அருட்களஞ்சியம்
கடவுள் தத்துவத்தை ஆராயும் பக்தனின் மனம் ஒருபோதும் ஒரு முடிவுக்கு வருவதில்லை. நீண்ட காலம் ஆராய்ச்சி செய்த பின்னரும், மெய்ஞ்ஞானிகள், அடியார்கள், தத்துவ நிபுணர்கள் பலரோடு விவாதம் நடத்திய பிறகும், கடவுள் தத்துவம் பக்தனுக்குக் கானல் நீராகவே இருந்து வருகிறது. தன்னையும் குழப்பிக்கொண்டு பிறரையும் குழப்பிவிட்டது ஒன்றே மிச்சமாகிறது.
்அந்த நிலையில்தான், அவன் மனத்தில் ஒரு விதத் தெளிவு உதயமாகிறது. 'எல்லாம் ஒன்றுதான்’ என தனக்குத்தானே ஆறுதல் பெற்று, மனக் குழப்பத்திலிருந்து விடுபடுகிறான். இவ்வாறு சஞ்சலம் அடையும் பக்தனின் உள்ளத்தில் மேற்கூறியவாறு தெளிவு ஏற்பட கடவுள், தத்துவ மூர்த்தியாக இரண்டொரு ஸ்தலங்களில் கோயில் கொண்டு எழுந்தருளி யிருப்பதைத் தமிழகத்தில் நாம் தரிசிக்கிறோம்.

திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரி அம்மன்
சென்னையிலிருந்து பூவிருந்தவல்லிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் பத்தாவது மைல் கல்லில், வேலப்பன் சாவடி என்ற இடத்தில் வடக்குப்புறம் திரும்பி இரண்டு மைல்கள் சென்றால், திருவேற்காடு என்ற பழம்பெரும் பாடல் பெற்ற தலம் இருக்கிறது. பாலி ஆற்றின் (கூவம் நதி) கரையில் அமைந்துள்ள அப்புனித பூமியில்தான் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோயில் கொண்டிருக்கிறாள்.
அக்கோயிலுக்கு மேற்கே இரண்டு பர்லாங் தொலைவில் சிவபெருமான் வேதபுரீச்வரராக வும், பார்வதிதேவி வேற்கண்ணியாகவும் கோயில் கொண்டிருக்கின்றனர். தொண்டை மண்டலத்தில் சிறப்புற்று விளங்கும் 32 சிவத் தலங்களில் திருவேற்காடும் ஒன்று!
முன்பு ஒருமுறை, சுமை தாங்காமல் வடக்குப் பகுதி தாழ்ந்து, தென்புறம் மேலே சென்றதால், அதைச் சமப்படுத்த குறுமுனிவனை தென்னகம் போகும்படி பணித்தார் கயிலைநாதர். அப்போது வாக்களித்தபடி, அம்மையப்பன் அகத்திய முனிவருக்கு திருவேற்காட்டில் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தந்ததாகத் தல புராணம் கூறுகிறது. இங்கு உறையும் முக்கண்ணனை திருஞான சம்பந்தப்பெருமான் 'வேதவித்தகன்’ எனவும், அருணகிரிநாதர் 'வேதபுரீச்வரர்’ எனவும் போற்றிப் பாடியிருக்கிறார்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் இப்புண்ணிய தலத்தில்தான் திரு அவதாரம் செய்து, அதன் பெருமையைப் பன்மடங்காக்கியிருக்கிறார்.
இத்தலத்தின் குன்றுதோறும் ஆடும் குமரன், சூரபத்மாதிகளை வதை செய்யும்பொருட்டு அன்னை பராசக்தியிடம் வேல் பெற்றுச் சென்றதாகவும் திருவேற்காடு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது. ஞான சக்தி வடிவமான 'திருவேல்’ பெற்றுச் சென்றதால், இவ்விடம் 'திருவேற்காடு’ என்ற திவ்ய நாமம் பெற்றுள்ளது. வேல மரங்கள் மண்டிக்கிடந்த காடாக இருந்த தாலும் அப்பெயர் சூட்டப் பெற்றது என்று கூறுவோரும் உண்டு.
ஜகன்மாதா கருணைமாரி பொழிவதாலும், கருநாக வடிவில் உறைவதாலும், அம்பிகை இங்கு கருமாரியாக நாமம் ஏற்றிருப்பதைக் கருதலாம். மேலும், சிவபெருமானிடம் திருநீறு பெற்று, ஐம்பெரும் தொழில் புரியும் பொருட்டு, அந்தரக்கன்னி, ஆகாயக் கன்னி, பிராமணக்கன்னி, காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, கருமாரி என எழுவராகப் பிரிந்தனள் உமையவள். எழுவருள் இளையவளாய் நின்ற கருமாரி தன் எல்லையற்ற அருள் வெள்ளத்தால், கலியுகத்தில் அல்லலுற்று அவதியுறும் ஜீவன்களை ரட்சிக்கும் பொருட்டு ஈருருவில் திருக்கோலம் கொண்டு, கலி நீக்கும் கருமாரியாக அருகிலேயே கோயில் அமைத்துக்கொண்டுவிட்டாள். ஓர் உருவம், தலைகாட்டி நிலை (உடல்) மறைந்து புவனேசுவரியாகவும், மறு உருவம் ஐந்து தலைநாகம் அணியப்பெற்று சிவசக்தி இணைந்த சிலையாகவும் காட்சி தருகின்றன.

இத்தலத்தில்தான், அன்னையின் அருட் பெரும் செல்வனான சேவற்கொடியோன் திருச்செந்தூரிலிருந்து திரும்பி வந்து, அவள் பொற்பாதம் வணங்கி, திருவருளும் திருநீறும் பெற்றான். முதல் சாம்பர் பெற்று, பால சுப்பிரமணியன் சாம்பரணிந்து, நான்கு புறமும் சாம்பரைத் தூவி, சாம்பருடன் குளிர்ந்த நீர் உட்கொண்டான். ''இதுபோன்று மாந்தர் அனைவரும் நீரருந்த, இவ்விடத்தில் புனித தீர்த்தம் உண்டாகுக'' என்று சாம்பர் தூவி பொய்கை அமைத்தனன். சாம்பரால் அமைந்த பொய்கை- 'சாம்பர்ப் பொய்கை’ ஆயிற்று.
அத்தீர்த்தத்தில் பாலசுப்பிரமணியன் நீராடி, அத்தீர்த்தத்தையும் சாம்பரும் உட்கொண்ட துடன், ஆதிவாரமான அன்று சூரியனின் ஒளி கருமாரிக்கு நேராய் அமைகின்ற காட்சி கண்டு வியந்து, கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணங்கிப் போற்றி நின்றான். அதனால்தான் இன்றும் ஞாயிற்றுக் கிழமையே அம்மனை வழிபட முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.
பாலன் கரத்திலிருந்த வேலின்மீது சாம்பர் தூவி தீர்த்தம் தெளித்து, அதன் மகிமையைத் தேவி கூறியதாக புராணம் தெரிவிப்பதாவது: ''தந்தைக்கு ஞான உபதேசம் செய்த மைந்தா! இந்தச் சாம்பர்ப் பொய்கையில் ஆதி வாரத்தில் அதிகாலையில் நீராடி சாம்பரணிந்து குளிர்ந்த நீருடன் சாம்பர் உட்கொள்வோர், கல்வியும், செல்வமும் ஆயுளும் பெறுவர். தைப்பூச நன்னாளில் நீராடித் திரிகரண சுத்தியுடன் சாம்பரணிந்து சாம்பர் உட்கொள்வோரும், வேம்புக்கரசு, வெள்வேல் இவற்றை வலம் வருவோரும் மக்கட்பேறு அடைவர். கங்கை, யமுனை, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி அனைத்திலும் நீராடிய பலனைப் பெறுவர். இத்தகு சிறப்பு வாய்ந்த தீர்த்தம் பல்லாண்டுகள் கழித்துப் பாரில் மிகப் பிரசித்தி பெறும்'' என உரைத்தனள்.

பல யுகங்களாகப் புற்று வடிவிலிருந்த கருமாரி அம்மனை முனிவர்களும், தேவர்களும், தேவ கன்னியரும் போற்றிச் சென்ற தாகப் புராணம் கூறுகிறது. ஜகதாம்பிகையின் அருளை ஜகத்தில் உள்ளோர் அனைவரும் பெறும்பொருட்டு அகத்திய முனிவர், திருக்கலசத்தில் ஸ்ரீதேவியை எழுந்தருளச் செய்து, வேத மந்திரங்களாலும், தீந்தமிழாலும் துதித்தார். மாமுனிவரின் மாதவத் துக்கு இரங்கி, மாதாவும் நான்கு கரத்துடன் கருநீலியாய்க் காட்சி தந்தாள். பின்னர், அத் தைப்பூச நன்னாளிலேயே ஆலயம் கொண்டு எழுந்தருளும்பொருட்டு திரிசூலத்தை எடுத்து பூமியில் ஊன்றினாள். பாரெல்லாம் பரந்து நிற்கும் பராசக்தி அங்கே தனித்தன்மையுடன் உறைபவளானாள்.
தேவி கருமாரி திருக்கோயிலில் சிலாரூபத்தில் ஆட்சி புரியத் துவக்கியதும், பாம்புப் புற்றும் இடம் மாறியது. தற்போது ராஜ கோபுரத்தின் ஈசானியத் திக்கில் காணப்படும் புற்றில் அன்னை கருநாக வடிவில் வாழ்ந்து வருகிறாள் என்று நம்பப்படுகிறது.

சங்கரநயினார் கோயில்
'அரியும் அரனும் ஒன்றே’ என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காக ஸ்ரீசங்கர-நாராயணன், தத்துவ மூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றாகிய சங்கரநயினார் கோயிலில் மூர்த்திகரமாக எழுந்தருளியிருக்கிறார்.
பழம் பதியாகிய பாண்டி நாட்டின் தென்பகுதியில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் எனப்படும் விசேஷங்களால் மேம்பாடுற்ற கோயில்களுள், சங்கர நயினார் கோயில் என்னும் புண்ணிய ஸ்தலம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. பிறவிப் பிணியைத் தீர்ப்பதற்கும், உடற்பிணியைப் போக்குவதற்கும் சிவலிங்க வடிவில் 'சங்கர லிங்கம்’ என்று திருநாமம் பெற்று, கோமதியம்மன் சமேதராக நின்று, தன்னை நாடி வருவோர்க்கெல்லாம் வேண்டிய வரம் அளித்து, ஈசன் அருள்பாலிக்கிறான். அம்பிகையின் அருட்சக்தியோ சொல்லத் தரமன்று! மற்றுமொரு விசேஷமும் இத்தலத்தில் உண்டு.
ஒருமுறை, உமாதேவியார் தமது பதியாகிய சிவபிரானிடத்தில், 'உமது திருவுருவில் ஸ்ரீ நாராயணரின் வடிவத்தையும் எனக்குக் காட்டி அருள வேண்டும்’ எனப் பிரார்த்தித்தார். அவ்வேண்டுகோளுக்கு இணங்கி, 'அவ்வாறானால் குற்றமற்ற தவம் செய்தாலன்றி, அந்த வடிவம் காணுதற்கரிது’ எனத் திருவாய் மலர்ந்தருளினார் சிவபிரான்.

உமை மண்ணுலகில் வந்து, புன்னை மரங்கள் நிறைந்த வனம் ஒன்றைக் கண்டு, தவம் மேற்கொள்ளத்தக்க இடம் இதுவே எனத் தீர்மானித்து, அங்கு தவம் இருந்தார். பின்னர், தன் நாயகனிடம் கேட்ட வரம் பெற்று, சிவ-விஷ்ணு பேதத்தை பக்தர்களுடைய மனத்திலிருந்து அகற்றினார். அம்பிகை தவம் செய்து, சங்கர-நாராயணனாகக் காட்சி தந்த பரமனை தரிசித்த ஸ்தலம் இது.
ஆண்டின் நான்காம் மாதமாகிய ஆடியில் திரு நாராயணரைத் தமது இடப் பாகத்திலே கொண்டு சிவபிரான் சங்கர- நாராயண ராகக் காட்சியருளியதால் 'ஆடித் தபசு’ என்னும் திருவிழா வெகு கோலாகலத்துடன் இந்த ஸ்தலத்தில் நடைபெற்று வருகிறது.
காச்யப முனிவருக்கு இரு மனைவியர் - விந்தை, கர்த்திருவை என்று பெயர். விந்தை என்பவள் கருடனைப் பெற்றாள். மற்றவள் சர்ப்பங்களைப் பெற்றாள். இருவருக்குமிடையே விரோதம் மூண்டது. அனந்தன் முதலான சர்ப்பங்கள் பயந்து, கருடனைச் சரண் அடைந்தன. ஆதிசேடனோ மகாவிஷ்ணுவுக்குப் பாயாகி அவர் மனத்தைக் கவர்ந்தான். எட்டு சர்ப்பங்களில் ஒன்றான வாசுகி, சிவபிரானை வணங்கி, அவருக்கு ஆபரணமானான்.
அக்காலத்தில் சங்கன், பத்மன் என்ற இரு நாகர்கள் சாஸ்திரங்களை அறியும் அவாவினால், முறையே வாசுகியிடத்தும் ஆதிசேடனிடத் தும் அன்பு வைத்துப் பழகி வந்தனர். இருவரும் நீண்ட காலம் அருந்தவம் புரிந்த பின்னர், சங்கன் சிவபிரானுக்கு அடிமையானான். பத்மன் விஷ்ணுவுக்கு அன்புடையவனானான். ஆயினும், இருவருக்கும் ஒரு பெரிய சந்தேகம், ''விஷ்ணு பெரியவரா, சிவன் பெரியவரா?'' என்று. இவர்களுடைய சந்தேகத்துக்குத் தெளிவு காண, நாகர்கள் அவர்களைப் பூலோகம் சென்று, அவர்கள் கேள்விக்கும் வாதத் துக்கும் முடிவு கண்டு வரச் சொல்லவே, இருவரும் பூவுலகம் வந்து சேர்ந்து, பதஞ்சலி முனிவரிடம் அநேக சாஸ்திரங்களைக் கற்றனர். முறையே சிவ, விஷ்ணு தீர்த்தங்களிலே நீராடி, காசி க்ஷேத்திரத்துக்கும் வந்து, அங்குள்ள பெரிய முனிவர்களிடம் இதே கேள்வியைத் தொடுத்தனர்.
அத்ரி முனிவரோ, 'சிவபிரானே எல்லாருக்கும் பெரியவர். அவரிடத்தில் விஷ்ணு ஐக்கியம்!’ என்றார். இது பத்மனுக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், அவன் விஷ்ணு பக்தன். இவ்வழக்கு இங்கும் தீராதது கண்டு, தேவேந்திரனிடத்தே இருவரும் திரும்பிச் சென்றனர். இந்திரன் இவர்களின் சந்தேகத்தைப் போக்க விரும்பிய வராய், வியாழ பகவானைப் பார்த்தார். வியாழ பகவானோ, முன்னொரு முறை பார்வதிதேவி தன் பதியிடம் வரமாய்க் கேட்டு, பலன் பெற்ற கதையைச் சொல்லி, ''அந்தக் காட்சியைக் காண நீங்களும் அரிய தவம் செய்யுங்கள்'' என்று அந்த நாகர்களுக்குக் கூறினார். நாகர்கள், ''தங்கள் தவத்துக்குத் தக்க இடம் வேண்டுமே! குறிப்பிடுக'' என்றனர்.

''வேணு வனத்துக்கு (நெல்லை) மேற்கிலும் சண்பக வனத்துக்கு (திருக்குற்றாலம்) வடக்கி லும், களா வனத்துக்கு (கருவைநல்லூர்) தெற்கிலும் திகழும் இந்தப் பிரதேசத்துக்கு புன்னைவனம் எனப் பெயர். கோமதியம்மையின் சந்நிதிக்கு முன்னே தேவர்களால் நிர்மாணிக்கப் பெற்ற சுனை (தீர்த்தம்) ஒன்று உள்ளது. அங்கே நீராடிச் சென்று தவம் மேற்கொள்ளுங்கள்'' என்றார்.
இரு நாகர்களும் அவ்வாறே செய்து தவமிருந்து, ஸ்ரீசங்கர- நாராயணனின் திருக்கோலக் காட்சி கண்டு, தங்கள் சந்தேகம் நீங்கப்பெற்று, பெரும்பேறு அடைந்தனர். இச்செய்தி கேட்ட வாசுகியும் ஆதிசேடனும், தங்கள் தங்கள் பிரானை அந்த எழில் வடிவு காட்டுமாறு வேண்டி இறைஞ்சினர். அவர்கள் இறைஞ்சுத லுக்குச் செயல்பட சைவ- வைணவ பேதம் அகலும்பொருட்டு. ஈருருவும் ஓருருவாய்க் காட்சியளித்தார் கயிலைநாதன்!
(1964- விகடன் தீபாவளி மலரில் இருந்து...)
ஓவியங்கள்: ஸிம்ஹா, ஸாகர்