Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்! சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ர்க்கடக ராசியில் பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இருக்கும்போது, சனியின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், தன் கணவனைத் துன்புறுத்துவாள் என்கிறது ஜோதிடம் (பதிகாதினீ). வாழ்க்கைத் துணையாக இருந்து மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுபவன் கணவன். இன்பத்தை அளிப்பதில் இருவருக்கும் பங்கு உண்டு என்றாலும், கணவனின் பங்கு பெருமை பெற்றது. கணவன் நினைத்தால் மட்டுமே முழு இன்பத்தை மனைவி பெற இயலும்.

தாம்பத்தியத்தில் கணவனின் பங்கு...

கணவன் அளிப்பவன், மனைவி பெறுபவள் எனும் பாகுபாடு இயற்கையில் இருப்பதைக் கவனிக்க வேண்டும். கணவன் மனத்தில் அசைபோட்டு இன்பத்தை உணருவான். மனைவியானவள், அவனது அரவணைப்பில், செயல்பாட்டில் தனது இன்பத்தை நிறைவுசெய்ய வேண்டும். அதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் இன்று பல விவாகரத்துகளுக்குக் காரணமாகிகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அலுவல்களிலும், சமுதாய வேலை வாய்ப்புகளிலும் ஆண், பெண் இருவரின் திறமைகளில் பாகுபாடு இல்லாமல் இருக்கலாம். ஏன்... ஒரு சில இடங்களில் மனைவி ஒருபடி உயர்ந்தும் தென்படலாம்.ஆனால், தாம்பத்தியத்தில் கணவனின் பங்கே ஓங்கியிருக்கும். இப்படி இருந்தும் கணவனை எதிர்க்கும் போக்கு அவளில் தென்படும் என்கிறார் வராஹமிஹிரர்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

கொலையும் செய்வாள் பத்தினி!

'ஹிம்சை’ என்ற சொல், உடல்பாதிப்பை மட்டும் குறிக்காது; உள்ளத்தை உருக்குலைக்கும் செயல்பாடும் அதில் அடங்கும். கணவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதும் ஹிம்சையே! உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அரக்க இயல்பு அவளிடம் தென்படும். சுயநலத்தை நிறைவேற்றத் துடிக்கும் மனைவியானவள், தன்னையும் அறியாமல் ஹிம்சையைக் கையாளுவது உண்டு. அவளும் 'பதிகாதினி’ என்ற வரிசையில் அடக்கம் என்கிறது ஜோதிடம். 'கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் கொண்டு வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, உயிர் காப்பான் தோழன், கொலையும் செய்வாள் பத்தினி’ - இப்படியான சொல்வழக்கு உண்டு. மனைவியின் ஹிம்சை கொலை வரைக்கும் நீளும் என்பதை விளக்குகிறது இது. நாளேடுகளைக் கவனித்தால், கள்ளக் காதலனோடு இணைந்து கணவனைக் கொன்ற மனைவிகளின் பட்டியல் தென்படுகிறது.

கோபமும் குரோதமும்...

துன்புறுத்தும் அளவுக்கு மனைவியின் மனம் கொந்தளிப்பை அடைய பல காரணங்கள் உண்டு. உலகவியலில் சுகபோகங்களின் குறைவால் தளர்ந்த மனம், இணைப்பில் போதுமான இன்பத்தைச் சந்திக்காததால் ஏற்பட்ட ஏக்கம், சுயநலம் பாதிப்புக்கு உள்ளாவதால் ஏற்படும் மன உளைச்சல், மனம் விரும்பிய வாழ்க்கை முறை அமையாததால் ஏற்பட்ட தவிப்பு, ஆடம்பர வாழ்வில் ஆர்வம் வளர்ந்து, அதை எட்டிப்பிடிக்க முடியாத நிலையில் ஏற்படும் விரக்தி, பிறரது வாழ்க்கையைப் பின்பற்ற நினைத்து, அது முடியாதபோது மனம் துவண்டு, சலித்து, வேறு வழியின்றி முடக்கத்தில் ஆழ்வது, கொள்கை, கட்டுப்பாடு, சட்டம், சம்பிரதாயம் என எதிலும் பிடிப்பில்லாமல் 'கண்டதே வாழ்க்கை, கொண்டதே கோலம்’ என்ற எண்ணத்தில் சிந்தனை வளக் குறைவு, தனது தகுதி, திறமை, சமுதாயத்தின் கண்ணோட்டத்தில் தனது அங்கீகாரம், தனது உரிமை, கடமை ஆகிய அத்தனையையும் மறந்து, மனம் விரும்பும் ஆசையை நிறைவேற்றத் துடிப்பது... இவை அத்தனையும், வாழ்க்கைத் துணைவனான கணவனைத் துன்புறுத்தத் துணிந்துவிடும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

ஆசைகள் நிறைவேறாத நிலையில், அது கோபமாக உருவெடுக்கும். கோபம் வளர்ந்து குரோதமாக மாறும். குரோதமானது செயலாற்றிவிட்டே தணியும். அவளது ஆசையின் தாக்கம் குரோதத்தில் முடிவடைந்து, கணவனைத் துன்புறுத்தித் தணியும். உண்மையில் கணவனைத் துன்புறுத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. ஆனாலும், தனது தோல்வியை ஏற்க இயலாமல், மனமும் ரத்தமும் கொந்தளிப்பை எட்டி, தன்னையும் அறியாமல் துன்புறுத்தலில் இணைந்துவிடுகிறாள். ஆக, அவளும் 'பதிகாதினி’யில் அடங்குவாள்.

ஜோதிடருக்கு எது பெருமை?

இப்படியிருக்க, கட்டத்தில் பாப கிரகங்களைப் பார்த்து ஜோதிட வாசனையற்ற ஒரு தீர்வை பொதுமக்களுக்கு அளிக்கும் மனம் இருக்கக்கூடாது. சந்திரனையும், பூர்வ புண்ணியத் தையும், பாக்கியத்தையும், அடையும் பலனின் அளவையும், மனப் போக்கையும் ஆராயாமல், கட்டத்தில் தென்படும் கிரகத்தின் பலனை தனது சொல் வளத்தால் உதிர்த்து, சமுதாய அங்கீகாரத் தைப் பெற முயற்சி செய்வது, ஜோதிடனுக்குப் பெருமை ஆகாது.

வலுவிழத்த கிரகத்தை நமது முயற்சியால் வலுவாக்க இயலாது என்பதை உணர்ந்தவர்கள், தமது முயற்சியில் கிரகங்களின் தரத்தை உயர்த்த உபதேசிப்பது, நமது துரதிர்ஷ்டம். கிரகங்களை அடக்கியாளும் தகுதி நமது முயற்சிக்கு இருப்பதாகச் சுட்டிக்காட்டுவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. லோகாயத வாழ்க்கைக்குப் போதுமான தகுதி இருப்பதை உணர்ந்து, தம்பதிகளைச் சேர்த்துவைக்கும் முறையும் ஜோதிடத்துக்கு உடன்பாடானது இல்லை. இன்பத்தைச் சுவைக்க இணைகிறார்கள். இன்பம் என்பது மனம் சார்ந்த  விஷயம். இன்பத்தைச் சுவைக்கும் முழுத் தகுதி இருக்கிறதா என்பதை, ஆராய்ந்து விளக்க முற்பட வேண்டும்.

ஷட்பலமும் ஷோடச பலமும்!

மனத்துக்குக் காரகன் சந்திரன். அவனுடைய தரம், எந்த கிரகங்களின் பாதிப்பு மனத்தை அலைக்கழிக்கிறது, எந்த கிரகங்களின் பாதிப்பு மனத்தைத் தெளியவைக்கிறது, பிறக்கும் போது மனத்தின் இயல்பு என்ன, அந்த இயல்பானது தாக்கத்தில் எந்தளவுக்கு வலுவிழந்து உள்ளது அல்லது வலுப்பெற்று உள்ளது... என்பன போன்ற விஷயங்களை கிரகங்களின் ஷட்பலம் (ஆறு வகை பலங்கள்), ஷோடசபலம் (பதினாறு வகை பலங்கள்) ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துப் பலன் சொல்ல முற்பட்டால், ஜோதிடத்துக்கும் பொதுமக்களுக்கும் சேவை செய்த பெருமை இருக்கும்.

மாறாக, 'நீ திருவாதிரையில் பிறந்திருக்கிறாய். மிதுன ராசி. ராசிக்கு உடைய புதன் நன்மை செய்வான். ஆனால் திருவாதிரை காலில் பிறந்தபடியால் உனது காலைப் பிடித்த பாம்பு (ராகு) கடிக்காமல் விடாது’ என்றெல்லாம் சொல்லி, நிழல் கிரகத்தை (ராகு- கேது) நிழல்தாதா போன்று சித்திரித்து, மனத்தில் பயம் ஆட்கொள்ளும்படி செய்வது அதர்மம்.

மக்களுக்கு ஜோதிட அறிவு இல்லாததை உணர்ந்து, சூழலுக்கு உகந்தபடி அவர்களின் மனம் ஏற்கும் வகையில் பலன் சொல்வதும் அதர்மமாகும். மக்களை பயத்திலிருந்து விடுவித்து, மகிழ்ச்சியை உணரவைப்பது ஜோதிடரின் கடமை. மாறாக, ராகுவையும் கேதுவையும் சுட்டிக்காட்டி, 'விபரீதங்கள் நிகழும்’ என்று அவர்கள் மனத்தில் பயத்தைப் பதியவைத்து, அதைப் பரிகாரத்தால் விலக்கப் பரிந்துரைப்பதும் அதர்மமே!

சனியின் ஆதிக்கம்!

கர்க்கடக ராசி முழுவதும் சந்திரனின் ஆதிக்கம் பரவியிருக்கும். 20-ல் இருந்து 25 பாகைகள் வரை சனியின் த்ரிம்சாம்சகம் இருக்கும். ஹோரையில் சூரியனும், த்ரேக்காணத்தில் குருவும் இருப்பார்கள். குருவும் சந்திரனும் தட்ப கிரகங்கள்; சூரியனும் சனியும் வெப்ப கிரகங்கள். த்ரிம்சாம்சகத்தில் பரவிய சனி மற்ற கிரகங்களின் சேர்க்கையில் மாறுபட்ட வடிவில், தனது இயல்புக்கு உகந்த வகையில், அவளின் மனத்தை ஹிம்சையை ஏற்கும்படிச் செய்கிறான்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

வெப்ப கிரகமான சூரியனின் சாரமாக சனியை ஜோதிடம் குறிப்பிடுகிறது. வெப்ப மிகுதியானது அலாதியான மாறுபாட்டை விளைவிக்கும். ஈவு- இரக்கம் தோன்றாத குரூரமான இயல்பை ஏற்படுத்திவிடுகிறான். தன்னை வாழவைக்க இணைந்த கணவனை கடிந்து கொள்ளும் எண்ணம் உருவாகும்படி செய்தவன் த்ரிம்சாம்சகத்தில் பரவிய சனி. ராசி, த்ரேக்காணம் ஆகியவற்றில் பரவிய தட்ப கிரகத்தின் தாக்கத்திலும் தனது இயல்பை மாற்றிக் கொள்ளாத வகையில், அவனது வெப்பம் மாறுதலை தோற்றுவித்தது.

வெம்மையும் தட்பமும்...

சந்திரனும் குருவும் தட்ப கிரகங்கள். தட்பத்தின் வலு இருந்தாலும், அதையும் மீறி, தனது வெப்பத்தால் ஏற்படும் இயல்பைத் தோன்றவைக்கிறான் சனி. நீர் வெப்பத்தைத் தணிக்கும். ஆனால், மிகுதியான வெப்பமானது நீரின் தாக்கத்தில் தணியாமல், அந்த நீரையே வெப்பத்தில் ஆழ்த்தி, பலனில் மாறுதலை விளைவிக்கும். அதுபோன்று, சனி தனது வெப்ப இயல்பைச் சந்திரனிலும் குருவிலும் வரவழைத்து, தனது இயல்புக்குச் சாதகமாக மாற்றிவிடுகிறார்.

புதன் தட்ப கிரகம்; சனி வெப்ப கிரகம். சனியின் சேர்க்கையில் புதனின் தட்பம் வெப்பத்தை ஏற்றுக்கொண்டு, வெப்ப கிரகத்துக்கு உதவுவதாக மாறிவிடுகிறது. புதனும் சனியும் பெண் ஜாதகத்தில் 7-ல் இருந்தால், கணவன் அலியாக இருப்பான் என்கிறது ஜோதிடம். சந்திரன் தட்ப கிரகம்; நீர்மயமான கிரகம். சந்திரனும் சனியும் சேர்ந்து இருந்தால், சனியின் வெப்ப தாக்கத்தில் தட்பம் வலுவிழந்து, மனம் கலக்கத்தை அடையும் என்கிறது ஜோதிடம். சனியின் வெப்பத்தின் தாக்கம் மற்ற கிரகங்களை அடிபணியச் செய்து, தனது திறமையில் விபரீத விளைவுகளை உருவாக்கிவிடும் என்கிறது ஜோதிடம்.

இங்கும் த்ரிம்சாம்சகத்தில் பரவிய சனியின் வெப்பம், தட்ப கிரகங்களின் தாக்கத்தை வலுவிழக்கச் செய்து, அதில் பிறந்தவளை, கணவனைத் துன்புறுத்தும் எண்ணம் உடையவளாக மாற்றி அமைத்தது. சந்திரனின் இயல்பு 'சஞ்சலம்’. அதில் சூர்ய வெப்பம் இணையும்போது, சஞ்சலம் மறைந்து திடசித்தம் உருவாகிவிடும். இப்படி, வெட்ப-தட்ப மாற்றத்தில் விளையும் நிகழ்வுகளை ஆராய்ந்து பலன் சொல்ல முயற்சி செய்ய வேண்டும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

ஆறு வகை குணங்கள்...

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் ஆகிய ஆறும் மனத்தில் தோன்றும் குணங்கள். கிரக இணைப்பில் வலுப்பெற்ற கிரகத்தின் பலன், இந்த ஆறில் ஒரு குணத்தை ஏற்க வைக்கும். இங்கு சனி பலம் பெற்று இருப்பதால், தனது இயல்பை அதில் பிறந்தவளில் வரவழைக்கிறான். கிரகங்கள் எதுவும் சுதந்திரமாகப் பலன் அளிக்காது. கட்டத்தில் எந்த பாவத்துக்கு அது பொறுப்பாளியாக மாறிவிட்டதோ, அந்த பாவத்தின் பலனை தன் இயல்புக்கு உகந்த முறையில் வரையறுக்கும்.

பதவி உயர்வு பெற்று நீதிபதியாக அமர்ந்தவர், அந்தப் பதவிக்கு உகந்த வடிவில் தனது இயல்பையும் சேர்த்து தீர்ப்பை வெளியிடுவார். கட்டங்களில் இருக்கும் கிரகம் அந்த ராசியின் தரத்துக்கு ஏற்றவாறு பலனை இறுதியாக்கும். கன்னி லக்னத்தில் 7-ல் இருக்கும் குரு, ஸ்தானத்தின் பெருமையில், களத்திரத்தை அழிப்பவராக மாறிவிடுவார். '7-ல் சுப கிரகம் தாம்பத்தியத்தையும் செல்வத்தையும் அளிக்கும்’ என்ற குருவின் தகுதி இழக்கப்பட்டு, கேந்திராதிபத்ய தோஷத்தின் பாதிப்பை ஏற்கவைப்பவராக அவர் (குரு) மாறிவிடுகிறார். இங்கெல்லாம் ராசியின் அடிப்படையில் கிரங்களின் பலன் மாற்றம் நிகழ்வதைச் சுட்டிக்காட்டுகிறது ஜோதிடம்.

அதுபோல், சனியின் த்ரிம்சாம்சகம் சந்திரனின் வீட்டில் நிகழ்வதால், அந்த ராசியின் தாக்கமும் சனியின் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு தருகிறது. ஆக, ஒரு பலனைக் கூற, பல கிரகங்களின் சம்பந்தத்தை ஆராய்ந்து தெளிவுபெற வேண்டும் என்ற தகவலை த்ரிம்சாம்சகம் நமக்கு அளிக்கிறது.

- சிந்திப்போம்...