Published:Updated:

திருவாடானையில் சிநேகவல்லி அம்மனுக்கு திருக்கல்யாணம்!

இரா.மோகன்
திருவாடானையில் சிநேகவல்லி அம்மனுக்கு திருக்கல்யாணம்!
திருவாடானையில் சிநேகவல்லி அம்மனுக்கு திருக்கல்யாணம்!

திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆடி உற்சவத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


 திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் ஆடி உற்சவத் திருவிழா, கடந்த ஜூலை 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில், சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து  அன்னம், கிளி, ரிஷபம், குதிரை எனப் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதைத் தொடர்ந்து,  திங்கள்கிழமை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. பர்வதராஜனின் மகளான பார்வதி ஈசனை மணக்கும் நிகழ்வு, திருக்கல்யாணமாக ஒவ்வொரு கோயிலிலும் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். இதன்படி ஆதிரெத்தினேஸ்வரர்-சிநேகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபம் சிறப்பாக நடந்தது. திருக்கல்யாண வைபவத்துக்கு முன்பாக, அம்மன் ஆராட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, ஒன்பது கன்னிப் பெண்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அம்மன் ஊஞ்சலாடும் நிகழ்ச்சியும்  மாங்கல்யத்தை வைத்து யாகசாலை பூஜையும் நடைபெற்றன.

 பின்னர், சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.         திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில், திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த  நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி-அம்பாளை வழிபட்டனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண தினத்தன்று, ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.