Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 18

பயத்தால் ஏற்படும் பாதிப்புசேவாரதனா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

விதைக்குள் விருட்சம் - 18

பயத்தால் ஏற்படும் பாதிப்புசேவாரதனா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

Published:Updated:

சை, கோபம், பயம் ஆகிய குணங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றில் இருந்து விடுபடுவதற்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்த வழிமுறைகள் குறித்தும் சென்ற இதழில் பார்த்தோம். 'சொல்வது எளிது; செய்தல் அரிது’ என்றனர் ஆன்றோர். ஏதாவது செய்து ஆசை, கோபம், பயம் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகளில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கிறது. ஆனால், அதற்காக எடுக்கப்படும் முயற்சிகள், எல்லோருக்கும் பயனளிப்பது  இல்லை. இதனால் பயம் மேலும் அதிகரிக்கிறது.

நிறைவேறாத ஆசை, அதனால் ஏற்படும் கோபம், பயம் இந்த மூன்றாலும் ஏற்படும் தீயவிளைவுதான் மன இறுக்கம்; மனக்கிலேசம்; மனக்குழப்பம். உயர்ந்த காற்றழுத்த மண்டலத்தால் கடலில் ஏற்படும் கொந்தளிப்பை Depression in the Bay’ ’ என்பார்கள். அதற்குச் சமமானதுதான் துயரத்தாலும் ஏமாற்றத்தாலும் தோல்வியாலும் மனதில் ஏற்படும் மனக் கொந்தளிப்பு!

மன இறுக்கம் என்றால் என்ன?

ஆசைகள் நிராசையாகும்போது ஏமாற்றம் உண்டாகும். அப்போது ஏமாற்றியவர்கள் மீது கோபமும் பழிவாங்கும் உணர்ச்சியும் உண்டாகிறது. தவறான வழிகாட்டுதல்களால் இதுபோன்ற வழிமுறைகளில் ஈடுபடும்போது மேலும் ஏமாற்றம் ஏற்பட்டு, பணம் செலவாகிறது. சுற்றியுள்ளவர்கள் நமது தவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்கள். உதவி செய்தவர்கள் பின்வாங்கி விடுகின்றனர். இதனால் தன்னம்பிக்கை குறைந்து, குற்ற உணர்வு மேலிடுகிறது. தொடர்ந்து துயரங்கள் நீடிக்கும்போது, மன இறுக்கம் அல்லது மனக்கலக்கம் எனும் மனநலக்குறைவு ஏற்படுகிறது.

இது மனம் சம்பந்தமான குறைபாடு. இதுபோன்ற மனநிலை, ஒருவரது உணர்வுகளைப் பெரிதும் பாதிக்கிறது. உலகில் எல்லா வயதினரும் இதுபோன்ற மன இறுக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. நூற்றுக்கு 35 பேர் ஏதோ ஒரு வகையில் மன இறுக்கத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

விதைக்குள் விருட்சம் - 18

மன இறுக்கத்தின் விளைவுகள்

It is not a disease; but a disorder என்று மருத்துவர்கள் கூறுவார்கள். மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவரிடம் சோகம், சோர்வு, பயம், திடீர் கோபம், நடத்தையில் மாற்றம், தன்னையே வெறுக்கும் நிலை, பிறரைப் பார்க்க விரும்பாத வெறுப்பு, திடீரென சிரித்தல், அழுதல், உயர்ந்த குரலில் கத்துதல் போன்ற இயல்புகள் காணப்படும். சில  நேரங்களில் மிகவும் சாதுவாகவும், சில தருணங்களில் முரட்டுத்தனமாகவும் நடப்பார் கள். வாழ்வில் எந்தப் பிடிப்பும் இருக்காது; எதிலும் ஈடுபாடு இருக்காது. தூக்கமின்மை, பசியின்மை போன்ற கோளாறுகளும் இருக்கும்.

மன இறுக்கத்துக்கான பொதுவான காரணங்கள்...

எதிர்பாராத துயரம் அல்லது அதிர்ச்சி;

வேலைப்பளு;

காதல், அன்பு, பாசத்தில் தோல்வி;

மோசமான குடும்பச் சூழ்நிலை;

மது, போதைப்பொருள் பயன்படுத்துதல்;

போதுமான உடற்பயிற்சி இல்லாமை;

முறையற்ற உணவுப் பழக்கம்;

உடல் பருமன்;

ஏமாற்றம்;

ரகசிய பரிமாணங்களால் ஏற்படும் குற்ற உணர்வு;

பொய் பேசுதல், ஏமாற்றுதல்;

பயம், பீதி, அதிர்ச்சி;

உடல்கூறில் கோளாறு;

பொருளாதாரச் சிக்கல்;

கடன் தொல்லை;

ஒழுக்கமின்மை;

தவறான வழியில் பொருளீட்டல்;

கொலைக் குற்றங்கள் செய்துவிட்டு, சட்டத்துக்கு மறைந்து வாழ்தல்;

தனிமை;

பிறரால் ஏளனம் செய்யப்படுதல்;

நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளாகுதல்;

பிறரால் ஒதுக்கப்படுதல்;

பாராட்டுதல்கள் கிடைக்காத சலிப்பு;

நோயால் ஏற்படும் விளைவுகளின் பயத்தால் ஏற்படும் மரண பயம்;

தொடர் முயற்சிகளில் தோல்வி;

மூளை மற்றும் இதயத்தில் ஏற்படும் சில ரசாயனக் கோளாறுகள்;

தொடர்ந்து எதிர்மறையாகவே சிந்திப்பது...ஆகியவற்றால் மன இறுக்கம் உண்டாகும்.

சரி! இதற்கு என்னதான் தீர்வு?

மனோதத்துவ ஆலோசனை: மன இறுக்கம், மற்ற நோய்களைவிடக் கொடிய கோளாறுகளை விளைவித்து, வாழ்வையே சூன்யமாக்கிவிடும். இதற்கு ஒரே வழி, கவுன்சலிங் எனப்படும் ஆலோசனைதான். தக்க மருத்துவர், அறிஞர் அல்லது மனோதத்துவ ஆலோசகர் வழங்கும் ஆலோசனை, இதுபோன்ற மன இறுக்கத்திலிருந்து வெளிவர உதவும்.

வெளியிலிருந்து தரப்படும் ஆலோசனை யாக மட்டும் இல்லாமல், பாதிக்கப்பட்டவரின் உள்ளே இருக்கும் ஆக்க சக்தியைக் கொண்டே அவரின் பயத்தை நீக்கி, பலத்தை உண்டாக்கினால் நிரந்தரத் தீர்வு கிடைக்கலாம். மன இறுக்கத்துக்கான காரணங்களைக் கண்டறிந்து, அதுபற்றி ஒளிவுமறை வின்றிப் பேசி, அதற்கான பரிகாரத்தைத் தேடிக் கொள்ளும்போது மனதின் பாரம் குறையும். தான் செய்த தவற்றை ஏற்றுக்கொள்ளும் துணிவும், பிறர் செய்த தவற்றை மன்னிக்கும் மனமும் இருந்தால் மன இறுக்கம் பெரிதளவில் குறையும்.

நமது திறமையையும் விருப்பத்தையும் அனுசரித்து, அதற்கேற்ப நோக்கங்களை நிர்ணயித்துக்கொண்டால் ஓரளவு தோல்வியைத் தவிர்க்கலாம்.

மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு பலர் தங்கள் வாழ்க்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை அந்தப் புதைமணலில் இருந்து தூக்கிக் காப்பாற்றவேண்டியது நண்பர்கள், சுற்றத்தார் மற்றும் மனோதத்துவ ஆலோசகர்களின் கடமை!

ஆன்மிக வழிமுறைகள்: தெய்வ வழிபாடு, சத்சங்கம், நல்ல இசை, ஆரோக்கியமான தேகம், யோகா பயிற்சி, தியானம், நல்ல நூல்களைப் படித்தல் ஆகியவை மன இறுக்கத்திலிருந்து வெளிவர உதவும்.

அர்ஜுனனின் மனஇறுக்கம்

குருக்ஷேத்திரப் போர் தொடங்கும் முன்பு அர்ஜுனனுக்கு ஏற்பட்ட மனநிலை ஒருவகை மன இறுக்கம் என்றே சொல்லலாம். ''கடலில் ஒரு ஓடத்தில் பயணம் மேற்கொண்ட ஒருவன் குடிக்கத் தண்ணீர் எடுத்துச் செல்ல மறந்துவிட்டான். படகைச் சுற்றிலும் தண்ணீர். ஆனால், குடிக்கமுடியாத உப்புத்தண்ணீர். அப்போது அவன் சொன்னான்... 'Water everywhere, not drop to drink' எங்கு பார்த்தாலும் தண்ணீர்; ஆனால் குடிப்பதற்குச் சொட்டுத் தண்ணீர்கூட இல்லை! அந்த நிலையில்தான் அர்ஜுனனும் இருந்தான்.

அவன் ஒரு மாவீரன். யாராலும் வெல்லமுடியாத ஆயுதங்களை வரமாகப் பெற்றவன். சுற்றிலும் பாண்டவ சேனை, தருமன், பீமன், நகுலன், சகாதேவன், கடோத்கஜன், அபிமன்யு போன்ற வீரர்கள் அரணாக நின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவனுக்குத் தேரோட்டிக்கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் போரிடத் தயங்கிய அர்ஜுனனின் நிலைமையை பயம் என்பதா? தயக்கம் என்பதா? தன்னம்பிக்கை இல்லாததால் ஏற்பட்ட விளைவு என்பதா?

உண்மையில், அர்ஜுனன் மன இறுக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தான். அதனால்தான், தவிர்க்க முடியாத அந்த சந்தர்ப்பத்தில், போரைத் தவிர்க்கக் காரணங்களைத் தேடிக்கொண்டிருந்தான். அவனது கடுமையான மன இறுக்கத்தைப் போக்க, கண்ணன் தந்த மனோதத்துவ ஆலோசனைகள்தான் பகவத்கீதை.

கண்ணன் தந்த ஆலோசனை

மன இறுக்கத்தில் இருப்பவர்கள் ஆலோசனை களை விரும்பமாட்டார்கள். தாங்கள் சொல்வதே சரி, மற்றவர்கள் சொல்வது தவறு என்ற எண்ணமே அவர்களுக்கு இருக்கும். எனவே, மனோதத்துவ ஆலோசனை சொல்பவர்கள் எதையும் நேரடியாகச் சொல்லாமல் நாசூக் காகச் சொல்வார்கள். அப்படித்தான் பகவான் கிருஷ்ணனும் கீதையில் சொல்கிறான். அர்ஜுன னுக்கு கண்ணன் கூறும் வாசகங்கள் அவனைப் பெருமைப்படுத்துமாறு அமைகின்றன. அவனது சிறுமையை அது தவிர்க்கிறது. அதனால், மன இறுக்கத்தில் இருந்தாலும், அர்ஜுனனால் அதை ஏற்றுக்கொள்ள முடிந்தது.

பகவத்கீதை 2-வது அத்தியாயம் ஸாங்கிய யோகம், 38-வது ஸ்லோகம், 'இன்பம், துன்பம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி ஆகியவற்றைச் சமமாகக் கருதி போர்புரிவாய். அதனால் நீ பாபம் அடையமாட்டாய்!’ என்கிறது.

ஸாங்கிய யோகம்- 48வது ஸ்லோகம், 'முயற்சி வீண் போகாது. அதனால் குற்றம் வராது. இதை சிறிது முயற்சித்தாலும் பெரும் பயத்திலிருந்து நீ காப்பாற்றப்படுவாய்’ என்கிறது.

'ஒரு காரியத்தைச் செய்’ என்று மன இறுக்கமுள்ளவனுக்கு ஆணையிட முடியாது. ஆனால், அவனுக்கான ஊக்கத்தை உண்டாக்கலாம். அதனைச் செய்யும் ஆவலைத் தூண்டலாம். அதனைச் செய்தால் தவறோ, தோல்வியோ வராது என்று உறுதி தரலாம். அப்போது, எதையும் செய்துமுடிக்க முடியும் என்ற  துணிச்சல் வரும். அதைத்தான் கண்ணனும் செய்தான்.

- விருட்சம் வளரும்

நஷ்டம்...  பத்து லட்சம்! 

திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்த கிராமத்தான் ஒருவன் திடீரென ஓவென்று அழ ஆரம்பித்தான். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து விசாரித்தார்கள். ''அநியாயமா பத்து லட்சம் ரூபாய் நஷ்டமாயிடுச்சே!'' என்று கதறித் தீர்த்தான். 'எப்படி நஷ்டம் வந்தது? உனக்கு ஏது அவ்வளவு பணம்? எந்த வியாபாரத்தில் போட்டு நஷ்டம் அடைந்தாய்?’ என்றெல்லாம் அக்கறையுடன் விசாரித்தார்கள்.

''இந்த பேப்பரில் ராஜஸ்தான் லாட்டரிச் சீட்டு ரிசல்ட் வந்திருக்கிறது. முதல் பரிசு 10 லட்சம், அதுதான் நஷ்டமாகிவிட்டது!'' என்று அவன் தேம்பி அழுதான்.

விதைக்குள் விருட்சம் - 18

''நீ லாட்டரிச் சீட்டு வாங்கி, அதைத் தொலைத்து விட்டாயா?'' என்று கேட்டார்கள் சுற்றி இருந்தவர்கள்.

''இல்லை. லாட்டரிச் சீட்டு வாங்க மறந்து விட்டேன். அதனால்தான் அழுகிறேன்!'' என்றான் அந்தக் கிராமத்தான்.

இப்படித்தான், இல்லாத பிரச்னைகளை எண்ணி எண்ணி, அதற்காகவே கவலைப்பட்டு, பயந்து, மன இறுக்கத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் நம்மில் பலர்.