மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

காகத்துக்கு பிண்டம் ஏற்புடையதா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்

? முன்னோர் ஆராதனையில் காகத்துக்குப் பிண்டம் வைப்பார்கள். முன்னோர் அதை காக வடிவில் வந்து ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது நம்பிக்கை. வழிபாட்டுக்குரிய முன்னோருக்கான தூய்மையான உணவை, அசுத்த பட்சியான காகத்துக்கு அளிப்பது சரியா?

 - சி.பொன்னம்பலம், புளியங்குடி

முதல் கோணம்...

முன்னோர் ஆராதனையில், தன்னுடைய குலத்தில் தோன்றிய மற்ற பித்ருக்களுக்காக தரையில் பிண்டம் வைப்பார்கள். அதைக் காகத்துக்கு அளிப்பார்கள். 'என் குலத்தில் பிறந்தவர்களின் உயிர் பிரிந்த பூதவுடல்கள் - அடக்கம் செய்யப்பட்டதும் எரியூட்டப் பட்டதுமான அவை திருப்தியடையும் பொருட்டு இந்தப் பிண்டத்தை தரையில் வைக்கிறேன். தரையைத் தொட்டதும் அவர்கள் திருப்தி பெற்று, நற்கதியை அடையட்டும் (யே அக்னி தத்தா...)’ என்ற வேண்டுகோளோடு தரையில் வைப்பார்கள். அவர்கள் பிண்டத்தைத் தரையில் வைத்ததும் திருப்தி ஏற்பட்டுவிட்டது. அடுத்து, அந்தப் பிண்டத்தை என்ன செய்யலாம் என்ற கேள்வி எழும்பியது. 'அதைக் காகத்துக்கு அளித்துவிடு!’ என்று தர்மசாஸ்திரம் பரிந்துரைக்கிறது.

? தரையைத் தொட்டதுமே முன்னோர் திருப்தி அடைந்துவிடுகிறார்கள் எனும்போது, மீண்டும் அதை காகத்துக்குப் படைக்கவேண்டும் எனும் பரிந்துரை எதற்கு?

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருள் வீணாகாமல் மீண்டும் ஓர் உபயோகத்துக்கு, வேறோர் உயிரினத்துக்கு உணவாகும் என்ற அறக்கொள்கையின் வெளிப்பாடே இந்தப் பரிந்துரை. பஜனையில் சுண்டல் நிவேதனம் பண்ணப்படும். அதன்பிறகு அதை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்போம். புதுப் பூணூல் அணிந்த பிறகு, பழசை என்ன செய்வது என்ற கேள்விக்கு, 'தண்ணீரில் சேர்த்துவிடு’ என்று சாஸ்திரம் பரிந்துரைக்கும். அதேபோன்று, முன்னோர் உணவை உட்கொண்ட பிறகு, அந்த இலையை என்ன செய்வது என்ற கேள்விக்கு, 'ஆறிலோ, குளத்திலோ சேர்க்கலாம்; அல்லது, பூமியைத் தோண்டிப் புதைக்கலாம்’ என்று பதில் வரும்.

நாம் சாப்பிட்ட இலைகளை குப்பைத்தொட்டி யில் போடுவோம். பழங்களை உண்ட பிறகு, தோலை குப்பைத்தொட்டியில் சேர்ப்போம். லட்சார்ச்சனை முடிந்து மறுநாள் குவிந்திருக்கும் புஷ்பத்தை (நிர்மால்யத்தை) நீரில் சேர்ப்போம். முன்னோர்க்குத் தர்ப்பணம் செய்த பிறகு, அந்த நீரை ஆற்றிலோ குளத்திலோ கிணற்றிலோ சேர்ப்போம். 'வேள்வியில் ஈடுபட்டவன், தன் கைகளால் உடம்பைத் தொடக் கூடாது. நமைச்சல் ஏற்படும் தருணத்தில் அதைத் தணிக்க, கைகளால் சொறியக்கூடாது; மான் கொம்பை பயன்படுத்தலாம்’ என்கிறது வேதம். சரி, வேள்வி முடிந்ததும் மான் கொம்பை என்ன செய்வது எனும் கேள்விக்கு, 'வேள்வியில் வைக்கப் பட்ட தொட்டியில் (சாத்வாலம்) சேர்த்துவிடச் சொல்லும்.

கும்பத்தில் இறையுருவத்தை வரவழைத்து பூஜை நிறைவேற்றப் படும். பூஜை முடிந்ததும், கும்பத்தில் வைத்த ப்ரதிமை, வஸ்திரம், கும்ப ரத்னம், நெல் அரிசி, ஊற்று, எள் ஆகியவற்றை என்ன செய்வது எனும் கேள்விக்கு, 'ஆசார்யனுக்கு தானமாக அளித்துவிடு’ என்று பதில் சொல்கிறது சாஸ்திரம். பிள்ளையாரை மண்ணால் உருவாக்கி பூஜை செய்வோம். பூஜை முடிந்ததும், அவரைத் தண்ணீரில் கரைத்துவிடுவோம். பாலிகைகளில் (முளைப் பானை) தான்யத்தை விதைத்து வழிபடுவோம். முடிந்த பிறகு பாலிகைகளை நீரில் கரைத்து விடுவோம்.

இங்கெல்லாம், பயன்படுத்திய பொருள் பலனை அடைந்தபிறகு, அதை என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழும்போது, அவற்றை உபயுக்தஸம்ஸ்காரம் (பயனை அளித்த பொருள்கள்) ஆன பொருள்களுக்கு விநியோகிக் கும்படி சாஸ்திரம் சொல்லும்.சாஸ்திரம் சொன்னதை நடை முறைப்படுத்தினால் அந்தப் பொருளும் முழுமையாகப் பயன்பட்டு, நிறைவை எட்டும்.

கேள்வி - பதில்

? ஆக, மிச்சம் மீதியை வீணாக்காமல் தடுக்க இப்படியொரு பரிந்துரை என்று எடுத்துக்கொள்ளலாமா?

அதுமட்டுமல்ல, தேவையற்ற மன நெருடலையும் இந்தப் பரிந்துரை தடுக்கும். விவாஹம், அன்னதானம் அல்லது ஸமாராதனை நிறைவேறியதும், பல பொருட்கள் மீதமிருக்கும். அவற்றை வீணாக்காமல் ஏலம் விட்டுப் பணமாக மாற்றி, அடுத்த அன்னதானத்துக்குப் பயன்படுத்துவது உண்டு. ஆன்மிக இதழ்களுடன் இனாமாக இணைப்பிதழ்கள் கொடுப்பார்கள். அவை வீட்டில் நிரம்பி வழியும்போது என்ன செய்வது? தெய்வத் திருவுருவப் படங்கள், மகான்களின் படங்கள், பலவிதமான யந்திரங்கள், விபூதி- குங்குமப் பிரசாதம், கங்கை சொம்பு, தாயத்து ஆகியவை இனாமாக வந்து சேரும். பயன்படுத்திய பிறகு அவற்றை என்ன செய்வது என்ற கேள்வி வரும். பேப்பர் வாங்க வருபவர்களிடம் இனாமையும் சேர்த்துக் கொடுத்து விடுவார்கள். இனி, 'வாங்கிக்கொண்டவனின் பொறுப்பு’  என்று சமாதானம் ஆகிவிடுவார்கள். தயக்கம் உள்ளவர்கள் கோயிலிலும் நீர்நிலைகளிலும் சேர்ப்பார்கள்.

பண்டைய நாட்களில் தபாலில் வந்து சேரும் கவர்களையும் கார்டுகளையும் ஒரு கம்பியில் கோத்து பல நாட்களுக்குக் காப்பாற்றுவார்கள். கம்பி நிரம்பியதும் குப்பைத் தொட்டியில் சேர்ப்பார்கள். பல்கலைக்கழகங்கள், அரசாங்க அலுவலகங்களில் தேங்கிக் கிடக்கும் காகித மூட்டைகளை கிடங்கில் சேமிப்பார்கள். அப்படியும் இடம் இல்லாத நிலை ஏற்பட்டால் வெளியேற்றி விடுவார்கள். நாளேடுகள், மாத இதழ்கள் படித்த பிறகுப் பழைய புத்தகக் கடையை சரண் அடைந்துவிடும்.

ஆக, பயன்படுத்திய பொருளை என்ன செய்வது என்ற கேள்வியும், அதற்கான பதிலும் மனித வாழ்க்கை ஆரம்பித்த நாளில் இருந்தே தொடர்கிறது. உலகம் அழியும்போதுதான் இது முற்றுப்பெறும். வேதம் வேள்வியை ஆரம்பித்த நாளிலிருந்து, பயன்படுத்திய பொருளின் பயன்பாட்டை விளக்கும் தகவல்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. கையில் தர்ப்பைகளைத் தரித்துக்கொண்டு, வேள்வியில் ஈடுபடச்சொல்கிறது வேதம். வேள்வி முடிந்ததும் பவித்ரத்தை அவிழ்த்து, வடக்கு திசையில் போடச் சொல்லும். கும்பத்தில் நீரை நிரப்பி, தேவதைகளை மந்திரத்தால் வரவழைத்துப் பணிவிடை செய்த பிறகு கும்பநீரை என்ன செய்வது என்ற கேள்விக்கு, வேள்வித் தலைவனுக்கு அபிஷேகம் செய்யச் சொல்லும். அதன்பிறகு கும்பத்தை என்ன செய்வது என்ற கேள்விக்கு, ஆசார்யனுக்கு தானமாக அளிக்கச் சொல்லும்.

காரியம் முடிந்ததும், சிதறிக் கிடக்கும் பொருள்களை என்ன செய்வது என்றொரு எண்ணம் எழும். அந்த எண்ணத்தை 'ஆகீர்ணகரதை’ என்றும், அவற்றைப் பயன்படுத்துவது குறித்த செயல்பாடுகளை 'ப்ரதிபத்தி கர்மா’ என்றும் சாஸ்திரம் விளக்கும் (ஆகீர்ணகரதை என்றால், பரவிக்கிடக்கும் பொருள்கள்; ப்ரதிபத்தி கர்மா என்றால், ஒரு தீர்வை எட்டும் செயல்பாடு என்று அர்த்தம்).

? எல்லாம் புரிகிறது! ஆனாலும் 'அசுத்த பட்சியான காகத்துக்கு படைக்க வேண்டியுள்ளதே’ எனும் மனநெருடல் ஏற்படாதா?

அப்படியல்ல! காகம் பகலில் உணவைத் தேடி அலையும். அதற்கு உணவாக இது (பிண்டம்) பயன்படும் என்ற கண்ணோட்டத்தில் சிறப்புப் பெற்றுவிடும். வேதமே காகத்துக்கு அளிக்கவேண்டும் என்று சொல்வதால் தூய்மை - தூய்மையற்றது என்கிற கேள்விக்கே இடமில்லை. ஏற்கெனவே பயனளித்த பிறகு, அதை மற்றொரு பயன்பாட்டுடன் இணைப்பது சிறப்பே!

ஏற்கெனவே பயன்படுத்திய உடைகளை அனாதைக் குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் அளிப்பது உண்டு. அங்கு, அந்த ஆடைகளைப் முன்னர் பயன்படுத்தியது யார், மேட்டுக்குடி மக்களா என்றெல்லாம் கேள்விகள் எழாது. ஏழைகளுக்கு- அனாதைகளுக்குப் பயன்பட்டால் போதும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும்.

காகத்தின் தொடர்பானது பிண்டத்தின் தூய்மையை பாதிக்கும் என்ற எண்ணமானது, அதன் உணவைப் பறிப்பதிலேயே முடியும்.  இந்த விஷயத்தில், உயிரினங்களில் ஒன்றுக்கு உணவளிப்பதே குறிக்கோள்; தூய்மை பற்றிய சர்ச்சை தேவையற்றது.

இரண்டாவது கோணம்...

தங்களின் விளக்கம் மக்களைத் திசைதிருப்பு கிறது. முன்னோருக்கு அளிக்கும் பிண்டத்தை காகத்துக்கு மட்டும் அளிப்பதில்லை; நீர்வாழ் உயிரினத்துக்கும் அளிப்பது உண்டு. இறந்து பன்னிரண்டு நாட்களில் அளிக்கப்படும் பிண்டங்களை நீரில் கரைப்பது உண்டு. ஆற்றிலும் குளத்திலும், குறிப்பாக கங்கையிலும் பிண்டம் கரைக்கப்படுவது உண்டு. தூய்மையான பிண்டத்தை தூய்மையான நீரில் வாழும் உயிரினங்களுக்கு அளிப்பதே சிறப்பு. தூய்மை இல்லாத காகத்துக்கு அளிப்பது பொருந்தாது.

கேள்வி - பதில்

? நீங்கள் சொல்வதுபோல் சுத்தத்தை, தூய்மையைப் பிரதானமாகக் கருதினாலும், காகம் பயன்படுத்திய பிறகு நாம் பயன்படுத்த வேண்டும் எனில், தூய்மையைப் பெரிதாகக் கருதலாம். ஆனால், காகத்துடன் பிண்ட பயன்பாடு பூர்ணமாகிறது. அப்புறமும் எதில் தூய்மையை எதிர்பார்க்கிறீர்கள்?

தவறாகப் புரிந்துகொண்டீர்கள். தூய்மை என்பது ஒரு செயல்பாட்டில் முழுவதுமாக நிறைந்திருக்க வேண்டும்.

சுத்தம் சோறு போடும்; தூய்மை மேன்மை அளிக்கும். இன்றைய சிறார்கள் உடலையும் கைகளையும் சுத்தம் செய்துவிட்டே உணவை ஏற்கிறார்கள். தூய்மையற்ற காகத்துக்கு அளிக்கும் போது முன்னோர் ஆராதனையின் தூய்மை மாசுபடும். உணவு மட்டும் சுத்தமானால் போதாது; அதை எடுக்கும் அகப்பையும் தூய்மையாக இருக்கவேண்டும். தூய்மையான உயிரினங்கள் கணக்கில் அடங்காமல் இருக்கும் போது, தூய்மையற்ற காகத்துக்கு அளித்து, உயர்ந்த உணவை மாசுபடுத்துவது தவறு.

என்றும் எப்போதும் அசுத்தத்தில் ஊறியிருக்கும் காகத்துக்குச் சேர்க்கும்போது, 'சுத்த உணவை மாசுப்படுத்துகிறோமோ’ என்ற எண்ணம் மனதில் தோன்றும். இந்த உறுத்தலை தவிர்க்க காகத்துக்கு பிண்டம் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும்.

மூன்றாவது கோணம்...

கண் விழித்தவுடன், பல் துலக்காமல் காபி அருந்துவது உண்டு.  அதை, 'பெட் காபி’ என்று பெருமையாகவும் சொல்லிக்கொள்வோம். காலையில் நீராடாமல் உணவு எடுப்போம். உடலில் வியர்வை துர்நாற்றம், வாயில் துர்நாற்றம் ஆகியவற்றோடு விருந்து உபசாரத்தை ஏற்போம். ஆகாயவிமானத்தில் பயணிப்பவர்கள் பலரும் கையைக் கழுவாமல், வாயைக் கழுவாமல் தூய்மையற்ற கரண்டியை வைத்து உணவருந்துவார்கள். சாப்பிட்டு முடித்ததும் வாயையும் கையையும் கழுவாமல் காகிதத்தால் துடைத்துக்கொள்வார்கள். அதுமட்டுமா? துடைப்பதற்குப் பயன்படுத்திய அந்த காகிதத்தை மீண்டும் உபயோகிக்கும் எண்ணத்துடன் பையில் பத்திரப்படுத்தவும் செய்வார்கள்.

பொதுக் கழிப்பறைக்குச் சென்றுவிட்டு கை- கால் கழுவாமல் (ஷூ அணிந்தவர்கள் கால் கழுவ இயலாது) உணவருந்த முற்படுபவர் களும் உண்டு. குழந்தைகள் கடித்துத் தின்ற பழத்தை மற்றவர்களும் உட்கொள்வது உண்டு. ஈக்கள் மொய்க்கும் ஈச்சம்பழத்தை வாங்கி வாயில் போட்டு மென்றுகொண்டு தெருவில் நடப்பவர்களும் உண்டு. ஐஸ்க்ரீமை முழுவதுமாக குழந்தைகளால் சாப்பிட முடியாத நிலையில், மிச்சம் உள்ளதை பெரியவர்கள் ஏற்றுச் சாப்பிடு வது உண்டு.

ரயில் பயணத்தில் சிலர் உணவருந்தும் அணுகுமுறையே அருவருப்பை ஏற்படுத்தும். உண்ட பிறகு வாயை அலம்பாமல் பாட்டில் நீரை வாயில் குதப்பி, அப்படியே விழுங்கு பவர்களும் உண்டு. கைகளைக் கழுவாமல் துடைத்துக்கொண்டு, அந்தக் கைகளால் பல அலுவல்களில் ஈடுபட்டபிறகு, மீண்டும் அதே கைகளாலேயே தயிர் சாதமும் புளியோதரையும் ஏற்பவர்களும் உண்டு.  அதேபோன்று நீராடாமல், உடம்பைத் தூய்மைப்படுத்தாமல் உணவை ஏற்பவர்களும் ஏராளம்!

? சாதாரண விஷயங்களை உயர்ந்ததொரு விஷயத்தோடு ஒப்பிட்டுக் குழப்புகிறீர்கள். அசாதாரண சூழலில் வேறு வழியின்றிக் கடைப்பிடிக்கும் வழக்கத்தை வழிபாட்டில் மேற்கொள்ள முடியாது அல்லவா?

அப்படிச்சொல்ல வரவில்லை. இங்கெல்லாம் தூய்மையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், காகத்தின் தூய்மையை விமர்சிப்பது ஆச்சர்ய மாக இருக்கிறது என்கிறோம். முதலில் நமது தூய்மையைப் பேண வேண்டும். பிறகு, அடுத்தவரது தூய்மையை விமர்சிக்கலாம்.

இன்னும் சொல்லப்போனால், சில விஷயங்களில் விஞ்ஞான முறையில் தூய்மை கெடாமல் இருக்கிறோம் என்று விளக்கம் அளிப்பார்கள்! எல்லா இடங்களிலும்

விஞ்ஞான முறை பாதுகாக்கும் என்பது பொருந்தாது.

கழிப்பிடத்தோடு இணைந்த அறையில் உறங்கு பவர்களுக்கும் சுகாதாரம் பறிபோக வாய்ப்பு உண்டு. பல இடங்களில் நடமாடிவிட்டு வந்து கழற்றப்படும் காலணிகள், வீட்டுக்குள் தனியிடத்தில் விடப்படும். அதை என்றும் சுத்தம் செய்வதில்லை. காலணியில் பற்றிக்கொள்ளும் அசுத்தம் எப்போதும் தானாக வெளியேறாது! இவ்வாறு, தூய்மையற்ற நடைமுறைகள் பலவும் நித்தமும் நம்மையும் அறியாமல் நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதை உணராதவர்கள் ஏராளம். அப்படியிருக்க, காகத்தின் தொடர்பில் பிண்டம் தூய்மை இழந்துவிட்டது என்கிற வாதம் சுரத்தில்லாத ஒன்று. காகம் உணவுக்காக நம்மைத் தேடி வரும். நாய்களும் அப்படித்தான். அவற்றுக்கு... அதாவது பகலில் காகத்துக்கும், இரவில் நாய்களுக்கும் அன்றாடம் உணவளிக்கும்படி சாஸ்திரம் பரிந்துரைக்கும் (யேபூதா: ப்ரசரந்திதி ஹநத்தம் பலிமிச்சந்தோ...).

? ஆனால், புதிய சிந்தனையாளர்கள் காகத்துக்கு உணவளிப்பதை மூடநம்பிக்கை என்றல்லவா கேலி செய்கிறார்கள்?!

காகத்துக்கு உணவளிப்பது கடமை. முன்னோர் ஆராதனையில் பயன்படுத்தப்பட்ட பிண்டம், பயன்பாடு முடிந்ததும் உணவாக மாறிவிடும். அதைத் தேடி வரும் காகத்துக்கு அளிப்பது பொருந்தும். வேள்வியின்போது அக்னியில் தேவர்களுக்கான உணவை அளிப் போம். வேள்வி முடிந்ததும் அந்த அக்னியானது சாதரண நெருப்பாகிவிடும்; வேள்வியின் தொடர்பு இருக்காது.

அதேபோல், பிண்டம் பயன்படுத்தப்பட்டு சடங்கு முற்றுப்பெற்ற பிறகு வெறும் உணவாக மாறிவிடும். அதை யாருக்கு வேண்டுமானாலும்

பயன்படுத்தலாம். அதைக் கையில் வைத்துக் கொண்டு, 'யாருக்கு இதைக் கொடுக்கலாம்?’ என்று தேடி அலையாமல், நீங்கள் இருக்கும் இடத்தைத் தேடி வரும் காகத்துக்கு அளிப்பது சிறப்பு. காகம் தூய்மையற்றதாக இருந்தாலும், அது உட்கொள்ளும் உணவு தூய்மைபெற்றது.அது, அதன் வாழ்வைச் செழிப்பாக்கும். இதுதான் குறிக்கோள். இதை விடுத்து வேறு கண்ணோட்டத் தில் பார்ப்பது வேண்டாத வேலை.

இப்படியிருக்க, நம் முன்னோர் காக வடிவில் பிண்டத்தை ஏற்க வருவார்கள் என்று தன்னிச்சையாக ஒரு தகவலை ஏற்படுத்தி, அதை மூடநம்பிக்கையாகச் சித்திரித்து, அதை வெளியிட்டது சாஸ்திரம்தான் என்று சொல்லும் புதுப் பகுத்தறிவாளர்களின் விளையாட்டை புதிய தலைமுறையினர் தெரிந்துவைத்திருக் கிறார்கள்.

புதுப் பகுத்தறிவாளர்கள் பல நடைமுறைகளை வெளியிட்டு, அவற்றை மூடநம்பிக்கை பட்டியலில் சேர்த்து, சாஸ்திரமே அவற்றை வெளியிட்டது என்றும் சொல்வார்கள். அவர்களின் தாழ்வு மனப்பான்மை, உயர்ந்த சாஸ்திரத்தின் குறிக்கோளை மூடநம்பிக்கையாகச் சித்திரித்து சமாதானம் அடைகிறது.

பீஷ்மர் கையில் இருந்த பிண்டத்தை, அவருடைய தகப்பன் தன் கையில் கொடுக்கும்படி வேண்டினார். பீஷ்மர், ''அதைத் தர முடியாது. அது உனக்கு அளிக்கவேண்டிய பிண்டம் அல்ல. தரையில் வைக்க வேண்டியது. சடங்கு முடிந்தபிறகு அது காகத்தின் பங்காகிவிடும்'' என்று உரைத்ததாகப் புராணம் கூறுவதைக் கவனிக்க வேண்டும். பிண்டத்தின் தூய்மையைப் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கும் நாடகம் தேவை இல்லை.

? எனில், 'பிண்டம்’ காகத்துக்கு உரிய பங்கு என்பதில் மாறுபட்ட கருத்து தேவையில்லை என்கிறீர் களா?

ஆமாம்! இறந்த பூத உடலை இடுகாட்டிலோ சுடுகாட்டிலோ சேர்த்த பிறகு, பன்னிரண்டு நாட்கள் அந்தப் பிரேதத்துக்கான பணிவிடைகளின்போது, பிண்டமானது நீரில் வாழும் உயிரினங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. 12-வது நாள், பிரேதம் தென்புலத்தாராக மாறிவிட்டால், பிண்டமானது காகத்தின் பங்காக மாறிவிடும். இது, உயிரினங் களுக்குப் பகிர்ந்தளிக்கும் இடஒதுக்கீடு. ஒன்றுக்கொன்று மோதலை உண்டு பண்ணாத இந்த இடஒதுக்கீடானது சிறப்பு மட்டும் அல்ல, எல்லா உயிரினங்களையும் ஒன்றாகப் பார்க்கும் பாங்கு வளரவும் ஒத்துழைக்கிறது.

கோயில் குளங்களில் மீன்களுக்கு உணவளிப்பதை, ஒரு வேண்டுதலாக நடை

கேள்வி - பதில்

முறைப்படுத்துவது உண்டு. பஞ்சபூதங்களில் உருவான உயிரினங்களுக்கான பங்கை, அவற்றுக்கு ஆதாரமான நீரிலும் நிலத்திலும் சேர்ப்பது பொருந்தும். கங்கை நீரை ஆரத்தி எடுத்து வணங்குவது உண்டு. கோவர்த்தன மலையை வணங்குவது உண்டு. திருமலையை திருமாலாகப் பார்ப்போம். பிண்டத்தை நிலத்தில் வைத்தும், நீரில் கரைத்துதும் நிலம்- நீர் வாழ் உயிரினங்களுக்கு அளிப்பது சிறப்பு. பறவை இனத்தின் பிரதிநிதியாக காகத்துக்கு அளிப்பது உயர்ந்த சிந்தனை.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை!

ஈ, எறும்பு போன்ற உயிரினங்கள் முதல் பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள் வரை உன்னால் இயன்றளவு உணவளித்து, பிறகு உனது உணவை ஏற்கவேண்டும்; அதுவே சிறந்த அறம் என்கிறது ஸனாதனம் (ஆகிடபிபீலிகம்...). அதன் வெளிப்பாட்டில் உருவானவையே விருந்தும், அன்னதானமும்!

நாம் திருப்தியடைந்த பிறகு மிச்சம் இருப்பது பல விலங்கினங்களுக்குப் பயன்பட்டு முழுமை பெறுவதும் உண்டு. அறுவடைக்குப் பிறகான வைக்கோலும், எண்ணெய் ஆட்டிய பிறகு மிஞ்சும் புண்ணாக்கும், நெல் குத்திய தவிடும் நமக்கு உதவும் விலங்கினங்களுக்குப் பயன்பட்டன. வீட்டு முற்றத்தில் இருக்கும் மாசுகளையும் அழுக்கையும் உண்டு அகற்றித் தூய்மைப்படுத்தும் காகத்துக்கு உணவளிக்கும் ஒரு சிறப்பான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி, அதைக் கடமையாகச் செய்யப் பரிந்துரைக்கும் சனாதனத்தின் செயல்பாடு போற்றுதலுக்கு உரியது என்ற எண்ணம் தோன்றுவதற்கு ஏற்ப, நமது விவேகம் வளரவேண்டும்.

- பதில்கள் தொடரும்...