Published:Updated:

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? #GarudaPanchami

பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? #GarudaPanchami
பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது? #GarudaPanchami

நேரிலும் கனவிலும் கருடனை தரிசிப்பது மிகவும் மங்களகரமான விஷயமாக சாஸ்திரங்கள் சொல்கின்றன. திருவிழாக் காலங்களில் நாம் பெருமாளைப் பல்வேறு வாகனங்களில் தரிசித்தாலும், கருட வாகனத்தில் தரிசிப்பது என்பது மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. பெரிய திருவடி என்று போற்றப்பெறும் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுவதே தனி அழகும் கம்பீரமும்தான்! கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே இல்லை என்பது வைஷ்ண வர்களின் மாபெரும் நம்பிக்கை. பெருமாளுக்கு வாகனமாகவும், அவரது கொடியின் சின்னமாகவும் இருப்பவர் கருடன்.

பெருமாளுக்கு சாமரமாகவும் இருந்து காற்றை வீசுபவர் கருடாழ்வார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. ஆழ்வார்களில் பெரியாழ்வார் கருட அம்சமாகவே போற்றப்படுகிறார். கருட பகவான் சாதாரணமாக இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல வடிவம் கொண்டு, வளைந்த மூக்குடன் அழகிய முகத் தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில்தான் கோயில்களில் காட்சி தருவார். வாகனமாக திருமாலை எழுந்தருளச் செய்து செல்லும்போது அமர்ந்த நிலையில் காட்சி தருவார். சிறந்த பக்தி, ஞாபக சக்தி, வேதாந்த அறிவு, வாக்கு சாதுரியம் போன்றவை கருடனை வணங்கும்போது கிடைக்கும் என ஈஸ்வர சம்ஹிதை என்ற நூல் கூறுகிறது. கருடாழ்வாரை வணங்கி உபவாசம் இருந்தால் மனநோய், வாய்வுநோய், இதயநோய், தீராத விஷ நோய்கள் தீரும் என கருட தண்டகத்தில் கூறப்பட்டுள்ளது. கருடன் நிழல் பட்ட வயல்களில் அமோக விளைச்சல் உண்டாகும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. ஆழ்வார்கள் கருடனை போற்றிப் பணிந்து 'தெய்வப்புள், கொற்றப் புள்' என்றெல்லாம் அழகிய தமிழில் பாடியுள்ளனர். கருட பகவானின் சித்திரம் வரையப்பட்ட கொடிதான் விஷ்ணு ஆலயங்களின் திருவிழாவின் போது ஏற்றப்படுவதை கண்டிருப்போம். கருடபகவானை நினைத்தாலே விஷ உயிர்களின் மூலம் உருவாகும் பயமும் துன்பமும் மறையும் என்கிறார்கள். கருட பகவான் அணிந்துள்ள மரகதப் பச்சை அணிகலனுக்கு கருடோத்காரம் என்று பெயர். இதன் ஒளி பாம்புகளை ஒடுங்கச் செய்துவிடும். கருட பகவானின் திருவுருவமும் வழிபாடும் உள்ள இடத்தில் வெற்றியே உண்டாகும். வாயு பகவான் கருடனின் வாகனமாக உள்ளதாக விஷ்ணு புராணம் தெரிவிக்கிறது. கருடன் திருமாலின் வாகனம், கருடரின் வாகனம் வாயு என்பது அதிசயம்தான்.

காஷ்யபரின் மகனாகப் பிறந்து, சிற்றன்னை கத்ருவிடம் அடிமையாக இருந்த அன்னை விநதையை காத்தவர் கருடபகவான். திருமாலின் மீது மாறாத பக்தி கொண்டு அவரையே சுமக்கும் பாக்கியம் பெற்ற அடியார் என்ற பெருமையும் கொண்டார். வைஷ்ணவம் தாண்டி கருடனைப் பார்ப்பதும், அவரது குரலைக் கேட்பதும் கூட நல்ல சகுனமாக உலகமெங்கும் பார்க்கப்படுகிறது. கருட பகவான் பிறந்த தினம் கருட பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. கருட பகவான் ஆடி மாதம், சுக்ல பட்சம், சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் எனப் புராணங்கள் தெரிவிக்கின்றன.  இந்த ஆண்டு ஜூலை 27 அன்று கருட பஞ்சமி தினம் கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமி தினமான அவரது ஜயந்தி நாளில் விரதமிருந்து வேண்டிக்கொள்ளப்படும் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. உடன்பிறந்த சகோதரர்களின் நலவாழ்வுக்காக இந்த நாளில் வேண்டிக்கொள்வது வடநாட்டு மக்களின் வழக்கம். கருட பகவானைப் போன்ற பலசாலியும், அதிர்ஷ்டமும் கொண்ட மகனைப் பெற, இளம்பெண்கள் வேண்டிக்கொள்வதும் இந்த நாளில் விசேஷம். ஒவ்வொரு வைஷ்ணவ ஆலயத்திலும் கருட பஞ்சமி தினத்தன்று அதிகாலை கருட ஹோமத்துடன் மகாதிருமஞ்சனமும், இரவு கருட வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும். அந்த வேளையில் பெருமாளோடு, கருடாழ்வாரை தரிசிப்பது புண்ணிய காரியமாகும். கருட பஞ்சமி நாளில் அவரை தரிசித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வர் என்பது நம்பிக்கை. வேண்டியன எல்லாம் நிறைவேறி, சகல சௌபாக்கியங்களையும் அடைவர். கருடனுக்கு பூஜை செய்வதால் நாகதோஷம் நீங்கும். செவ்வாய் பலம் அதிகரிக்கும் என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. வேதாந்த தேசிகருக்கு ஆத்ம நண்பராகவே கருட பகவான் இருந்து அருள் செய்தார் என்றும் அதனாலே 'கருடபஞ்சாசத்’ ‘கருட தண்டகம்' போன்ற நூல்களை இயற்றினார் என்றும் கூறப்படுகிறது.

விஷ்ணுப்பிரியன், விஹாகேஸ்வரன், வைநதேயன், சுபர்ணன், புள்ளரசன், பட்சிராஜன், பெரிய திருவடி எனப் பல திருநாமங்களைக் கொண்ட கருட பகவானின் அருளைப்பெற இந்த நாளில் அவரை வணங்கி சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம். கருட பஞ்சமி தினத்தில் திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. கன்னிப் பெண்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமையும். குடும்பத்தில் சுபவிசேஷங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். எனவே கருட பஞ்சமி எனும் கருட பகவானின் திருஅவதார நாளில் அவரை வணங்கி அவரின் அருளைப் பெறுவோம்.