Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

விருந்தினர் மாளிகை வீயெஸ்வி, ஓவியம்: சசி

''உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?'' என்ற பீடிகையுடன் நண்பர் வந்தாலே, அவர் பொருள் பொதிந்த அரிய கருத்து ஒன்றை என்னுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறார் என்று அர்த்தம். ஒருவகையில், அது எனக்கு அலாரமும்கூட!

''இந்த உலகத்துக்கு நாம் எல்லோருமே விருந்தினர் மாளிகைக்கு வருவதுபோல்தான் வருகிறோம்...'' என்று நண்பர்  சொன்னபோது, நான் 'ஙே’ என்று விழித்தேன். அவரே தொடர்ந்தார்...

''அப்படி வரும்போது நாம் யாருமே லாரி நிறைய சாமான்களெல்லாம் ஏற்றிக்கொண்டு வருவதில்லை. அத்தியாவசியமான சில பொருள்களை மட்டுமே எடுத்து வருகிறோம்...''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கலகல கடைசிப் பக்கம்

''ஏன்... நீங்க சொல்ற விருந்தினர் மாளிகை சைஸ்ல ரொம்பச் சின்னதோ? அல்லது, ஒரே நேரத்துல நிறையப் பேர் வர்றதனாலயா?'' என்றேன். என் கேள்வியில் தொனித்த கேலியைக் கண்டுகொள்ளாமல், ''நீங்க எப்படி வேணும்னாலும் வச்சுக்குங்க. ஆனா, நாம் எடுத்து வருவது உடல் என்னும் சின்ன சூட்கேஸை மட்டுமே! மத்தபடி, வாழ்நாள் முழுக்க நமக்குத் தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், உணவு வகைகள், துணிமணி, படுக்கை என எதையுமே நாம் எடுத்து வருவதில்லை. காரணம், விருந்தினர் மாளிகையிலேயே எல்லாம் கிடைத்துவிடும் என்பது நமக்குத் தெரியும்...'' என்று தத்துவார்த்தமாகச் சொல்லிக்கொண்டே போனார்.

''இந்த உலகம் த்ரீ ஸ்டார், ஃபைவ் ஸ்டார் ஓட்டல்களைவிட மேலானது. பாருங்க... மேலே வர்ணம் மாறிக்கொண்டே இருக்கும் அழகான கூரை, காதுகளுக்கு வெவ்வேறு கலவையில் பறவைகளின் ரம்மியமான இரைச்சல், ரோஜா, மல்லி, முல்லை, மருக்கொழுந்து எனப் பலவிதமான நறுமணங்கள், பல்வேறு சுவையுள்ள உணவுகள், உடம்புக்கு இதமாக கோடை, குளிர் என வெவ்வேறு விதமான தட்ப வெப்ப நிலைகள்... இப்படி நாம் அனுபவிப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் இந்த உலகம் எனும் விருந்தினர் மாளிகையில் கிடைக்கின்றன.

அப்படிப்பட்ட இடத்தில் இருந்துகொண்டு, ''நான் துக்கமா இருக்கேன்’ என்று சொல்வதுதான் வேதனை...''

''வாஸ்தவமான பேச்சு!'' என்று அவரை அங்கீகரித்தேன்.

''ஆனா ஒண்ணு, இந்த ஓட்டல்ல எதுவும் நமக்குச் சொந்தம் கிடையாது. அதனால, போகும்போது எதையும் நாம் கொண்டு போக முடியாது. இருக்கிறவரைக்கும் அனுபவித்துவிட்டு, போகும்போது எதையும் பாழாக்கிடாம, நாம் வந்தபோது இருந்ததையெல்லாம் அப்படியப்படியே நல்லபடியாக விட்டுச்செல்ல வேண்டும். காரணம், இந்த ஓட்டல் நமக்கு மட்டுமல்ல, நமக்குப் பிறகு வருபவர்களுக்கும் உதவ வேண்டும்...''

மரங்களை வெட்டிச் சாய்த்தல், நீராதாரங்களை நாசப்படுத்துதல், காற்றை மாசுபடுத்துதல் என மனிதன் செய்யும் அக்கிரமங்களைக் கண்டிக்க வருகிறார் நண்பர் என்பது எனக்குப் புரிந்தது.

''சரியா சொன்னீங்க! கூடவே, இந்த ஆல்-ஸ்டார் ஓட்டலைப் படைத்து, நமக்குத் தங்கவும் அனுமதி தந்து, தங்கும்போது எல்லா வசதிகளையும் தரும் ஓட்டல் முதலாளியையும் நாம் நினைச்சுப் பார்க்கணும். அவர் இருக்கார்ங்கிற உண்மையான நம்பிக்கை நமக்கு இருந்தா, இங்குள்ள எதையும் பாழாக்க மனசு வராது!'' என்று நான் சொல்லவும், முகம் மலர்ந்தார் நண்பர்.

பின்னே... அவர் படித்திருக்கும் சுவாமி தயானந்த சரஸ்வதியின் போதனைகளை நானும் படிச்சிருக்கேனே!