Published:Updated:

சக்தி சங்கமம்-2

எனக்கும் ஓர் ஆசை உண்டு!வாசகர்களுடன் கலந்துரையாடுகிறார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்துடன் நல்ல நல்ல கேள்விகளாக வாசகர்கள் கேட்க, அவர்களின் மூலம் நல்ல நல்ல விஷயங்கள் சக்தி விகடன் வாசகர்களுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில், ஒவ்வொரு கேள்விக்கும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நிறுத்தி நிதானமாக, தெளிவான பதில்களைச் சொன்னார். அதை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கவனித்து உள்வாங்கிக் கொண்டார்கள் வாசகர்கள். சோழ தேசத்துக் கோயில்கள் குறித்தும், தன் பால்யம் குறித்தும் சொல்லிவிட்டு, அடுத்த கேள்விக்கு தயார் என்பதுபோல், வாசகர்கள் ஒவ்வொருவரின் முகத்தையும் உற்றுப் பார்த்தார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

? ''நல்லதுக்குக் காலமில்லை என்கிறார்களே... இது குறித்து உங்கள் கருத்து என்ன சுவாமி?'' - இது வாசகி ஜெயந்தியின் கேள்வி.

கேள்வியை முடிக்கும் முன்பே பதில் வருகிறது சுவாமிஜியிடம் இருந்து. ''நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து அப்படி ஒருபோதும் நினைக்காதீர்கள். நல்லவன் கெட்டதாகவோ, அழிந்ததாகவோ சரித்திரமே இல்லை. நல்லதுக்குக் காலமில்லை என்று சொல்வது தவறு; நல்லதுக்குத்தான் எப்போதுமே காலம் உண்டு. நல்லவர்களுக்குத்தான் எப்போதுமே காலம் உண்டு! எனவே, கவலையை விட்டுவிட்டுக் கடமையில் கண்ணும் கருத்துமாக இருங்கள்!'' என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் சுவாமிஜி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சக்தி சங்கமம்-2

? ''ஒட்டுமொத்த இந்தியாவை, தமிழகத்தில் பால்ய வயதில் பார்த்ததற்கும், இதோ... இப்போது உங்களின் ஆஸ்ரமத்தில் இருந்து பார்ப்பதற்குமான வேறுபாடாக எதை நினைக்கிறீர்கள்?'' - வாசகி கிருத்திகா தரன் கேட்டார்.  

 ''நம்ம இந்தியப் பண்பாட்டில் ஒற்றுமையும் இருக்கு; வித்தியாசமும் இருக்கு. சின்னச் சின்ன வித்தியாசங்கள் இருந்தாலும், நம்ம பண்பாடு எப்பவுமே பிரமிக்கத்தக்கது!

தவிர, வயசும் இடமும்தான் என்னைப் பொறுத்தவரை வேறு. ஆனா, அதே மனசுதானே! அப்ப சின்ன வயசுல, 'இப்படி இப்படியெல்லாம் இருந்தா நல்லாருக்குமேனு நினைச்சுக்குவோம். இப்ப, அப்படி நினைச்சதையெல்லாம் செயல் படுத்தவும் செய்யறோம். இந்தச் சின்ன வேறுபாடு தவிர, வேற எதுவும் எனக்குத் தோணலை.

உங்களுக்கு ஒரு விஷயம்... தமிழ்நாட்ல ரொம்ப வருஷமெல்லாம் நான் இல்லை. படிப்பெல்லாம் இங்கேதான் (பெங்களூரு). ஆனாலும் தமிழ் நாட்டின்மீது என் அடிமனசுல ஒரு ஈர்ப்பும் பாசமும் வேர்விட்டுக் கிடக்கு. இதுதான் இன்னிக்கு இந்தியா முழுசும், உலகம் முழுசுமா வளர்ந்து பெரிய மரமாயிடுச்சோ, என்னவோ?!''என்று சொல்லி, குழந்தை போல் சிரிக்கிறார் ரவிசங்கர்ஜி.

அப்போது அங்கே, விநாயகரைத் தரிசிக்க நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்தார். பிள்ளையாரை பிராகாரமாகச் சுற்றி வலம் வந்தார். எதிரில் நின்று, கண்மூடி வேண்டிக்கொண்டார். ''இவர், ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் சகோதரி பானுமதி'' என்று ஆஸ்ரம அன்பர் ஒருவர் மெல்லிய குரலில் சொல்லி, அவரிடம் நம்மை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

''ஓ... விகடன் வாசகர்களா? எல்லாருக்கும் வணக்கம்'' என்று கைகூப்பினார் பானுமதி. ''உங்களையெல்லாம் சந்திச்சதுல ரொம்பவே மகிழ்ச்சி. வரட்டுங்களா?'' என விடைபெற்றார்.

''இவர்தான் இந்த ஆஸ்ரமத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தையும் பார்வையிட்டு, ஆஸ்ரமமானது எப்படி எப்படியெல்லாம் இருக்க வேண்டும், அவற்றை எவ்விதமாகப் பராமரிக்க வேண்டும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள சேவைகள் என முழுவதுமாகத் திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறார்'' என்று சுவாமிஜி சொல்லி முடிக்க, அடுத்த கேள்வியைக் கேட்டார் வாசகி ஜோதி.

சக்தி சங்கமம்-2

? ''கர்நாடகம், தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் வாழும் கலைக்கான ஆஸ்ரமங்களும் மையங்களும் இருக்கின்றன. சுனாமி, பூகம்பம், இலங்கைப் போர் அழிவு என எங்கே, என்ன துக்கம் நடந்தாலும், அங்கே விரைந்து சென்று, பொருளாதார வகையிலும் உடல் ஒத்துழைப்பிலும் ஈடுபடுகிறது வாழும் கலை அமைப்பு. இது எப்படிச் சாத்தியமாயிற்று?''

அப்போது, ஒடிசாவில் இருந்து சிலர் வந்திருந்தார்கள். வாசகர்களிடம் 'ஒரு ரெண்டு நிமிஷம்’ என்பதாக சைகை காட்டிவிட்டு, அவர்களிடம் பேசி, வழியனுப்பி வைத்தார் சுவாமிஜி. பின்பு, ''இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்று சொல்லப் படும் ஒடிசாவில் இருந்து வந்திருக்கிறார்கள் இவர்கள். அந்த மாநிலத்து மக்களின் வளர்ச்சிக்கும் கல்வி மேன்மைக்கும் அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் சில விஷயங்களைச் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்துவிட்டால், செயலாற்றுவது ரொம்பவே சுலபம். நீங்கள் குறிப்பிட்ட ஊர்களிலும் அப்படித்தான் நடந்தது'' என்றார்.

? ''இலங்கைக்குச் சென்றது, பாகிஸ்தானில் வாழும் கலைப் பயிற்சி கொடுத்ததுன்னு அவற்றைப் பற்றிச் சொல்லுங்களேன்..?'' - இது வாசகர் ராஜாமணியின் கேள்வி.

''வாழும் கலைப் பயிற்சி என்பது உலக அளவில் எல்லா மனிதர்களுக்கும் அவசியம் தேவை. குறிப்பா, இலங்கைலயும் பாகிஸ்தான்லயும் ரொம்ப ரொம்பத் தேவையாயிருக்கு, இந்தப் பயிற்சி. பாகிஸ்தான்ல மூணு இடங்கள்ல வாழும் கலைப் பயிற்சியைச் சொல்லிக் கொடுத்துக்கிட்டிருக்கோம். அங்கே மக்கள் மனசுல மெள்ள மெள்ள ஒரு நிதானமும் அமைதியும், ஆழ்ந்து சிந்திக்கற மனோபாவமும் வளர ஆரம்பிச்சிருக்கு. இதெல்லாம் தலிபான்களுக்கு ஒரு பயத்தை, பீதியைக் கொடுத்திருக்கு. அதுதான் இந்தப் பயிற்சியோட வெற்றி!

பயிற்சிக்கூடத்தை காலி பண்ணச் சொல்லி மிரட்டினாங்க. அப்புறம் வேற இடத்துக்கு மாறி, அங்கே எந்த இடையூறும் இல்லாம நடந்துச்சு பயிற்சி. ஆனா, ஆவேசப்பட்ட தலிபான்கள், ஆஸ்ரமத்துக்கு தீ வைச்சாங்க. நல்லவேளை... உயிரிழப்பு எதுவும் இல்லாம பொருள் நஷ்டத்தோட இந்தப் பிரச்னை ஓய்ஞ்சுது. ஆவேசம், அழிவுக்கான பாதை. அன்புதான், கடவுளை நோக்கி நம்மைச் செலுத்தும். இதைப் புரிஞ்சுக்கிட்டாப் போதும்; வாழ்க்கை வளமாயிடும்; நம்ம வசமாயிடும்!'' என்று புன்னகைத்தார் சுவாமிஜி.

அடுத்த கேள்வியை வாசகி கிருத்திகா தரன் கேட்டார்...

''தீர்த்தாடனமும் க்ஷேத்திராடனமும் நம் முன்னோருக்கு முக்கிய கடமைகளா இருந்தன. புண்ணிய தீர்த்தங்களையும் நதிகளையும் தேடித் தேடிப் போய் நீராடினார்கள். அவர்கள் உயிருக்கு உயிரா போற்றி வணங்கிய புண்ணிய நதிகள் எல்லாம் இப்ப மாசுபட்டுக் கிடக்கு. அதுபற்றி உங்களோட கருத்து என்ன?''

''நதிகள் எல்லாமே புண்ணிய நதிகள்தான். அதுல எந்த பேதமும் இல்லை. அந்தப் புண்ணிய நதிகளை அதிகமா பயன்படுத்தறது நாமதான்! அப்படிப்பட்ட நதிகளைத் தூய்மையா வைச்சுக்கறது நம்மளோட பொறுப்பு. ஆனா, நாம என்ன செய்யறோம்... குப்பைகளாகவும் கழிவுகளாவும் நதிகளை மாசுபடுத்தி வெச்சிருக்கோம். துணிகளை நதியில் போடுறதும், பிளாஸ்டிக் குப்பைகளை மிதக்க விடுறதும் பார்க்கவே வேதனையா இருக்கு.

புண்ணிய நதிகள், தெய்வத்துக்குச் சமமானவை. நாம நதியை வணங்கற சடங்கு சாங்கியங்களுக் குச் சொந்தக்காரங்க. நதியை வணங்கறதா இருந்தா, நதியில ஒரு பூ போடுங்க. அதுவே மகா புண்ணியம். புடவை, வேஷ்டியைப் போடுறது, மரக்கிளைகளை மிதக்க விடுறது, குப்பைத்தொட்டி மாதிரி கழிவுகளைக் கொட்டுறதெல்லாம் பாவம். ஒரு கிலோ அரிசியோ பொரியோ வாங்கிப் போடுங்க... மீன்களுக்கெல்லாம் உணவு போட்ட புண்ணியம் கிடைக்கும். தமிழ்நாட்ல பாலாறு எவ்வளவு மோசமாயிருக்குனு பார்த்தீங்களா? அந்த பாலாற்றைப் எப்படிக் காப்பாத்தலாம், பாதுகாக்க என்ன பண்ணலாம்னு இப்பத் திட்டமிட்டிட்டிருக்கோம். கூடிய சீக்கிரமே, பாலாற்றைப் பாதுக்காக்கற பணியில இறங்கப் போறோம்!'' -அக்கறையும் கரிசனமுமாக பதில் சொல்கிறார் சுவாமிஜி.

? ''சுவாமிஜி! பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் பெரிய அளவில் வளர்ந்து வருகின்றன. இதை, நம் நாட்டின் வளர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாமா? கலாசார சீரழிவு என்பதாகச் சொல்லலாமா?'' என்று வாசகர் ராஜீவ்கணேஷ் கேட்டார்.

''உலகமயமாக்கப்பட்ட சமுதாயத்தில் இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எனவே, கிணற்றுத் தவளையாகத் தனித்திருக்க முடியாது நம்மால்! அதேநேரத்தில், நவீன உலகில், நம் கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுக்கு எந்த பங்கமும் வராத வகையில் வாழவேண்டிய கடமையும் நமக்கு இருக்கு. ஓர் உண்மையான குடிமகன், நேர்மை யான கணவன், அன்பான தந்தை ஆகியோரின் கடமை ஒழுக்கமாக நடப்பதுதான்! எந்த நேரத்திலும் கடமை தவறிவிடக்கூடாது. அதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் மிக மிக அவசியம்!''

சக்தி சங்கமம்-2

''ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞர்களும் யுவதிகளும் எப்போதும் ஒருவித மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கேட்கவே வேதனையாக இருக்கிறதே சுவாமி..?’ - வாசகி மணிமொழி முடிப்பதற்குள், சுவாமிஜி ஆரம்பித்தார்...

 ''உங்கள் வேதனையில் மனிதாபிமானம் தெரிகிறது. அடுத்தவருக்காக இரக்கப்படுவதும், அவர்களின் நிலையை நினைத்து வருத்தம் கொள்வதும் நல்ல பண்பான செயல். மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும் மன உறுதியுடன் எதையும் எப்போதும் கைக்கொள்வதற்கும், மூச்சுப் பயிற்சியும் யோகா பயிற்சியும் இருக்கின்றன. 'வாழும் கலை’ இந்தப் பயிற்சிகளை முன்னிறுத்தியே கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. ஒருநாளில் ஒருமுறையேனும் வாழும் கலைப் பயிற்சியை செய்தால் போதும்... மன அழுத்தத்தில் இருந்து மிக எளிதாக விடுதலை கிடைத்து, எப்போதும் உற்சாகத்துடன், குழப்பமின்றி வாழ முடியும்!''

? 'சுவாமிஜி. நீங்கள் போகாத நாடே இல்லை. அங்கே உள்ள தமிழர்கள் பற்றியும் கோயில்கள் பற்றியும் சொல்லுங்களேன்?'' - வாசகி மகாலட்சுமியின் இந்தக் கேள்விக்கு ஆர்வத்துடன் பதில் சொன்னார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

''இதுவரை 110 முதல் 120 நாடுகள் வரைக்கும் சென்றிருக்கிறேன். எல்லா நாடுகளிலும் இந்தியர் களை, குறிப்பாகத் தமிழர்களைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். அவர்கள் தமிழின் மீதும் நம் கலாசாரத்தின் மீதும் மிகுந்த மரியாதையுடன் இருக்கிறார்கள். சம்பாதிக்கிற பணமோ, அந்த நாட்டின் சூழலோ அவர்களை எள்ளளவும் மாற்றவே இல்லை; அல்லது அவர்கள் மாறத் தயாராக இல்லை. நம் கலாசாரம், பண்பாடு, சேவை குணம் ஆகியவற்றைக் கண்டு, வெளிநாட்டினர் பிரமிப்பாகப் பார்ப்பதை எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அதேபோல், நான் பார்த்தவரையில், இலங்கைத் தமிழர்கள்தான் ஆலயங்களை வெளிநாடுகளில் கட்டி, அத்தனை நேர்த்தியாகவும் தூய்மையாகவும் பராமரித்து வருகிறார்கள். அங்கே நம் ஊரில் இருந்து குருக்களையும் பட்டாச்சார்யர்களையும் அழைத்து, தினசரி பூஜையை குறைவறச் செய்கிறார்கள். கலையை வளர்க்கும் விதமாக, நாகஸ்வரக்காரர்களைப் பல கோயில்களிலேயே நிரந்தரமாக வைத்திருக்கிறார்கள் என்றால், இவர்களின் பக்தியை என்னவென்று சொல்வது? ஆலயங்களைக் கட்டி, பொறுப்புடன் பராமரிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு என் இதய நன்றியை சொல்லிக்கொள்வதில் பெருமிதப்படுகிறேன்'' என்று நெகிழ்ந்து சொன்னார் சுவாமிஜி.

''நம் இந்திய நாடு வல்லரசு நாடாக என்ன செய்யவேண்டும்?'' என்று வாசகர் ராஜீவ் கணேஷ் கேட்டதும் உற்சாகமானார் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.

''இளைஞரான நீங்கள், இந்தக் கேள்வியைக் கேட்டதில் மகிழ்ச்சி எனக்கு! நீங்கள் கேட்ட இந்த வேளை... இந்தியாவுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது.ஊழலை அழிப்பதற்கும் இந்தியாவை முன்னேற்றுவதற்குமான பல திட்டங்களை உருவாக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்தியாவில் நாம் எல்லோரும் விரும்புகிற மாற்றங்கள் மெள்ள மெள்ள வரப்போகின்றன. இன்னும் சில வருடங்களில், 'இந்தியா வல்லரசு’ என வல்லரசு நாடுகளே பகிரங்கமாக அறிவிக்கப்போகின்றன, பாருங்கள்!'' என்று உறுதியுடன் சொன்னார் சுவாமிஜி.

? ''எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என்று சிறு வயதில் விரும்பினீர்கள்?'' - தயங்கித் தயங்கிக் கேட்டார் வாசகி ஜெயந்தி.

''இப்படி ஆகவேண்டும் என்று சின்ன வயதில் மட்டுமல்ல; இப்போதும் எப்போதுமே நினைக்கிறவன் இல்லை நான்! ஆனால், என்னவாக ஆகமுடியுமோ, அதெல்லாம் நல்லபடியாகவே நடந்துவிட்டது. இதோ... இந்த நிமிஷம் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் நிறைவாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.

மாறாக, ஏதாவது ஆகவேண்டும் என்று நான் விருப்பப்பட்டிருந்தால், இப்போதைய ஸ்தானத்தில் நான் அமர்ந்திருக்க முடியாது. அதைப் பெற வேண்டும், இதை அடைய வேண்டும் என்கிற ஆசைகள் என்னிடம் இல்லை. ஒரேயொரு ஆசை மட்டும் உண்டு. உலக மக்கள் அனைவரும் மன அழுத்தங்கள் இல்லாமல், உள்ளத்தில் தெளிவும் உதட்டில் புன்னகையும் நிறைந்து, அமைதியாக, ஒற்றுமையாக வாழ வேண்டும். என் ஆசை இதுதான்!'' என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டார். நெஞ்சில் கை வைத்தார். பிறகு, கண் திறந்து முகம் மலரச் சிரித்தார்.

''தனி மனித ஒழுக்கம் குறைந்து வருவதால்தான், குற்றங்கள் அதிகரிக்கின்றனவா, குருஜி?'' - வாசகி சுதாவின் கேள்வி இது.

 ''நாம் எல்லோரும் சார்ந்து வாழ்பவர்களே! எனவே, எல்லோரும் ஒரே வித குணாதிசயம் கொண்டவர்கள்தான். ஆனால், நமக்குள் சகோதரத்துவம் என்பது கொஞ்சம்கூட இல்லை; சகோதரத்துவமும் தோழமை உணர்வும் இல்லாததால், ஒற்றுமையும் இல்லை; விட்டுக் கொடுப்பதும் குறைந்துவிட்டது. இதன் விளைவு... பேசித் தீர்க்க வேண்டியவை, ஆயுதங்களைத் தூக்குகிற பிரச்னைகளாகப் பெரிதாகிப் போயின. ஆக, குற்றங்களுக்கான ஆணிவேர்- அன்பு இல்லாமையே!''

சக்தி சங்கமம்-2

''பெண்களைச் சக்தி என்கிறோம். உங்கள் பார்வையில், நீங்கள் எப்படிச் சொல்வீர்கள்?'' என்று வாசகர் ராஜாமணி கேட்டார்.

''மென்மையும் வலிமையும் கொண்டவர்கள் பெண்கள். உயிர்ச் சக்தியின் மூலமாக, இந்த பிரபஞ்சத்தையே உருவாக்கிய சக்தி அவர்கள்! இதனால்தான் அவர்களை சக்தி என்றும், ஆத்ம சக்தி என்றும் போற்றிக் கொண்டாடுகின்றன புராணங்கள்.

நம் சமுதாயத்தின் பலதரப்பட்ட விஷயங்களை ஒருங்கிணைத்துச் செல்பவர்கள், பெண்களே! சிருஷ்டிக்கும் சக்தியைப் பெற்றவர்களும் அவர்கள்தான். அதைக் கட்டிக்காக்கிற பலத்தைக் கொண்டவர்களும் அவர்களே! உலகில் ஒருவருக்கு முதல் குரு, அவரின் தாயார்தான். சகலத்தையும் கற்றுத் தருகிற முதல் ஆசான், அம்மாதான்!

கல்வியில், வேலையில், ஆய்வுப் பணிகளில், முக்கியமாக நம் இல்லங்களில் இன்றைக்கும் பொறுப்புகளை ஏற்று நடத்தி, தனக்கான ரோல் என்ன என்பதை உணர்ந்து, சிறப்புறக் கடமையாற்றி வருகிறார்கள் பெண்கள். அவர்களுக்கான வெற்றிகளும் கிரீடங்களும் உயரங்களும் இன்னும் இன்னும் இருக்கின்றன. அவற்றை அடைந்தே தீருவார்கள். அப்போது இந்த உலகம், இன்னும் புத்தொளி பெறும்.

பெண்ணில் இருந்துதான் உலகம் துவங்குகிறது. எனவே, பெண்கள் வாழ்ந்தால், ஒட்டுமொத்த உலகமே உயர்வு பெற்று வாழும். அவர்களை வாழச் செய்வதும், அவர்களால் நாம் வாழ்வதும்கூட ஒருவகையில் வாழும் கலைதான்!'' - சொல்லிவிட்டு, எழுந்தார் ஸ்ரீஸ்ரீரவிசங்கர். கைகூப்பி, ஒவ்வொருவருக்கும் விடை கொடுத்தார். வாசகர்களின் முகத்தில் தாமரை போன்ற மலர்ச்சி! அது, சிந்தனையிலும் செயலிலும் இன்னும் மலர்ச்சியும் நறுமணமும் சேர்ந்ததன் அடையாள பூரிப்பு!

தொகுப்பு: வி.ராம்ஜி

படங்கள்: க.தனசேகரன்