Published:Updated:

ஊர் கூடி தேர் காப்போம்!

வி.ராம்ஜி

ஊர் கூடி தேர் காப்போம்!

வி.ராம்ஜி

Published:Updated:
ஊர் கூடி தேர் காப்போம்!

ந்தக் காலத்தில், வீட்டுக்கு ஒரு சைக்கிள் இருந்தாலே பெரிய விஷயம். ஆனால், இன்றைக்கு குழந்தைகளுக்கு தனித்தனி சைக்கிள்கள், வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள், அனைவரும் ஒன்றாய்ப் பயணிக்க வசதியாக கார்... என வீட்டுக்குப் பல வாகனங்கள் வந்துவிட்டன. நமக்கே இப்படி என்றால், இந்த உலகையும் நம்மையும் படைத்த இறைவனின் வாகனங்களைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பல்லக்கு, சப்பரம், சிம்மம், ரிஷபம், கருடன் எனப் பல வாகனங்கள் உண்டு இறைவனுக்கு! அதில் முக்கியமானதும் முதன்மையானதும் - தேர். 'நகரும் கோயில்’ என்று தேரை சொல்வார்கள்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பிறக்க முக்தின்னு சொல்ற திருவாரூர்தான் எனக்குச் சொந்த ஊர். வருஷாவருஷம், திருவாரூர் தியாகராஜர் கோயில்ல ஆழித் தேரோட்டம் நடக்கும்போது,  லீவு போட்டுட்டு திருவாரூர் போய் தேர் பார்த்துட்டுத்தான் வருவேன்'' என்கிறார், சென்னையில் வசிக்கும் தியாகராஜன்.

இதேபோல், மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிப் புத்தூர், நெல்லை என விழாக் காலங்களில், அந்தந்த ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள், அவசியம் கலந்துகொள்வது வழக்கமாகிவிட்ட ஒன்று. அத்துடன் தலத்தின் பெருமை யையும் தேர்த் திருவிழாவின் பிரமாண்டத்தையும் அறிந்த மக்கள், எங்கிருந்தெல்லாமோ வந்து, விழாவையும் அசைந்து அசைந்து வரும் தேரினையும் தரிசித்து, நிம்மதியும் நிறைவுமாக வீடு திரும்புவார்கள்.

கோயிலுக்குள் இருக்கும் இறைவனை வயதானவர்களும், நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் தரிசிக்க வேண்டும் எனும் அடிப்படையிலும், ஊர் முழுக்க எல்லா தெருக்களிலும் இறைவனின் சாந்நித்தியம் படர்ந்து, அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காகவும் மக்களைத் தேடி தாமே தேரில் பவனி வந்து தரிசனம் தருகிறார் இறைவன். இதற்காகவே, மன்னர்கள் கோயில் கட்டியதுடன் அதற்கொரு தேரையும் செய்து, அது ஒய்யாரமாக பவனி வருவதற்கு மாடவீதிகளையும் அமைத்தார்கள்.

நம் வாகனத்தை குறிப்பிட்ட கால இடைவெளியில் மெக்கானிக் ஷாப்பில் கொடுத்து சர்வீஸ் செய்வோமல்லவா? அப்போதுதானே அவை தொடர்ந்து நன்றாக உழைக்கும்?

ஊர் கூடி தேர் காப்போம்!

''தேரும் அப்படித்தான்! முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்படுகிறது. அது மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, எப்போதும் கோயில் வாசலிலேயே நிற்கிறது. ஒரு கட்டத்தில், அந்தத் தேரினை புதுப்பிக்கவும் சீரமைக்கவும் வேண்டும். நமது சிறிய வாகனத்துக்கே முறையான சர்வீஸ் தேவைப்படும்போது, பல டன் எடை கொண்ட தேரினை முழுமையாகப் பராமரித்து, சீர் செய்து, பொலிவாக்குவது மிக மிக அவசியம்!'' என்கிறார் ஸ்தபதி வரதராஜன்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், தேர் வடிவமைக்கும் பணி நடந்துவருகிறது. அநேகமாக, ஐப்பசி சதய விழாவின்போது தேரோட்டம் நடைபெற்றுவிடும் என்று ஆர்வத்துடன் சொல்கிறார்கள், தஞ்சை அன்பர்கள்.

''தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தேர் செய்யும் பணியை பெரிய பாக்கியமா நினைச்சு செய்துக்கிட்டு வரேன். இப்ப, ஆலங்குடி குரு பகவான் ஸ்தலத்துக்குத் தேர் செய்யும் பணியையும் எடுத்து செஞ்சுட்டிருக்கேன். இது என் பூர்வ ஜென்ம புண்ணியம்!'' என்று சொல்லி நெகிழ்கிறார், ஸ்தபதி வரதராஜன். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி எனும் குரு பகவான் தலம், அனைவரும் அறிந்ததுதான். இங்கே ஸ்வாமியின் திருநாமம்- ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர். அம்பாள்- ஸ்ரீஏலவார்குழலி.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, விஸ்வாமித்திரர், வீரபத்திரர் ஆகியோர் தவம் செய்து வழிபட்டுப் பலன் பெற்றனர் என்கிறது ஸ்தல புராணம். அம்பிகை, இந்தத் தலத்தில் கடும் தவம் மேற்கொண்டு தன் தோஷம் நீங்கப்பெற்று, சிவனாரைக் கைத்தலம் பற்றினாராம்! காவிரி தென்கரையில் உள்ள 98-வது தலம். ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருத்தலம். குரு ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் உத்ஸவத் திருமேனி கொள்ளை அழகு. சுக்கிர வாரமான வெள்ளிக்கிழமையில்,  இங்கே உள்ள அம்பிகையை  ('சுக்கிர வார அம்பிகை என்பர்’), வணங்கினால், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும், மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இன்னொரு சிறப்பு... மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதற்கு ஏற்ப, உள்ளே நுழைந்ததும் முதலில் அம்பாளையும், அடுத்து அப்பன் சிவனாரையும், அதையடுத்து குரு ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதுபோல் அமைந்துள்ளதை வியந்து சொல்கிறார்கள். இத்தனைப் பெருமை வாய்ந்த கோயிலில், சுமார் 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், மிகப் பிரமாதமாக உருவாகி வருகிறது திருத்தேர்.

''கடந்த 70 வருடங்களாக இங்கே, பவனி வருவதற்கு தேரே இல்லை என்பது, என்னைப் போன்ற சிவனடியார்களுக்குப் பெருங்குறையாகவே இருந்து வந்தது. சிவனருளால், இப்போது தேர்ப் பணிகள்  நடந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் தஞ்சாவூர் அன்பர் மகாலிங்கம்.  

''ஆமாம். கடந்த ஆறேழு மாதங்களுக்கு முன்பு, தேர் செய்யும் வேலையை துவக்கி, சுமார் 20 பேரைக் கொண்ட குழுவினரைக் கொண்டு தொடர்ந்து வேலைகள் நடந்து வருகின்றன. 'நகரும் கோயில்’ என்பதற்கேற்ப, கோயில் பிராகாரங்களில் எப்படி சிற்ப வேலைப்பாடுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றனவோ, அதேபோலான சிற்ப நுட்பத்துடன் நுணுக்கமாகவும் நேர்த்தியுடனும் மரத்தில் செய்வது மிகப்பெரிய சவால்தான். பொதுவாக, இலுப்பை மரம் கொண்டு தேர் செய்வதே சிறப்பு. நீண்ட காலம் உழைக்கும். எளிதில் சேதாரம் ஆகாமல் இருக்கும். ஆலங்குடி தேரும் இலுப்பை மரத்தில்தான் செய்யப்படுகிறது. சுமார் பத்தேமுக்கால் அடி உயரத்தில் தேரின் பீடம் இருப்பது போல் செய்யப்பட்டு வருகிறது. அங்கே, சுமார் மூன்றரை அடி உயரத்தில் ஸ்வாமிக்கான பீடம் அமைக்கப்பட்டிருக்கும். இதை சிம்மாசனம் என்பார்கள். அதாவது, பூமியில் இருந்து சுமார் 14 அடி உயரத்தில், ஸ்வாமி வீற்றிருப்பார்'' என்கிறார் ஸ்தபதி வரதராஜன்.

''சுமார் 750 கன அடி கொண்ட இலுப்பை மரத்தில் இந்த தேரினைச் செய்து வருகிறோம். கோயிலின் ஸ்தல புராணம் மற்றும் வரலாற்றை அப்படியே தேர்ப்பகுதியைச் சுற்றிலும் சிற்பங்களாக, சின்னச் சின்ன சிலைகளாக வைக்க முடிவு செய்திருக்கிறோம். அதன்படி சிவ -  பார்வதி, மகாவிஷ்ணு, முனிவர் பெருமக்கள், தேவர்கள், குரு தட்சிணாமூர்த்தி என சுமார் 320 சிற்பங்களைத் தேரில் வடிவமைக்க இருக்கிறோம். அதில் பாதி சிற்பங்கள் தயாராகிவிட்டன.

ஊர் கூடி தேர் காப்போம்!

வண்டி உருண்டோட அச்சாணிதானே மிக மிக முக்கியம்! எனவே, இந்தத் தேர், காலங்கள் கடந்தும் கம்பீரமாக பவனி வரும் விதமாக, ஐந்தேமுக்கால் அடி உயரத்தில் சக்கரங்களும்,  பதின்மூன்றரை அடி நீளத்தில் அச்சும், திருச்சி பெல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன. தவிர, தேரில் பொருத்துவதற்கு சுமார் 120 பித்தளை மணிகளும் தயார் நிலையில் உள்ளன'' என்கிறார் ஸ்தபதி.

ஆலங்குடி தேர்ப் பணிகள் 75 சதவீத அளவு நிறைவேறிய நிலையில், சமீபத்தில் தேரினை வெள்ளோட்டம் விட்டுப் பார்த்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ், அறநிலையத் துறை ஆணையர் ப.தனபால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

''முழுவதுமாக நிறைவுறுவதற்கு முன்னதாக, வெள்ளோட்டம் விட்டுப் பார்ப்பது வழக்கம். அப்போதுதான், தேரில் உள்ள குறைகள் தெரியவரும். அவற்றையெல்லாம் சரிசெய்து தேரை முழுமையாக்குவோம்.

35 டன் எடை கொண்ட அலங்காரக் கால்கள், மணிகள், சிற்பங்கள் ஆகியவற்றைக் கொண்டு, எல்லா அடுக்குகளும் கட்டப்பட்ட நிலையில் வெள்ளோட்டம் குறையற நடந்துவிட்டால், நிறைவுப் பணிக்கு வந்துவிடலாம். இறையருளால் இந்த வெள்ளோட்டமும் சிறப்பாக நடந்து முடிந்து, அடுத்து நிறைவுப் பணிகள் நடைபெற உள்ளன'' என்கிறார் ஸ்தபதி.

இதேபோல், தேர்ப் பணிகள் நடைபெற்று, தேரோட்டம் நடைபெற்ற கோயில்கள் பல உண்டு. குறிப்பாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள உவரி ஸ்ரீசுயம்புலிங்க ஸ்வாமி கோயிலில் பல வருடங்களாக தேர் இல்லாமல் இருந்தது. அன்பர்களின் பேருதவியால், சுமார் ஒண்ணரைக் கோடி மதிப்பீட்டில், அங்கே புதிதாக தேர் செய்யப் பட்டு, தற்போது வருடந்தோறும்  தேரோட்டம் சிறப்புற நடந்து வருகிறது.

இந்தத் தேர்ச் சக்கரங்களை, வழக்கம்போல் திருச்சி பெல் நிறுவனமே செய்திருக்கிறது. இதில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்துவதற்கு மட்டுமே 12 லட்ச ரூபாய் செலவானது என்கிறார் முருகேசன் எனும் அன்பர். திருவாரூரில், தேர் செப்பனிடும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. திருக்கச்சூர் சிவாலயத்திலும் தேர்ப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

''தேர் சீரமைக்க வேண்டும் என்றாலோ, அல்லது புதிதாக செய்ய வேண்டும் என்றாலோ, இந்து சமய அறநிலையத் துறை மூலம் தேர்ப்பணிக்கு நிதி ஒதுக்கித் தருகிறது தமிழக அரசு. பல கோயில்களில் பக்தர்கள் ஒரு கமிட்டி அமைத்து, தேர்ப் பணியில் ஈடுபடுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தத் தேரினை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பது மக்களாகிய நம் கடமை. பல கோயில்களில், தேர் முட்டி என்று சொல்லப்படும் இடத்தில் எந்தப் பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி, அநாதை போல் பரிதாபமாக தேர் நிற்பதைப் பார்க்கவே வேதனையாக இருக்கிறது'' என்கிறார் சிவனடியார் ஒருவர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளது  வந்தவாசி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில், ஆங்கிலேயர்களுக்கும் இந்தியர்களுக்குமான யுத்தம், இங்கு நடந்தது. இதை 'வந்தவாசி யுத்தம்’ என்றே குறிப்பிடுகிறது சரித்திரம். இங்கு, சிவனாருக்கும் பெருமாளுக்கும் அருகருகில் கோயில்கள் உள்ளன.

சிவனாரின் திருநாமம்- ஸ்ரீஜலகண்டேஸ்வரர். மன்னர் ஒருவரின் தீராத வயிற்று வலியை, தீர்த்தத்தின் மூலம் தீர்த்த தலமாம் இது. தீர்த்தக் குளத்தில் இருந்தே வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தம் இது.  அம்பாளின் திருநாமம்- ஸ்ரீசத்புத்ரி நாயகி. அமைதியும் அழகும் ததும்ப காட்சி தருகிறாள்.

ஊர் கூடி தேர் காப்போம்!

இங்கு வந்து சிவனாரையும் அம்பாளையும் வேண்டிக்கொண்டால், தீராத நோயும் தீரும் என்பது ஐதீகம். அழகிய சிற்பங்களும் தூண்களும் கொண்டு பிரமிக்க வைக்கிறது கோயிலின் கட்டுமானம். திருமண வரம், பிள்ளை பாக்கியம், தோஷ பரிகாரம் ஆகியவற்றுக்குப் பெயர்பெற்ற இந்தக் கோயிலுக்கு ஒருமுறை சென்று பாருங்கள்; கோயிலின் அழகிலும் இறைவனின் சாந்நித்தியத்திலும் சொக்கிப் போவீர்கள்.

ஆனால்... கோயிலுக்கு அருகில், கருங்கல்லால் கட்டப்பட்ட மண்டபம் ஒன்று இடிந்தும் சிதைந்தும் கிடக்கிறது. ஒருசிலர், இதைத் தேர் மண்டபம் என்கிறார்கள். வேறு சிலர், 'இல்லை; இது தேர் நிறுத்துவதற்கான மண்டபம் இல்லை’ என மறுக்கிறார்கள். இன்னும் சிலர், 'இது தேர் மண்டபமாக இருக்கட்டும்; இல்லாமல் இருக்கட்டும். ஆனால், இது கோயிலுக்குச் சொந்தமான இடம்.  எனவே, பராமரிப்பின்றி முள் புதராகவும் சிறுநீர் கழிக்கும் இடமாகவும் மாறி, அலங்கோலமாகியிருக்கும் இந்த இடத்தைச் சீரமைத்து, தேரை இங்கே வசதியாக நிறுத்தலாமே?'' என்கிறார்கள் வந்தவாசி மக்கள்.

அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர், ''ஸ்வாமிக்கு ஒரு தேர், அம்பாளுக்கு ஒரு தேர் என இரண்டு தேர்கள் இருக்கின்றன. இந்த இரண்டு தேர்களுமே, கோயிலுக்கு எதிரில், ஒரு வளைவில் நிறுத்தப்பட்டுள்ளன. அது எப்போதும் ஜனக்கூட்டமாக இருக்கும் பகுதி. முழுவதும் கடைகள் நிறைந்திருக்கும் வீதி.

ஒவ்வொரு முறையும் பஸ் அல்லது லாரி அந்தத் திருப்பத்தில் வேகமாக வருகிறபோது, எங்களுக்கு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டி ருப்பதுபோல் இருக்கும். 'கடவுளே... அந்த வாகனங்கள் உன் வாகனத்தின் மேல் மோதி, அதில் பயணம் செய்யும் ஜனங்களுக்கோ அல்லது இந்தத் தேர்களுக்கோ ஒண்ணும் ஆயிடக்கூடாது’னு உள்ளுக்குள் பிரார்த்தனை ஓடிக்கிட்டே இருக்கும்'' என்கிறார்.

''வருஷாவருஷம் மாசி மாசம் சிவன் கோயில்லயும், பங்குனி மாசம் பெருமாள் கோயில்லயும் தேரோட்டம் நடக்கும். இப்ப ஏழெட்டு வருஷமாத்தான் தேர் ஓடலை. இப்படி தேர் ஓடாம, வெயில்லயும் மழைலயும் காய்ஞ்சபடி தேர் நிக்கிறதைப் பார்க்கிறபோதே வேதனையா இருக்கு.

நம்ம டூவீலரை வெயில்ல வைக்க மனசு வராம, நிழல் தேடி நிப்பாட்டுறோம். வண்டிக்கு ஒரு கவர் போட்டு மூடி பத்திரமா வைக்கிறோம். நல்லதுதான். அதேபோல, ஊரே கையெடுத்துக் கும்பிடுற இந்தத் தேர்கள் ரெண்டையும் பத்திரமா, பாதுகாப்பா வெச்சுக்க வேணாமா? அது நம்ம கடமைதானே?'' என்று அங்கலாய்க்கிறார் பார்த்திபன் எனும் இளைஞர்.

ஊர் கூடி தேர் காப்போம்!

''அரசாங்கமும் அதிகாரிகளும் அறநிலையத் துறையும் தேர் செஞ்சு, வழிபாடு நடக்க உதவி செய்வாங்க. ஆனா, அதன் பிறகு, தேருக்கு எந்தச் சேதாரமும் ஆகாம, நாமதானே பாத்துக்கோணும். ஆலயத்தை சுத்தபத்தமா வைச்சுக்கிறதும், சாமியோட தேரை நல்ல இடத்துல வைச்சுப் பராமரிக்கிறதும் நம்ம கையிலதான் இருக்கு.

இதோ... ராத்திரியானா போதும்... தேருக்குப் பக்கத்துலயே சரக்கு அடிக்கிறாங்க. சிறுநீர் கழிக்கிறாங்க. பிராந்தி பாட்டில்களும் பீர் பாட்டில் களுமா சுத்திலும் இறைஞ்சு கிடக்கிற தேரைப் பாக்கும்போதே நெஞ்சுக்குழி அடைக்குதுப்பா!'' என்று கண்ணீர் மல்கச் சொல்லும் சதாசிவம் ஐயாவுக்கு வயது 72.

சிவாலயத்துக்கு அருகிலேயே உள்ளது ஸ்ரீபால ரங்கநாதர் கோயில். ''தற்போது, பெருமாள் கோயிலுக்கான ராஜகோபுரப் பணிகள் நடந்து வருகின்றன. ஆவணி அல்லது ஐப்பசிக்குள் கும்பாபிஷேகம் செய்துவிடுவோம்'' என்கிறார் கோயிலின் ரங்கநாத பட்டாச்சார்யர்.  

ஸ்ரீபால ரங்கநாதர் கோயிலும் விசேஷமான ஆலயம்தான். சயன நிலையில் சிறிய திருமேனி. இடுப்பில் கத்தி வைத்திருக்கிறார். அரங்கனைத் தரிசித்தால், சந்தான பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோயில் விதானத்தில், காஞ்சி ஸ்ரீவரதராஜர் கோயிலைப் போல, தலைகீழான தாமரை பீடம், பல்லி, சூரிய- சந்திர பிரபைகள், நாகராஜர் ஆகியவை இருக்கின்றன.  இங்கு, பிரமாண்டமான ஸ்ரீஅனுமர் காட்சி தருகிறார். முகம் திருப்பியபடி காட்சி தரும் இந்த அனுமனை, சந்நிதி எதிரில் இருந்தும், பக்கவாட்டில் இருந்தும், பின்னேயிருந்தும்கூட தரிசிக்கலாம். எதிரி பயம் ஒழியவும், எதிர்ப்புகள் விலகவும் இவரை வேண்டுகின்றனர் பக்தர்கள்.

வெளியே, தனித்தனியே இரண்டு வழிகள், வாசல்கள், கோபுரங்கள் என இருந்தாலும், உள்ளே நுழைந்து விட்டால், இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே என்று சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்.

''ஏழெட்டு வருஷமா ஓடாம இருந்த தேர் ஓடப் போகுது. அறநிலையத் துறை இதுக்கு 18 லட்ச ரூபா நிதி ஒதுக்கியிருக்கு. ஆனா என்ன... மாசி மாசம் சிவனாருக்காக ஓடுற தேர், பங்குனி மாசம் பெருமாளுக்காக ஓடும். ஆக, வருஷத்துக்கு ரெண்டு தடவை ஓடக்கூடிய தேரினை பாதுகாப்பான இடத்துல வைச்சா, நல்லாருக்கும்'' என் கிறார் வசந்தி எனும் பக்தை.

ஊர் கூடி தேர் காப்போம்!

அவரே தொடர்ந்து... ''சமீபத்துல மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போயிருந்தேன். அங்கே தேர் நின்ன இடத்தைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எல்லாரும் பார்க்கற விதமா, முழுக்க ஃபைபர் கண்ணாடியால ஒரு கூண்டு அமைச்சு, அதுக்குள்ளே தேரை நிப்பாட்டியிருக்காங்க. பாதுகாப்பா தேர் வைச்ச மாதிரியும் ஆச்சு; எங்கிருந்தெல்லாமோ தினம் தினம் வர்ற பக்தர்கள், தேரை தரிசனம் பண்ணின மாதிரியும் ஆச்சு! அதிலேயும் ராத்திரியில, கண்ணாடி கூண்டுக்குள்ளே லைட் போட்டிருப்பாங்க. சும்மா, ஜகஜகன்னு தேர் ஜொலிக்கிற அழகே அழகு! அதுமாதிரி, எங்க ஊர் தேரையும் பத்திரமா வைச்சுக்கலாமே?'' என்று ஆலோசனையாகவும் தெரிவித்தார்.

ஊர் கூடித் தேரிழுப்பது இருக்கட்டும்; ஒவ்வொரு திருவிழாவிலும் எங்கு பார்த்தாலும் தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டமாக மக்கள் வந்து தரிசிப்பது சிறப்பாக நடைபெறட்டும்; கூடவே, 'ஊர் கூடித் தேர் காப்போம்’ என மாற்றி யோசிப்போமே!

நமக்கு நாமே ஒன்றுகூடிச் செயல்பட்டு, தேர்களைப் பராமரிப்போம்; அவற்றின் புனிதத்தைக் காப்போம்!

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், நந்தகுமார், க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism