Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 17

ஸாங்கிய யோகம்சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமிஓவியம்: அரஸ்

னித வாழ்வின் பெரும்பாலான பிரச்னைகள், துயரங்கள், தோல்விகள் மற்றும் அவற்றால் ஏற்படும் மன இறுக்கம், மன உளைச்சலுக்கான மூல காரணங்கள் மூன்று என்கின்றன சாஸ்திரங்கள். அவை: ஆசை, கோபம், பயம். பகவத் கீதையின் 2-வது அத்தியாயமான ஸாங்கிய யோகத்தில், இந்த மூன்றுக்குமான காரண காரியங்களையும், அவற்றிலிருந்து விடுபடும் மார்க்கங்களையும் குறிப்பிடுகிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்.

முக்கியமான ஆறு தர்சனங்களில் ஒன்று ஸாங்கியம். இது கபில முனிவர் இயற்றியது. 'சங்கியை’ என்றால், எண்ணிக்கை என்று பொருள். ஸங்கியையில் இருந்து தோன்றியதே 'ஸாங்கியம்’. இதில் பிரகிருதியும் புருஷனும் சேர்ந்து உண்டாக்கும் 25 தத்துவங்கள் அடங்குகின்றன. தத்துவங்களை ஸாங்கியம் என்றும், அவற்றைக் கடைப்பிடிக்கும் மார்க்கத்தை அனுஷ்டானம் அல்லது யோகம் என்றும் கீதை குறிப்பிடுகிறது. அறிவைப் பெறுவது தத்துவ விசாரம்; வாழ்வில் அதைக் கடைப்பிடிப்பது, யோகம்.

ஆசை, கோபம், பயம்...

பொருள்களின்மீது பற்று உண்டாகிறது. பற்று ஆசையாகிறது. ஆசை அளவு கடக்கும்போது பேராசையாகிறது. அது நிறைவேறாதபோது ஏமாற்றமாகி, அந்த ஏமாற்றமே கோபமாக வடிவெடுக்கிறது. கோபத்தால் மனக்குழப்பம் ஏற்படுகிறது. மனக்குழப்பத்தால் நினைவு நாசமாகிறது. அதனால் புத்தி பேதலிக்கிறது. அதுவே, பயமாகவும் பீதியாகவும் மாறுகிறது.

அரச மரத்து விதையானது கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு  மிகச் சிறியதாக இருக்கும். அது, கல் கட்டடத்தின் இடுக்கில் போய் விழும். அங்கே விழும் நீர்த் துளிகளை ஆதாரமாகக் கொண்டு அந்த விதை முளைத்து, சிறு செடியாகி, பிறகு கிளைவிட்டு பெரிய மரமாக முயற்சி செய்யும்போது, அந்த கட்டடத்தையே பெயர்த்து விடுவதை நாம் பார்க்கிறோம். இப்படித்தான் சிறு ஆசைகள் விதையாகி, செடியாகி, மரமாகி, வலிமையுடன் நமது வாழ்க்கைக் கட்டடத்தையே அசைக்க முயற்சிக்கிறது.

விதை பூமியில் விழுந்து மரமானால் பலன் உண்டு. அதுவே ஒரு கோட்டைச் சுவரின் கல்லிடுக்குகளில் விழுந்து முளைக்கும்போது, யாருக்கு லாபம்? மாறாக, சுவர் இடிந்துவிடுமோ என்ற பயமே ஏற்படும். அப்போது, கட்டடத்தைக் காப்பாற்ற அந்தக் கிளையை வெட்டிவிட்டால் மட்டும் போதாது; செடி வளர்ந்து நிற்கும் இடுக்கில் திராவகத்தை ஊற்றி ஒட்டுமொத்தமாக அழித்துவிடவேண்டும். நமது வாழ்க்கையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டும் இனில், தவறான ஆசைகளையும் இப்படித்தான் முழுமையாக ஒழிக்க வேண்டும்.

விதைக்குள் விருட்சம் - 17

பேராசை பிறந்தால்...

நேர்மையாக உழைத்துப் பொருளீட்டி எளிய வாழ்க்கை வாழும் ஒருவனிடம் உழைப்பு இருக்கிறது; மன நிறைவு இருக்கிறது; அதனால் மன அமைதியும் கிட்டுகிறது. நேர்மையும், ஒழுக்கமும் அவனுடைய வாழ்க்கை வழிமுறையாகின்றன. எனினும், திடீரென ஒருநாள் அவன் மனத்தில் ஆசை துளிர்க்கிறது. வசதியாக வாழ்பவர்களைப் பார்த்து, தானும் அவர்களைப்போல் பணக்காரனாகி, பேங்க் பேலன்ஸ், கார், பங்களா, பணியாட்கள், பெயர், புகழ் பெற்று வாழவேண்டும் என்று விரும்புகிறான்.

இவற்றையெல்லாம் உடனே அடைய அவன் மனம் துடிக்கிறது. சுற்றியிருப்பவர்களும் அவனது ஆசைத்தீயில் நெய் வார்க்கின்றனர். எப்படியாவது இலக்கை அடைந்துவிட வேண்டும் என்று மனம் தவிக்கிறது. அதற்கான வழிகள் தவறா சரியா என்றெல்லாம் அவன் பார்ப்பதில்லை.

அவனது பேராசைகளும் நிறைவேற ஆரம்பிக்கின்றன. அதை அடையும் வழிகளைத் தடுப்பவர்கள் மீது கோபமும், ஆத்திரமும், பகையும் உண்டாகிறது. எப்படியோ ஜெயித்துப் பெரும் பணம் சேர்த்துவிட்ட நிலையில், அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் தலைமேல் அமர்கிறது. தவறான வழிகளில் ஈட்டிய பொருளாதலால் குற்ற உணர்வு வாட்டுகிறது. அதனால் பயம் ஏற்படுகிறது. சேர்த்த பணம் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயம்; தவறான வழியில் சேர்த்த பணத்தால் தண்டனை தேடி வந்தால் என்ன செய்வது என்ற பயம்;  இதனால் தன்னம்பிக்கையும் பிறர் மீது கொண்ட நம்பிக்கையும் குறைகிறது. எல்லாம் இருந்தும் எதுவும் இல்லை என்ற சோக நிலை உருவாகிறது.

அடக்கவேண்டிய ஐந்து புலன்கள்

ஒருவன் ஆசைப்படவே கூடாது என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. ஆனால், ஆசைகள் நியாயமானதாக இருக்க வேண்டும்; அதற்கான தகுதிகள் அவனிடம் இருக்க வேண்டும்; அதற்கான முயற்சிகளை அவன் மேற்கொள்ள வேண்டும்; அதற்கு உரிய காலம் வரும் வரை பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

நல்ல மனைவி, நல்ல குடும்பம், வாழ்வதற்கு ஒரு வீடு, அன்றாடத் தேவைகள் பூர்த்தியாவதற்கான வருமானம், பிறரை ஏமாற்றி எதுவும் பெறக் கூடாது எனும் மன உறுதி, சொந்த உழைப்பிலே உயர்வடைய வேண்டும் எனும் விடாமுயற்சி, தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும் இயல்பு ஆகியவற்றால் கிடைக்கும் வாழ்க்கை சுகங்களுக்கு ஆசைப்படுவதில் தவறு இல்லை.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனுமது

என்றார் வள்ளுவப் பெருந்தகை. அன்பால் பண்பும், அறத்தால் பயனும் பெற்று வாழும் உயரிய வாழ்க்கைக்கு ஆசைப்படுவதில் தவறில்லை. அதில் ஏமாற்றம் இருக்காது; பயமும் இருக்காது.

மனித உடலில் ஆசைகளைப் பூர்த்தி செய்ய இறைவன் தந்த அவயவங்களே மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்புலன்கள். உடலுக்கும் மனத்துக்கும் ஊறு விளைவிக்காமல், பசித்து, ருசித்துச் சாப்பிடவே நாக்கு.

இதையேதான் திருவள்ளுவர்,

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கம் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து’

என்ற குறளில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆமையானது தனது நான்கு கால்களையும் தலையையும் வலிமையான தன் ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருக்கும் நிலையில், அதற்கு ஆபத்து எதுவும் இல்லை. அதுபோல், ஐம்புலன்களின் இச்சைகளை மனமெனும் ஓட்டுக்குள் அடக்கும் பக்குவம் மனிதனுக்கு வாய்த்துவிட்டால், அவன் ஆற்றல் மிக்கவனாக வாழ முடியும் என்பது தத்துவம்.

விதைக்குள் விருட்சம் - 17

நல்லவற்றையே பார், நல்ல விஷயங்களையே கேள், நல்ல சொற்களையே பேசு என்பதற்காகத்தான் கண்களும், காதுகளும், வாயும் உள்ளன. தீயவற்றைப் பாராதே, தீயவற்றைக் கேளாதே, தீயவற்றைப் பேசாதே என்பதை உணர்த்தும் காந்தியடிகளின் குரங்குச் சிற்பங்கள், எத்தகைய உன்னதமான தத்துவங்களைப் பிரதிபலிக்கின்றன!

மனத்தை அடக்கு!

இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி வாழக் கற்றுக்கொள். இந்திரியங்களைக் கட்டுப்படுத்திவிட்டு, அவை விரும்பும் ஆசைகளை மனத்தால் எண்ணிப் பூர்த்தி செய்துகொள்வது முட்டாள்தனம் என்று உபதேசிக்கிறது கீதை.

பலரும் சஷ்டி, ஏகாதசி போன்ற நாள்களில் உபவாசம் இருந்து ஒருவேளை மட்டுமே சாப்பிடுவார்கள்; அல்லது, எதுவும் சாப்பிடமாட்டார்கள். சிலர் மௌன விரதம் இருப்பர். இவை உடலுக்கும் ஆன்மாவுக்கும் நல்லதுதான். அதேநேரம், இந்தத் தருணங்களில் புலன்களைக் கட்டுப்படுத்துவதும் மிக முக்கியம். உபவாசம் இருந்துகொண்டே, 'அடடா! சாம்பார் வாசனை ஆளைத் தூக்குகிறதே! மசால் வடை மணம் கமகமக்கிறதே!’ என்றெல்லாம் யோசிக்கக்கூடாது.

தான் மௌன விரதம் இருந்தபடியே, மற்றவர்கள் பேசுவதை உன்னிப் பாகக் கேட்டுக்கொண்டிருப்பார்கள் சிலர். வேறு சிலர் தனக்குத் தேவையானதை ஒரு சிலேட்டில் அல்லது நோட்டில் எழுதிக் காட்டி, மற்றவர்களை இடைவிடாமல் வேலை வாங்கிக் கொண்டிருப்பார்கள்.உபவாசம் முடிந்த மறு நாள், முதல் நாள் விட்டுப்போன உணவு வகைகளை யும் பலகாரங்களையும் ஞாபகமாகக் கேட்டு வாங்கி, கூடுதலாகச் சாப்பிடுவார்கள். வேறு சிலரோ, 'நான் இன்றைக்கு உபவாசம்; ஒன்றும் சாப்பிடமாட்டேன்’ என்று அடிக்கடி சொல்லி, மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பார்கள். இவையெல்லாம் புலனடக்கம் ஆகாது என்கிறது கீதை.

இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, அவை செய்ய விரும்பும் காரியங்களை மனத்தால் செய்துகொண்டிருப்பவர்கள் மூடர்கள்; அது ஒரு போலி ஒழுக்கம் என்கிறது கீதை. 'இறைவனைத் திருப்திப்படுத்த உபவாசம் இருக்கத் தேவை இல்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்தால் போதுமானது’ என்றும் சொல்கிறது கீதை.

நாம் நம் உடலை வருத்திக்கொண்டு உபவாசம் இருப்பதால் இறைவனுக்கு எந்தவொரு லாபமும் இல்லை. உபவாசம் இருப்பது நம் உடம்பின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அதற்காகவே விரதம், உபவாசம், மௌன விரதம், பிராகார வலம் போன்றவற்றை வகுத்துள்ளனர் நம் முன்னோர். மற்றபடி, உலகியல் பலன்களைக் கருதி போலித்தனமாகக் கடைப்பிடிக்கப்படும் உபவாசங்களால் இறைவன் திருப்தி அடைவது இல்லை என்பதே கீதையின் தாத்பரியம்.

ஆசைகளை அகற்றவும், கோபத்தைத் தணிக்கவும், பயத்தைப் போக்கவும் உபவாசம் பயன்படுமானால், அதனால் நன்மை உண்டு என்பதுதான் கீதை கற்றுத் தரும் பாடம்.

(விருட்சம் வளரும்)

விதைக்குள் விருட்சம் - 17

கிருஷ்ணனும் துர்வாசரும்!

ருமுறை பிரம்மலோகத்தில் ஒரு சர்ச்சை எழுந்தது. 'நைஷ்டிக பிரம்மசாரி யார்? நித்தியமாக உபவாசம் இருப்பவர் யார்?’ என்ற கேள்விகளை நாரதர் எழுப்பினார்.

அதற்கு பிரம்மதேவன், ''நித்தியமான நைஷ்டிக பிரம்மசாரி பகவான் கிருஷ்ணன்; நித்தியமாக உபவாசம் இருப்பவர் துர்வாச மகரிஷி'' என்று

பதில் தந்தார். 'பதினாயிரம் கோபிகளோடு ராஸ லீலை புரியும் கிருஷ்ணனா பிரம்மசாரி? பசி பொறுக்க முடியாமல் தினமும் நான்கு வேளை உணவருந்தும் துர்வாசரா நித்ய உபாசகர்?’ என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர் நாரதரும் மற்ற தேவர்களும்.

அப்போது பிரம்மதேவர், ''நாரதா! நீ துவாரகை சென்று ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து, 'நித்திய உபவாசி யார்?’ என்று கேள். அதற்கான பதிலை ஆதாரத்துடன் பகவான் விளக்குவார். அதுபோலவே துர்வாசரிடம் சென்று, 'நைஷ்டிக பிரம்மசாரி யார்?’ என்று கேள். 'பகவான் கிருஷ்ணனே’ என்று துர்வாசர் ஆதாரத்துடன் விளக்குவார்'' என்று அனுப்பி வைத்தார்.

அதன்படி, நாரதர் நேராக துர்வாசரிடம் வந்து, ''நைஷ்டிக பிரம்மசாரி யார்?'' என்று கேட்க, ''பகவான் ஸ்ரீகிருஷ்ணனே! பதினாயிரம் கோபியர்கள் அவனைச் சூழ்ந்திருந்தாலும், அவர்களின் நடுவே அவன் பரப்பிரம்மமாக வாழ்கிறான். கோபியர்கள் அவனை நேசிக்கிறார்கள். அவனிடம் ஈடுபாடு கொள்கிறார்கள். ஆனால், கிருஷ்ணன் பற்றற்ற நிலையில் எல்லா ஜீவாத்மாக்களையும் நேசிக்கிறான். அவன் பாசம், நேசம் ஆகிய பந்தத்தில் கட்டுப்படுவதில்லை. அவன்தான் நைஷ்டிக பிரம்மசாரி!'' என்றார். நாரதருக்கு கிருஷ்ணப் பிரேமையின் தத்துவம் புரிந்தது.

அங்கிருந்து துவாரகை சென்று, ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி, ''பரந்தாமா, நித்திய உபவாசி துர்வாசர் என்கிறார் பிரம்மதேவர். பசி பொறுக்காமல் பலமுறை உணவருந்தும் அவரை நித்திய உபவாசி என்று எப்படிக் கூறமுடியும்?'' என்று கேட்டார் நாரதர்.

''நாரதரே, அது உண்மைதான். துர்வாசர் எப்போதும் எதையும் தனக்காகச் சாப்பிடுவது இல்லை. எதைச் சாப்பிட்டாலும் 'கிருஷ்ணார்ப்பணம்’ என்று கூறி, தண்ணீர் அருந்திவிடுகிறார். எல்லாம் என்னை வந்து சேர்ந்துவிடுகிறது. சாப்பிடுவது அவர்; பசியைத் தீர்த்துக்கொள்பவன் நான். இப்போது கூறுங்கள், அவர் நித்திய உபவாசம் இருப்பவர்தானே?'' என்றார் பகவான். தொடர்ந்து, ''செயல்கள் முக்கியமல்ல; அவற்றில் அடங்கியுள்ள சிந்தனைதான் முக்கியம். கர்மம் முக்கியம்தான். அதே நேரம், கர்ம பலன் யாரைச் சேர்கிறது என்பதில்தான் கர்மத்தின் தன்மை புலனாகிறது'' என்று கூற, நாரதர் தெளிவுபெற்றார்.