Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 9

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம் ஸ்யாம்

ஸ்ரீசாரதையின் அருளால், சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிவஸ்வாமி என்னும் 9 வயது பாலகனை, 'ஸ்ரீசச்சிதானந்த சிவா அபிநவ நரஸிம்ஹ பாரதி’ என்ற திருப்பெயர் சூட்டி ஸ்வீகரித்துக் கொண்டார் ஸ்ரீநரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள். பீடாரோஹண வைபவங்கள் எல்லாம் நிறைவுபெறவும், சந்தியாகாலம் நெருங்கவும் சரியாக இருந்தது. தொடர்ச்சியான சம்பிரதாயச் சடங்குகளால் பால ஸ்வாமிகள் மிகவும் சோர்ந்து காணப்பட்டார்.

எனவே, பால ஸ்வாமிகளுக்கு சந்தியாகால அனுஷ்டானங்களைச் செய்வித்து, எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் பொரியை ஆகாரமாகக் கொடுத்து உண்ணச் செய்து, தமக்கு அருகிலேயே ஒரு மான்தோலை விரித்து, அதில் பால ஸ்வாமிகளை படுத்துக்கொள்ளச் செய்தார். அசதியின் காரணமாக படுத்த உடனே பால ஸ்வாமிகள் உறங்கிவிட்டார்.

ஸ்ரீசாரதா பீடத்துக்கு அடுத்த பீடாதிபதியை நியமனம் செய்தாயிற்று. அன்னை சாரதாம்பிகை யின் திருவுள்ளப்படியான நியமனம்தான் என்றாலும், ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளின் மனத்தில் ஒரு சஞ்சலம் இழையோடவே செய்தது. முற்றும் அறிந்த ஞானியான அவருக்கே சஞ்சலம் தோன்றக்கூடுமா என்ற கேள்வி நமக்கெல்லாம் தோன்றுவது இயல்புதான். ஞானியரின் சஞ்சலம் என்பது அவர்களுடைய தெளிவுக்காக அல்ல; பாமரர்களாகிய நமக்கெல்லாம் ஒரு தெளிவு ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான். 'பால்மணம் மாறா பாலகனாக இருக்கும் சிவஸ்வாமி, பாரம்பர்யச் சிறப்பும்   ஸ்ரீ சாரதையின் பூரண சாந்நித்யமும் நிரம்பப்பெற்றதான ஸ்ரீ சாரதா பீடத்தைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல் கொண்டவராக இருப்பாரா?’ என்ற சந்தேகம் அப்போது பலருக்கும் இருக்கவே செய்தது. அந்தச் சந்தேகமே, ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்வாமிகளின் சஞ்சலமாக உருப்பெற்றது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
துங்கா நதி தீரத்தில்... - 9

பால ஸ்வாமிகளை உறங்கச்செய்த ஸ்வாமிகள், சற்று நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தியானத்தில் இருந்து விழித்த வேளையில், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பால ஸ்வாமிகளின் இதழ்கள், 'ஸர்வோஹம், ஸர்வோஹம், ஸர்வோஹம்’ என மூன்று முறை உச்சரித்தன. இதன் பொருள் 'எல்லாம் நானே’ என்பதாகும். ஸ்ரீ சாரதாம்பிகையின் திருவுள்ளமே, பால ஸ்வாமிகளின் வாய்மொழி வார்த்தைகளாக வெளிப்பட்டன என்பதை உணர்ந்த ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்.

பீடாரோஹணம் நடைபெற்றதற்கு மறுநாள், சம்ஸ்தான வழக்கப்படி பட்டாபிஷேக மஹோற்ஸவம் நடைபெற்றது. அனைத்து வைபவங்களையும் மகாராஜாவே முன்னின்று நடத்திவைத்தார். பின்னர் தனிமையில் பால ஸ்வாமிகளை தரிசிக்கச் சென்ற மைசூர் மன்னர் மும்முடி கிருஷ்ணராஜ உடையார், ''ஸ்வாமிகளுக்கு நான் ஏதேனும் செய்யவேண்டியது இருக்கிறதா?'' என்று பவ்வியத்துடன் கேட்டார்.

''ஸ்ரீசாரதாம்பிகைக்கு இருபுறங்களிலும் நின்று கவரி வீச இரண்டு யானைக் குட்டிகள் வேண்டும்'' என்றார் பால ஸ்வாமிகள். பால ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படியே, அரண்மனை கஜசாலைக்கு ஆள் அனுப்பி, இரண்டு குட்டி யானைகளைத் தருவித்து, பால ஸ்வாமிகளிடம் சமர்ப்பித்தார் மன்னர்.

ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள், பால ஸ்வாமிகளுக்கு தாயாய், தந்தையாய், குருவாய் என எல்லாமுமாகி அரவணைத்துச் சென்றார். இருவரும் சில நாள்கள் மைசூரில் இருந்துவிட்டு, சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டிப்பதற்காக பச்சிமவாஹிநீ என்ற தலத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீசாரதை யின் பரிபூரண அருளும், அளப்பரிய யோக ஸித்தியும் பெற்றவர் என்பது, தமக்கு அடுத்த பீடாதிபதியாக, 'ஸ்ரீ சச்சிதானந்த சிவா அபிநவ நரஸிம்ஹ பாரதி’ என்ற திருப்பெயருடன் சிவ ஸ்வாமியை ஸ்வீகரித்துக் கொண்டதில் இருந்தே நாம் அறிந்துகொள்ளலாம்.

சிவஸ்வாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்திய துடன், ஆதிசங்கரரின் அவதார ஸ்தலத்தையும் ஆதாரபூர்வமாகக் கண்டறிந்தவர். அத்தகைய மகாபுருஷரை ஸ்ரீநரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகளுக்கு, அம்பிகை ஸ்ரீசாரதாதேவி அடையாளம் காட்டி அருளினாள் என்றால், அதற்குக் காரணம் ஸ்ரீசாரதாதேவி நம் ஸ்வாமிகளிடம் கொண்டிருந்த அன்பின் திறம்தான்.

ஸ்வாமிகளுக்கு எதிராகச் செயல்படுபவர் களைப் பற்றி, ஸ்வாமிகள் சொல்லும் சொல்லின் உச்சரிப்பையும் பொருளையும் மாற்றி, எதிர்த்தவர் களையே ஸ்வாமிகளிடம் சரணடையச் செய்தவள் ஸ்ரீசாரதை.

அப்படி ஒரு சம்பவம்...

ஒருமுறை ஸ்ரீ நரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் யாத்திரையாகச் சென்ற போது, ஒரு குறிப்பிட்ட ஊரின் வழியாகச் செல்ல நேரிட்டது.

அந்த ஊரில், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அதிக அளவில் வசித்து வந்தனர். அவர்களுக்கு அவர்களின் தெய்வமும், அவர்களின் வழிபாட்டு முறைகளும்தான் சிறந்தது என்பதாக ஓர் எண்ணம். மற்றவர்களை விரோத மனப்பான்மையுடனே நடத்தி வந்ததுடன், அவர்களைத் தாக்கி ஒடுக்குவதிலும் ஈடுபட்டு வந்தனர்.

ஸ்ரீநரஸிம்ஹ பாரதி ஸ்வாமிகள் பல்லக்கு பரிவாரங்களுடன் தங்கள் ஊரின் வழியாகச் செல்லப்போவதை அறிந்துகொண்ட அந்தக் குறிப்பிட்ட பிரிவினர், ஸ்வாமிகளையும் அவர்தம் பரிவாரங்களையும் தாக்குவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

ஸ்வாமிகள் அந்த ஊரை நெருங்கவும், எதிர்த் தரப்பினர் ஸ்வாமிகளின் மீதும், பரிவாரங்களின் மீதும் கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். சில கற்கள் குறி தவறினாலும், பெரும்பாலான கற்கள் ஸ்வாமிகள் மீதும், உடன் வந்த பக்த பரிவாரங்கள் மீதும் பட்டுத் தெறித்தன.கல்லடி பட்டால் எவருக்கும் வலிக்கத்தானே செய்யும்? ஸ்வாமிகள் வேண்டுமானால் தம் சத்வ குணத்தின் காரணமாகவும், தவ வலிமையின் காரணமாகவும் பொறுத்துக் கொள்ளக்கூடும். ஆனால், உடன் வருபவர்கள் கல்லடியால் உண்டாகும் வலியையும் வேதனையையும் எப்படிச் சகித்துக்கொள்வார்கள்?

துங்கா நதி தீரத்தில்... - 9

வலியின் வேதனையைப் பொறுக்க முடியாமல் அவர்கள் ஸ்வாமிகளிடம் வந்து, ''ஸ்வாமி! இப்படிக் கல் எறிந்து நம்மைத் தாக்குகிறார்களே! வலியின் வேதனையை எங்களால் தாங்க முடிய வில்லையே!'' என்று புலம்பி, முறையிட்டனர்.அதைக் கேட்டு, ''அப்படியா... சரி, எறியட்டுமே!'' என்று சாவதானமாகக் கூறினார் ஸ்வாமிகள்.

ஸ்வாமிகள் அதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அப்படிக் கூறிவிட்டாலும்கூட, அவர் நாளும் வழிபடும் அம்பிகை ஸ்ரீ சாரதா தேவியால் அந்தக் குறிப்பிட்ட பிரிவினரின் அடாத செயலை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அவள் தன் லீலையைத் தொடங்கி விட்டாள். ஸ்வாமிகள், 'அப்படியா... சரி, எறியட்டுமே!’ என்று சொன்னதில், 'எறியட்டுமே’ என்ற வார்த்தையை, 'எரியட்டுமே’ என்பதாக ஒலிக்கச் செய்துவிட்டாள்.

அவ்வளவுதான்! ஸ்வாமிகளையும் பரிவாரங்களையும் கல்லெறிந்து தாக்கியவர்களின் வீடுகள் எல்லாம் குபீரென்று தீப்பற்றி எரியத் தொடங்கிவிட்டன. பதறிப்போன அவர்கள், தாங்கள் செய்த அடாத செயலின் விபரீத விளைவே இது என உணர்ந்து, ஓடோடி வந்து ஸ்வாமிகளின் திருவடிகளில் பணிந்து வணங்கி, தாங்கள் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினார்கள்.

நடப்பவை யாவும் ஸ்ரீசாரதையின் திருவுள்ளம் என்பது, அனுதினமும் அவளையே தியானித்து வணங்கும் ஸ்வாமிகளுக்குத் தெரியாதா என்ன? அவர்களை மன்னித்து, நல்ல தர்ம நெறிகளையும் உபதேசித்துச் சென்றார்.

யோக ஸித்தியும், தவ வலிமையும் மிகக் கொண்டிருந்த ஸ்வாமிகள், சில நேரம் தங்கப்பல்லக்கில் பிரயாணம் மேற்கொள்வது வழக்கம்.

அப்படி ஒருமுறை பயணம் சென்றவர், தாம் பல்லக்கை விட்டு இறங்கியதும், சிறிது நெல்லைக் கொண்டு வரச்சொல்லிப் பணித்தார். தாம் பல்லக்கில் அமர்ந்திருந்த இடத்தில் அதைத் தெளித்தார். அடுத்த கணம், அந்த நெல்மணிகள் எல்லாம் பொரிந்து, நெல்பொரியாக மாறிவிட்டன.

ஸ்வாமிகள் இப்படிச் செய்ததற்கான காரணம் என்ன? அதன்மூலம் அவர் உணர்த்த விரும்பிய விஷயம்தான் என்ன?

- தொடரும்...

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்