Published:Updated:

'எல்லே இளங்கிளியே...!’

என் கடன் இறைப்பணி... பரம்பரையாய் கிளி செய்யும் குடும்பம்! பிரேமா நாராயணன்

'எல்லே இளங்கிளியே...!’

என் கடன் இறைப்பணி... பரம்பரையாய் கிளி செய்யும் குடும்பம்! பிரேமா நாராயணன்

Published:Updated:

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாளின் ஒவ்வொரு அம்சமுமே அழகுதான்! தாயாரின் தயை சிந்தும் விழிகளும், தெய்விகத் தோற்றமும், நாவில் விளையாடும் நல்லிசைத் தமிழும், சாய்ந்த கொண்டையும், தோள்களைத் தழுவிய மாலையும், தொண்டருக்கருளும் கருணையும்... என ஆண்டாளின் அழகைச் சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும்விட, ஆண்டாளின் தோளில் ஒயிலாகத் தொற்றியபடி காட்சிதரும் கிளி பேரழகு!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளின் தோளில் செல்லமாக, உரிமையோடு தொற்றிக் கதை பேசும் அந்தக் கிளி, கல்லில் செதுக்கப் பட்டதோ, உலோகமோ அல்லது வேறு செயற்கை இழைப் பொருட்களால் ஆனதோ அல்ல. மேலும், எல்லா நாளும் இருப்பதும் ஒரே கிளியும் அல்ல; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிளி ஆண்டாளின் தோளில் தொற்றிக்கொள்கிறது!

ஆமாம்... ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர் மக்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்தான் அது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்டாள் தோளில் வைக்கப்படும் கிளி, தினசரி புத்தம் புதியதாகச் செய்து வைக்கப்படுகிறது. அதுவும், பிளாஸ்டிக் போன்ற எந்த செயற்கைப் பொருளாகவும் இல்லாமல், ரசாயனம், கோந்து போன்று எதுவும் கலக்காமல், முழுக்க முழுக்க இயற்கையில் கிடைக்கும் இலை, பூ, நார், மூங்கில் போன்றவற்றை மட்டுமே கொண்டு செய்யப்படும் அற்புதம் அது!

'எல்லே இளங்கிளியே...!’

இந்தக் கிளியைச் செய்வதற்கென்றே பிரத்யேகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட இரண்டு மூன்று பேர் மட்டுமே இந்தப் புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிலும், கோயில் தேவஸ்தானம் சார்பில் நியமிக்கப் பட்டு, பரம்பரை பரம்பரையாகக் கிளி செய்து வருபவர், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராமர். அவரிடம் இந்தக் கிளி குறித்து மேலும் அறிய அணுகியபோது, மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு, தேவஸ்தான அலுவலகத்தில் முறைப்படி அனுமதி பெற்ற பின்பே சம்மதித்தார்.

''எனக்கு 65 வயசாகுது. 22 வருஷமா கிளி தயார் பண்ணிக் கொடுத்துட்டிருக்கேன். எனக்கு முன்னால, என்னோட பெரியப்பா இந்த வேலையைச் செய்துட்டிருந்தார். அவர் ஒரு டீச்சர். திடீர்னு ஒரு சூழ்நிலையில, கிளி செய்ய வேறு யாரும் இல்லாததால, ஆர்வத்தோடு தானே அந்த வேலையை எடுத்துச் செய்ய ஆரம்பிச்சார்.

எனக்குத் தெரிஞ்சு 200, 250 வருஷமா எங்க குடும்பம் இந்தத் தொழில்ல ஈடுபட்டி ருக்கிறதா எங்க பெரியப்பா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ, அஞ்சாவது தலைமுறையாக நான் இதைச் செய்யறேன்!'' என்றார் ராமர்.

''ஆண்டாள் கிளி பத்திச் சொல்லுங்களேன். என்னென்ன பொருட்களை வைத்து இந்தக் கிளியைச் செய்யறீங்க?’

''இது ஒரு நுணுக்கமான வேலை. இதை ஆண்கள்தான் செய்யணும். இதுவரை எந்தப் பெண்ணும் கிளி கட்டித் தந்ததா தகவல் இல்லை. எங்க வீட்டுப் பெண்கள் விருப்பப்பட்டு, 'நாங்களும் கட்டித் தரோம்’னு சொன்னாக்கூட நாங்க அனுமதிக்கிறதில்லை.

'எல்லே இளங்கிளியே...!’

ஆண்டாள் அம்மாவுக்காக தினசரி ஒரு புதுக் கிளி செய்வோம். ஒரு கிளியைக் கட்டுறதுக்கு அஞ்சு, ஆறு மணி நேரம் ஆகும். வேறு யார் உதவியும் இல்லாம, நான் ஒருத்தன்தான் செய்வேன். கிளி செய்ய சில இலைகளும், பூக்களும், வாழை நாரும் மட்டும்தான் பயன்படுத்துவேன். முதலில், வாழையிலைச் சருகுகளை வச்சு, கிளி உருவம் வர்ற மாதிரி, நாரால சுத்திக் கட்டிப்பேன்.

கிளி உருவத்துக்குக் கொண்டு வந்ததும், மரவள்ளிக்கிழங்குச் செடியின் இலைகளை, சருகைச் சுத்தி வச்சுக் கட்டுவேன். அந்த இலை ரொம்ப மெல்லிசா இருக்கும். நல்லா பதிவாக வச்சுக் கட்ட வரும். கிளி உடல் நிறத்துக்குப் பொருத்தமா தத்ரூபமாக இருக்கும். கிளியோட உடல் முழுமை அடைஞ்சதும், கிளியின் மூக்கு வைக்கணும். அதுக்கு, மாதுளம்பூவைப் பிரிச்சு, மூக்கு மாதிரி வைப்பேன். செக்கச்செவேல்னு, அச்சு அசல் கிளிமூக்கு மாதிரியே இருக்கும்.

கண்ணுக்கு, 'காக்காப்பொன்’ (மைக்கா) வைப்பேன். அதையும் கடைகள்ல வாங்கமாட்டேன். கிணறு வெட்டறபோது, வெளிய வர்ற கல்லுச் சில்லுகள்ல 'காக்காப்பொன்’ கிடைக்கும். அதனால, கிணறு வெட்டும் இடங்களுக்குப் போய், அதைத் தேடி எடுத்து சேகரிச்சு வெச்சுப்பேன். கிளியின் கண்ணுக்கு அதை வச்சு ஒட்டிவிட்டா, அப்படியே அச்சு அசல் கண் மாதிரியே இருக்கும்.''

''காக்காப் பொன்னை கண் மாதிரி ஒட்ட, ஃபெவிகால் மாதிரி ஏதாவது பசை உபயோகிப்பீங்களா?’

''நிச்சயமா மாட்டேன். அந்த மாதிரி செயற்கைப் பொருளோ, கடையில் வாங்கற பொருளோ எதுவுமே உபயோகிக்கிறதில்லை. தாயாருக்கு சார்த்தறதாச்சே! அதனால பசை, எச்சில்னு எதுவும் தொடக்கூடாது.

லேசா தண்ணி தொட்டு ஒட்டிவிட்டாலே காக்காப்பொன் நல்லா ஒட்டிக்கும். பசை தேவையே இல்லை. அடுத்ததா, றெக்கை. அதுக்குப் பனை ஓலை, நந்தியாவட்டை இலை, செவ்வரளி இலைகளை வச்சுக் கட்டுவோம். வாலுக்கும் அந்த இலைகளும், பனை ஓலையும்தான். இப்போ, கிளியோட முக்கால்வாசி வேலை முடிஞ்சிடும். கடைசியா கால் கட்டணும்.

சின்னதா ரெண்டு மூங்கில் குச்சிகளை பென்சில் மாதிரி கூர்மையா சீவி, காலுக்கு வச்சுக் கட்டிடுவோம். அதைக் குத்தி வைக்கிறதுக்கு, பூச்செண்டு செய்யணும்.  அதுக்கு, நந்தியாவட்டைப்

பூ, செவ்வரளிப்பூ ரெண்டையும் வச்சு செண்டு தயார் பண்ணி, அதுல மூங்கில் கால்களோடு இருக்கும் கிளியைக் குத்தி நிறுத்திட்டோம்னா, தாயாருக்கான அன்றைய கிளி ரெடி!'' என பக்திப் பரவசம் பொங்கச் சொல்கிறார் ராமர்.

'எல்லே இளங்கிளியே...!’

''தினசரி எப்போ இந்த வேலையை எப்போ ஆரம்பிச்சு, எப்போ முடிப்பீங்க?’

''காலை 10 மணி வாக்கில் கிளி கட்ட உக்காருவேன். அதுக்கு முன்னாலயே இலைகள், நார், பூ, மூங்கில் குச்சி எல்லாம் போய் சேகரிச்சுட்டு வந்து, தயாராக வச்சுக்கிட்டுத்தான் உக்காருவேன். நானேதான் போய் அதையெல்லாம் சேகரிச்சுட்டு வருவேன்.

கிளியை முழுமையா கட்டி முடிக்கிறதுக்கு மதியம் 3 மணி ஆயிடும். சாயரட்சை பூஜை ஆரம்பிக்கிறதுக்குள்ள, என் கையால் தயாரான கிளி, ஆண்டாள் அம்மா தோளில் போய்  ஜோரா உட்கார்ந்துடும்.

இத்தனை வருஷமாகக் கிளி செய்து வந்தாலும், இதுல ஒரு நாள், ஒரு வேளைகூட எனக்கு அலுப்பு சலிப்பு வந்ததே இல்லை. தினமும் தாயார் தோளில் என்னோட கிளி உட்கார்ந்திருக்கிறதைப் பார்க்கிறபோது, அந்த நிமிஷம் கிடைக்கிற பரவசம் இருக்கே... அதை வார்த்தையால சொல்ல முடியாது!'' - உணர்ச்சி மேலிட, தாயார்மீது கொண்ட ஆழ்ந்த பக்தி யால் குழைந்து உருகி, தழுதழுத்து வருகிறது ராமரின் குரல்.

''உங்க பெரியப்பாவுக்குப் பிறகு நேரடியாக நீங்க இந்த வேலைக்கு வந்துட்டீங்க. அடுத்து, உங்க வாரிசாக இதை யாராவது கத்துக் கிறாங்களா?''

''இல்லை. நான் நேரடியாக இந்த வேலைக்கு வந்தவன் இல்லை. படிச்சு முடிச்சு, ரயில்வேயில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்துட்டிருந்தேன். அப்பவே எங்க பெரியப்பா அடிக்கடி சொல்வார், 'கிளி கட்டுறதை வந்து கத்துக்கோடா ராமா’ன்னு. ஆனா, எனக்கு அப்போ அதில் ஆர்வம் இல்லே; நான் செய்ய வேண்டிய சூழலும் வரலே.

பெரியப்பாவுக்குப் பிறகு நான்தான் கிளி கட்டணும்னு ஒரு சூழல் தன்னால உருவாகிடுச்சு. 'இவன்தான் இனிமே எனக்கான கிளியைத் தயார் பண்ணணும்னு தாயார் நினைச்சுட்டா, அதை மீற யாரால முடியும்?

இதோ, நான் ரயில்வே வேலையை உதறி, கிளி கட்டுற வேலைக்கு வந்து, 20 வருஷங்களுக்கும் மேல ஆயிடுச்சு.அது மாதிரி, எனக்குப் பிறகு இந்த வேலைக்கு யார் வரணும்கிறதை தாயார் ஏற்கெனவே நியமனம் பண்ணியிருப்பா! அவ அனுமதி இல்லாம ஒரு

'எல்லே இளங்கிளியே...!’

நூலைக்கூட நம்மால இழுத்துவிட முடியாது! அதனால, அவ உத்தரவு இல்லாம வேற யாராலயும் இந்தக் கைங்கர்யத்தைத் தொடரமுடியாது!''

''உங்க கிளியின் அழகை ரசிச்சுப் பலர் பாராட்டியிருப்பாங்க. அதில் உங்க மனசில் பதிஞ்ச பாராட்டு எது?''

''ஆயிரக்கணக்கானவங்க தினசரி வந்து சேவிக்கிற திவ்யதேசம் இது! எல்லோருமே கிளியின் அழகில் மயங்கிப் பாராட்டுவாங்க. அதையெல்லாம் மனசில் வச்சுக்கிறது  இல்லை.

ஆனா, ஒருமுறை கிளியைப் பார்த்துட்டு, என்னைப் பத்தி விசாரிச்சுட்டுப் போன யாரோ ஒரு பக்தர், ஊருக்குப் போய், என் பெயர் போட்டு, கோயில் விலாசத்துக்கு 500 ரூபா பரிசு அனுப்பியிருந்தார்.

இப்போ வரைக்கும் அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. ரொம்பவே நெகிழ்ந்துபோயிட்டேன். ஆனா, என் திறமைக்குக் கிடைச்ச பரிசாக அதை நான் நினைக்கலை. தலையில் அப்படியொரு கர்வத்தை ஏத்திக்கலை. ஏன்னா, இந்தக் கலை அவ கொடுத்தது. எல்லாப் பெருமையும் ஆண்டாளுக்கே! எல்லாப் பாராட்டு களும் அவளோட திருவடிகளுக்கே!'' - சந்நிதியை நோக்கிக் கைகளைக் கூப்பி, நெகிழ்வோடு வணங்குகிறார் ராமர்.

தோளில் தொற்றிய செல்லக் கிளியோடு அழகுப் புன்முறுவல் பூத்து, அவரை ஆசீர்வதிக்கிறாள் ஆண்டாள்.

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

ஆண்டாள் அழகு, கிளி அழகு!

ஆண்டாள் கிளி குறித்து, ஆண்டாள் திருக்கோயிலின் செயல் அலுவலர் ராமராஜாவிடம் பேசினோம். ''தாயார் ஆண்டாளின் இடது தோளில் எப்போதும் காட்சி தரும் பச்சைக் கிளியை, தினசரி மாலை 6.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜையின்போது சார்த்துவது வழக்கம். அந்தக் கிளி, இரவு அர்த்தசாமப் பூஜை வரை ஆண்டாளின் தோளில் வீற்றிருக்கும். அதற்குப் பிறகு, ஆண்டாளுக்குச் சார்த்தப்பட்ட மாலை முதலானவற்றைக் களையும் 'படி களைதல்’ எனும் நிகழ்வின்போது, கிளியும் அகற்றப்படும்.

முதல் நாள் மாலையில் சார்த்தப்பட்டுக் களையப்பட்ட கிளி, மறுநாள் உபயதாரர் அல்லது கோயிலுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களுக்குப் பிரசாதத்துடன் வைத்துக் கொடுக்கப்படுகிறது. ஆண்டாளின் தோளில் 3 மணி நேரம் இருப்பதால், மிகுந்த புனிதப் பொருளாகக் கருதப்படுகிறது இந்தக் கிளி. ஆண்டாள் தோளில் இருக்கும் கிளி மிகவும் சக்தி வாய்ந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆண்டாளிடம் வைக்கும் கோரிக்கை களை கிளி மூலமாகத்தான் பெருமாளிடம் தாயார் சொல்வதாக இங்கே ஐதீகம்.

இந்தக் கோயிலில், கைகளால் செய்யப்படும் கிளியைச் சார்த்தும் வழக்கம், 8-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தே தொடர்ந்து வந்திருக்கிறது. கிளி செய்வதற்கென்றே கோயில் சார்பாக ஒரு கலைஞர் நியமிக்கப்பட்டு, அவருடைய குடும்பம்தான் தொன்றுதொட்டு இந்த ஆன்மிகப் பணியைச் செய்து வருகிறது. இப்போது, அந்தக் குடும்பத்தின் வாரிசான ராமர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக, ஆண்டாளுக்காகக் கிளி செய்து தருகிறார். இலைகளையும் பூக்களையும் வைத்து மிக நேர்த்தியாகச் செய்யப்படும் இந்தக் கிளி, உற்சவரின் தோளில் 'ஜம்’மென்று அமர்ந்து வலம் வரும்போது, அத்தனை பேரின் கண்களும் அந்தக் கிளியின் மேல்தான் இருக்கும்!'' என்றார் ராமராஜா, மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த குரலில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism