Published:Updated:

படியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை!

சிவமே எம் சிவமே...இ.லோகேஸ்வரி

ஒரு சனிக்கிழமை மாலைப்பொழுது... நமது செல்ஃபோனில் ஓர் அழைப்பு வந்தது. அழைத்தவர், அண்ணாமலையார் அறப்பணிக் குழுவைச் சேர்ந்த ஒரு நண்பர். மாதம்தோறும் ஒரு சிவாலயத்தில் உழவாரப்பணி செய்யும் இந்தக் குழுவினர், 'என் பணி இறைப் பணி செய்து கிடப்பதே’ பகுதி மூலம் சக்தி விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்களே!

''வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு சிவாலயத்தில் உழவாரப்பணி செய்யவிருக்கிறோம். நீங்களும் வருகிறீர்களா?'' என்றார் அறப்பணிக்குழு நண்பர்.

'எந்த ஊர் கோயில், ஸ்வாமி- அம்பாள் பெயர் என்ன?’ என்பன போன்ற விவரங்களை விசாரித்தபோது, நண்பர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன.

''நயப்பாக்கம் எனும் ஊரில் இருக்கிறது அந்த ஆலயம். ஆனால், ஸ்வாமி- அம்பாள் பெயர்கள் குறித்த விவரம் அந்த ஊர்க்காரர்களுக்கே தெரியவில்லை!'' என்றார் நண்பர்.

அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஒரு சொல்லிலோ, பெயரிலோ அடக்கிவிட முடியாதுதான். ஆனாலும், ஒரு திருநாமத்தால் அவனது பெருமையை ஓரளவு சொல்லமுடியும். அவன் அங்கு கோயில்கொண்டருளிய காரணத்தை விளக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், பல இடங்களில் அந்த ஊரின் சரித்திரத்தையே தன்னுள் அடக்கி நிற்கிறது அங்கு குடிகொண்டுள்ள இறைவனின் திருநாமம்!

படியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை!

இத்தகைய காரணங்களால்தான், ஆண்டவனுக்கு ஆயிரமாயிரம் பெயர்கள் சூட்டி அழகுபார்த்தார்கள் நம் முன்னோர். அந்தப் பெயர்களைச் சொல்லி பூஜிக்க வசதியாக சகஸ்ரநாமங்களைப் பாடி வைத்தார்கள்.

அப்படியிருக்க... இறைவனின் திருப்பெயரே மறைந்துபோகும் அளவுக்கு ஒரு கோயில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தபோது, மனம் வேதனையால் விம்மித் தவித்தது.

'அவசியம் வருகிறோம்’ என்று ஒப்புக்கொண்டதோடு, மறுநாள் அறப்பணிக் குழுவினரோடு ஒரு வேனில் அந்த ஆலயத்தைக் காணப் புறப்பட்டோம்.

சென்னை- பூந்தமல்லியில் இருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் இருக்கிறது மண்ணூர். இந்த ஊரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவு பயணித்து, நயப்பாக்கத்தை அடைந்தோம்.

வேனில் இருந்து இறங்கி, கோயில் இருக்கும் இடத்தை ஏறிட்டால்... பதைபதைத்துப் போகிறது நெஞ்சம்!

கோயிலின் மதில் இருந்ததற்கான சுவடே இல்லை. அவ்வளவு ஏன்... ஆலயம் என்ற அமைப்பே தொலைந்துபோயுள்ளது. ஆங்காங்கே சிறு சிறு சந்நிதிகள்... சுவர் சரிந்து, விதானம் விழுந்து, எஞ்சியிருக்கும் கற்களும் எப்போது வேண்டுமானாலும் பெயர்ந்து விழலாம் என்கிற நிலையில் மிகப் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன.

சரி, மூலவர் சந்நிதி எங்கே?

புதர் மண்டிக் கிடக்கும் ஒரு சந்நிதியைச் சுட்டிக்காட்டுகிறார் நண்பர். அருகில் சென்றோம். நன்கு வளர்ந்து சந்நிதி வாயிலை மறைத்தபடி கிடக்கும் பிரண்டைக் கொடிகளை விலக்கிவிட்டு உள்ளே நோக்கினால்...  

வானாகி, மண்ணாகி, வளியாகி, ஒளியாகி எங்கும் நீக்கமற நிறைந்து அண்டபகிரண்டத்தையும் ஆட்டுவிக்கும் பரமன், இங்கே வானமே கூரையெனத் திகழும் கோலத்தை என்னவென்பது?!

வளர்ந்தோங்கிக் கிடந்த பிரண்டைகளையும், இதர புதர்களையும் பார்த்தபோது, முதலில் மனம் துணுக்குற்றதுதான் என்றாலும், மறுகணமே அந்த ஓரறிவுத் தாவரங்களின் இயல்பும் செயலுமே கொஞ்சம் ஆறுதலைத் தந்தன. ஆமாம்... தாங்கள் பற்றிப் படர இடம் தந்த அந்தப் பரமனுக்கு அந்தச் செடிகளும் கொடிகளுமே விதானம் அமைக்க முயன்றிருக்கின்றன!

ஆதவன் துவங்கி வருணனும் வாயுவும் எந்தத் தடையுமின்றி இந்தப் பரம்பொருளை வழிபட்டிருப்பதைக் காணமுடிகிறது. வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் நன்கு வெளுத்துவிட்டிருக்கிறது எம்பெருமானின் லிங்கத்திருமேனி. ஆனாலும், கம்பீரத்திலும் பொலிவிலும் ஒரு குறைவுமில்லை.

வழிபாட்டின் அடிப்படையில் லிங்க மூர்த்தங்களை ஐந்தாக வகைப்படுத்துகின்றன ஞானநூல்கள். தேவர்கள் வழிபட்ட லிங்கம்- தெய்விகம்; கணபதி வழிபட்டது காணபம்; ரிஷிகள் ஸ்தாபித்தது- ஆரிஷம்; மனிதர்கள் ஸ்தாபித்தது மானுஷ்யம்; தானாகத் தோன்றி அருள்பாலிப்பவை சுயம்பு!

படியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை!

இங்கே நாம் தரிசிக்கும் இந்தப் பிரான் யாரால், எப்போது, எதன் பொருட்டு நிர்மாணித்து வழிபடப்பெற்றாரோ? அல்லது, தரணி செழிக்க தானாகவே உருவாகி இங்கு கோயில் கொண்டாரோ... எதுவும் புலப்படவில்லை.

எது எப்படியாயினும், நமக்காக அருள்செய்ய அவர் காத்திருப்பது தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது. அப்படியொரு சங்கல்பத்தை எண்ணியே இங்கே மீண்டும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

'ஈசனடி போற்றி... எந்தையடி போற்றி’ என்று அவனருளால் அவன் தாள் வணங்கி, சிவ சந்நிதியைவிட்டு வெளி வருகிறோம்.

அதற்குள் அன்பர்களின் உழவாரப்பணி துவங்கிவிட்டிருந்தது.  மேடும் பள்ளமுமாய்க் கிடந்த நிலத்தைத் திருத்தி, புதர்களை அகற்றி, துப்புரவு செய்துகொண்டிருந்தார்கள் அன்பர்கள். சேறும் சகதியுமான அந்த இடத்தில் மிகக் கவனமாகக் கால்பதித்து, அம்மையைத் தரிசிக்கச் செல்கிறோம். அழகிலும் பொலிவிலும் ஸ்வாமிக்குச் சற்றும் குறைவில்லாதவளாக அருள்பாலிக்கிறாள் அன்னை.

நாம் ஸ்வாமியைத் தரிசித்து வந்த அந்தச் சிறிய பொழுதுக்குள் அம்பாள் சந்நிதியின் புதர்கள் முழுவதுமாகக் களையப்பட்டிருந்தன. அதற்குப் பிறகே, அங்கு பைரவர் சிலை ஒன்றும் இருப்பது தெரிய வந்தது. ஸ்வாமி, அம்பாள் மட்டுமின்றி, பிள்ளையார், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் தனித் தனிச் சந்நிதிகளில் அருள்பாலித்திருக்கிறார்கள். இப்போது அனைத்தும் சிதிலமாகிக் கிடக்கின்றன. பல வருடங்களுக்கு முன்பு இங்கே இருந்த நந்தி சிலை, இப்போது போன இடம் தெரியவில்லை.

முருகன் இங்கே பிரம்மசாஸ்தா கோலத்தில் அருள்கிறார். 'சாஸ்தா’ என்பதற்குத் தண்டிப்பது என்றும் பொருள் கொள்ளலாம். ஆக, பிரம்மனை தண்டித்த கோலம் முருகப்பெருமானுக்கு!

படியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை!

''இந்தக் கோயில் செம்பூரான் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது'' என்கிறார் உழவாரப்பணிக் குழுவினருடன் வந்திருந்த தொல்பொருள் துறை ஆய்வாளர் ஸ்ரீதரன். அவரே தொடர்ந்து, ''சிவலிங்கம் மற்றும் அம்பாள் விக்கிரகத்தை வைத்துப் பார்க்கும்போது, சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன், பிற்கால பல்லவர்கள் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது'' என்றார்.

அன்பர்களின் திருப்பணி தொடர்ந்து கொண்டிருக்க, கோயில் பற்றி உள்ளூர்க்காரர் களுக்கு ஏதேனும் தெரிந்திருக்குமா என்று அறியும் ஆவலில், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம்.

''எனக்குத் தெரிஞ்சு ரொம்ப வருஷமா இந்தக் கோயில் இப்படியேதாங்க இருக்கு. இந்த ஊரிலேயே எண்பத்தஞ்சு வயசான எங்க தாத்தாதான் மிக மூத்தவர். அவருக்கே இந்தக்

கோயிலைப் பற்றிய விவரம் தெரியலை. ஆறு மாசத்துக்கு முன்னாடி சிவனடியார்கள் சிலபேர் வந்து, பூஜை பண்ணிட்டுப் போனாங்க. கோயிலுக்கு மணியும், விளக்கும் வாங்கிக் கொடுத்திருக்காங்க!'' என்கிறார் உத்திரகுமார் என்பவர்.

விசித்திரம் என்னவென்றால், கோயிலை ஒட்டி அமைந்திருக்கும் தெருவுக்கு ஈஸ்வரன் கோயில் தெரு என்றே பெயர். ஆனாலும், அங்கிருப்பவர்களுக்குக்கூட கோயில் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

கடந்த ஒரு வருடமாக இந்தக் கோயிலில் ஒரு பொழுது  மட்டும் விளக்கேற்றி பூஜை நடத்தி வருகிறார் மாதவன் என்ற இளைஞர். அவரை நமக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள்.

''சிவன்தான் என் இஷ்ட தெய்வம். பக்கத்திலுள்ள மண்ணூர்தான் எங்க சொந்த ஊர். ஒருமுறை, இந்த ஊருக்கு வந்திருந்தபோதுதான் இந்தக் கோயிலைப் பார்த்தேன். நம்மையெல்லாம் வாழவைக்கும் ஈசனுக்கா இந்த நிலைமைன்னு கலங்கிப் போயிட்டேன். எங்க ஊர் கோயில்லயும் நான்தான் பூஜை பண்றேன். அதனால தினமும் முடியலேன்னாலும் பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம் மாதிரியான விசேஷ நாட்கள்ல இங்கேயும் வந்து, என்னால் முடிஞ்ச அளவுக்கு அபிஷேகம் பண்ணி, விளக்கேத்தி வெச்சு பூஜை பண்ணிட்டுப் போறேன்'' என்றார்.

அவரே தொடர்ந்து, ''சொன்னா நம்பமாட்டீங்க... பல நாட்களா தள்ளிப்போய்க்கிட்டிருந்த என்னோட கல்யாணம், இந்தக் கோயிலுக்கு வந்து நான் விளக்கேத்த ஆரம்பிச்ச ஒரு மாசத்துக்குள் நடந்துடுச்சு!'' என்கிறார் பூரிப்புடன்.

அவருக்கு மட்டுமல்ல, சிவனருளால் ஒட்டுமொத்த ஊருக்குமே இப்போது இருப்பதைவிடவும் பன்மடங்கு நன்மைகள் பெருகப் போகின்றன என்றே நம் மனத்தில் பட்டது.

இந்தக் கோயிலுக்கென ஒரு குளமும் இருக்கிறது. அத்துடன் ஊருக்கு நடுவே, லிங்க வடிவம் பொறித்த கல்லொன்றும் காணப்படுகிறது. அதை, 'எல்லைக் கல்’ என்கிறார்கள் ஊர் மக்கள்.

அத்துடன், ஒருகாலத்தில் ஊரின் எல்லையில் கிடந்த கல்வெட்டு குறித்தும் பேசினார்கள்.

படியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை!

''அப்போதே அக்கறை எடுத்து உரியவர்களைக் கொண்டு அந்த கல்வெட்டை ஆய்வு செஞ்சிருந்தா, இந்த ஊரைப் பத்தியும், ஆலயம் குறித்தும் பல உண்மைகள் தெரிஞ்சிருக்கும். இன்னிக்கு அந்தக் கல்வெட்டு என்ன ஆச்சுன்னே தெரியலை. ஒருவேளை, இந்தப் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அடியில் அது புதைந்து சிதைஞ்சு போயிருக்கலாம்'' என்று ஆதங்கப்படுகிறார்கள்.

ஊர் பஞ்சாயத்துத் தலைவரான மோகன் நம்மிடம், ''அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இந்தக் கோயில் இருந்த இடமே தெரியாம, மரங்களுக்கும் செடிகளுக்கும் நடுவே யார் கண்ணிலேயும் படாம இருந்தது. பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு, ஓரளவு சுத்தம் பண்ணினோம். அப்புறம்தான் சுவாமியை தரிசிக்க ஓரளவாவது வழி கிடைச்சுது'' என்றார்.

உழவாரப் பணி ஓரளவு முடிந்திருந்தது. கோயிலைச் சுத்தப் படுத்தி, விக்கிரகங்கள் அனைத்தையும் சிவலிங்கம் அருகே எடுத்து வைத்தனர் அன்பர்கள். தொடர்ந்து, ஸ்வாமிக்கு அலங்கார அபிஷேகத்துடன் பூஜையும் நிகழ்ந்தது. அன்பர்கள் ஒருங்கிணைந்து பதிகம் பாடினார்கள்.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
சுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!

அன்பர்கள் நெக்குருகிப் பாடப் பாட, பரவசத்தில் கண்களில் நீர் கோத்தது.  தீபாராதனை ஒளியில் லிங்கத் திருமேனியின் கம்பீரத் திருவுருவைக் காணக் காண மனம் நெகிழ்ந்தது.

படியளக்கும் பரமனுக்கு பெயரும் இல்லை; கோயிலும் இல்லை!

இது இனிய துவக்கமாக அமையட்டும். சிவனருளால் உள்ளூர் அன்பர்களும் சிவபக்தர்களும் ஒன்றிணைந்து, விரைவிலேயே இந்தத் திருக்கோயிலுக்கு ஒரு திருப்பணி கமிட்டி அமைக்க வேண்டும். திருப்பணிகளை விரைவில் நடத்தி, இந்தக் கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்யவேண்டும். பிறகென்ன... தாயைத் தேடி ஓடி வரும் கன்றினைப்போல, இதோ இந்த ஈஸ்வரனை நாடி சிவநேசச் செல்வர்கள் எண்ணற்றோர் வருவார்கள். உடலாலும் பொருளாலும் எம்பெருமானின் கோயில் எழும்பிட உதவுவார்கள்.

திருப்பணிகள் ஒருபுறம் இருக்க... தகுந்த பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு, ப்ரச்னம் மூலமாகவோ, முறைப்படியான வேறு வகையிலோ ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருப்பெயர் சூட்ட வேண்டும். வாய் நிறைய அந்தப் பெயரைச் சொல்லி வாழ்த்துப் பா பாட வேண்டும்! நமக்கு வாழ்வில் ஒரு பிரச்னை என்றால், இறைவனை மானசீகமாகக் கூவி அழைத்து, அவன் தாளில் சரணடைய, ஒரு திருப்பெயர் வேண்டுமல்லவா? ஆக, அம்மைக்கும் அப்பனுக்கும் பெயர் சூட்டுவோம். அகில உலகத்துக்கும் தாயும் தந்தையுமான ஈசனுக்கும் உமாதேவிக்கும் பெயர் சூட்டும் பாக்கியம் பெற்ற சேய்களாக நாம் ஆவோம்.

அந்தத் திருப் பெயர்களை தினம் தினம் மந்திரமாக உச்சரித்து, நம் வாழ்வு வளம் பெறட்டும். நம் குடும்பமும் சந்ததியும் வாழ்வாங்கு வாழட்டும்!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

அடுத்த கட்டுரைக்கு