Published:Updated:

கேள்வி - பதில்

கடவுள் வழிபாடு அவசியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

கடவுள் வழிபாடு அவசியமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:

? ''சக மனிதர்களிடமும் நண்பர்களிடமும் பற்றுதலும் நம்பிக்கையும் வைக்காமல், தெய்வத்திடமும் வழிபாட்டிலும் நம்பிக்கை வைப்பதால் பலனில்லை. சக உயிர்களிடம் நம்பிக்கை இல்லாதவனுக்கு எதிலுமே நம்பிக்கை ஏற்படாது'' என்கிறான் நண்பன்.

''தெய்வ நம்பிக்கையே சக மனிதர்களை நேசிக்கும் பண்பையும், உதவும் மனப்பான்மையையும் வளர்க்கும்'' என்பது எனது வாதம்.  

தங்களின் விளக்கம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- மு. பரமேஸ்வரன், கடலூர்

முதல் கோணம்:

டவுள் வழிபாடு வேண்டும். கடவுளில் நம்பிக்கையும் வேண்டும். அந்த நம்பிக்கையானது, நமது செயல்பாடுகளுக்கு உந்துதலைக் கொடுத்து முன்னேற வழிவகுக்கும். ஆனால், நாம் முன்னேறுவோமா, மாட்டோமா என்று தெரியாது. 'முன்னேற வேண்டும்’ எனும் ஆசை வலுத்திருக்கும்.

சாமானிய மனிதர்கள் மீதான நமது நம்பிக்கை உறுதிப்படாது. அவர்களது ஒத்துழைப்பு நமது முன்னேற்றத்துக்கு பயன்படுமா என்ற சந்தேகம் என்றைக்கும் நிவர்த்தியாகாது. ஆனால், கடவுளை நம்பலாம். அவருக்கு எதுவும் தேவையில்லை. அவர், நம்மிடம் இருந்து எதையும் எதிர்பார்க்கமாட்டார். நமக்கு நன்மை செய்யவே காத்திருக்கிறார். அவரிடம் குறையை முறையிட்டால், அதை அகற்றி நமக்கு அருள்செய்வார். இதுபோன்ற தகவல்கள் புராணங்களில் நிறைய உண்டு. பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, அவர்களை வாழ்த்தும் கடவுளை புராணம் எடுத்துக்கூறுகிறது. புராணங்களை எழுதிய முனிவர்கள் முற்றும் துறந்தவர்கள்; பிறர் முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்கள். அவர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர்கள், துயரத்தில் ஆழ்ந்தவர்களை ஆட்கொண்டு கரையேற்றுபவர்கள். ஆகவே, வாழ்க்கை முன்னேற்றத்துக்கு நம்பகமான துணை கடவுள் வழிபாடுதான்.

? எதிரில் இருப்பவர்களிடம் அன்பையும் நேசத்தையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ளபோது, கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் பக்தி செலுத்த நிர்பந்திப்பதாக உள்ளதே உங்கள் கருத்து?!

டவுள் கண்ணுக்குப் புலப்படமாட்டார். உண்மைதான். கண்ணுக்குப் புலப்படாத எத்தனையோ விஷயங்களை மனம் ஏற்றுக் கொள்கிறது. மனமும் கண்ணுக்குப் புலப்படாது. உணர்வுகளை வைத்து அப்படி ஒன்று இருப்பதாக ஏற்கிறோம். காற்று கண்ணுக்குப் புலப்படாது. செடி-கொடிகள் அசைவதை வைத்து காற்று இருப்பதை உணர்கிறோம். விதையில் ஒளிந்திருக் கும் மரத்தின் வடிவம் கண்ணுக்குத் தெரியாது. விதை முளைத்து வளர்ந்தோங்கிய பிறகே, விதைக்குள் அந்த விருட்சம் கண்ணுக்குப் புலப்படாத வடிவில் இருந்திருக்கிறது என்பதை உணர்கிறோம்.  அதேபோன்று நெருப்பின் வெப்பமும், நீரின் குளிர்ச்சியும் கண்ணுக்கு இலக்காகாது. உணர்ந்த பிறகே ஏற்கிறோம்!

ஈன்றெடுத்த தாயை, அவள் சொல்லியோ மற்றவர்கள் சொல்லியோ தெரிந்துகொள்கிறோம். இவள் என் தாய் என்று நம்புகிறோம். உண்மையில், அவள்தான் தாய் என்று நம் கண்ணுக்கோ அல்லது அறிவுக்கோ தெரியாது. வயது வந்த பிறகு, சிந்தனை வளம் பெற்ற பிறகு, அவள்தான் தாய் என்ற நம்பிக்கை திடமாகிவிடுகிறது. 'உனது மனத்தை இயக்கும் ஆன்மா கடவுள்’ என்கிறது சாஸ்திரம். அந்த ஆன்மாவும் நம் கண்ணுக்குப் புலப்படாது. உடல் இயங்குவதை வைத்து அதை உணர்கிறோம். எனவே, கண்ணுக்குப் புலப்படவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடாது. நம் கண்கள் எல்லாப் பொருட்களையும் அதாவது உருவமுள்ள பொருட்களைப் பார்த்து, அவற்றின் தரத்தைப் புரிந்துகொள்கிறது. ஆனால், கண்ணை அதாவது பார்க்கும் புலனை நம் கண்கள் பார்க்காது. பார்க்கும் புலன் இருக்கிறதா, இல்லையா என்பதை மனம் உணர்ந்தபிறகு தெரிந்துகொள்கிறோம்.

கேள்வி - பதில்

? ஆக, கண்ணுக்குப் புலப்படாதது இறை என்பதை நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள். அப்படியிருக்க, விக்கிரக வழிபாடுகள், அவதாரக் கதைகள் எல்லாம் எதற்கு?

டவுள் அவதாரங்கள் எல்லாம் உருவம் இல்லாத கடவுளின் மறு வடிவம். நல்லவர்களைக் காக்கவும் கெட்டவர்களை அடக்கவும் அவர் உருவத்தை ஏற்கிறார். அவர் தோன்றியபிறகு அறம் செழிப்புற்று விளங்குகிறது. அவருடைய செயல்பாட்டை வைத்து கடவுளை உணர்கிறோம். மனம் ஏதாவது ஒன்றில் நிலையோடு இருக்க, ஓர் உருவம் வேண்டும். அது கண்ணுக்குப் புலப்படும் படியாக இருக்கவேண்டும். மனித வடிவில் கண்ணுக்கு கடவுள் புலப்படும்போது, அவரை உணர முடிகிறது. புராணக் கதைகள் அத்தனையும் உருவமற்ற கடவுளை, உருவம் ஏற்று உலகம் உய்ய செயல்படுபவராகச் சுட்டிக்காட்டுகின்றன.

ஆக, ஒருவனுக்குக் கண்ணுக்குப் புலப்படா விட்டாலும் மனம் உணர்கிறது; அந்த உணர்வில் ஈடுபடவைத்து முன்னேற ஒத்துழைக்கிறது. இடையே இன்னல்கள் தோன்றி சுணக்கமுற்றாலும், அசையாத நம்பிக்கை அவனை தொடர்ந்து உழைக்க வைத்து, வெற்றியைச் சந்திக்கவைக்கிறது.

? எனில், கடவுள் வழிபாடு மட்டும்தான் ஒருவனை வாழ்வில் வெற்றி பெற வைக்குமா?

பிறக்கும் மனிதனானவன் கர்ம வினையின் தூண்டுதலில் மனம் போனபடி செயல்படும்போது துயரத்தைச் சந்திக்கிறான். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் வழி தெரியாமல் தவிக் கிறான். அவன் தனது வழித்துணையாக கடவுளை ஏற்கும்போது, அவனது அந்த நம்பிக்கை ஆக்கமும் ஊக்கமும் அளிக்க... வாழ்க்கைப் பயணம் தெளிவான பாதையில் தொடர்கிறது. அவன் நிம்மதி பெறுகிறான். இப்படியான நிம்மதிக்கு வெறும் நம்பிக்கை காரணமாகாது; கடவுள் நம்பிக்கையே காரணமாகும்.

'என்னை என்றும் கைவிடமாட்டார்’ என்ற நம்பிக்கை வேரூன்றிய பிறகு, ஒருவன் துயரத்தைத் தொடமாட்டான். இடையில் சந்திக்கும் இன்னல் களையும் தகர்த்தெறிந்து முன்னேறும் உத்வேகத்தை, கடவுள் நம்பிக்கையால் பெற்றுவிடுவான். துயரத் தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாகப் பார்க்கும் பக்குவத்தை கடவுள் நம்பிக்கை அளிக்கிறது. அதுதான் அவனுக்கு வேண்டும். கடவுள் கண்ணுக்குப் புலப்பட வேண்டாம். அவர் குறித்த நம்பிக்கை நம்மை நல்வழிப்படுத்தினால் போதும். நம் மனம் அவரை உணர்ந்துவிடும். நம்பிக்கையை இழந்தவன் வாழ்வை இழக்கிறான் என்பதே உண்மை!

2-வது கோணம்...

ங்கள் கணிப்பு தவறு. வாழ்வில் முன்னேற தன்னம்பிக்கையும் உழைப்பும் வலுவாக இருக்க வேண்டும். ஆறாவது அறிவோடு பிறந்திருக் கிறோம். ஆறாத்துயரை அணுகாமல் செய்ய அந்த அறிவு ஒத்துழைக்கும். 'உயிர் காப்பான் தோழன்’ என்பது முதியோர் வாக்கு. ஆக, தோழமையே வாழ்க்கையில் முன்னேற பயன்படும்.

காட்டு விலங்குகள், ஆறாவது அறிவு இல்லாத நிலையிலும் மற்ற விலங்குகளுடன் இணைந்து வாழ்கின்றன. காட்டெருமைக் கூட்டம் ஒரு சிங்கத்தை விரட்டிவிடுவது உண்டு. மான் தன்னம்பிக்கையுடன் சிங்கத்தின் பிடியில் சிக்காமல் ஓடி ஒளிந்து தன்னைக் காப்பாற்றிக்

கொள்ளும். அப்படியிருக்க, நமக்கு ஆறாவது அறிவு கூடுதல் பலம். அது, ஆராய்ச்சியில் இறங்கி தெளிவு பெற்று, துயரம் தொடாத வாழ்க்கையைச் சந்திக்கவைக்கும்.

? மனித முயற்சியே போதும் என்கிறீர்களா?

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நட்பு நமது முன்னேற்றத்துக்கு உத்தரவாதம் அளிக்கும். வாழ்க்கைப் பயணத்தில் இறங்கியவன், சக மனிதர்களின் நட்பைப் பெற்று எளிதாக முன்னேறலாம். எனவே, நமது முன்னேற்றத்துக்குக் கண்களுக்குப் புலப்படாத கடவுளை துணைக்கு அழைக்கத் தேவையில்லை. நம்மால் இயலாத காரியங்களுக்குத்தான் பிறர் உதவியை நாடுவது உண்டு. நட்பு வட்டம் நம்மை வழிநடத்தத் தயாராக இருக்கும்போது, கடவுள் வழிபாடு தேவையில்லை. கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது வீண். கடவுள் இருப்பதை எவராலும் சான்றோடு தெளிவுபடுத்த இயல வில்லை. 'நம்பிக்கை வெல்லும்’ என்கிறார்கள். அப்படியான நம்பிக்கையின் இறுக்கமானது நட்பு வட்டத்தில் கிடைத்துவிடும்.

கேள்வி - பதில்

மனிதநேயமும், சுயமரியாதையும் நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும். திடமான நம்பிக்கை முன்னேற் றத்தை இறுதியாக்கும். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் இன்றுவரை தொடர்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இயலாத வாதத்தில் நம்பிக்கை முளைக்காது. சந்தேகம் நம்பிக்கையின் திடத்தை வலுவிழக்கச் செய்யும்.

? நட்பால் மட்டும் சந்தேகத்துக்கு இடமில்லாத ஆழ்ந்த நம்பிக்கையைத் தந்துவிட முடியுமா?

நிச்சயமாக! வாழ்க்கையில், நட்பாக பலபேருடன் இணைந்து வாழும் பாங்கு நம்பிக்கையை ஊட்டிவிடும்; வாழ்க்கையை வளமாக்கும். நண்பர்களின் குழாம் இன்று பலபேரது வாழ்வில் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறது. கடவுளை உணர்ந்த துறவிக்கும் நண்பர்கள் குழாம் வாழ்வின் வெற்றியை அளிக்கிறது. மகான்களுக்கும் பக்தியின் பெயரில் நட்பு வட்டம் உருவாகி, அவரது வாழ்க்கையைச் செம்மையாக்கும். சொற்பொழிவாளர்கள், ஆன்மிகவாதிகள், துறவிகள், மகான்கள் ஆகிய அத்தனைப்பேருக்கும் தனித்தனியே ஒரு நட்பு வட்டம் தயார் நிலையில் உண்டு. சொற்பொழிவால் ஈர்க்கப்படும் மக்கள் தன்னிச்சையாகவே நட்பு வட்டத்தில் இணைந்துவிடுவர்கள்.

திருடனுக்கும்கூட ஒரு நட்பு வட்டம் இருக்கும். அவனும் அந்த நட்பின் நம்பிக்கையில் பணியைத் தொடர்ந்து முன்னேற எண்ணுவான்! பேருந்து, விமானம் மற்றும் ரயிலில் பயணிக்கும் போதும்... பயணம் சிறப்பதற்காக சக பயணிகளோடு தற்காலிகமாக நட்பை ஏற்படுத்திக்கொள்வோம். கண்களுக்குப் புலப்படும் சக மனிதனின் துணையோடு எந்தக் காரியத்தையும் சாதிக்கலாம்.  தெரியாத ஊருக்குச் செல்பவன், அங்கிருக்கும் மனிதர்களை அணுகி நட்பை ஏற்படுத்தி முன்னேறுவான். வெளிநாடு சென்றவன் கடவுளைத் தேட முற்பட மாட்டான். அங்கிருக்கும் மனித இனத்தைத் தேடுவான். நட்பை ஏற்படுத்திக்கொள்வான். எளிதில் வாழ்வை செழிப்பாக்கிக்கொண்டு வாழ்வான்.

கடவுளைக் கண்டவனுக்கும்கூட வாழ்வை செம்மையாக்க முயற்சி செய்யும் மனிதர்களின் நட்பே பயன்படுகிறது. 'இவன் என் நண்பன்’ என்று அறிமுகம் செய்யும்போது, அறிமுகத்தை ஏற்பவனும் நட்பில் இணைந்துவிடுகிறான். இளையோரிடம் ஏற்படும் நட்பு காதலாக மாறி நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் இணைந்து இன்பத்தில் திளைக்கவைக்கிறது. ஆக, திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை. நட்பே அதை இறுதி செய்கிறது! நாடு முன்னேற பிற நாட்டின் நட்பை ஏற்கிறோம்.

இப்படி, கடவுள் விவாதத்தில் சிக்கித் தவிக்காமல் நாமே தேடிக்கொள்ளும் நட்பு வட்டம் நம்பிக்கையை அளித்து, வாழ்க்கை பயணத்தை இனிமையும் அன்பும் நிறைந்ததாக மாற்றி விடும். எனவே, கடவுள் வழிபாடு தேவை இல்லை. மாறாக, வழிபாடே முக்கியம் என்று அதில் இணைந்து நட்பை இழந்து தனிமைப்படுத்தப்பட்டு முன்னேற இயலாமல் தவிப்பவர்கள் ஏராளம். கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? சிந்தித்து செயல்பட வேண்டும். இல்லாத ஒன்றை இருப்பதாக எண்ணி நம்பிக்கை வைப்பது என்றைக்குமே ஆபத்துதான். இயற்கையே வாழ்க்கைக்கு வழி சொல்லும். வாழ்க்கைக் கலையை கற்றுணர வேண் டிய கட்டாயம் இல்லை. அதற்காக வழிபாட்டை ஏற்கவேண்டிய நிர்பந்தமும் இல்லை.

மூன்றாவது கோணம்:

ழகான பேச்சு அப்பாவிகளை ஈர்க்கும். சொல்வளத்தில் மயங்கிய மனமானது, உண்மையை அறியாமல் தவறான பரிந்துரையில் நம்பிக்கை வைத்து தத்தளிக்கும்.

கடவுளை வணங்காதவர்கள், தென்படும் அத்தனை மனிதர்களையும் பாகுபாடின்றி வணங்க வேண்டியது வரும். ஒரு கடவுளை ஒதுக்கிவிட்டு பல மனிதக் கடவுள்களை தினம் தினம் வழிபட வேண்டிய கட்டாயம் ஏற்படும். நமது விருப்பம் நிறைவேற அத்தகைய மனிதக் கடவுளரை வானளாவப் புகழ வேண்டியது வரும். அவர்களது நட்பைச் சம்பாதிக்க அவர்களுக்கான பணிவிடையில் இறங்க நேரிடும். தனது முன்னேற் றத்துக்காக அவர்களுக்கு ஏவலாளாக செயல்பட வேண்டியது இருக்கும்!

? ஏன், மனிதரில் மகேசனைக் கண்டு வழிபடுவதாக எடுத்துக்கொள்ளலாமே... அடிமைத்தனமாக சித்திரிப்பது எதற்காக?

ப்படிச் சொல்ல வரவில்லை. ஒட்டுமொத்த மாக கடவுள் பணிவிடையை ஏற்காதவர்கள், அதை மனிதர்களிடம் நிறைவேற்றுகிறார்கள் எனச் சொல்லவருகிறேன்.

ரயில் பயணத்தில் சக பயணியின் நட்பைப் பெறுவதற்கு, தனது உணவில் ஒரு பங்கை அளித்து ஈர்க்க முற்படுவான். பொதுவாகச் சொல்லப் போனால்... ஒருவரை மகிழ்விக்க அவருக்குச் சிலை வைப்பதிலும், அவரது புகழ் பாடுவதிலும், பெருமை பேசுவதிலும் கணிசமான நேரத்தை வீணாக்குகிறான். அப்படியும் முன்னேறாமல் தவிக்கிறான். ஆபத்தில் சிக்கும் வேளையில் எந்த நண்பனும் கண்ணுக்குப் புலப்படாமல் போய்விடுவான். ஏழ்மையைச் சந்தித்தவனை ஏற- இறங்க பார்க்கமாட்டான் நண்பன். அவ்வளவு ஏன், அந்த ஏழையிடம் தன்னை நண்பனாகவே காட்டிக்கொள்ள மாட்டான். மனிதநேயம், சுய மரியாதை எல்லாம் பகட்டான, சுரத்தில்லாத வாதங்கள். சுயநலம் தடுமாறும்போது அத்தனையும் மறந்துவிடும்.

சுயநலமானது ஆதாயம் இருக்கும் இடத்தில் நட்பை வளர விடும். ஆதாயம் இல்லை என்றால் பின்வாங்கும். ஏதேனும் குறிக்கோளுடன்தான் நட்பு இணைந்திருக்கும். குறிக்கோள் நிறைவேறியதும் அது மறைந்துவிடும். இப்படி, மின்னல் போல் தோன்றி மறையும் நட்பு நம்பிக்கைக்கு உகந்ததல்ல.

கடவுளை ஏற்கக்கூடாது என்ற வறட்டுப் பிடிவாதம், வேறு வழியின்றி நட்பை ஏற்கிறது. அப்படி ஏற்றபிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படும் நட்பு, மனிதநேயம் முதலானவற்றின் வெற்றியை பூதாகாரமாக்கி பிடிவாதத்துக்கு வலு சேர்க்க முற்படுகிறது. மனசாட்சிக்கு எதிரிடையான செயலில் இறங்கத் தயங்காத, சிந்தனை வளம் குன்றிய, மனிதர்களின் சுயநலத்தை நிறைவேற்ற ஏற்பட்ட படைப்பே நட்பு வட்டம் என்பதெல்லாம்.  இயற்கையோடு மோதும் இந்த செயற்கை தத்துவங்கள் சீக்கிரமா கவே வெளுத்துவிடும்.

? அப்படியென்றால் நட்பு, சினேக மனப்பான்மை முதலானவற்றை  ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கச் சொல்கிறீர்களா?

ப்படி இல்லை. தெய்வத்தை நிந்தை செய்து, தனி மனிதத் துதியை முன்னிலைப்படுத்துவது தவறு என்கிறேன்.

கடவுள் வாதத்தை உள்வாங்க திறமை இல்லாதவர்கள், தாழ்வு மனப்பான்மையில், நட்பு வட்டத்தைப் புகழ்ந்து அதை உருப்படியானதாக பறைசாற்றுவதில் தளர்ந்துபோகிறார்கள். அறுவை சிகிச்சையை முடித்து வெளியே வரும் மருத்துவர்... 'மருந்தோ, மாயமோ, நட்போ, அறிவுரையோ எதனாலும் ஒன்றும் செய்ய இயலாது. வெற்றிக்கு கடவுள்தான் கண் திறக்கவேண்டும்’ என்பார். நட்பு என்பது சிறிய தவற்றிலும்கூட பகையாக உருவெடுக்கும். நீர் நிரம்பும் தோணியில் இருந்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கடவுளை எண்ணி தண்ணீரில் குதிப்பார்களே தவிர, நட்பு வட்டத்தை எண்ணி ஆபத்தில் நுழையமாட்டார்கள்.

கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களில், மத - இன பேதம் இல்லாதவர்கள் ஏராளமானோர் உண்டு. சுண்டைக்காய் அளவிலான மனித இனமே நட்பு வட்டத்தைப் பிடித்துக்கொண்டு காலாவதியான வாதத்தில் இணைந்து தவிக்கிறது. சிந்தனை வளம் பெற்றவனை சிந்தனை வளம் குன்றியவன் வெறுப்பான். அவனது உண்மையான கணிப்பு, இவன் சிந்தைக்கு எட்டாததால், 'இல்லை’ என்ற வாதத்தை முன்வைத்து வெற்றி பெற முயற்சிப்பான். பாவம், அப்பாவி, பரிதாபத்துக்கு உரியவன்!

அவன், வாழ்க்கை வளங்களை எதிர்பார்ப்பான்; சிந்தனையை வளர்க்கும் கல்வியை ஒதுக்கிவிடுவான். அவனுக்கு என்றைக்குமே சிந்தனையாளனாக மாறும் வாய்ப்பு இருக்காது. வேறுவழியின்றி நட்பு வட்டத்தை கெஞ்சிக் கூத்தாடி துணைக்கு அழைப்பான். அது கானல் நீர் என்பது அவனது சிந்தனையில் எழாது. தனது சிந்தனைக்கு ஏற்பானவர்களைத் தேடி அலைந்து நட்புக்கு இருக்கும் உரிமையை நிலைநாட்ட பாடுபடுவான். கடைசியில் படுத்துவிடுவான். படுத்தவனைத் தட்டியெழுப்ப கடவுள் வழிபாடு துணை செய்யும்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

டவுளைப் புரிந்துகொள்வதற்கு வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவற்றை ஆராயவேண்டிய கட்டாயம் இல்லை. நீ இயங்குகிறாய். உன்னை இயக்க ஒருவன் உண்டு. அவன் உன்னுள் உறைந்த ஆன்மா. எங்கும் பரவியிருக்கும் பரம்பொருள், நமது உடலில் ஊடுருவியிருக்கும் வேளையில் ஆன்மா என்ற பெயரில் அறிமுகமாகிறான்.

அந்தக் கடவுளின் துணையில் முன்னேற்றம் அடையலாம். தன்னுள் உறைந்த கடவுளை ஒதுக்கி, மற்ற மனிதர்களின் நட்பைத் தேடி அலைவதில் பயன் இல்லை. அவன் இணைப்பில் வலுப் பெற்ற நம்பிக்கையானது உனது முன்னேற்றத்தை உறுதி செய்யும். கண்ணுக்குப் புலப்படாதவனை வழிபடுவதற்கு ஏற்ப, அவன் உருவத்தை அமைத்து அதில் கடவுளை நினைத்து வழிபடும்போது, உள்ளே இருக்கும் ஆன்மா உன் மனத்தை சரியான வழியில் திருப்பி வெற்றி வாகை சூடவைக்கும்.

சக மனிதர்களின் நட்பை நம்பினால், நீந்தத் தெரியாதவன் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது போன்று தவிக்க நேரிடும். விழிப்பு உணர்வு ஏற்பட்டு, சிந்தனை வளம் பெற்று, கடவுள் நம்பிக்கையில் முன்னேறுவதற்கு, அவர் வழிபாடு துணை செய்யும்.

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism