Published:Updated:

சுக்கிர பலம் பெற உதவும் ஸ்வர்ணகௌரி விரதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சுக்கிர பலம் பெற உதவும் ஸ்வர்ணகௌரி விரதம்!
சுக்கிர பலம் பெற உதவும் ஸ்வர்ணகௌரி விரதம்!

சுக்கிர பலம் பெற உதவும் ஸ்வர்ணகௌரி விரதம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

னைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்குச் சமமாக ஸ்ரீகௌரி வழிபாடு அமைந்திருப்பதாகப் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக கௌரி தேவி 108 வடிவங்களை மேற்கொண்டதாகவும் புராணங்கள் சிறப்பித்துச் சொல்கின்றன. ஆனால், 108 வடிவங்களில் கௌரியை வழிபடுவது சாத்தியம் இல்லை என்பதால், கௌரியின் பதினாறு வடிவங்களை பூஜிக்கும் வகையில் சோடஷ கௌரி வழிபாட்டை நம் முன்னோர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றனர். கௌரியின் பதினாறு வடிவங்களில் ஸ்வர்ணகௌரியை விரதம் இருந்து வழிபடும் மரபு ஆந்திரம், கர்நாடகம் மற்றும் பல வட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள பிற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

உலகம் பிரளயத்தில் மூழ்கியபோது, அந்தப் பிரளயத்தில் இருந்து தோன்றிய ஸ்வர்ண லிங்கத்தைத் தேவர்கள் பூஜித்து வழிபட்டபோது, பொன் போன்ற பிரகாசத்துடன் சிவபெருமானும், உமையன்னையும் தோன்றினர். ஸ்வர்ண மயமாகத் தோன்றிய கௌரியை அனைவரும் பூஜித்தனர். கணவன் - மனைவி கருத்தொருமித்து வாழவே இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த ஸ்வர்ணகௌரி விரதம் பற்றி முருகப் பெருமான் சிவபெருமானிடம் கேட்டபோது, சிவபெருமான் அவருக்கு இந்த விரத மகிமையை உணர்த்தினார்.

ஒரு காலத்தில் சரஸ்வதி ஆற்றின் கரையில் அமைந்திருந்த விமலம் என்ற நகரத்தை சந்திரபிரபன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். அவர்களில் அரசர் தன் முதல் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தி வந்தார். ஒருமுறை அவர் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, அங்கே சில தேவ கன்னியர் ஏதோ ஒரு பூஜை செய்துகொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்களிடம் சென்று அந்த பூஜையைப் பற்றிய விவரம் கேட்டார்.

அதற்கு அந்த தேவகன்னியர் தாங்கள் ஸ்வர்ண கௌரி விரதத்தை அனுஷ்டிப்பதாகவும், மற்றும் அந்த விரதத்தின் சிறப்புகளையும், அதைக் கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் அவரிடம் கூறினார்கள். இதைக் கேட்ட அரசர் தானும் அதில் பங்குக்கொண்டார். 16 முடிச்சுகள் கொண்ட நோன்பு கயிறைத் தன் கையில் கட்டிக்கொண்டு அரண்மனை திரும்பினார். அவர் தன் இரு மனைவியரையும் அழைத்து, அந்த நோன்புச் சரட்டினை அவர்கள் இருவரிடமும் காட்டி, அதன் விவரத்தையும் கூறினார்.

இதைக் கேட்ட முதல் மனைவி அந்தக் கயிற்றை அறுத்து பட்டுப்போன ஒரு மரத்தின் மீது வீசினாள். அந்தக் கயிறு மரத்தின்மீது பட்டவுடனே அந்த மரம் துளிர்க்க ஆரம்பித்தது. இதைப் பார்த்தவுடன் அரசரின் இரண்டாம் மனைவி அந்த நோன்பு சரட்டினை தனது கையில் கட்டிக்கொண்டாள். அதைக் கையில் கட்டியவுடனே, அதுவரை அவளிடம் வெறுப்பு கொண்டிருந்த அரசர் அவள் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்தார். அதே நேரத்தில் அந்த நோன்புக் கயிறை அறுத்து எறிந்த அவன் முதல் மனைவியை வெறுக்கவும் தொடங்கினார். அதனால் மனம் நொந்த அவள் அங்கிருந்து வெளியேறி ஒரு காட்டிற்குச் சென்றாள். தான் செய்த தவறுக்காக மனம் வருந்திய அவள், தேவியைப் பிரார்த்தித்து அங்கிருந்த முனிவர்களின் ஆசிரமத்தை வலம் வந்தாள். ஆனால், அங்கிருந்த துறவிகள் அவள் தேவியை நிந்தித்ததால் அதற்கு பிராயச்சித்தம் கிடையாது என்று கூறி அவளை விரட்டினர்.

அங்கிருந்து அவள் ஒரு தடாகத்தின் அருகிலுள்ள மரத்தடியில் ஒரு வன தேவதை பூஜை செய்வதைக் கண்டு அங்கு சென்றாள். ஆனாலும் அங்கிருந்தும் அவள் விரட்டியடிக்கப்பட்டாள். பின்னர் தேவியின் மகிமையை உணர்ந்த அவள் மனமார தேவியைப் பிரார்த்தித்து கடும் தவம் இருந்தாள். அவளுடைய தவத்துக்கு இரங்கிய அம்பிகை, அவளுடைய தவறை மன்னித்து, சகல நன்மைகளும் அவளுக்குக் கிடைக்கும் என்று அருள் புரிந்தாள். அம்பிகையின் அருள் பெற்று தன் நாட்டுக்குத் திரும்பியவள், தன் கணவரான அரசரின் அன்பையும் சகல நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள்.

ஆடி மாதம் சுக்லபட்சம் திரிதியை திதியில் ஸ்வர்ணகௌரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரன் வலுக்குன்றியோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ காணப்பட்டால், இல்லற வாழ்க்கையில் பல பிரச்னைகள் ஏற்படும். அத்தகைய பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து, தேவியின் அருளால் இனிய இல்லற வாழ்க்கை அமையப் பெறலாம்.

ஸ்வர்ண கௌரி விரதம் அனுஷ்டிக்கும் முறை:

விரதத்திற்கு முன் தினம் வீடு, பூஜையறையைச் சுத்தம் செய்ய வேண்டும். தேவியின் முகத்தை ஒரு கலசத்தில் பிரதிட்டை செய்து அலங்கரிக்க வேண்டும். தேவியின் பிரதிமை இல்லாதவர்கள் சிவசக்தியின் படத்தை வைத்தும் பூஜிக்கலாம். காலை முதல் மாலை வரை விரதம் இருந்து சூரிய அஸ்தமனத்திற்கு பின் இறைவியை பூஜிப்பது மிகவும் சிறப்பு தரும். அம்பிகையின் வலப்புறம் நெய் தீபமும், இடப்புறம் நல்லெண்ணை தீபமும் ஏற்ற வேண்டும். முதலில் விநாயகரைத் துதித்து, பின்னர் அம்பிகைக்கு ஷோடசோபசார பூஜை செய்ய வேண்டும். பின் மலர்களால் தேவியை அர்ச்சித்து, தேவி அஷ்டோத்ர நாமாவளியை கூறி இறைவியை வணங்க வேண்டும். பின் அம்பிகைக்கு நைவேத்தியம் படைத்து, நோன்பு சரட்டினை கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும்.

தீபாராதனை முடிந்த பிறகு இரண்டு நெய்தீபங்களைத் தண்ணீர் நிரப்பிய தாம்பாளத்தில் வைத்து தீபாராதனை செய்யவேண்டும். பிறகு சுமங்கலி பெண்களுக்கு உணவளித்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் அளிக்க வேண்டும். வீட்டில் இப்படியாக பூஜித்த பிறகு, அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று உமையவளோடு எழுந்தருளியிருக்கும் ஈசுவரனை தரிசிக்க வேண்டும். இரவு வேளையில் முடிந்த அளவில் பிரசாதம் மட்டுமே உண்ண வேண்டும். இவ்வாறு விரதம் இருப்பதால் சகல சௌபாக்கியங்களும் பெற்று, அனைத்து இன்பங்களையும் அடைவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு