Published:Updated:

விளக்கேற்றும் பாட்டி!

என் கடன் இறைப்பணி... இ.லோகேஸ்வரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நெற்றி நிறைய திருநீறு, கழுத்தில் ருத்ராட்ச மாலை, வாயில் எப்போதும் சிவபுராண பாராயணம், கோயிலின் தேரடி திண்ணையில் வாசம்... இதுதான் விளக்கேற்றும் பாட்டி. திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீதியாகராஜர் கோயில் அமைந்திருக்கும் பகுதியிலும் அந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று வரும் பக்தர்கள் மத்தியிலும் வெகு பிரசித்தம், இந்த பாட்டி!

காரணம்?

திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மன் சமேத ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி திருக்கோயிலில் அருளும் அறுபத்துமூவருக்கும் தொகை அடியார்களுக்கும்... இன்றல்ல நேற்றல்ல... கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து விளக்கேற்றி வரும் இந்த 85 வயது மூதாட்டியின் திருப்பணி!

இந்தப் பணியை இவர் கையிலெடுத்தது ஏன்? குறிப்பாக இந்தக் கோயிலை அவர் தேர்ந்தெடுத்து எதற்காக? ஆர்வமும் பரவசமுமாக விவரிக்கிறார் விளக்கேற்றும் பாட்டி.

''நீலாம்பாள் என்பதுதான் என்னோட சொந்தப் பெயர். ஆனா, இங்கே எல்லோரும் விளக்கேற்றும் பாட்டி, புல்லுக்கார அம்மான்னு தான் கூப்பிடுவாங்க!

ஆடு- மாடு மேயாத இடத்துலேருந்து, சுத்தமா இருக்கிற அருகம்புல்லை அறுத்து எடுத்துட்டு வந்து, 108 முழத்துக்கு மாலையா கட்டுவேன். அதை, இங்கே கோயில்ல இருக்கிற 21 பிள்ளையாருக்கும் போட்டுட்டுதான், என் அன்றாட வேலைகளை ஆரம்பிப்பேன். அதான் புல்லுக்கார அம்மான்னு ஒரு பேரு. விளக்கேற்றி வழிபடறதுனால விளக்கேற்றும் பாட்டின்னு இன்னோரு பேரு''- என்ற நீலாம்பாள், சிறு புன்னகையுடன் தொடர்ந்தார்...

விளக்கேற்றும் பாட்டி!

''திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர்தான் சொந்த ஊர்.

கல்யாணமாகி திருவொற்றியூருக்கு வந்தேன். அப்ப தினமும் கோயிலுக்கு வரு வேன். அப்போதிலிருந்து தியாகராஜரும் வடிவுடையம்பாளும்தான் எனக்கு எல்லாமே! குறிப்பா இந்தக் கோயில் நடராஜர். எந்த கஷ்டம்னாலும் சரி... அவரோட தரிசனம் எல்லாத்தையும் மறக்கடிச்சிடும்'' எனக் கூறும் விளக்கேற்றும் பாட்டி ஆரம்பத்தில் ஸ்ரீநடராஜருக்கு மட்டும்தான் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி வந்தாராம்.

பிறகு, அறுபத்து மூவருக்கும் விளக்கேற்ற ஆரம்பித்தது எப்படி?

''அதுவொரு சிலிர்ப்பான அனுபவம்'' என்றவர், அதுகுறித்தும் விவரித்தார்: ''ஆரம்பத்துல தரிசனத்துக்கும் விளக்கேற்றவும் கோயிலுக்குப் போய் வந்தவ, நாளடைவில் கோயிலே கதின்னு நிறைய நேரத்தை அங்கேயே கழிக்க ஆரம்பிச்சேன். ஒருநாள் மத்தியானப் பொழுது. கோயில் மண்டபத்துல உட்கார்ந்திருந்தேன். அது பிரமையா, நிஜமான்னு சொல்லத்தெரியலே... 'இனிமே நீ அடியார்களுக்கு விளக்கேற்று’ன்னு ஒரு குரல் கேட்டுச்சு. என்னையும் நடராஜரை யும் தவிர அக்கம்பக்கம் வேறு யாருமே இல்லை. எனக்கு உடம்பு சிலிர்த்துப் போட்டுடிச்சு. சரி, இது தெய்வத்தின் கட்டளைன்னு நினைச்சு, அன்னிலேர்ந்து அறுபத்து மூணு நாயன்மார்களுக்கும் ஒன்பது தொகையடியார்களுக்குமா சேர்த்து தினமும் ரெண்டு வேளை விளக்கேற்ற ஆரம்பிச்சேன்'' என்று கூறிமுடித்தவரின் கண்களில் நீர்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்...

''எவ்வளவு அருமையான ஊர் தெரியுமா இது? 'பூலோக சிவலோகம்’னு பெரியவங்க சொல்லக் கேட்டிருக்கேன். சுந்தரர், ஞான சம்பந்தர், பட்டினத்தார்னு நிறையப்பேர் இந்த ஊரையும் கோயிலையும் பாடியிருக்காங்க. அது மட்டுமா? சப்தவிடங்க தலங்கள்ல ஒண்ணு, ஈஸ்வரன் அருளால சுந்தரர் சங்கிலியாரை கல்யாணம் செஞ்சுகிட்டது, நாகராஜன் வந்து வழிபட்ட தலம்னு இந்த ஊரோட பெருமையைச் சொல்லிக்கிட்டே போகலாம். குறிப்பா, கலிய நாயனார் வாழ்ந்த ஊர் இது'' என்கிறார் விளக்கேற்றும் பாட்டி. இதைச் சொல்லும்போது அவர் முகத்தில் அப்படியொரு பெருமிதம்!

''ஆமா... உங்களுக்குக் கலிய நாயனார் கதை தெரியுமா?'' என்று கேட்டவர், அவரே கதையையும் சொல்ல ஆரம்பித்தார்.

''எண்ணெய் வியாபாரியான கலியநாயனார், தினமும் இந்தக் கோயிலில் விளக்கேற்றுவதை திருப்பணியா செஞ்சுட்டு வந்தார். அவரோட பக்தியை உலகறியச் செய்யணும்னு நினைச்சாரோ என்னவோ... கலியருக்கு கடுமையான சோதனை தந்தாரு ஈஸ்வரன். செல்வம் எல்லாம் கரைஞ்சு வறுமைக்கு ஆளானாரு கலியர். ஆனாலும் விளக்கேற்றுவதை அவர் விடல்லே!

ஒருநாள்... கால்படி எண்ணெய் வாங்கவும் கையில் காசில்லை. என்ன பண்றதுன்னு யோசிச்சவர், தன் குடும்பத்தையே விற்க முடிவெடுத்தார். ஆனா சிவ சித்தம்னு ஒண்ணு இருக்கே! அவர் குடும்பத்தை அடிமைகொள்வார் யாருமே இல்லை.

பார்த்தாரு கலியர்... கையிலிருந்த கொஞ்சம் எண்ணெயோட நேரா கோயிலுக்குப் போனார். 'இந்த எண்ணெயும் தீர்ந்துடுச்சுன்னா இன்னிக்கு என் ரத்தத்தை ஊற்றி விளக்கேற்றுவேன்’னு தீர்மானிச்சுக்கிட்டு விளக்கேற்ற ஆரம்பிச்சார். கொஞ்ச நேரத்துல அவர் ஏற்றிவைத்த விளக்குல ஒண்ணு எண்ணெய் தீர்ந்து அணையப் போனது. உடனே கலியர் என்ன பண்ணினார் தெரியுமா? கத்தியை எடுத்து தன் கழுத்தை வெட்டத் துணிஞ்சிட்டாரு. சாமி பார்த்துக்கிட்டு சும்மா இருப்பாரா என்ன? சட்டுனு அவரைத் தடுத்து ஆட்கொண்டு விட்டாராம்.

விளக்கேற்றும் பாட்டி!

எத்தனை மகத்துவமான கதை பார்த்தீங்களா... இப்பேர்ப்பட்ட தலத்துல விளக்கேற்ற எனக்கும் கொடுத்துவெச்சிருக்குன்னா... அந்த பாக்கியத்தை என்னன்னு சொல்றது?''- கண்ணீர் மல்க கோயில் கோபுரத்தைக் கையெடுத்து கும்பிடுகிறார் பாட்டி.

அதிகாலையிலேயே எழுந்து பக்கத்தில் இருக்கும் குழாயடியிலேயே குளித்து முடித்து விபூதி அணிந்து, கோயில் வாசலுக்குச் செல்பவர், திருநடைக்கு முன் கற்பூரம் ஏற்றி வழிபடுவாராம். பிறகு, நடை திறக்கும் வரையிலும் அங்கேயே அமர்ந்து சிவபுராணம் சொல்வது வழக்கமாம்.

இவர் வாழ்வும் சோதனைகள் நிறைந்ததுதான். குடும்பம், உறவு என எந்த உறவும் இப்போது இவருடன் இல்லை. தேரடியில் இருக்கும் திண்ணைதான் இவரது வீடு. கழுத்தில் கிடக்கும் ருத்ராட்ச மாலையும் இரண்டு புடவைகளும் மட்டுமே இவரது சொத்து. தினமும் பூ கட்டுகிறார். அதில் வரும் வருமானம் 20 ரூபாய்தான், தினப் படிச் செலவுக்கு. மற்றபடி அன்பர்கள் சிலர் அவ்வப்போது உதவி செய்கிறார்கள்.

''சிவனடியார்கள் சிலர் உதவியோடு தனியே வீடு எடுத்து தங்கியிருந்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கீழே விழுந்ததுல இருந்து சரியா நடக்க முடியலை. சிவனடியார்கள் சிலர் என்னை மேட்டுக்குப்பம் ஆஸ்பத்திரில சேர்த்தாங்க. உடம்பு வலியைவிட விளகேற்ற முடியாம போயிடுச்சேன்னு மனசு அதிகமா வலிச்சது. 'இப்படியே அழைச்சிட்டு போயிடுப்பா’ன்னு வேண்டிக்கிட்டேன். ஆனா சாமி செவி கொடுக்கலை. கால் கொஞ்சம் சரியானதும் திரும்பி வந்தேன். என் வீட்டுல வேற யாரோ குடித்தனம் வந்துட்டாங்க!

வேற எங்க போறதுன்னு தெரியலை. நேரா கோயில் வாசலுக்கு வந்துட்டேன். இதோ இப்ப... இந்த திண்ணைதான் என் வீடு. அப்பா- அம்மாவுக்கு பக்கத்துல இருக்கிறமாதிரி ஒரு தெம்பு'' என்பவர், அதன் பிறகும் விடாமல் தொடர்ந்து அறுபத்து மூவருக்கும் விளக்கேற்றி வந்திருக்கிறார். தனது பணிக்கு உதவி செய்பவர்கள், பரிவுடன் ஒத்துழைக்கும் கோயில் நிர்வாகம் குறித்தும் பேசுபவர் மகிழ்ச்சியோடு அவர்களுக்கு நன்றி கூறுகிறார்.

விளக்கேற்றும் பாட்டி!

''என்னைப் பற்றி தெரிஞ்சிக்கிட்டு ஊர் பேர் தெரியாத அடியவர்கள் எல்லாம், எங்கிருந்தெல் லாமோ இருந்து உதவி செய்றாங்க. சிலர் எண்ணெய் அனுப்பி வைப்பாங்க. திருச்சி அன்பர் ஒருத்தர் விளக்குத் திரி அனுப்பி வைப்பார். இங்க பக்கத்து இடங்கள்ல இருக்கிற சிலபேரு உணவு தந்து உதவுறாங்க... எல்லாரும் நல்லாருக்கணும்'' என்று நெஞ்சில் கைவைத்து வாழ்த்துகிறார் விளக்கேற்றும் பாட்டி.

இப்போது நடப்பதற்கு இன்னும் சிரமப்படுகிறார். வாரம் இரு முறையோ ஒருமுறையோ மட்டுமே விளக்கேற்ற முடிகிறது என்கிறார். இவர் துவங்கி வைத்த திருப்பணி தடையின்றி தொடர வேண்டும் என்ற ஆர்வத்துடன், பக்தர்கள் பலரும் அறுபத்துமூவருக்கு விளக்கேற்றி வருகிறார்கள். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் தமிழ்வாணன்- வசுமதி தம்பதியினர்.

''ஏழு வருஷமா இந்தக் கோயிலுக்கு வந்திட்டு இருக்கோம். ஆறு மாசத்துக்கு முன்னாடிதான் எங்களை விளக்கேற்ற சொன்னாங்க இந்த பாட்டி. நாங்களும் விளக்கேற்ற ஆரம்பிச்சோம். அதன் பிறகு ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.'' என்று நெகிழ்கிறார்கள் அந்தத் தம்பதி.

கோயிலில் விளக்கேற்றுவதற்கென்றே ஒரு குழு அமையவும் காரணமாக இருந்திருக்கிறார் விளக்கேற்றும் பாட்டி. 'கலிய நாயனார் தொண்டரடியார் திருக்கூட்டம்’ எனும் அந்தக் குழுவில் 25 அடியார்கள் இணைந்துள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த ரமேஷ் எனும் அன்பர், ''பாட்டியை சின்ன வயசுல இருந்தே எனக்குத் தெரியும். பாட்டியோட இறைப் பணியே எங்களுக்கும் தூண்டுதல்'' என்கிறார். விளக்கேற் றுவது மட்டுமின்றி சொற்பொழிவு, திருவிளக்கு பூஜை நடத்துவது, அடியார்களுக்கு உதவுவது எனத் தொடர்கிறது, இந்தக் குழுவினரின் பணி.

மொத்தத்தில், நீலாம்பாள் எனும் ஒரு சுடர், பல தீபங்களை ஏற்றி வைத்திருக்கிறது. அந்த தீபங்கள் பல்கிப்பெருகி ஊருக்கு ஊர், கோயிலுக்கு கோயில்... அண்ணாமலையின் பெருஞ்ஜோதியாய் ஜொலிக்கவேண்டும்!

படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு