Published:Updated:

''18 சித்தர்களும் காற்றாய் உலவும் சதுரகிரி" - ஒரு இளைஞரின் யாத்திரை அனுபவம்!

''18 சித்தர்களும் காற்றாய் உலவும் சதுரகிரி" - ஒரு இளைஞரின் யாத்திரை அனுபவம்!
''18 சித்தர்களும் காற்றாய் உலவும் சதுரகிரி" - ஒரு இளைஞரின் யாத்திரை அனுபவம்!

தெய்வ நம்பிக்கை சார்ந்த பல விஷயங்களை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தனர். அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மைகளையும், அரிய தத்துவங்களையும் வழிவழியாக தங்கள் சந்ததியினருக்கு கூறி கடைப்பிடிக்கும்படியும் செய்தனர்.

காலப் போக்கில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு அருகிப் போய்விட்ட நிலையில், காலம் காலமாக நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பல விஷயங்களை இன்று பலரும் கடைப்பிடிப்பதில்லை. அப்படியே கடைப்பிடித்தாலும் அதன் உண்மையான காரணம் புரியாமலேயே கடைப்பிடிக்கின்றனர். கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்த இன்னும் சிலர், தங்கள் முன்னோர் கடைப்பிடித்த விஷயங்களில் அலட்சியம் காட்டினர்.

தெய்வ நம்பிக்கை இருந்தும் தங்கள் முன்னோர் கடைப்பிடித்த விஷயங்களைக் கடைப்பிடிக்காதவர்களும், உண்மையான காரணம் புரியாமல், முன்னோர்கள் செய்தார்கள் என்பதால் தாங்களும் கடைப் பிடிப்பவர்களும், கடவுள் நம்பிக்கையின்மையால் கடைப் பிடிக்காதவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

தெய்வ நம்பிக்கை சார்ந்த அப்படியான ஒரு விஷயம்தான் மலைகளில் ஏறி அங்குள்ள தெய்வங்களை வழிபடுவதும். இன்னும் சொல்லப் போனால், குறிப்பாக சித்தர்கள் அருளும் மலையாக இருந்துவிட்டால், அங்கே சென்று வழிபட பலரும் விரும்புவார்கள். அப்படி பக்தர்கள் பலரும் சதுரகிரி மலைக்குச் சென்று, அங்குள்ள இறைவனையும் சித்த புருஷர்களையும் வழிபடுவதை இன்று நாம் காணவே செய்கிறோம்.

இன்றைய இளைஞர்களில் பலரும் முன்னோர் சொல்லிச் சென்ற அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அடியோடு மறுப்பதுமில்லை. மாறாக அதில் உள்ள ஆன்மிக மற்றும் அறிவியல் உண்மைகளை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக மலையேறுவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் கொஞ்சநஞ்சமல்ல.

இளைஞர்களுக்கு மலையேறுதல் என்பது ஆகச்சிறந்த பொழுது போக்காக இருக்கிறது. இயற்கையின் ரம்மியத்தால் ஈர்க்கப்பட்டு இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், மன அமைதிக்காகவும் அதிகமாகப் படையெடுக்கின்றனர்.

அப்படி அதிகமாகப் படையெடுக்கும் ஓர் இடமாக சதுரகிரி இருக்கிறது. திசைக்கு நான்கு மலைகள் என்று பதினாறு மலைகள் சமமாகவும், சதுரமாகவும் அமைந்திருப்பதால் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்தது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு மலை. இங்கு அமைந்திருக்கும் கோயிலை தரிசிப்பதற்காக பக்தர்கள் திரளாக வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு விருதுநகர் வத்திராயிருப்பு பகுதியிலிருந்து செல்வது எளிமையான பாதை. இங்கே உள்ள மலைகோயிலில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் ஆகிய இரண்டு சுயம்பு லிங்கங்கள் உள்ளன.

பெரும்பாலான பக்தர்கள் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை சித்ரா பௌணர்மி, சிவராத்திரி, மார்கழி மாதப்பிறப்பு ஆகிய நாள்களில் அதிகமாக வருகின்றனர். மூலிகைகள் நிறைந்த மலைக் குன்று ஒன்றும் உள்ளது. அதற்கு சஞ்சீவி மலை என்று பெயர். மேலும் சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்களுக்கும் கோயில் உள்ளது.

விளையாட்டாக ஆரம்பித்த மலைப்பயணம் ஓர் இளைஞருக்கு எத்தகைய ஆன்மிக அனுபவங்களைத் தந்தது என்பது பற்றிப் பார்ப்போம்.

''எப்படி ஆரம்பித்தது இந்த சதுரகிரிப் பயணம்?''

"நடப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். எங்கு சென்றாலும் நடந்து செல்லவேண்டும் என்றுதான் விரும்புவேன். அப்படி ஆரம்பித்ததுதான் இந்த மலைப்பயணம். இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த மலைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். அங்கிருந்த பசுமையும், காட்டாறுகளும் என்னை அதிகமான ஈர்த்தன.

அடிப்படையில் நான் ஓர் இறை மறுப்பாளன். சுத்தமாக கடவுள் நம்பிக்கையே கிடையாது. ஆனால், சதுரகிரி மலைக்குச் சென்ற பின்பு என் மனநிலையே மாறிவிட்டது. சிவன், பார்வதி, முருகன் என்பதைத் தாண்டி உருவமற்ற ஒரு சூப்பர் பவர்தான் இறை என்பதை உணர ஆரம்பித்தேன். இறை என்பது கண்ணுக்குத் தெரியாத வேறு ஒரு வடிவம் என்பதை மனதார உணர ஆரம்பித்தேன்.''

''அப்படி என்றால் அங்குள்ள லிங்கங்களை வழிபடுவதில்லையா?''

''பல்லாயிரம் மக்கள் தங்கள் நேர்மறையான எண்ணங்களை, ஒரு கல்லைக் கடவுளாக நினைத்து அதன் மீது செலுத்தும்போது அந்த சிலையில் பாஸிடிவ் எனர்ஜியானது அதிகரிக்கிறது. ஓவல் வடிவத்தில் உள்ள பொருள்களுக்கு எனர்ஜியைச் சேமித்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு என்று புத்தகத்தில் படித்துள்ளேன். லிங்க வடிவமும் அப்படியானதுதான். அங்கு சென்று சுந்தர மகாலிங்கத்தையும், சந்தன மகாலிங்கத்தையும் தரிசிக்கும்போது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது. மனதில் பாஸிடிவ் எண்ணங்கள் மேலோங்குகிறது."

''அப்படி என்ன விசேஷம் இருக்கிறது மலையில்?''

''இங்கே ஓடும் அருவி நீரானது வெறும் தண்ணீர் மட்டும் அல்ல. பல்வேறு மூலிகைகளின் மருத்துவ குணம் கலந்த தீர்த்தம் அது. மேலும் இங்கே உள்ள மூலிகைக் காற்றால் நாள்பட்ட நோய்கள் கூட குணமாகிறது. இதற்கு அடையாளமாக சித்த மருத்துவர் பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான மூலிகளைப் பறித்துச் செல்வதைக் காணமுடிகிறது.''

''உங்களுக்கு வித்தியாசமான அனுபங்கள் ஏதேனும் ஏற்பட்டது உண்டா?''

"முதல்முறை நான் மலையேறிச் சென்று கொண்டிருந்தேன். மலையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அப்போது வயதான முதியவர் ஒருவர், ஒரு வெட்டவெளியைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தார். அவரைத் தவிர வேறு யாரும் அப்படிச் செய்யவில்லை. அதன் காரணத்தைத் தெரிந்துகொள்வதற்காக நான் அவரிடம், 'ஐயா, தாங்கள் ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? விவரம் சொன்னால் நானும் செய்வேனே' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதுதான் தவசிப்பாறை, அங்கே ஒரு குகை இருக்கிறது. உள்ளே தவழ்ந்து கொண்டுதான் போகவேண்டும்.ஒரு பத்துபேர் உட்காரும் அளவுக்கு இடம் இருக்கும். அங்கே ஒரு லிங்கம் இருக்கிறது. இப்போதுகூட 18 சித்தர்களும் அங்கு வந்து வழிபடுவதாக நம்பிக்கை இருக்கிறது. நாம் அங்கு செல்ல வனத்துறையின் அனுமதி இல்லை. அதனால்தான் இங்கிருந்தே கும்பிடுகிறேன்' என்றார். அவருடன் பேசிக்கொண்டே மேலே சென்று பின்னர்தான் தெரிந்தது. அவர்தான் கோயில் பூசாரி என்பது. அவர் சாமிக்கு மிக அருகிலேயே என்னைக் கூட்டிச் சென்று வழிபட வைத்தார். ஒரு பதினைந்து மணிநேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தேன். இறைவனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால் என அனைத்தும் எனக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது. இது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது."

''யார் யார் எல்லாம் வருகிறார்கள்?''

" பெண்கள், முதியோர்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் என்று அனைவருமே மலையேறி கடவுளைத் தரிசிக்க வருகின்றனர் " என்றார்.''

''எந்தெந்த நாள்களில் கடவுளைத் தரிசிக்க முடியும்?''

''அமாவாசை, பௌணர்மி போன்ற விசேஷ நாள்களில் முன்பும் பின்புமாக நான்கு நாள்கள் கடவுளைத் தரிசிக்க அனுமதி கிடைக்கும்.''

''மலையில் எந்த மாதிரியான வசதிகள் கிடைக்கின்றன?''

''மேலே கரண்ட் வசதி கிடையாது. செல்போன் டவர்களும் கிடையாது. விசேஷ நாள்களில் அன்னதானம் நடைபெறும். அதனால் உணவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.''

''விசேஷ பூஜைகள் ஏதேனும் நடக்கிறதா?''

''நள்ளிரவு மூன்று மணிக்கு தினமும் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடக்கும். அதை 'சித்தர் பூஜை' என்று அழைக்கிறார்கள்''

''உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?''

''என்னைப் போன்ற பல இளைஞர்கள் இன்றளவும் கடவுள் மறுப்பாளர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒரு முறையாவது இது போன்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டும். தமிழரின் ஆன்மிகத்தில் பல்லாயிரக்கணக்கான அறிவியல் உண்மைகள் நிரம்பியுள்ளது. அதை இளைஞர்கள் அனைவரும் உணரவேண்டும். இதுவே என் விருப்பம்" என்றார்.

சதுரகிரி மட்டும் அல்ல வெள்ளியங்கிரி, திருவண்ணாமலை போன்ற மலைக்கோயில்களுக்கும் இளைஞர்களின் படையெடுப்பானது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்தப் பயணங்கள் அவர்களுக்கு பல்வேறு ஆன்மிக அனுபங்களைக் கொடுக்கிறது. பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து விடுபட்டு, இது போன்ற மலைப்பயணங்கள் அவர்களுக்கு பல்வேறு நன்மைகளை உண்டாக்குகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு