத்து மகிழலாம். இவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, செவ்வாயை முன்னிறுத்தி முடிவெடுப்பது பலனளிக்காது!

சில கணினி ஜாதகங்கள், செவ்வாய் தோஷத்தின் அளவை விளக்கி அட்டவணை போட்டு, பொருத்தம் பார்ப்பவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. லக்னத்தில் இருந்து செவ்வாய், சந்திரனிலிருந்து செவ்வாய், சுக்கிரனில் இருந்து செவ்வாய்... இப்படி கட்டத்தில் தென்படும் செவ்வாயின் நிலையை விரிவாக விளக்கி, எண்ணிக்கை வாயிலாக அதன் தரத்தை கணித்துத் தரும் கணினிகளும் உண்டு. எதை அலச வேண்டுமோ அதை விட்டுவிட்டு, தேவையில்லாத விஷயத்தை விரிவாக ஆராயும் எண்ணம் இருப்பது நமது துரதிர்ஷ்டம்.

த்ரிம்சாம்சகத்தில் செவ்வாய்!

இரட்டைப்படை ராசியில் கடைசி ஐந்து பாகை செவ்வாயின் த்ரிம்சாம்சகம். ராசி முழுவதும் சந்திரனின் பங்கு இருக்கும். ஹோரையில் சூரியன் இருப்பான். த்ரேக்காணத்தில் குரு இணைந்திருப்பான். ராசியில் சந்திரனும், த்ரேக்காணத்தில் குருவும் தட்பக்கிரகங்கள். ஹோரையில் சூரியனும், த்ரிம்சாம்சகத்தில் செவ்வாயும் வெப்பக் கிரகங்கள். சூரியனின் சேர்க்கையில் பலம் பெற்று த்ரிம்சாம்சகத்தில் பரவியிருக்கும் செவ்வாய், குரு மற்றும் சந்திரனின் தட்பத்தை அடக்கி, தனது செயல்பாட்டை அதில் பிறந்தவளிடம் இயல்பாக உருப்பெற வைக்கிறான்.

ராசி நீர் ராசி, அதிபதி சந்திரன் நீரோடு இணைந்த கிரகம், குரு தட்பக்கிரகம் இவற்றின் இணைப்பின் மூலம், செவ்வாய் அவளிடம் திடசித்தத்தை ஏற்படுத்தி, தனது சுதந்திரத்தைப் பேணுவதில் ஆர்வத்தை உறுதி செய்கிறார். இணைந்த கணவனை அல்லது மனைவியை விட்டுப் பிரியாமல் தொடர்ந்து இன்பத்தைச் சுவைக்கும் எண்ணத்தில் அசையாமல் இருக்கும் திடசித்தத்தை ஏற்படுத்துபவனும் அவன்தான்.சௌர்யம், தைர்யம் போன்ற குணங்கள் அவன் சேர்க்கையில் வளரும். ஆகவே, நாடக வில்லனைப் போன்று செவ்வாயை சித்திரிப்பது தகாது.

ஜோதிடர்களின் பொறுப்பு...

சுதந்திரமாகச் செயல்படும் எண்ணம் இருக்கும். மனம் இன்பத்தைச் சுவைப்பதில் முழுமை பெற்றுவிடும். அது அவளுக்கு அழகு; இழுக்கல்ல. ஜோதிட வல்லுநர்கள் பலரும் ஆராய்ந்து சேர்த்து வைத்த தம்பதிகள் விவாகரத்தைச் சந்திக்கிறார்கள். விவாகரத்தின் எண்ணிக்கை அதிகமாவதில் ஜோதிடர்களின் பங்கும் இணைந்துவிடுகிறது. விவாகரத்தான பிறகு, இரண்டாம் திருமணத்திலும் ஜாதகப்பொருத்தம் பார்த்து சேர்ப்பதில் ஆர்வம் தென்படுகிறது.

ஒரு தடவை ஒரு கிரகம் பிரிவை ஏற்படுத்திய பிறகு அதன் செயல்பாடு முற்றுப்பெற்றுவிட்ட படியால், மீண்டும் அதுபோன்ற நிலை வராது என்ற கோட்பாட்டை மறந்து, 'ஒவ்வொரு தடவையும் அது பிரிவை அளிக்கும்’ என்று நினைத்து செயல்படுவது தவறு. ஒரு தடவை தீக்குச்சியை உரசி நெருப்பை வரவழைத்த பிறகு, மருந்தில்லாத குச்சியை மீண்டும் பயன்படுத்த முடியாது. தண்டனையை அனுபவித்த பிறகு, அதே குற்றத்துக்கு  மீண்டும் தண்டனை அளிக்க இயலாது.

சாஸ்திரக் கண்ணோட்டத்துடன் ஆராய முற்பட்டால் எதிலும் சரியான தீர்வை எட்டமுடியும். விஞ்ஞான முறையில் புதுக் கண்ணோட்டத்தை கையாண்டால், விபரீதத்தைச் சந்திக்க நேரிடும். ஆக, 'செவ்வாயில் த்ரிம்சாம்சகம் இங்கு வலுப்பெற்று அவளது இயல்பை வரையறுக்கிறது’ என்ற முடிவு அலசி ஆராயும்போதுதான் புலப்படும்.

- சிந்திப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism