னிதன் சிறுமை அடைவது எப்போது? அந்த நேரத்தில், சிரிப்புக்கு இடமாவது யார்? இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் ஒருவர். அந்தப் பதிலும் ஒரு கேள்வியாகவே இருக்கிறது.

அந்தக் கேள்வியை, அவர் அம்பாளைப் பார்த்துக் கேட்கிறார். ஆடி மாதத்தை அம்பாள் மாதம் என்பார்கள். அதை முன்னிட்டு, நாமும் அம்பாளிடம் அவர் அப்படி என்னதான் கேட்கிறார் என்று பார்க்கலாம்!

பல் குஞ்சரம் தொட்டு எறும்பு கடையானதொரு
   பல்லுயிர்க்கும் கல்லிடைப்
பட்டதே ரைக்கும் அன்று உற்பவித்திடு
   கருப்பையுறு சீவனுக்கும்
மல்கும் சராசரப் பொருளுக்கும் இமையாத
   வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவர்க்கும் யாவர்க்கும் அவரவர்
   மனச் சலிப்பில்லாமலே
நல்கும் தொழிற் பெருமை உண்டாயிருந்தும் மிகு
   நவநிதி உனக்கு இருந்தும்
நான் ஒருவன் வறுமையில் சிறியன் ஆனால் அந்
   நகைப்பு உனக்கே அல்லவோ?
அல்கலந்து உம்பர் நாடு அளவெடுக்கும் சோலை
   ஆதி கடவூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி
   அருள்வாமி! அபிராமியே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அபிராமி அன்னையே! சிவபெருமானின் திருமேனியில் பாதி இடம் கொண்டு, அவரை விட்டுப் பிரியாதவளே! சுகத்தை வழங்கும் திருக்கரங்களைக் கொண்ட வளே! நீ செய்வது நியாயமா?

பெரும் பெரும் உயிரினங்களான யானைகள் முதற்கொண்டு, சின்னஞ் சிறிய உயிரினமான எறும்புகள் வரை அனைத்தையும் கட்டிக் காப்பவள் நீ! அது மட்டுமா..? கண்களுக்குத் தெரியாமல் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும், கருவில் உருவாகும் உயிருக்கும் அருள்புரிந்து காப்பவள் நீ!

பாடல் சொல்லும் பாடம்!

அசையும் பொருள், அசையாப் பொருள் என எல்லாவற்றையும் காத்து அருள்பவள் நீ!'' என்று அம்பிகையைத் துதிக்கிறார் அந்தப் பக்தர். இதுவரை பூமியில் உள்ளவற்றைச் சொல்லிக் கொண்டு வந்தவர், அடுத்து ஆகாயவெளிக்குப் போகிறார்.

''தாயே, அபிராமி! பூமியில் உள்ளவற்றை மட்டுமல்லாது, வானவர்களான தேவர் களையும் கட்டிக்காப்பவளும் நீதான்! அவரவர்கள் செயல் படுவதற்கான ஆற்றலை வழங்குபவள் நீ! அவ்வளவு ஏன்... தேவர்களுக்கும் மேலான பிரம்மா- விஷ்ணு- சிவன் எனும் மும்மூர்த்திகளும் செயல்படுவதற்கான ஆற்றலை அளிப்பவளே நீதான்! இவ்வாறு அவரவர்களுக்கும் மகிழ்ச்சியாகச் செயல்படும் ஆற்றலைத் தந்தருளும் உன் பெருமையை அனைவரும் அறிவார்கள்.

நவ நிதிகளுக்கும் (கச்சப நிதி, கற்ப நிதி, சங்க நிதி, பதும நிதி, நந்த நிதி, நீல நிதி, மகா நிதி, மகாபதும நிதி, முகுந்த நிதி எனப்படும் ஒன்பது நிதிகளுக்கும்) அதிபதி நீ!

அன்னையே! அபிராமியே! இப்படிப்பட்ட உன் பெருமையை அறிந்து அனைவரும் உன்னைத் துதிக்கிறார்கள். அப்படியிருக்கும்போது... நான் ஒருவன் மட்டும் வெறுமையில் சிக்கி, இழிந்தவனாகப் போய்விட்டால், உன்னைத் துதித்தவர்கள் எல்லோரும் உன்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா?

'இந்த அபிராமி, அகில உலகங்களுக்கும் அன்னை! அளவிட முடியாத சக்தி படைத்தவள். ஆனால் பாவம், அவளின் குழந்தையான இவனை (என்னை) மட்டும் காப்பாற்றும் சக்தி அன்னை அபிராமிக்குக் கிடையாது!’ என்று உன்னை கேலி செய்து சிரிக்க மாட்டார்களா?'' என்று கேட்கிறார் பக்தர்.

அதாவது, 'அன்னையே, என்னைக் காத்து அருள்புரிய வேண்டியது உன் பொறுப்புதான்!’ என்று அழுத்தம்திருத்தமாகச் சொல்கிறார் பக்தர்.

அம்பிகையின் பெருமைகளை எல்லாம் விரிவாகச் சொல்லி, தன்னைக் காப்பாற்றா விட்டால் அம்பிகையின் நிலை சிரிப்புக்கு இடமாகப் போய்விடும் என்ற பக்தர், அன்னை அபிராமி எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரில் உள்ள சோலையைச் சொல்லி, முடிக்கிறார்.

'அல்கலந்து உம்பர் நாடு அளவெடுக்கும் சோலை ஆதி கடவூர்’ என்கிறார்.

'அடர்ந்து இருள் செறிந்து, வானுலகை அளப்பது போலச் சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரில் எழுந்தருளி இருக்கும் அன்னையே!’ என்று அழைக்கிறார். அவர் இவ்வாறு குறிப்பிடுவதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது.

செடி, கொடி, மரங்கள் ஆகியவற்றுக்கு 'ஓர் அறிவு’. ஆறறிவு படைத்தவன் மனிதன்.

''தாயே! உன்னைச் சுற்றியிருக்கும் ஓரறிவு உயிரினங்களான மரங்கள்கூட நீண்டு நெடிது ஓங்கி ஆகாயமளாவ வளர்ந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது, ஆறறிவு படைத்தவனும் உன் பிள்ளையுமான நான் வறுமையின் காரணமாகச் சிறுமை அடைந்தால், உன்னைப் பார்த்து அனைவரும் சிரிக்கமாட்டார்களா?'' என்பதைக் குறிக்கும் விதமாகவே அவ்வாறு குறிப்பிட்டார் அந்த பக்தர்.

அவர், அபிராமிபட்டர். அவர் எழுதிய அபிராமி அம்மைப் பதிகங்களில் ஒரு பாடலே இது. நாம் தினந்தோறும் பாராயணம் செய்ய வேண்டிய பாடல்!

-  இன்னும் படிப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism