மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

திருவருள் சேர்க்கும் திருமஞ்சனம்!எஸ்.கண்ணன்கோபாலன்

மீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் வழியாகச் செல்ல நேர்ந்தது. திரளான பக்தர்களை அந்தப் பகுதியில் பார்த்தோம். நமக்குத் தெரிந்து அன்றைய தினம் உற்சவம் எதுவும் இல்லை. பின் எதற்காக அங்கே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியுள்ளனர்? வியப்பு மேலிட, ஒரு பக்தரிடம் விவரம் கேட்டோம். அன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரம் என்பதால், ஸ்ரீராமாநுஜருக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெறும் என்றும், அந்த வைபவத்தில் கலந்துகொள்வதால் காலசர்ப்ப தோஷம் உள்ளிட்ட சகலவிதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கி, எண்ணிய எண்ணங்கள்  நிறைவேறும் என்றார். நாமும் அந்த வைபவத்தை தரிசித்து, அந்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே என்று தோன்றியது.

அதன்படி 27.6.14 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற திருவாதிரை நட்சத்திர திருமஞ்சன வைபவத்தை தரிசிக்கச் சென்றோம். காலை 9 மணிக்கெல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டோம். திருமஞ்சன வைபத்துக்கு முன், விழா நாயகரான ஸ்ரீராமாநுஜரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா?

திரேதாயுகத்தில் லட்சுமணன், துவாபரயுகத்தில் பலராமன் என்று அவதரித்த ஆதிசேஷனின் அம்சமாக, உலக மக்களெல்லாம் உய்யும் பொருட்டு அவதரித்தவர் ஸ்ரீராமாநுஜர். பஞ்சமர் மற்றும் பாமரரின் முன்னேற்றத்துக்காகவே தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட அற்புத மகான் அவர்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளே அவருக்கு தீட்சை வழங்கி அருளியதால் குருவாகவும்; அந்தப் பெருமாளே ஸ்ரீராமாநுஜரிடம், 'சம்சார சேதனர்களை எப்படிக் கடைத்தேற்றுவீர்கள்?’ என்று கேட்டபோது, 'கேட்கும் விதத்தில் கேட்டால் சொல்லப்படும்’ என்று ஸ்ரீராமாநுஜர் சொல்ல, அவருக்குப் பெருமாள் சீடராகவும்; மேல்கோட்டை கோயிலில் இருந்து டில்லி சுல்தானால் எடுத்துச் செல்லப்பட்ட செல்வக் குமார மூர்த்தத்தைத் திரும்பப் பெற, 'வாரும், என் செல்லப் பிள்ளாய்!’ என்று ஸ்ரீராமாநுஜர் அழைத்தபோது பெருமாள் அவருக்குப் பிள்ளையாகவும்; ஸ்ரீரங்கநாதர், 'நீர் எனக்குப் பிள்ளையைப் போன்றவர். என்னுடையது எல்லாம் இனி உம்முடையதே!’ என்று அருளியபோது பெருமாள் ஸ்ரீராமாநுஜருக்குத் தந்தையாகவும் என நான்கு உறவுமுறைகள் பெருமாளுக்கும் ஸ்ரீராமாநுஜருக்கும் சொல்லப்பட்டுள்ளன.

நாம் கோயிலுக்குச் சென்றிருந்தபோது நூற்றுக்கணக்கில் காணப்பட்ட பக்தர்கள், 10:30 மணிக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் திரண்டுவிட்டனர். ஒவ்வொருவர் கையிலும் பால், தேன், நெய், சந்தனம் என்று நானாவித அபிஷேக திரவியங்கள் இருப்பதைக் கண்டோம்.

காலை 11 மணிக்கெல்லாம் திருமஞ்சனத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஸ்ரீராமாநுஜர் திருவுருவம் திருமஞ்சனம் நடைபெறும் மண்டபத்துக்கு எழுந்தருள, 'ஸ்ரீமதே ராமாநுஜாய நம:’ என்ற பக்தர்களின் பரவச முழக்கமானது கோயில் முழுவதும் எதிரொலித்து, ஆனந்த அதிர்வலைகளை எங்கும் பரவச் செய்தது. ஸ்ரீ ராமாநுஜருக்கு திருமஞ்சனம் தொடங்குவதற்கு முன்னதாக, ஸ்ரீ எம்பார் ஸ்வாமிகள், ஸ்ரீ ராமாநுஜரின் வடிவழகை வர்ணித்துப் பாடிய 'ஸ்தபன கட்டியம்’ என்னும் வடிவழகு கட்டியம் சேவிக்கப்பட்டது (பக்தியுடன் வாசிப்பதையே சேவித்தல் என்கிறார்கள்). தொடர்ந்து, ஸ்ரீ.உ.வே.மணவாள ஸ்வாமிகள் குடும்பத்தினர் பெரிய திருமஞ்சன கட்டியம் சேவிக்க, அபிஷேகம் தொடங்கியது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

முதலில், சுத்தமான தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 20 குடம் பால், 10 குடம் தயிர், தேன் என்று அபிஷேகம் நடைபெறும்போது, உபநிஷத்துக்கள், ஸ்ரீ நாராயண சூக்தம், ஸ்ரீபுருஷ சூக்தம், பெரியாழ்வாரின் நீராட்ட பாசுரங்கள் என பாராயணம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மஞ்சள், சந்தன அபிஷேகங்களும், சந்தனக் காப்பும் நடந்து முடிந்ததும், அலங்காரத்துக்காக திரை போடப்பட்டது. அந்த நேரத்தில் திருமஞ்சன தீர்த்தம் 'ஈர ஆடை தீர்த்தம்’ என்ற பெயரில் பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப் பட்டது. இது மிகவும் விசேஷமான பிரசாதம் ஆகும். காலசர்ப்ப தோஷம் போன்ற தோஷங்கள் நீங்கி, நினைத்த காரியங்கள் நடைபெற வேண்டுமானால், தங்களால் இயன்ற அளவு அபிஷேக திரவியங்களைச் சமர்ப்பித்து, நெய் தீபம் ஏற்றி, திருமஞ்சன வைபவத்தை தரிசிப்பதுடன், திருமஞ்சன தீர்த்த பிரசாதத்தைப் பெற்றுப் பருகவேண்டும். இவ்விதம் தொடர்ந்து ஐந்து திருவாதிரை நாள்களில் செய்ய, தோஷங்கள் நீங்கி, நினைத்த காரியங்களும், திருமணம் போன்ற சுப வைபவங்களும் தடைகள் நீங்கி நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு ஸ்ரீராமாநுஜருக்கு மாதம்தோறும் திருவாதிரை நாளில் நடைபெறும் திருமஞ்சன வைபவத்துக்கு மட்டும் அப்படி என்ன தனிச்சிறப்பு? இந்தக் கேள்வி நம் மனத்தில் தோன்றவும், அலங்காரங்கள் முடிந்து திரை விலகவும் சரியாக இருக்கவே, நம் நினைப்பைச் சற்றே மறந்து, எம்பெருமானாருக்கு திருப்பாவை சாற்றுமுறையுடன் நடைபெற்ற தீப ஆராதனையை மனம் குளிர தரிசித்தோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பின்னர் பிராகாரத்தை வலம் வரும்போது, நம் மனத்தில் தோன்றிய கேள்வியையே ஒருவர் மற்றொரு பெரியவரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். நாமும் சற்றே நின்று அதைக் கேட்டோம். யஷ்வந்த் ராஜாராவ் என்ற அந்த பக்தரின் கேள்விக்கு, நெற்றியில் பளிச்சென்று திருமண்காப்பு தரித்திருந்த ஸ்ரீ.ப.கிருஷ்ணசாமி என்பவர் கூறிய விளக்கம் அருமையானது.

''ஸ்ரீராமாநுஜர் ஆதிசேஷனின் அம்சம் என்பதால், அவரை தரிசித்து வழிபட, சர்ப்ப தோஷங்கள் உள்ளிட்ட சகல தோஷங்களும் விலகத்தானே செய்யும்! மேலும், இங்குள்ள ஸ்ரீ ராமாநுஜரின் திருமேனி 'தானுகந்த திருமேனி’ ஆகும். ஸ்ரீராமாநுஜர் தம் முதுமைக் காலத்தில் ஸ்ரீரங்கத்திலேயே இருந்துவிட்டபடியால், ஸ்ரீபெரும்புதூரில் இருந்த அவருடைய சீடர்கள், அவரைப் போலவே ஒரு திருவுருவம் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பினார்கள். ஸ்ரீரங்கத்துக்குச் சென்று, தங்கள் விருப்பத்தை ஸ்ரீராமாநுஜரிடம் தெரிவித்தார்கள். அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கிய ஸ்ரீராமாநுஜர், ஒரு சிற்பியிடம் சொல்லி தம்மைப் போலவே மூன்று செப்புச் சிலைகளை வடிக்கச் செய்தார். அவற்றில் தம்மைக் கவர்ந்த ஒரு விக்கிரகத்தை தம் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு, தம்முடைய சக்தியை எல்லாம் அந்த விக்கிரகத் துக்குள் செலுத்தி, 'இது யாம் உகந்த மூர்த்தம். இதையே ஸ்ரீபெரும்புதூர் கோயிலில் பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று கொடுத்து அனுப்பினார். அப்படி ஸ்ரீராமாநுஜர் தம் சக்தியை எல்லாம் செலுத்தி, தானுகந்த மூர்த்தம் என்று அருளியதால், இங்குள்ள மூர்த்தத்துக்குத் தனிச் சிறப்பும் சக்தியும் ஏற்பட்டது'' என்றார் ஸ்ரீ.ப.கிருஷ்ணசாமி.

திருமஞ்சன வைபவத்தின்போது சேவிக்கப் பட்ட வடிவழகு மற்றும் திருமஞ்சன கட்டியத்தை அருளியவர் எம்பார் ஜீயர் சுவாமிகள். அவரைப் பற்றி அறிந்துகொள்ள எம்பார் ஜீயர் மடத்துக்குச் சென்றோம். நம்மை அன்புடன் வரவேற்ற இன்றைய மடாதிபதி ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகால ராமாநுஜ எம்பார் ஜீயர் சுவாமிகளிடம், மடத்தை தோற்றுவித்தவரும், ஸ்ரீராமாநுஜரின் வடிவழகு கட்டியம் இயற்றியவருமான எம்பார் ஜீயர் சுவாமிகளைப் பற்றிக் கேட்டோம்.

''ஸ்ரீவைஷ்ணவ உலகம் உவப்போடு கொண்டா டும் நாள் ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரத் தன்று வரும் ஸ்ரீஜயந்தி திருநாள். அதே நாளில், 1834-ம் ஆண்டு அரியதொரு மகானாகத் தோன்றி, ஸ்ரீராமாநுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயிலில் பல அரிய திருப்பணிகளைச் செய்வித்தது மட்டுமில்லாமல், பகவத் ராமாநுஜரின் திரு மஞ்சன வைபவத்தின்போது சேவிக்கப்படும் திருமஞ்சன கட்டியம், வடிவழகு கட்டியம் போன்றவற்றை இயற்றி அருளி, ஸ்ரீபெரும்புதூரில் எம்பார் ஜீயர் மடமும் ஸ்தாபித்தார்.'' என்று தெரிவித்தார் தற்போதைய எம்பார் ஜீயர் சுவாமிகள். ஆவணி ரோகிணியில் மடத்தில் நடைபெற உள்ள எம்பார் ஜீயர் சுவாமிகளின் ஜயந்தி விழாவுக்கு வரும்படி அழைத்தார்.

மீண்டும் கோயிலுக்கு வந்தோம். மண்டபத்தில் எழுந் தருளி இருந்த ஸ்ரீராமாநுஜரின் திருவுருவை அருகில் சென்று தரிசித்தபோதுதான், அது எப்படி ஸ்ரீராமாநுஜருக்கு உகந்த விக்கிரகமாக ஆனது என்ற உண்மை புரிந்தது. அவருடைய 120-வது வயதில் வடிக்கப்பெற்ற அந்த விக்கிரகம் அவருடைய அன்றைய தோற்றத்தை அப்படியே நம் கண்முன்னால் காணும்படியாக மிக நேர்த்தியாக வடிக்கப் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல், அவர் ஆதிசேஷனின் அம்சம் என்பதால், முதுகுப்புறம் பாம்பின் வடிவத்தில் அமைந்திருந்தது. எனவே, அது ஸ்ரீராமாநுஜருக்குத் தானுகந்த விக்கிரமாக ஆனதில் வியப்பே இல்லை.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

''நீங்கள் உங்களை தவத்திலும் தியானத்திலும் ஈடுபடுத்திக் கொள்வதைவிட, பஞ்சமரையும் பாமரரையும் முன்னேற்றுவதற்கான பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங் கள்'' என்று உபதேசித்தார் சுவாமி விவேகானந்தர்.

ஆனால், அவருக்கு முன்னோடி பகவத் ஸ்ரீராமாநுஜர்தான். நடையாய் நடந்து திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் மந்திரோபதேசம் பெற்றவர், ''இந்த மந்திரோபதேசத்தை வேறு யாருக்கும் செய்யக் கூடாது. மீறினால் உனக்கு நரகம் கிடைக்கும்'' என்ற குருவின் ஆணையையும் மீறி, ஊராரையெல்லாம் அழைத்து, திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோயில் கோபுரத்தின்மீது ஏறி நின்று, பலரும் அறியும்படியாக, தாம் பெற்ற மந்திரோபதேசத்தை அருளி, அவர்களெல்லாம் உய்யும் வழி செய்தார்.

செய்தியைக் கேட்டு ஸ்ரீராமாநுஜரை அழைத்த திருக்கோஷ்டியூர் நம்பிகள், ''நான் சொல்லியதை மீறி நீ எப்படி எல்லோருக்கும் உபதேசிக்கலாம்?'' என்று கேட்டார். அதற்கு ஸ்ரீராமாநுஜர், ''ஐயனே! மன்னிக்கவேண்டும். தங்கள் ஆணையை மீறியதற்காக நான் ஒருவன் மட்டும்தான் நரகத்துக்குச் செல்வேன். ஆனால், தாங்கள் எனக்கு உபதேசித்த மந்திரத்தைக் கேட்ட ஆயிரக்கணக்கானவர்கள் மோட்சம் பெறுவார்களே... அவர்களின்பொருட்டு நான் நரகத்துக்குச் சென்றாலும் பரவாயில்லை'' என்றார். அதைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பிகள், ''நீரே எம்பெருமானார்!'' என்று கூறி, அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.

இப்படி குருவினாலேயே போற்றப்பட்டவரும், ஒடுக்கப்பட்டவர்களிடம் கருணை கொண்டு, அவர்களை முன்னேற்றுவதிலேயே தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்டவரும், ஆதிசேஷனின் அவதாரமாக அவதரித்தவருமான ஸ்ரீ ராமாநுஜரின் அவதாரத் தலத்தில், அவரின் ஜன்மநட்சத்திரமான திருவாதிரை அன்று நடைபெறும் திருமஞ்சன வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களின் எல்லா தோஷங்களும் நீங்கி, அவர்களின் வாழ்வில் இறைவனின் திருவருள் சேரும் என்பதில் சந்தேகம் என்ன? உலகம் உய்ய உடையவர் அவதரித்த தலத்தில், அந்த உடையவருக்கு நடைபெற்ற திருமஞ்சன வைபவத்தை  தரிசித்த நம் மனத்தில்...

பத்மமெனத்திகழ் பைங்கழல் உந்தன் பல்லவமே விரலும்
பாவனமாகிய பைந்துவராடை பதிந்த மருங்கழகும்
முப்புரிநூலொடு முன்கையில் ஏந்திய முக்கோல்தன்னழகும்
முன்னவர்தந்திடு மொழிகள் நிறைந்திடு முறுவல்நிலாவழகும்
கற்பகமே விழிகருணை பொழிந்திடு கமலமுகத்தழகும்
காரிசுதன் கழல்சூடிய முடியும் கனநற்சிகை அழகும்
எப்பொழுதும் யதிராசன்வடிவழகு என் இதயத்துளதால்
இல்லையெனக்கு எதிர் இல்லையெனக்கு எதிர்
இல்லையெனக்கு எதிரே!

- என்று திருமஞ்சனத்தின்போது சேவிக்கப்பட்ட எம்பார் ஜீயர் சுவாமிகள் இயற்றிய பாடலே நிறைந்திருந்தது. யதிராஜர் அருள் நமக்கு இருக்க, நம் வாழ்க்கையில் எதிரிகள் ஏது? எதிர்ப்புகள்தான் ஏது? எந்நாளும் எப்போதும் சந்தோஷம்தானே!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்