மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

வாலி வதம் - இழுக்கா... பெருமையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? சமீபத்தில் பட்டிமன்றம் ஒன்றில், 'வாலியை மறைந்திருந்து தாக்கி அழித்தார் ராமர். என்ன சமாதானம் சொன்னாலும், அது அவருக்கு  இழுக்கு, இழுக்குதான்!’ என்று விளக்கம் அளித்தார் ஒருவர். ஆனால், 'காரணம் இன்றிக் காரியம் இல்லை; ஸ்ரீராமனின் அந்தச் செயலுக்குப் பின்னாலும் நியாயமான ஒரு காரணம் இருக்கும். எனவே, அந்தச் செயல் ஸ்ரீராமனுக்கு இழுக்கல்ல!’ என்பது என்னுடைய நிலைப்பாடு.

இதுகுறித்து தாங்கள் விளக்கினால், பயனுள்ளதாக இருக்கும்.

- எஸ்.சண்முகசுந்தரம், கும்பகோணம்

முதல் கோணம்

வாலியுடன் நேருக்குநேர் எவர் மோதினாலும், அவருடைய மொத்த பலத்தில் சரிபாதி வாலியிடம் இணைந்துவிடும். அப்போது எதிரியின் பலம் பாதியாகக் குறைந்துவிட, வாலியின் பலம் ஒன்றரை மடங்காகப் பெருகும். இந்த நிலையில் சம பலம் இல்லாததால், வாலியை எதிர்ப்பவர்கள் தோல்வியைத் தழுவ நேரிடும்.

ஸ்ரீராமன் எதிரே தோன்றினால், அவருடைய பலத்தில் பாதி, வாலியை சேர்ந்துவிடும். அது மட்டுமின்றி, ஸ்ரீராமனைப் பார்த்ததும் வாலி சரணடைந்துவிடுவான். சரணடைந்தவனை அழிக்கக்கூடாது என்கிறது வேதம் (தஸ்தாதபிவத்யம் ப்ரபன்னம் நப்ரதிப்ரயச்சந்தி). அப்போது, வாக்குறுதியை நிறைவேற்ற இயலாத நிலை உருவாகும்; அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றத்தில் இருந்து சுக்ரீவனைக் காப்பாற்றவும் இயலாது. எனவே, வேறு வழியின்றி மறைந்து தாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, இது ஸ்ரீராமனுக்கு இழுக்கல்ல.

? ஆக, வாக்குறுதியைக் காப்பதற்காக எப்படிப்பட்ட இழிநிலைக்கும் ஆளாகலாம்; அறத்தைத் துறந்து தன்னிச்சையாகச் செயல்படலாம் என்கிறீர்களா?

வாலியை எவர் எதிர்த்தாலும் மறைந்திருந்துதான் எதிர்க்க இயலும். தன்னைச் சீண்டிய ராவணனை, அவனோடு பொருத நேரம் இல்லாததால், வாலி அவனைத் தன் வாலில் கட்டி வைத்துக்கொண்டு, அன்றாட அலுவல்களை முடித்தபின் விடுவித்ததாகப் புராணத் தகவல் உண்டு. ராவணனுடன் போரிட்டுக் கொண்டிருந்தால் நீராடல், கடவுள் வழிபாடு போன்ற காலைக் கடன்கள் தடைப்பட்டுப் போகுமே என்ற எண்ணத்தில், ராவணனைத் தன்னுடைய வாலில் கட்டி அடக்கிவைத்தான் வாலி.

தாடகை, கரன், தூஷணன், ஸுபாகு, மாரீசன், கபந்தன் போன்றவர்களை ராமர் அழித்து, அறத்தைக் காப்பாற்றியிருக்கிறார். குறிக்கோள் ராவணனை அழிப்பதாக இருந்தாலும், மற்றவர்களையும் அழித்தால் மட்டுமே அறம் தலைநிமிர்ந்து நிற்க இயலும். வாலியும் அழியவேண்டியவன். சுக்ரீவனிடம் மறைமுக அதர்மத்தை அவிழ்த்துவிட்டுவிட்டு, தனது வீர சௌர்ய பராக்கிரமத்தை வைத்து, தன்னை நல்லவனாகப் பிரகடனப்படுத்திக்கொண்டிருந்தவன் வாலி. உயிர் பிரியுமுன், தன்னை வதம் பண்ணக் காரணம் என்ன எனும் கேள்வியை ஸ்ரீராமனின் முன் வைத்தான் அவன். அதிலிருந்து அவனது இரு முகங்கள் பளிச்சிட்டன.

'எங்கு அதர்மம் தலைதூக்கி, தர்மம் வாட்டமுற்று இருக்கும் சூழல் தென்படுகிறதோ, அங்கு நான் தோன்றுவேன்!’ என்ற ஸ்ரீமந் நாராயணனின் வாக்குறுதி காப்பாற்றப்பட வேண்டுமானால், தன்னிச்சையாகச் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவரது செயல்பாட்டுக்கு, நாம் இயற்றிய சட்டதிட்டங்களை அளவுகோலாக வைத்துத் தீர்வு சொல்ல முற்படக்கூடாது.

கேள்வி - பதில்

? சட்ட திட்டங்களிலும் அவதாரத்துக்கு வேறு, மனிதனுக்கு வேறு என்று பாரபட்சம் உண்டா?

ன்றைக்கும் அழியாத ஸனாதனத்தின் கண்ணோட்டத்தில் செயல்படுகிறார் அவர். நாமோ, சூழலுக்கு ஏற்ப சட்டதிட்டங்களை மாற்றி அமைத்துக்கொண்டு செயல்படுகிறோம். 'ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற நமது சட்டம் இன்று வலுவிழந்துவிட்டது. தனி மனிதனின் சுயநலத்துக்கு ஏற்ப சட்டம் மாறிக்கொண்டு இருக்கும். ஆனால், அவரது சட்டம் பொதுநல அக்கறையில் மாறாமல் இருக்கும். ஆகவே, அவரது செயல்பாடுகள், நம்மைப் போன்ற சிறிய சிந்தனை வட்டத்தில் இருப்பவர்களின் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை.

ராமாயணத்தின் கதாநாயகன் ராமன், மகாபாரதம் மற்றும் பாகவதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன். ராமன் அறத்தின் செயல்பாட்டை விளக்குபவன். கிருஷ்ணன் அறத்தின் நுணுக்கங்களை விளக்குபவன். ராமன் கதாநாயகனாக இருப்பதால், ராமாயணத்துக்குப் பெருமை. மற்ற இரண்டுக்கும் கிருஷ்ணன் கதாநாயகனாக இருப்பதால் பெருமை (ஹரி:ஸர்வத்ரசீயதே). கதையின் சிறப்பான திருப்பங்களுக்கு ராமனும் கிருஷ்ணனும் காரணமாக இருப்பதைக் கவனிக்கவேண்டும். அப்பழுக்கு இல்லாதவனுக்கே கதாநாயகனாக இருக்கும் தகுதியுண்டு. 'வாலி வதம்’ ராமனுக்கு இழுக்கு என்ற பட்டிமன்றம் அறியாமையின் எல்லை. ராமாயணம், பாரதம், பாகவதம் ஆகியவை நாவல்களோ, வெறும் சரித்திரங்களோ அல்ல; அவை சாஸ்திரம் என்பதை உணர வேண்டும்.

இரண்டாவது கோணம்

ங்களுடைய விளக்கம் ஏற்புடையதாக இல்லை. ராவணனை மனிதனால் மட்டுமே அழிக்க இயலும்; அப்படியொரு வரத்தை பிரம்மனிடம் அவன் கேட்டுப் பெற்றிருக்கிறான் என்கிறது புராணம். எதிரியை அழிப்பதற்கு ஏற்ப ஒரு முன்னெச்சரிக்கையாகவே, கடவுள் எனும் தகுதியை விடுத்து, மனித வடிவை ஏற்றார் ஸ்ரீமந் நாராயணன். மனிதனாக இருக்கும்போது மனிதனுக்கான அறம் அவரில் தென்பட வேண்டும் அல்லவா?!

'நான் மனிதன்; தசரதனின் புதல்வன்’ என்று ஸ்ரீராமர் தனது நிலையை விளக்கியிருக்கிறார் (ஆன்மானம் மானுஷ்யம் மன்யே ராமம் தசரதாத்மஜம்). மனிதனின் நடைமுறை அவரில் தென்பட்டால் மட்டுமே, அந்த அவதாரத்துக்குச் சிறப்பு உண்டு.

ஸ்ரீராமன் எந்த வகையில் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டார் என்பதை விளக்க முடியுமா?

கூர்மாவதாரத்தில் மந்தர பர்வதத்தைத் தாங்கி நிற்கும் தகுதி இருந்ததைக் கவனிக்க வேண்டும். ஹிரண்யகசிபு வதத்தில் நரஹரி ரூபம் பூண்டதும் வதத்துக்கு உகந்த வகையில் இருந்தது. சிங்கத்தின் செயல்பாடு சிங்கப்பெருமாளிடம் தென்பட்டது. பரசுராமன், 'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்ற மனித இயல்பை வைத்து, தாயின் தலையைக் கொய்தார். பலியை அடக்க வேதம் ஓதும் சிறுவனாகத் தோன்றினார். அங்கும் இனத்தின் இயல்பில் செயல்பட்டார். யாதவ குலத்தில் தோன்றிய நாராயணன் குலத்துக்கு ஏற்பட்ட சாபம் காரணமாக வேடனின் அம்புக்கு தன்னை இலக்காக்கிக் கொண்டு, தனது அவதாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தான்.

போரில் லட்சுமணன் சாய்ந்த போது, செயலற்று நின்றார் ஸ்ரீராமர். பக்தர்களின் சமயோசிதமான செயல்பாட்டால், ஒளஷத பர்வதத்தின் வரவால் பலம் பெற்று எழுந்தான் லட்சுமணன். இந்த இடத்திலும் ராமனின் மனித இயல்பு பளிச்சிட்டது. சீதையைப் பறிகொடுத்த ராமன் பாமரனைப் போல் புலம்பினார். ராவணனை வதம் செய்யத் திணறிய தருணத்திலும் விபீஷணனின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. முனிவரின் பரிந்துரையில், தன்னுடைய குலதெய்வ ஆராதனையில் இறங்கினார் ராமர். ஆதித்ய ஹ்ருதயம் அவருக்குத் தெம்பளித்தது. இங்கெல்லாம் அவதாரத்துக்கு உகந்த வகையில் அறம் நடைமுறைப்படுத்தப்பட்டது.  

நிராயுதபாணியைத் தாக்கக்கூடாது; சம பலம் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பொருத வேண்டும்; மறைந்திருந்து தாக்கக் கூடாது; நேருக்கு நேர் பொருத வேண்டும்; யாரோடு பொருதுகிறோம் என்பது இருவருக்கும் தெரிந்திருக்க வேண்டும். பாரதப் போரில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும், துரியோதனனுக்கும் பீமனுக்கும் இடையே போர் நிகழ்ந்தது. சம பலம் கொண்டவர்கள் போர் புரிந்தார்கள். போரில் நிராயுதபாணிகள் தாக்கப்படுவதில்லை. யானைப் படை, குதிரைப் படை, தேர் மற்றும் காலாட்படையினர், எதிர் தரப்பில் இருக்கும் அந்தந்தப் படையினருடன் போரிடுவார்கள்.

ஸ்ரீராமர் அரச குடும்பத்தில் தோன்றியவர்; மனிதர். அவரது அறம் நேருக்கு நேர் போரிடுவதுதான். அதில் சுணக்கம் ஏற்பட்டது பெருமை அல்ல.

கேள்வி - பதில்

மூன்றாவது கோணம்

ங்களுடைய கருத்து தவறானது. உள்நோக்கத்துடன் அளிக்கப்படும் தகவல்கள், சில தருணங்களில் ஏற்கும்படியாக தோற்றம் அளிக்கும்; உரைத்துப் பார்க்கும்போதுதான் உண்மை புலனாகும்.

நம்மால் இயலாத காரியங்களுக்குக் கடவுளைச் சரணடைவோம். எதிரியின் அட்டகாசம் எல்லை மீறும் தருணங்களிலும், வாழ்வே கேள்விக்குறியாகும்போதும் கடவுளை அணுகுவோம். ஏனெனில், நல்லவர்களைக் காப்பதும், தீயவர்களை அடக்குவதும் அவரது பணி என்பதை அவர் வாயிலாகவே அறிந்திருக்கிறோம் (பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்...). அவரிடம் வேண்டிக் கொள்பவர்களுக்கு அவருடைய அந்த உறுதிமொழியில் அசையாத நம்பிக்கை இருக்கும். அந்த உறுதிமொழியை மெய்ப்பிக்க, அவர் ஏற்கும் நடைமுறைகள் அறத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும். ஏனெனில், அவர் அறத்தின் வடிவம்.

? இருக்கலாம்! அதற்காக சாமானியமானவர்களை தெய்வ பலத்தால் வெல்வது பெருமை ஆகுமா?

சீதையைக் கவர்ந்து வருவதற்கு உதவும்படி மாரீசனை வேண்டினான் ராவணன். அப்போது, 'ராமன் அறத்தின் வடிவம். அவரோடு பொருத இயலாது. ஆகவே, உனக்கு உதவ இயலாது!’ என்றான் மாரீசன் (ராமோ விக்ரஹவான் தர்ம:). பிறகு, அரசாணை இட்டு நிர்பந்தித்து, அவனைப் பணியவைத்தான் ராவணன். தர்மத்தின் நுணுக்கங்கள் நம்மைப் போன்றவர்களுக்குப் புலப்படாது (கர்மஸ்யதத்வம் நிஹிதம் குஹாயாம்).

ஆலகால விஷம் தோன்றியபோது, அழைக்காமலேயே வந்து காப்பாற்றினார் ஈசன். அழைத்ததும் ஓடி வந்து, சிக்கலில் தவித்த திரௌபதியைக் காப்பாற்றினார் பரந்தாமன். அக்ஷய பாத்திரத்தைப் புதுப்பித்து விருந்தோம்பலை நிறைவேற்ற விழைந்தார் கண்ணன்.  கர்ணனின் அம்பில் இருந்து அர்ஜுனனைக் காப்பாற்றினார். அச்வத்தாமனை வதம் செய்ய அவசரத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். ஸ்யமந்தக மணியை மீட்பதற்காகத் தனது தரத்தைத் தாழ்த்திக்கொண்டு, வீண்பழியை சுமந்தபடி ஒத்துழைத்தார்.

கேள்வி - பதில்

திரைமறைவில் ஈனச் செயல்களில் ஈடுபடுபவர்களை அழிக்க நடைமுறைப்படுத்தும் விஷயங்களில் அறம் இணைந்திருக்கும். முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும். மாயாவிகளுடன் மாயாவியாகச் சென்று பொருத வேண்டும், துஷ்டனை துஷ்டனாக மாறிப் பொருத வேண்டும் என்பார் சாணக்கியன் (சடே சாட்யம் ஸமாசரேத்). அவதாரங்கள் அந்தந்த இனத்தில் தென்பட்டாலும், கடவுளின் தனித்தன்மையே வெற்றிக்குக் கைகொடுக்கும். மனித பலம் தோல்வியுற்றதால், தெய்வ பலத்தை எதிர்பார்க்கிறோம். மனிதனாகத் தோன்றினாலும், அதில் பரம்பொருளின் இயல்பு இணைந்தால் மட்டுமே வெற்றிபெற இயலும். ஆகையால், மனித அறத்துக்குப் புறம்பான சில செயல்கள் அவதாரத்தில் தென்படுவது, அதற்குப் பெருமையே தவிர, இழுக்கு அல்ல!

'பரம்பொருளின் இயல்பு’ என்று எதைச் சொல்ல வருகிறீர்கள்?

சீதையைத் துன்புறுத்திய காகாசூரனை, ஒரு புல்லை வைத்துத் தாக்கி அவனுடைய கண்ணைப் பறித்தார் ராமன். இது மனித இயல்பு அல்ல! 'ஸ்ரீராம நாமமே கடலைத் தாண்டும் வலுவை அளித்தது’ என்பார் அனுமன். போரில் நிராயுதபாணியாகத் தோன்றிய ராவணனை மன்னிக்கத் துணிந்தார் ஸ்ரீராமன். 'சீதையை ஒப்படைத்துவிடு; மன்னித்து விடுகிறேன்!’ என்றார். ராவணனோ ஸ்ரீராம பாணத்துக்கு இரையாக விரும்பினான். விட்டில் பூச்சி நெருப்பில் இணைந்து மாண்டது. தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், எதிரியே தன்னிடம் வந்து உயிர்துறக்கத் துணியும்படிச் செய்தார். இங்கே, கடவுளின் தனித்திறமை பளிச்சிட்டது.

அவதாரங்களில் இன மாற்றம் இருந்தாலும், கடவுளின் தனி அம்சமே வெற்றிக்குக் காரணமாக இருந்துள்ளது. சிறையில் தோன்றிய கண்ணன், தனது விஸ்வரூபத்தைக் காட்டி, தன்னை இடம் மாற்றும்படி பெற்றோரைப் பணித்தார். தாடகை வதம், சகடாசுர வதம், காளியமர்த்தனம் ஆகியன தெய்விக பலத்தில் வெற்றி பெற்றவையே!

பலபேருடைய ஒத்துழைப்பில் சிரமப்பட்டு ராவணனை வென்று சீதையின் துயரைத் துடைத்தவர், பிறகு கர்ப்பிணியான அவளை காட்டில் விட்டுவிட்டு வரும்படி லட்சுமணனுக்கு உத்தரவிட்ட செயல்பாடு மனித அறத்துக்குப் புறம்பானது என்ற விளக்கமும் நமது அறியாமையையே பறைசாற்றும். அவதாரத்தின் குறிக்கோளை நிறைவேற்றும் நடைமுறைகளை, நமது சிந்தனையின் அளவுகோலால் விளக்குவது முறையல்ல. அத்தனை கோபியரும் கோபாலனுடன் இணைய ஏங்கும்போது, ருக்மிணியை திருட்டுத்தனமாகக் கவர்ந்து அவன் மணம் செய்துகொண்டதை உள்நோக்கத்துடன் விமர்சிப்பது தவறாகும்.

சிவ தனுசை முறித்து மணம் புரிந்த வீரன், மறைந்திருந்து தாக்கியது தவறு என்பது அறிவீனம். கொசுவை அழிக்கக் கோடரி வேண்டாம். வாலியை அழிக்க போர் கட்டாயம் இல்லை. சுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையே மீண்டும் போரைத் தொடர வைத்து, வாலி வதத்துக்கு ஒத்துழைத்தார் ஸ்ரீராமன். நேரடி போரில் அவர் இறங்கவில்லை. போரின் நடைமுறைகள் அவரை பாதிக்காது. கண்ணனும் போரில் நேரடியாக ஈடுபடவில்லை; அவரின் ஒத்துழைப்பு இருந்தது. அதுதான் வெற்றியை எட்டவைத்தது.

ஏழு சால விருட்சங்களை ஒரே பாணத்தில் வீழ்த்திய ராமருக்கு வாலி வதம் ஒரு விளையாட்டு. அவதார குறிக்கோளை அழகாகச் செயல் படுத்த வாலி வதம் தேவைப்பட்டது. அதை நிறைவேற்றினார். அதில் களங்கம் இல்லை.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

புராணங்களும் இதிஹாசங்களும் பண்டைய சரித்திரங்கள், கதைகள்! அத்தனையும் வருங்கால வாரிசுகளின் வாழ்க்கைப் பயணத்துக்கு வழிகாட்டுபவை. அத்துடன் நிற்காமல், கடவுள் அவதாரங்களும் இணைந்ததால், அவற்றின் தகவல்கள் அறத்தின் சாரமாகவும் உருப்பெற்று மெருகு ஏறியிருக்கின்றன.

புராணத் தகவல்களை அலசி ஆராய்ந்து, அதன் கண்ணோட்டத்தில் வேதக் கருத்துக்களை உறுதிசெய்வது சிறப்பு என்கிறது சாஸ்திரம். அறத்துக்கு அடித்தளமான வேதத்தின் குரலுக்கு ஊக்கம் அளிப்பவை புராணங்கள். அவற்றை ஆராய, அறம் சார்ந்த அணுகுமுறை வேண்டும். விஞ்ஞான விளக்கங்களிலும், லோகாயத சிந்தனையிலும் ஊறிப்போன புது சிந்தனைக்கு, அதன் ரகசியம் புலப்படாது. ஊணும் உறக்கமும் உடலுறவும்தான் வாழ்க்கை என்பவனுக்குப் புராணம் தேவையில்லை. காட்டுக் கோழிக்கு மகர ஸங்கராந்தி கொண்டாட்டம் எதற்கு? அவற்றின் தரம் குறித்துத் தெரியாதவர்களுடைய கணிப்புக்குப் பதிலளிப்பது வீண் பரிச்ரமம்!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.