Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 8

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 8

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

நாக்பூர் சமஸ்தான மன்னர் போஸ்லேவை மட்டும் அல்லாமல், ராஜமாதா உள்பட அரச குடும்பத்தினர் பலரையும் பலவகையான உடல் உபாதைகள் வாட்டி வதைத்தன. எத்தனையோ வைத்தியங்கள் செய்துபார்த்தும்கூட, நோயின் துன்பம் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டுதான் இருந்ததே தவிர, கொஞ்சமும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில்தான் ஒருநாள்...

அரசரின் தாயாரான ராஜமாதாவின் மனத்தில் ஓர் எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர் ஒரு முடிவுக்கு வந்தார். சேவகர்களை அழைத்து, அரசரை தம்மை வந்து சந்திக்கும்படியாகச் சொல்லி அனுப்பினார். அதன்பேரில், நடக்கும் சக்தியே இல்லாமல் இருந்த போஸ்லே, சேவகர்கள் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொள்ள, தன் தாயைச் சந்திக்கச் சென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போஸ்லேவை வரவேற்ற ராஜமாதா, ''நம்முடைய சமஸ்தானத்துக்கு வருகை புரிந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளை முறைப்படி வரவேற்று பூஜிக்காததுதான் நம்முடைய இந்தத் துன்ப நிலைக்கு காரணம் என்று எனக்கு சர்வ நிச்சயமாகத் தோன்றுகிறது. வரவேற்கச் செல்லாததுடன், உனக்கு உடல்நலம் சரியில்லை என்பதாக, பொய்யாக ஒரு காரணமும் சொல்லி அனுப்பினோம் அல்லவா... அதன் பலனைத்தான் இன்றைக்கு  நாம் அனுபவித்து வருகிறோம். நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுபட வேண்டுமானால், சுவாமிகளை நேரில் தரிசித்து அவர்தம் திருவடிகளைச் சரண் அடைவதுதான் ஒரே வழி என்று எனக்குத் தோன்றுகிறது. இதுபற்றி நீதான் யோசித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்'' என்று கூறினார்.

தாயார் சொல்வது சரிதான் என்று அரசருக்குத் தோன்றினாலும், உடனடியாக எதுவும் சொல்லாமல் தன் மாளிகைக்குத் திரும்பினார். ஆசனத்தில் அமர்ந்து சற்றே களைப்பைப் போக்கிக் கொண்ட போஸ்லே, தன்னையும் அரச குடும்பத்தினரையும் எப்போதிருந்து உடல் உபாதைகள் வாட்டி வருகின்றன என்று யோசித்துப் பார்த்தார். ஸ்ரீநரசிம்ம பாரதி சுவாமிகள் விஜயம் செய்து, அவரை முறைப்படி தான் வரவேற்கச் செல்லாத நாளில் இருந்துதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்தது. தாயார் சொல்வதுபோல், சுவாமிகளை உடனே சென்று தரிசித்து வணங்கி மன்னிப்பு கேட்பதுதான், நோய்த் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கான ஒரே வழி என்பதும் புரிந்தது.

துங்கா நதி தீரத்தில்... - 8

ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளை குடும்பத்துடன் சென்று தரிசிக்க முடிவானதும், அதற்கான ஏற்பாடுகள் விரைந்து நடைபெற்றன. சுவாமிகள் முகாம் இட்டிருந்த இடத்துக்கு, அரசரும் பரிவாரங்களும் தங்கள் உடல் உபாதையைப் பொருட்படுத்தாமல் சிரமப்பட்டு நடந்தே வந்து சேர்ந்தனர். அப்பொழுது சுவாமிகள் பூஜையில் இருந்தபடியால், அரசர் வெளியிலேயே காத்திருந்தார். சுவாமிகளின் பூஜைகள் பூர்த்தியானதும், அரசரின் வருகை குறித்து சுவாமிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சுவாமிகளின் அழைப்பு கிடைத்ததும், அரசரும் அரச குடும்பத்தினரும் சுவாமிகளின் திருமுன் சென்று, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தனர். கண்களில் இருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிய, கரம் கூப்பி வணங்கினர்.

''சுவாமிஜி, தாங்கள் எங்களை மன்னித்து அருள்புரிய வேண்டும். தங்களின் மகத்துவம் புரியாமல் சிறுபிள்ளைத்தனமாய் தங்களை அவமதித்துவிட்டோம். அன்றிலிருந்து இப்போதுவரை அதற்கான பலனாக நாங்கள் படும் நோய்த் துன்பத்தை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எங்களுடைய துன்பங்கள் அகல, சுவாமிகள்தான் அனுக்கிரஹம் செய்து அருள்புரியவேண்டும்'' என்று மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டார் அரசர் போஸ்லே.

அரசரின் வார்த்தைகளில் இருந்த சத்தியம் சுவாமிகளுக்குத் தெரியாதா என்ன? அரசரையும் அவர் குடும்பத்தினரையும் பரிபூரணமாக ஆசீர்வதித்த சுவாமிஜி, அரசரின் வேண்டுதலின்பேரில் அரண்மனைக்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்தார்.

இப்படி, தொடக்கத்தில் சுவாமிகளிடம் மாறுபட்ட மனநிலை கொண்டிருந்து, பின்னர் தெளிவு பெற்று, சுவாமிகளிடம் சரணாகதி அடைந்த மன்னர்கள் பலர் உண்டு. அதேபோல, மைசூர் மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையாரைப் போன்று சுவாமிகளிடம் ஆரம்பத்திலிருந்தே அளப்பரிய பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்த மன்னர்களும் பலர் இருந்தார்கள்.

அந்நாளைய திருவனந்தபுரம், புதுக்கோட்டை, இந்தூர், ஸிந்தியா, ஹோல்கார், கைக்வார் முதலான சமஸ்தானங்களின் அரசர்களும், ஜமீன்தார்களும் ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகளிடம் மிகுந்த பக்தியும் விசுவாசமும் கொண்டிருந்ததுடன், ஸ்ரீ சாரதா பீடத்துக்கு வேண்டிய பொருள் உதவிகளையும் தாராளமாகவே செய்தனர்.

துங்கா நதி தீரத்தில்... - 8

தமது தவ வலிமையாலும், யோக ஸித்தியினாலும், எல்லாவற்றையும்விட தம்முடைய நேர்மையினாலும், அரசர்கள், ஜமீன்தார்கள் மற்றும் பல பிரபுக்களின் பக்தியையும் விசுவாசத்தையும் ஒருசேரப் பெற்றிருந்த ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள், தமக்கும் ஸ்ரீசாரதா பீடத்துக்கும் அவர்கள் வழங்கிய பொன், பொருள், இன்னபிற மானியங்களைக் கொண்டு பல திருப்பணிகளைச் செய்ததுடன், ஸ்ரீசாரதா பீடத்துக்குப் பல வகைகளிலும் வருமானம் வரும்படியாகச் செய்தார்கள்.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் மட்டுமின்றி, வேறுபல ஆலயங்களுக்கும் நம் சுவாமிகள் பல்வேறு திருப்பணிகளைச் செய்திருக்கிறார்கள். ஒருமுறை, யாத்திரையில் இருந்து திரும்பும் வழியில், சாமராஜ நகரத்தில் உள்ள சாமராஜேஸ்வர சுவாமிக்கு கலைநயங்களுடன் கூடிய அழகான தேர் ஒன்றைச் செய்து வழங்கினார். இதுபோன்ற திருப்பணிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், வித்வான்களுக்கும், உதவி கேட்டுத் தம்மிடம் வந்த இதர ஜனங்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து பாதுகாத்து வந்தார்கள்.

துங்கா நதி தீரத்தில்... - 8

இப்படியெல்லாம் சுவாமிகள் பிரசித்தி பெற்று விளங்கி வருகையில்தான், அவர்களுக்கு 60 வயது நெருங்கவே, ஸ்ரீ சாரதா பீடத்துக்குத் தக்கதொரு வாரிசைத் தேடிக் கண்டு, இதோ இன்று காலையில்தான் பீடாதிபதியாகப் பட்டாபிஷேகமும் செய்துவைத்தாயிற்று.

சிவஸ்வாமி என்கிற, அந்த 9 வயதே ஆன பாலகன், ஸ்ரீ சச்சிதானந்த சிவா அபிநவ நரசிம்ம பாரதி என்ற தீட்சா நாமத்துடன் ஸ்ரீ சாரதா பீடத்தின் பீடாதிபதி ஆகிவிட்டார்.

காலையில் தொடங்கிய வைபவம், சம்பிரதாய சடங்குகளுடன் நிறைவுபெற மாலை ஆகிவிட்டது. பீடாதிபதியானாலும், பால சுவாமிகள் என்பதால் (பீடாதிபதியாகிவிட்ட சிவஸ்வாமியை நாம் இனி 'பால சுவாமி’ என்றே அழைப்போம்) சோர்ந்து காணப்பட்டார். அதைத் தெரிந்துகொண்டவர்போல்,  ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள், பால சுவாமிக்கு ஸ்நானம், சந்தியாவந்தனம் போன்றவற்றைச் செய்வித்து, பசியாற்றிக்கொள்ள எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் கொஞ்சம் பொரியைக் கொடுத்துச் சாப்பிடச் செய்தார். பிறகு, ஒரு மான் தோலை விரித்து, அதில் படுத்துக்கொள்ளும்படியாகச் செய்தார்.

தம்முடைய அனுஷ்டானங்களை முடித்துக்கொண்டு, சிந்தனைவயப் பட்டவராக வந்துகொண்டிருந்தார் ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள். வழியில், நித்திரையில் இருந்த பால சுவாமிகள், ஒரே சொல்லை திரும்பத் திரும்ப மூன்று முறை உச்சரித்தது அவர் காதுகளில் விழுந்தது.

அதைக் கேட்டு ஸ்ரீ நரசிம்ம பாரதி சுவாமிகள் மிகுந்த சந்தோஷப்பட்டார்கள்.

பால சுவாமிகள், மூன்று முறை உச்சரித்த அந்தச் சொல் என்ன தெரியுமா..?

- தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism