Published:Updated:

சக்தி சங்கமம்

வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பயத்தால் வருவதல்ல பக்தி!

ப்போதும் ஏதேனும் ஒரு காரணத்தால் பரபரப்பு பற்றிக்கொள்ளும் ஊர்- பெங்களூரு. நாகரிக, கலாசார மாற்றங் களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்கிற பெங்களூரு நகரில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவு பயணித்தால்... உதய்புரா எனும் பகுதியை அடையலாம்!

நரக சர்ச்சைகள் இல்லை; நகர இரைச்சல்கள் கிடையாது. அமைதி... அமைதி... எங்கும் அமைதி என சுமார் 100 ஏக்கர் பரப்பளவு முழுவதும் பரவிக் கிடக்கிறது பேரமைதி. அதன் பெயர்... வாழும் கலை ஆஸ்ரமம்!

சக்திவிகடன் வாசகர்கள், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரைச் சந்தித்துக் கலந்துரையாடும் அற்புதத் தருணம் இது! நம் வாசகர்கள் கிருத்திகா தரன், மணிமொழி, மகாலட்சுமி, ஜெயந்தி, மித்ரா, ராஜாமணி, ஷாலினி, ஜோதி, ஜெயலட்சுமி, சுதா, ராஜீவ்கணேஷ் ஆகியோர் ஆஸ்ரமத்தையும் அதன் சூழலையும் பார்த்துப் பிரமித்துப் போனார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சுவாமிஜி பிள்ளையார் சந்நிதிக்கு வர்றாராம். அங்கே உங்களையெல்லாம் அழைச்சிட்டு வரச் சொன்னார்'' என்று அன்பர் ஒருவர் வந்து தகவல் சொல்ல... பரவசத்துடன் வாசகர்கள் வேகமெடுத்து நடந்தார்கள்.

சக்தி சங்கமம்

பிள்ளையாரைப் பார்த்ததும் பிரமித்துப் போனார்கள். 'அட...’ என்கிற ஆச்சரியம் அவர்களின் கண்களில் மின்னின. 'பஞ்சமுக விநாயகர் எவ்ளோ அழகு, பாருங்களேன்!’ என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டார்கள்.

அங்கே... விநாயகருக்கு எதிரில் மௌனமாக நின்று, கண்கள் மூடி, கை கூப்பி வேண்டிக்கொண்டிருந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜியைக் கவனித்ததும் அவர்களின் பரவசம் இன்னும் எகிறியது. விநாயகருக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்ஜி தீபாராதனை காட்ட, அந்த இடமே பக்தி மணத்தால் பரிபூரணமாக நிரம்பியிருந்தது.

''அடேடே... சக்திவிகடனா? ஆனந்தவிகடன்லேருந்து எத்தனை புத்தகம் வருது? பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும்கூட தனியா புத்தகம் வருதுதானே?'' என்று கேட்டார் சுவாமிஜி. அவரிடம் விகடன் குழுமப் பத்திரிகைகள் குறித்துப் பகிர்ந்துகொண்டோம். புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டவர், ''படிக்கிறது குறைஞ்சிட்டே வர்ற இந்தக் காலகட்டத்துல, விகடன் பணி சிறப்பானது. வாழ்த்துக்கள். சரி, யார் முதல்ல கேள்வி கேக்கப் போறாங்க?'' என்று தயாரானார் சுவாமிஜி.

சக்தி சங்கமம்

முதல் கேள்வி வந்து விழுகிறது வாசகி கிருத்திகா தரனிடம் இருந்து. ''வாழும் கலை- ஆழ்ந்த அர்த்தமுள்ள மிக அற்புதமான மந்திரச் சொல்! ஆனா சுவாமிஜி... தற்காலத்தில், 'மக்கள் 'வாழும் கலை’யை அறிந்து உணர்ந்து அதன்படி வாழ்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? எல்லோரும் ஏதோ ஒரு மாயையான சந்தோஷத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிற மாதிரிதானே தோன்றுகிறது?''

சிறு புன்னகை பிறக்கிறது சுவாமிஜியிட மிருந்து. மென்மையான குரலில் இதற்கு பதில் சொல்கிறார் சுவாமிஜி...

''மனசைக் கட்டுப்படுத்துவதுதான் முக்கியம். மூச்சின் மூலமாகவே மனசை நம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும். மனசின் வெறுமையை தூர எறிஞ்சுட்டு, மனசின் இறுக்கத்தை தளர்த்தி, அந்த மனசை நம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதைத்தான் வாழும் கலைப் பயிற்சியின் மூலமா இங்கே சொல்லிக் கொடுத்துட்டிருக்கோம். வெறுமை, பொறாமை, ஆத்திரம், அழுகை, அடுத்தவர் மேலான கோபம், நம் மேலேயே நாம் கொண்டிருக்கிற கழிவிரக்கம்னு எல்லாத்தையும் விட்டுட்டா, இங்கே மக்கள் நிம்மதியா, அமைதியா,

ஆனந்தமா வாழலாம்; வாழமுடியும். வாழும் கலைப் பயிற்சியை எடுத்துக்கிட்ட லட்சக் கணக்கான பேர், அப்படி நிறைவான வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.

இப்ப, நிறைய தொழிற்சாலைகள்லயும் அலுவலகங்கள்லயும் 'மீல்ஸ் அண்ட் மெடி டேஷன்’னு ஒண்ணு கொண்டு வரப்பட்டிருக்கு. அதாவது, எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடும்போது, சாப்பிடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் தியானம்; அதுக்குப் பிறகு சாப்பாடு. அப்ப, அவங்களுக்குள்ளே ஒற்றுமை அதிகரிக்கும். வேற்றுமை குறையும்.

அலுவலகங்கள் தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம், சாப்பாடு கொடுக்கறதோட நிக்காம, அவங்களோட மனநிலையையும் பார்க்கணும். அப்போதான் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் தொழிற்கூடத்துக்குமான பந்தம் அதிகரிக்கும். அதைத் தியானமும் யோகாவும் நிச்சயம் தரும்'' என்று சொல்லிவிட்டு, அருகில் உள்ள ஆஸ்ரம அன்பரிடம் ஹிந்தியில் பேசினார். இன்னொருவரிடம் கன்னடத்தில் பேசினார். மீண்டும் தமிழுக்கு வந்தார். ''அடுத்த கேள்வி கேளுங்க'' என்றார்.

சக்தி சங்கமம்

''ஆன்மிகம் இன்றைக்கு வளர்ந்திருக்கிறது. வழிபாடுகளும் யாகங்களும் பெருகிவிட்டன. குருமார்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.இதற்கெல்லாம் காரணம் மக்களின் பயம் என்று சொல்லலாமா? பக்தி என்று கொள்ளலாமா?'' - வாசகி மித்ராவின் கேள்வி இது.

மீண்டும் ஒரு மெல்லிய புன்னகை, சுவாமிஜியிடம். தொடர்ந்து விரிவாக பதில் சொல்கிறார்...

''நாலு விதமான மக்கள், ஆன்மிகத்துக்கு வருவாங்க. ரொம்ப வருத்தமோ துக்கமோ இருக்கிறவங்க ஆன்மிகத்தின் பக்கம் வருவாங்க. இது வேணும் அது வேணும், அது கிடைக்கணும், இது கிடைக்கணும்னு பொருள் மேல ஆசைப்பட்டும் வர்றவங்க உண்டு. அடுத்து, வாழ்க்கைன்னா என்ன, நான் யார்னு ஞானத்தை அறிகிற ஆர்வத்தோடு வர்றவங்களும் உண்டு. ஆன்மாவை அறிகிற ஆர்வத்தோடு வர்றவங்க குறைச்சல்தான்! மத்தவங்க யாருன்னா... இந்த உலகம் நிலையானது இல்லை; எதுவும் இங்கே நிரந்தரம் கிடையாதுன்னு எல்லாத்தையும் உணர்ந்த ஞானிகளும் ஆன்மிகப் பாதைல இருக்காங்க.

பயத்தோடு ஆன்மிகத்துக்கு வரமுடியாது. பயத்தால் வருவதல்ல பக்தி! பயம் எதையுமே செய்யவிடாது. நம்மை அப்படியே முடக்கிப் போட்டுடும்; சிந்திக்கவும் தடைபோடும். ஆனா, நம் தாத்தா- பாட்டி காலத்து பக்தியைவிட, இன்றைக்கு பக்தி பலருக்கும் ஒரு தெளிவைக் கொடுத்திருக்கு என்பது உண்மை. பூஜைகளாகட்டும், யாக வேள்விகளாகட்டும்... எல்லாமே மனிதனைச் செம்மைப்படுத்துவதற்காகத்தான்! கடவுள் எனும் சக்தியை நோக்கி நம்மை மெள்ள மெள்ள நகர்த்துவதற்கான விஷயங்கள்தான் இவை! இந்த ஆன்மிக வளர்ச்சியை நான் இப்படித்தான் பார்க்கிறேன்.''

சுவாமிஜி சொல்லி முடிக்க, அதன் தொடர்ச்சி யாகவே அடுத்த கேள்வியைக் கேட்டார் வாசகி சுதா... ''உண்மையான ஆன்மிகவாதி யார்? அவரின் கடமை என்ன? அவர் எப்படி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள் சுவாமிஜி?''

''உண்மையான ஆன்மிகவாதின்னா, முதல்ல அவர் தனக்கு உண்மையா இருக்கணும். அதான் முக்கியம். நேர்மையா, உண்மையா, மனசுல பேராசை, பொறாமை போன்ற குணங்கள் இல்லாம இருந்தால்தான் அடுத்தவங்களுக்கு போதிக்க முடியும். அப்படி போதிக்கிறதுக்கு தெளிந்த மனசு தேவை. அடுத்தவர் நலன் பற்றிய சிந்தனை தேவை.

நீச்சல் தெரிஞ்சாதானே மத்தவங்களுக்கு நீச்சல் சொல்லித் தரமுடியும்? அப்படித்தான் ஆன்மிக வழிகாட்டுதலும்! பரம்பொருள் ஒருத்தர்தான்; அவர் நமக்குள்ளேயே இருக்கார்னு உணர்ந்தவர்தான் குரு. அப்படி நல்ல குருவா இருந்தாதான், நல்ல சிஷ்யர்களை உருவாக்க முடியும்!''

சக்தி சங்கமம்

சுவாமிஜியின் இந்தப் பதிலைத் தொடர்ந்து வாசகி சுதா ஒரு கேள்வியை முன்வைத்தார்: ''சுவாமிஜி... இந்த ஆஸ்ரமத்தில் உள்ள வேத பாடசாலையைப் பார்த்து பிரமிச்சுப்போயிட்டோம். நீங்கள் சொல்வது போன்ற குரு-சிஷ்ய பரம்பரை வளர, இது போன்ற வேதபாடசாலைகளும் உதவும் இல்லையா?''

''நிச்சயமா! இது, அடுத்த தலைமுறையையும் ஆயிரமாயிரம் ஆண்டு வேதத்தையும் இணைக்கும் முயற்சி!

அந்தக் காலத்தில், மரங்களில் பர்ணசாலை அமைத்து ஜப தபங்களில் ஈடுபட்டார்கள் முனிவர் பெருமக்கள். இங்கே, அடர்ந்து நிழல் பரப்பிக்கொண்டிருக்கும் மரங்கள் சூழ்ந்திருக்க, அதன்கீழ் நடக்கிறது வேதபாடசாலை. இடுப்பில் வேஷ்டி, மேல் துண்டு, நெற்றியில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம் ஆகியவற்றுடன் குடுமி வைத்துக் கொண்டு, ஏராளமான சிறுவர்கள் ஆர்வத்துடன் வேதம் கற்பதை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம். வேதப் பயிற்சியுடன், சிவாகம அடிப்படையிலான பூஜைகளும் வழிபாடுகளும் சொல்லித் தரப்படுகின்றன. கெடுபிடி இல்லை. 'இப்படி வா... அப்படிப் போ’ என்கிற அதட்டல் உருட்டல்களுக்கு இங்கே இடமில்லை. அவினாசியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி சிவாச்சார்யர்தான், பாடசாலையின் பிரின்ஸிபால். வகுப்பு முடிந்து அடுத்த கட்டடத்துக்கு, வரிசையாகச் செல்லும் சிறுவர்களைப் பாருங்கள்... எறும்புக் கூட்டமே தோற்றுப் போகும்!'' - பூரிப்பும் பெருமிதமுமாகச் சொல்கிறார் சுவாமிஜி.

சக்தி சங்கமம்

வேதபாடசாலையின் முதல்வர் ஏ.எஸ்.சுந்தரமூர்த்தி சிவாச்சார்யரும் அங்கே இருந்தார். உரையாடல் தொடர்ந்தது...

''உங்களின் குழந்தைப் பருவம், இப்போதைய குழந்தைகளின் சூழல்... ஒப்பிட்டுச் சொல்லுங்களேன்!'' - இது வாசகி ஜோதியின் கேள்வி.

''என்னுடைய குழந்தைப் பருவம் என்பது இருக்கட்டும். கடந்த இரண்டு தலைமுறைகளின் குழந்தைப் பருவம் ரொம்பவே ரம்மியமானது.

அப்போது குழந்தைகள் குழந்தைகளாக இருந்தார்கள். ஓடி ஆடி விளையாடினார்கள். இப்போது குழந்தைகள் விளையாடுவதே இல்லை. அப்படி விளையாடுகிறார்கள் என்றால், அது கம்ப்யூட்டரிலும் செல்ஃபோனிலுமாக மட்டுமே இருக்கிறது. நீதிக்கதைகளோ, புராணக் கதைகளோ இன்றைய குழந்தைகளுக்குக் கிடைக்கவில்லை. புத்திசாலிக் குழந்தைகளா இருக்காங்க என்பதில் சந்தேகம் இல்லை. ஆனா, படிப்புங்கறது இன்னிக்கி வணிக நோக்கத்தோடு, காசு சம்பாதிக்கிற விஷயமா பார்க்கப்படுது. இதைப் படிச்சா இவ்ளோ சம்பாதிக்கலாம், அதைப் படிச்சா அந்த நாட்ல வேலை கிடைக்கும்னெல்லாம் கணக்குப் போட்டுப் படிக்கிற நிலைதான் இன்னிக்கு! ஆனா, ஒருகட்டத்துல இதெல்லாம் வெறுத்துப் போய், நல்லதொரு தேடலுக்கு, சிந்தனைக்கு அவங்க மாறிடுவாங்க; சூழலும் நல்லாயிடும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

ஆனா, ஒரு சிலர் வாலிபத்தைக் கடந்து, இந்தப் பொருளாதார நிர்பந்தக் கணக்குகள்ல ஜெயிக்கமுடியாம, ஆன்மிகத்தின் பக்கமும் வராம, மதுவின் பக்கம் போய் விழுவது வேதனையான விஷயம். அதனால, இளைஞர்களை சரியானபடி டியூன் பண்ணி, வாழ்க்கைல சந்தோஷமும் நிம்மதியும், அன்பும் அமைதியும் உணரச் செய்து, சேவை செய்ற ஆர்வத்தை அவங்களுக்குள்ளே வளர்த்தெடுப்பது நம்ம கடமை. அதுக்குதான் குழந்தைகளுக்காகவும் (ஆர்ட் ஆஃப் எக்ஸெல்) இளைஞர்களுக்காகவும் (யூத் எம்பவர்மென்ட் செமினார்) பல பயிற்சிகள் கொடுத்துட்டிருக்கோம். கூடவே தியானம், மூச்சுப் பயிற்சி, யோகான்னெல்லாம் சொல்லிக் கொடுக்கிறோம். நிறைய இளைஞர்கள் சேர்ந்து பஜனைப் பாடல்கள் பாடவும் பயிற்சி தர்றோம். இதனால அவங்களுக்குள்ளே புத்துணர்ச்சி கிடைக்குது.

என் பால்யம் சுவாரஸ்யமானது. குறிப்பாக, என் அம்மாவின் அம்மா, அதாவது என் பாட்டி வீட்டுக்குச் செல்வது என்றால், குஷியாகி விடுவேன். சின்னதாக இருக்கிற ரயில்வே ஸ்டேஷன், அந்த ஸ்டேஷனில் இருக்கிற நிழல் தரும் மரங்கள், பக்கத்தில் ரயில்வே கேட்... ஸ்டேஷனிலிருந்து மாட்டு வண்டியில் பாட்டி வீட்டுக்குச் செல்லலாம் என்பதற் காகவே எனக்குப் பாட்டியையும் பிடிக்கும்; அவர் வசித்த பாபநாசத்தையும் பிடிக்கும். வைக்கோல் போட்டு, அது மேலே பாய் விரிச்சு மெத்துமெத்துன்னு வண்டியில பயணிக்கிறது தனி சுகம்!'' என்று சிரிக்கிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

சக்தி சங்கமம்

''சின்ன வயதில் பாபநாசத்தில் நீங்கள் பார்த்த கோயில்கள் பற்றிச் சொல்லுங்களேன், சுவாமிஜி? பின்னாளில் நீங்கள் அந்தக் கோயில்களுக்கு நிறையத் திருப்பணிகள் செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டோம். அதுபற்றியும் சொல்லுங்கள்!'' - ஆர்வத்துடன் கேட்டார் வாசகி கிருத்திகாதரன்.

''எங்களுக்குத் தஞ்சாவூர்தான் சொந்த ஊர். அதனால, எனக்கு எங்க ஊரைப் பத்தி நினைக்கும்போதெல்லாம் முதல்ல காவிரிதான் மனசுல வரும். அப்பெல்லாம் எப்பவும் காவிரில தண்ணீர் ஓடிக்கிட்டே இருக்கும். அப்படியே அள்ளியெடுத்துக் குடிக்கலாம். ஆனா, இப்ப அப்படிக் குடிக்கறதுக்கு பயமா இருக்கு. தஞ்சாவூரைச் சுத்தியுள்ள ஊர்கள்ல நீண்ட தெருக்கள், அழகா, நேரா இருக்கும். எங்கேயும் துளி குப்பையைப் பார்க்க முடியாது. அத்தனை சுத்தமா இருக்கும்.

சோழ தேசத்துக் கோயில்கள் எல்லாமே பிரமாதமா இருக்கும். பூஜைகள் அவ்வளவு நேர்த்தியா, ஆத்மார்த்தமா நடக்கும். உத்ஸவங் கள்னா, ஊரே கூடி நின்னு நடத்தும். பாக்கவே கண்கொள்ளாத காட்சி அது. குறிப்பா, மார்கழி மாசத்துல, பாபநாசம் பெருமாள் கோயில்லயும் 108 சிவாலயத்துலயும் காலங்கார்த்தால பசங்கள்லாம் போய் ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு, சுடச்சுட பொங்கல் வாங்கிச் சாப்பிட்டதெல்லாம் மறக்கவே முடியாது. கொஞ்சம் வளர்ந்த பிற்பாடு, பக்கத்துல தென்குடித் திட்டை குரு பகவான் ஸ்தலம், திருக்கருகாவூர் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை கோயில்னு போய் தரிசனம் பண்ணிட்டு வருவோம். தமிழ்நாடுன்னு சொல்லும்போதே, இப்பவும் மனசு இதையெல்லாம் நினைச்சுக்கும். அந்த நினைப்பே தித்திப்பா இருக்கும்.

சக்தி சங்கமம்

ஆனா, இன்னிக்கு இயற்கையை ரசிக்கறதும், அதைக் காப்பாத்தணும்கிற உணர்வும் மக்களிடையே குறைஞ்சு போச்சு. அதேபோல, அன்றைய ஜனங்கள் பாரம்பரிய ஆடைகளோடு இருப்பாங்க. தமிழ்நாட்டுப் பெண்கள் விதம்விதமா சேலை உடுத்திக்குவாங்க. பார்க்கவே அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்ப புடவைங்கறதையே எக்ஸிபிஷன்லதான் பார்க்கமுடியும்போல!'' என்று  சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரிக்கிறார் சுவாமிஜி. அவரே தொடர்ந்து...

''வாழை மடல்ல சாப்பாடு, சுண்டைக்காய் வத்தக்குழம்பு, காய்கறிகள், அகத்திக்கீரை, வாழைத் தண்டுக் கூட்டுன்னு சாப்பிட்டது எல்லாம் நினைவுல இருக்கு. இன்னிக்கி பீட்ஸாவும் பிரெட்டும் சாப்பிட ஆரம்பிச்சிட்டோம்'' என்று வேதனை கலந்த புன்னகையுடன் சொன்னார்.  

தொடர்ந்து...

? 'எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று சிறுவயதில் விரும்பினீர்கள்?’

? இலங்கைக்குச் சென்று வந்த அனுபவம், பாகிஸ்தானில் 'வாழும் கலை’ பயிற்சி கொடுத்ததுன்னு அதைப் பத்திச் சொல்லுங்களேன்..?

சக்தி சங்கமம்

- இப்படி, வாசகர்கள் தொடுத்த பல்வேறு கேள்விகளுக்கும் அன்பு, அக்கறை, ஆன்மிக சிந்தனை கலந்து ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அளித்த சுவாரஸ்ய பதில்கள் அடுத்த இதழில்!

படங்கள்: க.தனசேகரன்

அடுத்த சங்கமம்...

வாசகர்களே! அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களுடன் கலந்துரையாடப் போகிறார்... இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா. ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 29.7.14-க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள். சிறந்த கேள்விகளை எழுதியனுப்பிய வாசகர்களில் சிலர், 'சக்தி சங்கமம்’ கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.