மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சென்னையில்... ஆன்மிக திருவிழா! எஸ்.கண்ணன்கோபாலன்

திருவிழா என்றாலே கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள்தான் நம் நினைவில் சட்டெனத் தோன்றும். ஆனால், ஆன்மிகத் திருவிழா ஒன்று சென்னையில் நடக்க இருப்பதாக ஒரு செய்தி நம் காதுகளில் விழுந்தது. அது என்ன ஆன்மிகத் திருவிழா... ஏதேனும் ஒரு கோயிலில் நடைபெறும் விழாவாக இருக்குமோ என்று நினைத்தால், இல்லை. சுற்றுலாப் பொருட்காட்சி போன்று, புத்தகக் காட்சி போன்று இந்த ஆன்மிகத் திருவிழாவும் சென்னையில் வருடா வருடம் நடைபெற்று வருகிறது. என்ன நோக்கத்துக்காக, எந்த அமைப்பின் சார்பில் இந்தத் திருவிழா நடத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, சென்னை திருவான்மியூரில் விழா நடைபெறும் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக மைதானத்துக்குச் சென்றோம்.

உள்ளே செல்லும்போதே, அழகழகான கோயில் வடிவங்கள் நம் கண்களுக்குத் தெரிந்தன. அருகில் சென்று பார்த்தபோதுதான் கோயில் வடிவத்தில் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ரதங்கள் அவை என்பது நமக்குத் தெரிய வந்தது. ஆந்திர மாநில அறநிலையத் துறை சார்பில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்கள், அந்தந்தக் கோயிலுக்கான தெய்வ விக்கிரகங்கள் அமைக்கப்பெற்ற ஹிந்து தர்ம பிரசார ரதங்கள்தான் அவை.

திருப்பதி திருமலை பெருமாள், காளஹஸ்தி காளத்திநாதர், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர், விஜயவாடா கனகதுர்கை, யாதகிரிகுட்டா லக்ஷ்மி நரசிம்மர், காணிப்பாக்கம் கணபதி போன்ற திருக்கோயில் ரதங்கள் இந்த ஆன்மிகத் திருவிழாவுக்காக வருகை தந்திருந்தன. இவற்றோடு தமிழ்நாட்டில் இருந்து சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ரதமும் வந்திருந்தது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஒவ்வொரு கோயிலாக தரிசித்தபடி வந்தபோது தான், அவை வெறும் காட்சிக்காக மட்டும் வரவில்லை என்பதுடன், ஒவ்வொன்றிலும் அந்தந்தக் கோயில் முறைகளின்படி பூஜைகள் நடைபெறுவதும் நமக்குத் தெரியவந்தது. வழக்கமான பூஜைகளைத் தவிர்த்து ஸ்ரீகாளஹஸ்தி ரதத்தில் ராகு கால பூஜையும், ஸ்ரீகனக துர்கை ரதத்தில் சண்டி ஹோமமும், ஸ்ரீசைலநாதர் ரதத்தில் திருக்கல்யாணமும் என சில விசேஷ வைபவங்களும் நடைபெற்றதாகத் தெரிவித்த ஓர் அன்பர், ஆன்மிகத் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீ ஸ்ரீநிவாச கல்யாண உற்ஸவம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொரு கோயிலின் வடிவமும் தத்ரூபமாக வடிவமைக்கப் பட்டிருந்ததால், அந்தந்தத் திருக்கோயில்களை நேரிலேயே சென்று தரிசித்தது போன்ற மனநிறைவு ஏற்பட்டது.

திருக்கோயில்களின் திவ்விய தரிசனத்தை முடித்துக்கொண்டு அரங்கத்துக்குள் செல்கிறோம். ஓர் இடத்தில் ஒரே ஆரவாரமாக இருப்பதைக் கண்டு, அங்கே சென்றோம். பள்ளி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சிப் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. முருகன், கிருஷ்ணன், பாரதியார் போன்ற தோற்றங்களிலும், தோகைமயில், புள்ளிமான் எனப் பலப்பல மாறுவேடங்களிலும் மாணவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இன்னும் சில மாணவர்கள் காவடியாட்டம் ஆடினர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் அவர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர். அதற்குச் சற்றுத் தொலைவில் பம்பரம் விடும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கண்டோம். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மதியம் பரிசுகள் வழங்க இருப்பதாக அவ்வப்போது ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் வரிசையாக அமைக்கப் பட்டிருந்த ஆன்மிக மற்றும் சேவை நிறுவனங்களின் ஸ்டால்களைப் பார்வையிட்டபடி வந்தபோது, 'சனாதன விருக்ஷ தரிசனம்’ செல்லும் வழி என்று எழுதப்பட்டிருந்த அறிவிப்புப் பலகை நம் பார்வையில் பட்டது. அங்கே சென்று பார்த்தபோது, ஓர் ஆல விருக்ஷம் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். அதன் கிளைகளில் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதுமட்டுமல்ல, அது பேசும் மரமாகவும் இருந்ததுதான் ஆச்சர்யம்! அப்படி அந்த சனாதன விருக்ஷம் என்னதான் பேசியது? அதுபற்றிப் பிறகு பார்ப்போமே!

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சனாதன விருக்ஷத்தைப் பார்த்து விட்டு வரும்போது, ஓரிடத்தில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஒரு லாரியில் இருந்து மரக் கன்றுகள் இறக்கப்பட்டுக்கொண்டி ருப்பதைக் கண்டோம். அங்கே இருந்த, ஆன்மிகத் திருவிழாவுக்கான செய்தித் தொடர்பாளர் நம்பி நாராயணனிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அந்த மரக் கன்றுகள் பற்றி விவரம் கேட்டோம். ஆன்மிகத் திருவிழாவைக் காண வரும் அன்பர்களுக்கு மரங்கள் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, மாநகராட்சி சார்பில் இலவசமாக வழங்கப்படவுள்ள மரக்கன்றுகள்தான் அவை என்று தெரிவித்தவர், ஆன்மிகத் திருவிழாவை நடத்தும் 'ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை’யின் அறங்காவலர்களில் ஒருவரும், பிரபல கட்டுரையாளருமான எஸ்.குருமூர்த்தியிடம் நம்மை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

அவரிடம் ஆன்மிகத் திருவிழா நடத்துவதற்கான நோக்கம் பற்றிக் கேட்டோம்.

''நம்முடைய இந்துச் சமயத்தின் அடிப்படையே உயிர்களிடத்து அன்பு செலுத்துவதும், சேவை செய்வதும்தான். நம் நாட்டில் காலம்காலமாக இந்தச் சேவையானது குடும்ப அளவிலும், தனி மனித அளவிலுமே இருந்து வந்தது. ஆனால் 400-500 வருடங்களுக்கு முன்பே வெளிநாடுகளில் தோன்றிய அமைப்பு ரீதியிலான சேவை நிறுவனங்கள் போன்று நம் நாட்டில் எதுவும் இல்லை. இதன் காரணமாக, இந்துச் சமயம் என்றாலே அது கடவுளுக்கும் ஆன்மிகத்துக்குமானது மட்டும்தான் என்பதாகவும், மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் சேவை செய்வதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதாகவும் ஒரு தவறான கருத்து மேலைநாட்டைச் சேர்ந்தவர்களால் ஒரு குற்றச்சாட்டாகவே சொல்லப்பட்டு வந்தது.

பல்வேறு மேலைநாடுகளுக்கு விஜயம் செய்து நம்முடைய இந்துச் சமயத்தின் மகிமைகளை எடுத்துச் சொல்லிய ஸ்வாமி விவேகானந்தர் காலத்தில் இருந்துதான், நம் நாட்டிலும் அத்தகைய சேவை நிறுவனங்கள் தோன்ற ஆரம்பித்தன. ஆனாலும், அத்தகைய நிறுவனங்கள் பற்றிப் பெரிய அளவில் மக்களுக்குத் தெரியவரவில்லை.

எனவே, அத்தகைய சேவை நிறுவனங்களைப் பற்றிப் பலரும் அறிந்துகொள்ளவும், தொன்மையான நம் இந்துச் சமயத்தின் தர்மங்களைப் பற்றியும், அவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றியும் மக்களிடையே விழிப்பு உணர்வை ஏற்படுத்த என்ன செய்யலாம் என்று சிந்தித்தபோதுதான், ஓர் அமைப்பைத் தொடங்கி அதன்மூலம் ஏதேனும் செய்யலாமே என்ற எண்ணம் தோன்றியது. உடனே, 'ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை’ என்ற அமைப்பைத் தொடங்கி, கடந்த 6 வருடங்களாக இந்த ஆன்மிகத் திருவிழாவை நடத்தி வருகிறோம்.ஒவ்வொரு வருடமும் மக்கள் தரும் ஆதரவைக் காணும்போது ஒரு மனநிறைவு ஏற்படுகிறது!'' என்றார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!
ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

''இப்படி ஓர் ஆன்மிகத் திருவிழாவை நடத்துவதற்குச் செலவு அதிகம் ஆகுமே?'' என்று கேட்டபோது...

''உண்மைதான். 2009-ம் வருடம் இந்தக் கண்காட்சியைத் தொடங்கியபோது 30 சேவை நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கு கொண்டன. இந்த வருடம் 200-க்கும் மேற்பட்ட சேவை நிறுவனங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. சேவை நிறுவனங்கள் ஸ்டால் போட்டுக்கொள்வதற்கான இடம், அவர்களுக்கான உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இதற்கெல்லாம் முக்கிய பிரமுகர்கள் பலர் புரவலர்களாக இருந்து உதவி செய்வதுடன், பல வர்த்தக நிறுவனங்களும் இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்கின்றன'' என்றார்.

அப்போது, ஆன்மிகத் திருவிழாவைப் பார்வையிட சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்வாமி கௌதமானந்த மஹராஜ் வந்துகொண்டிருப்பதாகத் தகவல் வரவே, குருமூர்த்தி அவரை வரவேற்கச் சென்றார்.

நாம் மீண்டும் அரங்குகளைச் சுற்றிப் பார்த்தோம். இதுவரை நமக்குத் தெரியாத பல்வேறு ஆன்மிக சேவை அமைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. அப்படி ஒவ்வோர் அமைப்பாகப் பார்வையிட்டபடி வந்துகொண்டிருந்தபோது, கருத்தரங்க மேடையில் ஒரு பெண்மணி, தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அவர் யார், என்ன என்று அப்போது அங்கே இருந்த நம்பி நாராயணனிடம் விசாரித்தோம். ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைய அறக்கட்டளையின் மானேஜிங் டிரஸ்டியுமான ஆர்.ராஜலக்ஷ்மிதான் அவர் என்று தெரிவித்தவர், பள்ளி மாணவர்களிடையிலான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது அவர்தான் என்றும் குறிப்பிட்டார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

இந்த ஆன்மிகத் திருவிழாவின் சிறப்பு அம்சங்கள் குறித்து ராஜலக்ஷ்மியிடம் கேட்டோம்.

''சனாதன தர்மமான இந்து சமயம் வலியுறுத்தும் அடிப்படை தர்மங்கள் என்று சில தர்மங்கள் இருக்கின்றன. பெற்றோரை வணங்குதல், ஆசிரியர்களைப் போற்றுதல், இயற்கையை நேசித்தல், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல், பெண்களை சக்தியின் அம்சமாக நினைத்துப் போற்றுதல், நாட்டுப்பற்று போன்றவற்றை மக்களிடம் வலியுறுத்தும் வகையிலும், அவர்கள் அதைக் கடைப்பிடிக்கும் வகையிலும் இந்த ஆன்மிகத் திருவிழாவின் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆசிரியர்களை வணங்கும் ஆசார்ய வந்தனம், பெண்களை சக்தியின் அம்சமாகப் போற்றி வழிபடும் கன்யா வந்தனம், இயற்கையை நேசித்துப் போற்றும் விருக்ஷ வந்தனம், நாட்டுப்பற்றை வலியுறுத்தும் பாரத மாதா வந்தனம், தேசத்தைக் காப்பதற்காக உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பரம்வீர் வந்தனம் என்று ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அத்தனை நிகழ்ச்சிகளிலும் பல்வேறு பள்ளிகளில்  இருந்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டு மிகச் சிறப்பாகவும், நேர்த்தியாகவும், பலரும் பாராட்டும்படியாகவும் செய்திருந்தனர். பள்ளி மாணவர்களின் இந்த உற்சாகமான பங்களிப்பைப் பார்த்தபோது, இன்றைய மாணவர்கள் நம் தேசத்தின் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உறுதியாகிவிட்டது'' என்று பெருமிதத்துடன் கூறினார்.

அவருடைய நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த நாம், ஓரிடத்தில் மக்கள் கூட்டமாகக் கூடியிருப்பதைக் கண்டு, அங்கே சென்று பார்த்தோம். மரக் கன்றுகளைப் பெற்றுக்கொள்வதில் போட்டி போட்டுக்கொண்டிருந்தார்கள் ஜனங்கள். ஆன்மிகத் திருவிழாவின் ஒரு நிகழ்ச்சியாக நடைபெற்ற விருக்ஷ வந்தனம் மக்களிடையே மரங்களைப் போற்றி வளர்ப்பது பற்றிய விழிப்பு உணர்வை பலமாக ஏற்படுத்தி இருப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீநிவாச கல்யாண உற்ஸவத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. மைதானத்தின் வாயிலில் இருந்து கல்யாண உற்ஸவம் நடைபெறும் மேடை வரை வாழை மரங்களும், மாவிலைத் தோரணங்களும், மலர்ச் சரங்களும் கொண்டு அலங்கரிக்கப்பட்டன.

மாலை 4 மணிக்கு, இரண்டு பக்கங்களிலும் ஸ்ரீநிவாச திருக்கல்யாணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் வரையப் பெற்ற அழகான பேருந்து வந்து சேர்ந்தது. கல்யாண உற்ஸவத்துக்காக திருப்பதி திருமலையில் இருந்து கல்யாண உற்ஸவ மூர்த்தங்களை எடுத்து வந்த பேருந்துதான் அது. கூடவே, கல்யாண உற்ஸவத்தை நடத்தி வைப்பதற்காக பட்டாச்சாரியார்களும் வந்திருந்தார்கள். பேருந்தில் இருந்து உற்ஸவ மூர்த்தங்களை வெளியே எடுப்பார்கள், தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்று மக்கள் கூட்டம்  பேருந்தைச் சூழ்ந்து நிற்க, பெருமாளை வெளியில் எடுப்பதாகத் தெரியவில்லை. 6 மணிக்கு மேல்தான் பெருமாளை பேருந்தில் இருந்து எடுத்து, கல்யாண மேடையில் எழுந்தருளச் செய்வார்கள் என்று சொல்லப்பட்டதும், பேருந்தைச் சூழ்ந்திருந்த மக்கள் விரைந்து சென்று மேடைக்கு முன்பாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் சென்று அமர்ந்துகொண்டனர்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மாலை 6-30 மணி. மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்த மணமேடையில் பெருமாளும் தாயாரும் எழுந்தருள, ஸ்ரீஅன்னமாச்சார்ய ஸ்வாமிகளின் கீர்த்தனையுடன் ஸ்ரீநிவாச கல்யாண உற்ஸவம் தொடங்கிவிட்டது. அந்தக் கோலாகலமான தெய்வத் திருமணத்தை தரிசிக்க 5000-த்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கே திரண்டிருந்தனர். உட்கார இருக்கை கிடைக்காதவர்கள்கூட, கால் வலியைப் பொருட்படுத்தாமல், ஸ்ரீநிவாச கல்யாணத்தை தரிசித்துவிட்டே செல்லவேண்டும் என்ற வைராக்கியத்துடன் நின்றிருந்ததைப் பார்த்தபோது, அவர்களின் ஆழ்ந்த பக்தியை நம்மால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

ஸ்ரீநிவாச கல்யாணம் நிறைவு பெற்றபோது மணி 9-க்கு மேல் ஆகிவிட்டது. பின்னர், பிரசாதம் வழங்கப்பட்டதுடன் ஸ்ரீநிவாச கல்யாணம் மட்டுமல்ல, தொடர்ந்து ஏழு தினங்களாக நடைபெற்று வந்த அற்புதமான ஓர் ஆன்மிகத் திருவிழாவும் சேர்ந்தே நிறைவு பெற்றது.

ஆன்மிகத் திருவிழாவில் நமக்குக் கிடைத்த அனுபவங்கள்தான் எத்தனை எத்தனை?! அந்த அனுபவங்கள் நமக்குத் தந்த படிப்பினைகள்தான் எத்தனை எத்தனை?!

ஒரு முழுமையான மனநிறைவோடு, ஆன்மிகத் திருவிழா நடைபெற்ற மைதானத்தில் இருந்து புறப்பட்ட நம் காதுகளில், கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பேசும் சனாதன தர்ம விருக்ஷத்தின் அதி அற்புதமான மந்திர வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. வேதங்களுக்கு நிகரான அந்த வார்த்தைகளின் சாராம்சத்தை நீங்களும் கேளுங்களேன்...

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

''நான்தான் சனாதன தர்ம விருக்ஷம். மிகத் தொன்மையான வேத காலத்தில் தோன்றிய என்னில் இருந்துதான் ஆன்மிக ஞானம் உலகெங்கும் பரவியது. இயற்கையைப் போற்றி வணங்கவும், சகல உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவும், பிறந்த மண்ணை நேசிக்கவுமான நெறிமுறைகள் என்னில் இருந்துதான் தோன்றின.காலம்காலமாகத் தழைத்துச் செழித்து வளர்ந்து வரும் நான்தான் என்றைக்கும் நிரந்தரமானவன். இதோ, இந்தத் திருவிழாவில் நீங்கள் காணும் ஆன்மிக மற்றும் சேவை நிறுவனங்கள் அத்தனையும் என்னில் இருந்து தோன்றியவையே! அத்தகைய சேவை நிறுவனங்கள்தான் என் கிளைகளாகவும் விழுதுகளாகவும் இருந்து, இந்த உலக மக்களைப் பயனுற வாழும்படியாகச் செய்கின்றன...''

சனாதன தர்ம விருக்ஷத்தின் சத்திய சாசுவதமான வார்த்தைகள் நம்முடைய இதயத்திலும் பதிந்திருக்க, தர்மம் தழைத்துச் செழிக்கும் இந்தப் புண்ணிய பூமியில் பிறந்ததனால் பெருமிதம் கொண்ட நம் மனத்தில், 'இத்தகைய ஆன்மிகத் திருவிழாக்கள் அடிக்கடி நாடெங்கிலும் நடக்கக்கூடாதா?’ என்ற ஆதங்கம் எழ... அங்கிருந்து கிளம்ப மனமில்லாமல் கிளம்பினோம்.

படங்கள்: தே.தீக்ஷித்  

  கு.கார்முகில்வண்ணன்