Published:Updated:

அருட்களஞ்சியம்

கடல் மல்லை - ஒரு கனவு

அருட்களஞ்சியம்

கடல் மல்லை - ஒரு கனவு

Published:Updated:
அருட்களஞ்சியம்

ன்று மல்லைக் கடற்கரையிலே அலைகள் மோதுகின்றன. உப்பங்காற்று பலமாக வீசுகிறது. கலங்கரை விளக்கத்தையும், கடற்கோயிலையும், பள்ளிகொண்ட பெருமானையும் இன்று காணலாம்... ஆனால், பல்லவனின் பெருமையாக இருந்த இந்த ஸ்தலத்தைப் பார்க்க வருபவர்கள் சரித்திரக் கண் கொண்டும், கலைக் கண் கொண்டும், உல்லாஸப் பொழுதுபோக்கின் பொருட் டும் வந்து, உடன் திரும்புபவர்களே! ஒரு காலத்திலே மாட்சியின் சின்னமாக இது விளங்கியது என்பதற்கு அறிகுறி இன்றி, கடற் பரப்பும் கரையும் வெறிச்சோடி இருக்கின்றன.

அன்று, தொண்டை நாட்டின் பண்டைத் துறைமுகமாக இது விளங்கிவருங்கால் ''மல்லன் வாழ்க!'' என்ற வாழ்த்துரைகள் வானோங்கி முழங்க, எல்லையற்ற அழகுடன் எண்ணற்ற மரக்கலங்கள் பொன்னையும் மணியையும், முத்தையும் பவளத்தையும் வாரிக் கொணர்ந்து குவிந்தன. மனித ஆரவாரம் கடலின் ஆரவாரத்தை அமுக்கிக் கொண்டெழுந்தது. உணவுப் பொருள்களின் இன்மணம் கரையெல்லாம் கமழ, வணிக வாழ்வின் நிலைக்களனாக விளங்கியது இந்தக் கடற்கரை. அப்போது பல நாட்டு மரக்கலங்களை, வா வா என்று அழைத்த கலங்கரை விளக்கம், இப்போது பழங் கலையாகி, மனித குலத்தை வா வா என்றழைக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்று முடிந்தும் முடியாமலும் நிற்கும் குகைக் கோயில்கள், ரதங்கள் ஆகிய சிற்பச் செல்வங்கள் எல்லாம், மேற்பரப்பிலே காற்றும் காலமும் இழைத்த கொடுமைகளைத் தாங்கி, உடைந்தும் உடையாமலும் உருமாறியும் பலவித கற்பனைகளுக்கும் கதைகளுக்கும் காரணமாக இருந்துள்ளன. இன்றுள்ள நிலையிலேயே உலகக் கலைஞர்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்கின்றன; எனில், அன்று இவற்றின் உருவத்தையும், ஆக்கிய சிற்பியர்களையும், அவர்களை போஷித்துக் கலையை வளர்த்த மன்னாதி மன்னர்களையும், இன்று இங்கே நிலவும் பயங்கர அமைதியிலே யாரேனும் எண்ணிப் பார்ப்பது உண்டா?

அருட்களஞ்சியம்

தமிழ் நாட்டுச் சிற்பக் கலைக்குத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்த கலைவாணர்கள், கல்லிலே ஜீவன் ததும்பும் வடிவங்களை அமைத்துக் கொண்டிருக்க, அந்தத் திறனை வியந்தும் உவந்தும் நேரிலே காண கொற்றக்குடையுடன் வந்து நின்ற கொற்றவனை மனக் கண்ணிலே வருவித்துக் கொண்டு பார்க்கலாம். பாறைகளைப் பாடப் புத்தகமாகக் கொண்டு, மாமல்லபுரத்தை ஒரு கலைக் கழகமாக அமைத்தானோ அந்த மன்னன் என்ற ஐயம் நமக்கு அப்போது எழுகிறது. கரும்பாறையைக் கற்கோயிலாக்கும் பணி நடந்த காலத்திலே சிற்றுளி எழுப்பிய நாதம், அவன் சிந்தைக்கினிய கீதமாக இருந்திருக்க வேண்டும்.

இந்த ஊர் மாமல்லன் முதலிய பல்லவர்களின் வெற்றிக் கொடியாகத் திகழ்ந்தது. இதைக் கலைக்கூடமாக்கிக் களித்தார்கள்.அழியாத கலையை அழியாத கல்லில் வெட்டி, அந்நியர் கண்டு வியக்கும் வண்ணம் தங்கள் துறைமுக நகரில் அலங்கரித்தான் மாமல்லன்.

இங்குள்ள கற்கோயிலும் பல்லவர்களால் கட்டப்பட்டதே. இதுவே கல்லால் ஆகிய ஆதிக்கோவில். இதன் பிறகுதான் தமிழ் நாட்டில் கற்கோயில்கள் கட்டப்பட்டன. இது ஒரு காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கியது என்பதற்கு இப்போது இங்குள்ள கடலாழமே உதாரணம்.

அருட்களஞ்சியம்

வாதாபிப் போரில் வென்ற மாமல்ல பல்லவன் இலங்கையின் அரசனுக்கு உதவி செய்ய இங்கிருந்துதான் படைகள் நடத்தினான்., காஞ்சிக்கும் கடல் மல்லைக்கும் உள்ள ராஜபாட்டை வழியாக அவனது காலாட்படைகளும் ரதங்களும் துரகங்களும் அணி அணியாகக் கடந்து வந்து, அழகிய கடல் மல்லைத் துறை முகத்திலே கப்பலேறிப் புறப்பட்டன.

இலங்கையின் அரசனாகிய மானவர்மனின் மாற்றலருடன் போராடி வென்று மானவர்மனுக்கு மணிமகுடம் சூட்டி, வாகை மாலையுடன் இங்கு வந்திறங்கினார்கள். பரிசுப் பொருள்கள் நிறைந்த மரக்கலங்கள் பறவைக் கூட்டங்கள் போல துறைமுகத்தில் மொய்த்து நின்றன. பல்லவர்களின் இடபக் கொடிகள் நந்தியின் பேரைப் பாடி ஆடிக்கொண்டிருந்தன.

அருட்களஞ்சியம்

இன்று இடிந்து தகர்ந்திருக்கும் இத் துறைமுகத்தில் எத்தனை கப்பல்கள் அக்காலத்தில் மிதந்தன என்பதைத் திருமங்கை மன்னனின் செந்தமிழ்ப் பாசுரம் நமக்கு ஞாபகமூட்டுகிறது.

புலங் கொள்நிதிக் குவையோடு
புழைக் கைம்மா களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
சுமந்தெங்கும் நான்றொசிந்து
கலங்கள் இயங்குமல்லைக்
கடல் மல்லைத் தலசயனம்
வலங்கொள்மனத் தாரவரை
வலங்கொள்என் மடநெஞ்சே.

திசைகளை வென்று - திரவியங்களோடு அழகிய குதிரைகளும் யானைகளும் நவமணி களும் சுமந்து வரும் கப்பல்கள் எப்போதும் நடமாடுகின்றனவாம், மாமல்லைத் துறையில். ஆனால், இவையெல்லாம் பார்த்தவண்ணம் கடலருகே தலை வைத்துத் தரைமேல் பள்ளி கொண்டிருக்கிறார் பரந்தாமன். இந்தத் திருமாலை வலம் வருவாரை, நான் வலம்வர அருள் செய் என்று வாழ்த்துகிறார் திருமங்கையாழ்வார்.

அருட்களஞ்சியம்

இந்தப் பாடலில் ஏதோ தத்துவம் இருக்கிறது. செல்வம் கொழிக்கும் இடத்தின் நடுவே திருமால் தரையில் பள்ளி கொள்ளுவானேன்? விழித்து இருக்கும் மக்களிடையே அவர் அரிதுயில் கொள்ளுவானேன்? பரபரப்புக்கிடையே அவர் படுத்திருப்பானேன்? கடல் ஒருபுறம், மலை ஒருபுறம்; இரண்டையும் விட்டுத் தரையில் படுப்பானேன்?

அருட்களஞ்சியம்

செல்வம் நிலையற்றது என்றா? விழிப்பு பொய் என்றா? பரபரப்பு அடங்கும் என்றா? கடல் மேல் கலமும், மலைமேல் கோட்டையும் நிலையல்லவென்றா?

இப்பொழுது அந்த ஊரில் கலையும் கடலும் மட்டுமே மிஞ்சியிருப்பதைப் பார்த்தால் இப்படியெல்லாம் நமக்கு தோன்றுகிறது.

இன்றைய மகாபலிபுரம் ஒரு கனவு. வரும் பொருள் உரைக்கும் கனவல்ல. நிகழ்ந்ததை உணர்த்தும் கனவு. இது மனித குலத்துக்கு ஒரு பாடப் புத்தகம்.

(1952 விகடன் தீபாவளி மலரில் இருந்து...)

ஓவியங்கள்: கோபுலு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism