Published:Updated:

காவிரித் தாயே... வா, வா!

ஆடிப் பெருக்கு ஆனந்தம்!வி.ராம்ஜி

காவிரித் தாயே... வா, வா!

'தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே!’ என்று சொலவடை ஒன்று உண்டு. பழிப்பதற்கும் நகைப்பதற்கும் உரியதல்ல தண்ணீர்.  மாறாக, போற்றி வணங்கக்கூடியது. 'தவித்த வாய்க்குத் தண்ணீர் கொடு’ என்று உபதேசித்த நம் தேசத்தில், தண்ணீரின் உறைவிடமான நதியைக் கொண்டாடவும் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதில் முக்கியமான கொண்டாட்டம்... ஆடிப் பெருக்கு எனும் குதூகல விழா! காவிரித் தாயைக் கொண்டாடி மகிழ்கிற வைபவம் இது!

பெண்ணைப் போற்றுகிற நம் பரத கண்டத்தில், பெண்களைப் போல் தியாக குணமும் பாரபட்சமற்ற தயாள குணமும் கொண்டிருப்பதால் நதிகளுக்குக் காவிரி, கங்காதேவி, துங்கபத்ரா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை என பெண்களின் பெயரைச் சூட்டியதில் வியப்பு இல்லைதான்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் அந்தப் பகுதியை, பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அந்தக் காலத்தில் அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.

காவிரித் தாயே... வா, வா!

'சோழ வளநாடு சோறுடைத்து’ என்று சோழவளத்தையும் நாட்டின் சிறப்பையும் பெருமையுடன் சொல்வார்கள். அத்தனை செழிப்புக்கும் சிறப்புக்கும் காரணம்... காவிரி ஆறு. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த சோழ தேசம் நன்றாக இருந்தால்தான், நன்றாக விளைந்தால்தான் மொத்த தமிழகமும் பஞ்சமில்லாமலும் பட்டினி இல்லாமலும் இருக்கும். அதற்கு அமோக விளைச்சல் தேவை. அந்த விளைச்சலைப் பெருக்கித் தருவதற்கு நீர் ஆதாரம் மிக மிக அவசியம். அதனை, பசியுடன் அழும் கன்றுக்கு ஓடி வந்து பால் புகட்டுகிற வாஞ்சையுடன், காவிரித்தாய் கர்நாடகத்தில் இருந்து காடு மலையெல்லாம் கடந்து நடந்தும், ஓடியும், பாய்ந்தும் வருகிறாள். அதனால்தான் 'நடந்தாய் வாழி காவிரி’ என்று நதித் தாயைப் போற்றினார்கள் முன்னோர்கள்.

காவிரித் தாயே... வா, வா!

ஊரிலிருந்து விருந்தினர் வந்தால், ரயில் நிலையத்துக்கோ பேருந்து நிலையத்துக்கோ சென்று அவரை வரவேற்று அழைத்து வருகிற பண்பாடு மிக்கவர்கள்தானே நாம்! அந்த விருந்தினர்

காவிரித் தாயே... வா, வா!

அன்பானவராக, ஆபத்பாந்தவராக, நம் வாழ்வை வளமாக்க வருபவராக இருந்துவிட்டால் வரவேற்பு இன்னும் பலமாக இருக்கும் அல்லவா! அப்படியொரு வரவேற்புதான், காவிரிப் பெண்ணாளுக்கும் நடைபெறுகிறது. அந்த விழா... ஆடிப்பெருக்கு  எனும் அற்புதத் திருவிழா!

''அந்தக் காலத்தில், 'ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள். அதாவது, சித்திரையில் வெயில் அடித்து, வைகாசி முடிந்து, ஆனி மாதத்தில், நிலமெல்லாம் பாளம்பாளமாகக் கிடக்கும். அடுத்த விதைக்காக, விதையை விருட்சமாக்குவதற்காகத் தயாராக இருக்கும். கோடையிலும் ஆனியிலும் மழை பெய்து, ஆடி மாதம் துவங்கி 18-ம் நாளில் பெருக்கெடுத்து ஓடி வருவாள் காவிரி.

அப்படிப் பெருக்கெடுத்து வருவதற்கு முன்பு வரை, ஆற்றங்கரைக்கு வந்து, அங்கே சில மணி நேரம் இருந்து, தண்ணீரின் ஓட்டத்தை வைத்தே, 'இந்த முறை தண்ணீர் அபரிமிதமாக நமக்குக் கிடைக்கப் போகிறது. காவிரி ஆறு அதிவேகமாகப் பாய்ந்து வரும்போல் தெரிகிறது என்பார்களாம் விவசாயிகள். அதேபோல், 18-ம் நாளில் பொங்கிப் பெருக்கெடுத்து சீராப்பள்ளியிலும் தஞ்சையிலும் குடந்தையிலுமாக ஓடி வரும் காவிரியைப் பார்த்தாலே, பஞ்ச மெல்லாம் பறந்தோடிவிடும்.

அப்போது, 'காவிரித்தாயே! வந்து, இந்த முறையும் நிலத்தை வளப்படுத்து. விவசாயத்தை மேம்படுத்து. நெல்மணிகளாலும் அதன் வாசத்தாலும் சோழ தேசமே நிறைந்திருக்கட்டும். எல்லா தேசத்து மக்களும் பசியின்றியும் பஞ்ச மில்லாமலும் சத்தான உணவாக அவை போய்ச்சேரட்டும். வா... எங்கள் காடு-கழனிகளில் நீ பட்டாலே புண்ணியம்’ என பூக்களைத் தூவி, காவிரியை வரவேற்று, வணங்குவார்கள். இதை ஆடிப் பதினெட்டு விழா என்றும், ஆடிப்பெருக்கு விழா என்றும் கொண்டாடினார்கள் என்று குறிப்புகள் இருக்கின்றன'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

அப்படிக் கொண்டாடுவதற்காகவே காவிரி ஆற்றையொட்டி கரைப் பகுதிகளில் மண்டபங்கள் கட்டப்பட்டன. காவிரி பாய்ந்தோடி வருகிற வேளை என்பதால், மக்கள் நதியில் இறங்கி வணங்கும்போது சுழலில் சிக்கி, அதன் வேகத்துக்கு அவர்களை இழுத்துக் கொள்ளாதபடி, கரைப் பகுதியில் கொஞ்சம் மேடான இடமாகப் பார்த்து மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்சியில் அகண்ட காவிரியாக பிரமாண்டம் காட்டி ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடிவிடுவார்கள்.

காவிரித் தாயே... வா, வா!

அதேபோல, தஞ்சாவூரில் உள்ள திருவையாறு பகுதி, காவிரியை வரவேற்க, விழாக்கோலம் பூண்டிருக்கும். அந்தப் பக்கம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்தும் இந்தப் பக்கம் கரந்தை, பள்ளி அக்ரஹாரத்தில் இருந்தும் என அக்கம்பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களில் இருந்தும் மக்கள், குடும்பம் குடும்பமாக வந்து காவிரி நீரில் மஞ்சள் தூவி, குங்குமம் தூவி, பூக்களை விட்டு, வணங்குவார்கள்.

''தினமும் காவிரியில் குளித்த காலமெல்லாம் உண்டு. அப்ப, கரைல கடல் அலை மாதிரி, காவிரி அலை அலையா வந்து, நம்மளை மிரட்டிக்கிட்டே இருக்கும். அதையெல்லாம் மீறி, காலையும் மாலையும் நீச்சலடித்து, காவிரியில் குளித்துவிட்டு வந்தாலே, மனசும் புத்தியும் மலர்ச்சியாயிடும். உடம்பு உஷ்ணமெல்லாம் காணாமப் போயிடும். கஞ்சியோ கூழோ, சட்டிசட்டியா உள்ளே இறங்கும். ஆனா, இப்ப காவிரியில் தண்ணீரைப் பார்ப்பது உலக அதிசயமாகிவிட்டது!'' என்று அலுப்பும் சலிப்புமாகப் பேசுகிறார், 73 வயது ரங்கராஜன்.

''சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு, நிறைய மரங்கள் இருந்தன. அதனால் மழை தப்பவில்லை. பெருமளவில் பெய்தன. காடு-கரையெல்லாம் நிறைந்தன. விவசாயம் தடையற நடந்தது. மரங்களை வெட்டி சாலைகளை விரிவாக்கினோம். மெள்ள மெள்ள மழை குறையத் துவங்கியது. இந்த அவலத்தின் அடர்த்தி வருங்கால சந்ததிக்கும் சாப்பாட்டுக்கும் பெரும் பிரச்னை என உணர்ந்த அரசாங்கம், அப்போது 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்’ என அறிவித்தது. இப்பொது பாருங்கள்... மரங்கள் இருந்த இடங்களும் விவசாயம் செய்த நிலங்களும் வீடுகளாகிவிட்டன.  

அப்படி ஓரளவு பெய்த மழை காவிரியில் சேர, அந்தத் தண்ணீரை நதியில் இருக்கிற மணல் உள்வாங்கி பலநாட்கள் அப்படியே வைத்திருக்கும். அதுவே விவசாயத்துக்குப் போதுமானதாக இருந்தது. எனக்குத் தெரிந்து இந்தப் பதினைந்து வருடங்களில்தான், தண்ணீரே இல்லாத காவிரி யைப் பார்க்கிறேன். அப்படிப் பார்ப்பதைப் போல கொடுமையும் வேதனையும் வேறில்லை'' என கண்ணீருடன் சொல்கிறார் ஜெயராமன்.

காவிரித் தாயே... வா, வா!

விவசாயம் செழிக்கவேண்டும் எனும் பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்ட இந்த ஆடிப்பெருக்கு வைபவம், ஒருகட்டத்தில் இல்லறம் செழிக்கும் விழாவாகவும் மலர்ந்தது. புதுமணத் தம்பதி, ஆடி மாதத்தில் பிரிந் திருப்பார்கள் அல்லவா... அப்போது மாப்பிள்ளையைத் தங்கள் வீட்டுக்கு வரவழைத்து, புத்தாடைகள் உடுத்தச் செய்து, பெண்ணையும் மாப் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு காவிரிக் கரையில், ஆடிப் பதினெட்டாம் நாளில், மஞ்சள் சரடு கட்டிக்கொள்ளும் வைபவம் நடைபெறத் துவங்கி, இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதை 'தாலி பிரித்துப் போடுதல்’ என்பார்கள்.

''சோழர்கள் ஆட்சிக் காலத் தில், ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது குறித்து, குறிப்புகளோ ஆவணங்களோ கிடைக்கவில்லை. ஆனால், அதையடுத்து மராட்டியர்கள் தஞ்சை தேசத்தை ஆட்சி செய்த காலத்தில், இந்த விழா கொண்டாடியதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஷாஜி ராஜா என்பவரின் காலத்தில், ஆடிப்பெருக்கு விழாவை 'காவிரி கல்யாணம்’ என்று கொண்டாடினார்களாம்.

காவிரி நதிப் பெண்ணாள் சமுத்திரராஜனுடன் கலப்பதற்கு ஓடி வருவதால், காவிரி கல்யாணம் என்றார்கள். கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்ணை, பனையோலையால் செய்யப்பட்ட காதோலை (பத்ரகுண்டலம்), கருகமணி, வளையல்கள் அனைத்தையும், இலையைத் தட்டாக்கி வைத்து, காவிரியில் அப்படியே விட்டு வணங்குவார்கள். இதை குடும்பம் குடும்பமாக வந்து வழிபடுவார்கள். பழங்கள், ஊறவைத்த அரிசியில் வெல்லம் என காவிரித் தாய்க்குப் படைத்து, அனைவருக்கும் விநியோகிப்பார்கள். சிறுவர்கள் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக, சிறு தேர்களைச் செய்து, கரைப் பகுதியில் ஓட்டி விளையாடுவார்கள். இதை 'சிறுதேர் ஓட்டுதல்’ என்கிறது வரலாறு'' என்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன்.

அவரே தொடர்ந்து... ''பவானி கூடுதுறையில் களை கட்டத் துவங்குகிற இந்த ஆடிப்பெருக்கு விழா, காவிரிக் கரையின் இருபக்கங்களிலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். காவிரியில் இருந்து கிளை பிரிந்து ஓடுகிற ஆற்றிலும் ஆடிப்பெருக்கு விழா அமர்க்களப்படும். இந்த விழாவை 'புதுப்புனல் நீராடுதல்’ எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இந்த விழாவைக் கொண்டாட திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் மண்டபங்களைக் கட்டி வைத்தார்கள் மன்னர்கள். அந்த மண்டபத்தில், பக்கத்தில் உள்ள கோயில்களில் இருந்து உத்ஸவ மூர்த்திகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, அன்றைய நாளில் அங்கே எழுந்தருள்வார்கள். அந்த மண்டபங்கள் இன்றைக்கும் இருக்கின்றன'' என்கிறார்.

காவிரித் தாயே... வா, வா!

''வருடா வருடம் ஆடிப்பெருக்கு நாளில், புதுமணத் தம்பதியரின் கூட்டம் காவிரிக் கரையில் நிரம்பி வழியும். அதையொட்டி, அந்த நாளில் கரையோரத்தில் நூற்றுக்கணக்கான கடைகள் முளைத்திருக்கும். உற்றார் உறவினர்களுடன் வந்திருக்கும் புதுத் தம்பதி, அப்போது தாலி பிரித்து அணிந்துகொள்வார்கள். வீட்டில் இருந்தே தயிர் சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம் என எடுத்து வந்து, காவிரித்தாய்க்குப் படைப்பார்கள். சிலர், அகல்விளக்கில் தீபமேற்றி காவிரியில் விடுவார்கள். ஆடிப்பெருக்கு நாளில் வழிபட்டால், காவிரியைப் போலவே இல்லறம் சந்தோஷமாகி, சந்ததி பெருகும் என்பது ஐதீகம்'' என்கிறார் லால்குடி விஸ்வநாத சாஸ்திரிகள்.

''தட்சிணாயன புண்ய காலம் துவங்கிய பிறகு, ரங்கநாதர் கோயிலில் இருந்து வெளியே வருகிறார் என்றால், அது ஆடிப்பெருக்கு விழாவுக்குதான். அதாவது, ஸ்வாமியின் முதல் புறப்பாடு, அம்மா மண்டபத்துக்குதான். மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஜீவநாடியாகத் திகழும் காவிரிப்பெண்ணை வரவேற்கவும், அவளுக்கு ஆசி வழங்கவும், அரங்கன் பிரியத்துடன்  வருவதாக ஐதீகம்.  

இலங்கையைப் பார்த்துக்கொண்டு, பள்ளிகொண்ட நிலையில் அரங்கன் இருக்கிறார் என்போம்.

காவிரித் தாயே... வா, வா!

அதுமட்டும் அல்ல... காவிரியைப் பார்த்தபடியே சேவை சாதிக்கிறார் அரங்கன். குதூகலத்துடன் வருகிற காவிரிதேவதைக்கு வஸ்திரம், திருமாங்கல்யம், மாங்கல்யக் குண்டு, பழங்கள், நைவேத்தியம் என அரங்கனின் சார்பாக பெரிய வரவேற்பே நடைபெறும். இதற்காக, சர்வ அலங்காரத்துடன் அதிகாலையிலேயே அம்மா மண்டபத்துக்கு வந்து எழுந்தருள்வார் ரங்கநாதர். பூமியையே குளிரச் செய்யும் காவிரியையும் மனதைக் குளிரச் செய்யும் அரங்கனையும் ஒருசேர ஸேவித்துவிட்டுச் செல்வார்கள், பக்தர்கள்'' என்று சிலிர்ப்புடன் சொல்கிறார், ஸ்ரீரங்கம் முரளிபட்டர்.

''திருச்சி தீரன் நகர்ல ஒரு பத்துப் பன்னண்டு குடும்பமா சேர்ந்து, வருஷாவருஷம் ஆடிப்பெருக்கு அன்னிக்கிக் காவிரிக்கரைல கொண்டாடுறதை வழக்கமா வைச்சிருக்கோம். எனக்கு 2012-ம் வருஷம் நவம்பர்ல கல்யாணமாச்சு. போன வருஷம் நாங்க புதுத் தம்பதி. இந்த வருஷம் எங்க அத்தை பொண்ணு அனிதா, புதுத்தம்பதி. இப்படி, ஒவ்வொரு வருஷமும் எங்க குரூப்ல யாராவது புதுமணத் தம்பதி இடம்பிடிச்சுக்கிட்டே இருப்பாங்க.

முக்கொம்பு போற வழில, காவிரிக் கரைல பம்ப் ஹவுஸ் இருக்கும். கூட்டம் இல்லாத இடம் அது. காலைல அஞ்சு மணிக்கே போயிடுவோம். அங்கேயே குளிப்போம். மணல்ல சப்த கன்னியரை பிடிச்சு வைப்போம். எங்க அம்மாலேருந்து வந்திருக்கிற சுமங்கலிப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து அவங்க தாலியை சப்த கன்னிகளுக்குப் போடுவாங்க. பக்கத்துலயே சமைச்சு, அதைப் படையலா வைச்சுக் கும்பிடுவோம். தவிர நாவல்பழம், விளாம்பழம், பேரிக்காய்லாம் வைச்சு, காதாளக் கருகமணி, மஞ்சள், குங்குமம்லாம் வைச்சு நேர்ந்துக்குவோம். அப்பு றம், பக்கத்துல இருக்கிற அங்காயி அம்மன் கோயில்ல சாமி கும்பிட் டுட்டு, சாயந்திரம்போல வீட்டுக்குக் கிளம்புவோம். இதோ, இந்த வருஷம் எங்க எட்டு மாச குழந்தையோடு ஆடிப்பெருக்கு பூஜைக்குப் போறோம். அது கூடுதல் சந்தோஷம் எங்களுக்கு!'' என்று உணர்ச்சி பொங்கச் சொல்கிறார்கள் சண்முகப்ரியாவும் அவர் கணவர் வீரமணிகண்டனும்.

''ஆடி மாதம் சக்தியோட மாதம். சக்தி மிகுந்த மாதம். 18 என்பதைக் கூட்டினால் 9. இதைப் பெருக்கிக்கொண்டே போனால், 9 என்பது மாறாது. தவிர, 18 எனும் எண்ணுக்கு இன்னும் வலிமை உண்டு. இதனால்தான் 'நவமம் பாக்யம் உச்யதே:’ என்று ஒன்பதைப் பெருமையுடன் சொல்கிறது சாஸ்திரம். அதுவும் தவிர சூரியன், சந்திரன் ஆகிய இரண்டும் ஒரே வீட்டில் இருப்பதும் இந்த ஆடி மாத காலகட்டத்தில்தான்! எனவே, இந்த உலகில் எங்கிருந்தாலும் சரி... ஆடிப்பெருக்கு நாளில், 'ஓம் காவேர்யை நம:’ என்று சொல்லி நீராடினால், காவிரி எனும் புண்ணிய நதியில் நீராடிய பலன் நிச்சயம் கிடைக்கும்'' என்கிறார் சென்னை, ஸ்ரீகாளிகாம்பாள் ஆலயத்தின் சண்முக சிவாச்சார்யர்.

''எங்களுக்குத் திருமணமாகி ஏழு வருஷமாச்சு. ஆடிப்பெருக்கு அன்னிக்கு, இங்கே காவிரிக்கரைல வேண்டிக்கிட்டு வாழ்க்கையைத் துவக்கின முகூர்த்தம்... நல்ல விதமா பையன் பொறந்தான். தங்க ஆபரணம் செய்ற என்னோட தொழிலும் நல்லாவே போயிட்டிருக்கு. மனைவி மணிமேகலையும் புரிஞ்சு நடந்துக்கற அன்பானவங்களா இருக்காங்க. இதைவிட வேறென்ன வேணும்?'' என்று சிலாகித்துச் சொல்கிறார் மாரிமுத்து.  

''கல்யாணமானதும் குலதெய்வக் கோயிலுக்கு எப்படி தம்பதி சமேதரா போவோமோ, அதேமாதிரிதான் காவிரிக்கரைல ஆடிப்பெருக்கு கொண்டாடுறதும்! மூணு வருஷத்துக்கு முன்னாடி, திருமணம் நடந்து, ஆடிப்பதினெட்டின்போது காவிரியை வணங்கி, தாலி பிரிச்சு மாத்தி, எங்க வாழ்க்கையைத் துவக்கினோம். ரொம்ப சௌக்கியமா, சந்தோ ஷமா இருக்கோம்'' என்று ஒருமித்த குரலில் தெரிவிக்கின்றனர் சசிகலாவும், அவரின் கணவர் பாஸ்கரும்!  

காவிரித் தாயே... வா, வா!

ஆயிரம் ஆயிரம் காலமாக விவசாயத்தை செழிக்கச் செய்வதையே கடமையாகக் கொண்டு, ஓடி வந்து சேவை செய்துகொண்டிருக்கிறது காவிரி எனும் புண்ணிய நதி. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பதற்கு ஏற்ப, தன்னைப் பூக்களாலும் வளையல்களாலும் கனிகளாலும் சித்ரான்னங்களாலும் மஞ்சளாலும் குங்குமத்தாலும் குளிர்வித்து மகிழ்கிற தம்பதியை, அந்தக் காவிரித்தாய் ஒருபோதும் கைவிடமாட்டாள். மாறாக, அந்தத் தம்பதியின் இல்லத்தை சுபிட்சமாக்குகிறாள். சந்ததியைப் பெருக்கி அருள்கிறாள். தனம் - தானியம் என சகல செல்வங்களையும் தந்து, காத்தருள்கிறாள்.  

''ஆனால், காவிரியை நாம் காக்கிறோமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றார்கள். மிகச் சிறிய அளவில் சாதாரண மணல் திருட்டாக இருந்த அது, இப்போது பிரமாண்ட மணல்கொள்ளையாக விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. லாரி லாரியாக மணல் கொள்ளை நடந்துகொண்டே இருக்கிறது. சீராக, நேராக, துள்ளித் திரியும் அழகிய பெண்ணைப் போல் காட்சி அளித்த காவிரிப்பெண், இப்போது பற்கள் விழுந்து, கன்னம் ஒட்டி, தோல் சுருங்கிப் போன கிழவியெனக் காட்சி தருகிறாள்.  

சமீப காலங்களில், ஆடி பிறந்ததுமே, ஆடிப்பெருக்கு நாளிலாவது கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவார்களா... திறந்துவிடவேண்டுமே என்கிற பிரார்த்தனை உள்ளே ஓடத் தொடங்குகிறது. ஒருவேளை தண்ணீர் திறந்துவிடாமல் போனால், வெறும் மணல் நதியாக, குண்டும் குழியுமாக இருக்கிற இடங்களுக்கு மக்கள் சென்று, ஆங்காங்கே குழி தோண்டுவார்கள். அந்தக் குழியில் இருந்து ஊற்று போல் வரும் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு, கண்களில் ஒற்றிக்கொண்டு, ஏதோ பேருக்கு படையலைப் போட்டுவிட்டுச் செல்கிற அவலமும் நிகழ்கிறது.

'இங்கேதான் நான் படித்த அரசுப் பள்ளி இருந்தது’, 'இதோ... இந்த தோப்பில்தான் விளையாடினேன்’, 'ஊஞ்சல் கட்டி விளையாடிய மரங்கள் இங்குதான் இருந்தன’... என்பது போல, 'இதோ... இந்த இடத்தில்தான் காவிரி நதி ஓடியது ஒருகாலத்தில்’ என்று சொல்லும் கொடுமை நிகழ்ந்துவிடுமோ என்கிற அச்சமும் கலவரமும் அடிவயிற்றைப் பிசைகின்றன.

கண்களை விற்றுவிட்டு ஓவியம் வாங்கிப் பயனென்ன? மணலைக் கொள்ளையடித்து, தண்ணீரை மாசுபடுத்தி, நதியைக் குலைத்து வறட்சியாக்கி விட்டு, நாம் வாழ்வது எப்படிச் சாத்தியம்?

நீரின்றி அமையாது உலகு! 

காவிரியைக் காப்போம். ஆடிப்பெருக்கை இன்னும் ஆனந்தமாகக் கொண்டாடுவோம். எல்லா நதிகளையும் போற்றுவோம். ஒரே நதியாக இணைத்து, ஆடிப்பெருக்கை அகிலம் முழுவதும் கொண்டாடிக் குதூகலிப்போம்!

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்,

கே.தீட்ஷித், கே.குணசீலன், க.தனசேகரன்.