Published:Updated:

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

காலக் கணிதத்தின் சூத்திரம்!`சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ர்க்கடக ராசியில் பிறந்த வேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இருக்கும்போது, குரு த்ரிம்சாம்சகத்தில் தோன்றியவள் குணக்குன்றாக விளங்குவாள் என்கிறது ஜோதிடம். பெண்மைக்கு உகந்த குணம் மட்டுமல்லாமல், உலகவியல் வாழ்க்கைக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும் குணங்கள் (நல்ல எண்ணங்கள்) அவளிடம் முழுமைபெற்று விளங்கும். தாம்பத்திய வாழ்வின் இறுக்கத்தை உறுதி செய்யும் மனோ குணங்களும் அவளிடம் இணைந்திருக்கும். அதைச் சுட்டிக்காட்டும் வகையில், 'நிறைந்த குணங்கள்’ (பஹுகுணா) எனும் சொற்றொடரால்  விளக்கம் அளிப்பார் வராஹமிஹிரர்.

இந்தப் பெண்ணிடம் அலசி ஆராயும் திறனும், இணைந்து செயல்படும் பாங்கும் தென்படும். இது நிறைந்த குணங்களின் வெளிப்பாடு. தகவலை உள்வாங்காமல் மேலெழுந்தவாரியான கருத்தை ஏற்று, எதிர்ப்பு அல்லது ஏற்பை வெளிப்படுத்துவது, போதுமான குணமின்மையையே பறைசாற்றும். எதிர்ப்போ, ஏற்போ... தகவலை மனதில் பதியவைத்து, ஆராய்ந்து, உட்கருத்தை உணர்ந்து அதை வெளிப்படுத்துவது சிறப்பு!

நவகிரகங்களில் சுப கிரகம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கூட்டு முயற்சியில் எட்டவேண்டிய பலனை உணர்ந்து, உகந்த முறையில் ஒத்துழைப்பு அளித்து உதவுவது குணக்குன்றானவளின் இயல்பு என்கிறது ஜோதிடம். உயிரினங்களில் பரிவான பார்வை,

பொறுமை, பொறாமையின்மை, தூய்மை, பேராசையின்மை, பிற பொருள்களில் பற்றின்மை ஆகியவை அவளிடம் இருக்கும். அத்துடன் பரோபகாரம், ஈவு, இரக்கம், பணிவு, பரிவு, பிறர் நன்மைக்கு பாடுபடுவது, பொதுநலனில் அக்கறை, எல்லோரையும் அரவணைத்துச் செயல்படும் இயல்பு, தூய்மையான வாழ்க்கை, உயர் சிந்தனை ஆகிய அத்தனையும் அவளில் தென்படும் என்கிறது ஜோதிடம்.

குரு - தட்ப கிரகம்; சுப கிரகம்; எதிரிடையான கிரகங்களின் சேர்க்கையில், தனது இயல்பை இழக்காத கிரகம். அவர் வெப்ப கிரகங்களின் கடுமையைக் குறைப்பவர். அவற்றின் சேர்க்கையில், தன்னை வெப்ப கிரக இயல்புடன் இணையவிட மாட்டார். சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் இணைந்தாலோ, அவர்களைப் பார்த்தாலோ, அவர்களது செயலை திசைதிருப்பிவிடுவார். நவகிரகங்களில் 'சுப கிரகம்’ என்று சொல்ல முழுத்தகுதி பெற்றவர்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

பாப கிரகமும் செயலிழக்கும்!

புதன், சந்திரன், சுக்கிரன் ஆகியோருடன் பாப கிரகங்கள் இணைந்தாலோ அல்லது பார்த்தாலோ அவற்றின் தாக்கத்தால் அவர்களும் பாப கிரகங்களாக மாறிவிடுவார்கள். ஆனால் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன் குரு இணைந்தாலும் சரி, பார்த்தாலும் சரி... அவர்கள் அனைவரும் (பாவ கிரகங்கள்) தனது வலிமையை இழந்துவிடுவார்கள். அவர்களது  தனித் தன்மையை வெளிப்படுத்த இயலாமல் செய்துவிடுவார் குரு.

உதாரணமாக, பெண் ஜாதகத்தில் 7-ல் குருவும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால் ஏற்படும் விளைவை பார்ப்போம். தனியாக இருக்கும்போது, கணவனை இழக்கவைக்கும் வலிமையைப் பெற்றிருப்பான் (செவ்வாய்). குருவின் சேர்க்கையால் கணவனை இழக்கவைக்கும் தகுதி பறிபோய்விடும். இங்கு குருவின் நல்ல எண்ணம் வென்றுவிடும். குருவின் சேர்க்கையில் செவ்வாய் தோஷம்

இல்லை என்பதற்கு, 'செவ்வாயின் செயல்பாடு ஸ்தம்பித்துவிடும்’ என்று பொருள். ஆனாலும், தாம்பத்தியம் சிறப்பாக இருக்கும் என்பதற்கு அது உத்திரவாதம் அளிக்காது.

6, 8, 12-ல் குரு, நீச குரு மற்றும் கேந்திராதிபத்ய தோஷமுடைய குரு. இந்த மூன்று நிலைகளில் குருவின் செயல்பாடு மாறுபட்டுத் திகழும். ராசி சக்கரத்தில் தவறான இடங்களில் குரு இருக்க நேர்ந்தாலும், அந்த ராசியின் பங்கில் குருவுக்கு இயல்பு மாற்றம் ஏற்படுமே தவிர, தனிப்பட்ட முறையில் என்றைக்கும் சுபத்தை வெளியிடும் கிரகமாகவே குரு விளங்குகிறார். ஆகையால்தான் அத்தனை குணங்களையும் ஒருசேர அளிக்கும் திறமை இருப்பதை, அவருடைய த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவளிடம் காண முடிகிறது (பஹுகுணா).

கர்க்கடக ராசி நண்டு வளைய வரும் இடமாக சுட்டிக்காட்டப் பட்டிருப்ப தால், ஈரப்பதம் காயாமல் இருக்கும் ராசி அது. ராசியின் அதிபதி சந்திரன் நீர்மயமான கிரகம். ஹோரையில் சூரியனும், த்ரேக்காணத்தில் செவ்வாயும், த்ரிம்சாம்சகத்தில் குருவும் இணைந்த வேளையில் தோன்றி, பெண்ணிடம் குருவின் முழுத் தகுதியும் அதாவது குணங்களைத் தோற்றுவிக்கும் இயல்பும் அவளிடம் தங்கிவிடுகிறது.

சூரியனின் செல்வாக்கும், செவ்வாயின் திடசித்தமும்!

ராசியில் 12 முதல் 20 பாகை வரை குரு த்ரிம்சாம்சகம் பரவி

இருப்பதால், 2-வது த்ரேக்காணத்தில் செவ்வாய், ஹோரையில் சூரியன் இருந்தும், அவர்களின் தாக்கத்தை அடிபணியவைத்து, தனது இயல்பை அவளிடம் தோற்றுவிக்கிறார் குரு.

செவ்வாய், சூரியன்- வெப்ப கிரகங்கள்; சந்திரன், குரு - தட்ப கிரகங்கள். இவர்களது இணைப் பில் வெப்பம் தணிந்து தட்பம் மேலிட்டு, நல்ல குணங்கள் உதயமாக இடமளிக்கிறார் குரு. வெப்பம் ஆயாசத்தை அளிக்கும்; தட்பம் ஆயாசத்தை அகற்றும். வெப்பம் மாறுதலைத் தோற்றுவிக்கும்; தட்பம் இயல்பை மாற வைக்காது. வெப்பம் ஆன்ம குணங்களை ஏற்கவைக்கும்.  பொறுமை, பணிவு, ஈவு, இரக்கம், தாட்சண்யம், அன்பு, பண்பு, அரவணைப்பு, பொதுநலம் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாட்டை நடைமுறைப்படுத்தும்.

செவ்வாயின் சுறுசுறுப்பும், சூரியனின் உறுதியும் நல்ல குணங்களில் இணைந்து அதன் தரத்தை உயர்த்திவிடும். சூரியனின் செல்வாக்கும் செவ்வாயின் திடசித்தமும் நல்ல குணங்களை நிலைநிறுத்துவதில் ஒத்துழைக்கும். ஆன்மகாரகனான சூரியன், மனதுக்குக் காரகனான சந்திரன், உற்சாககாரகனான செவ்வாய்... இந்த மூவரும் குருவின் விருப்பத்துக்கு இணங்க, தங்களுடைய தனிச் செயல் பாடுகளை அடக்கிக்கொண்டு, 'காரக கிரகம்’ என்ற தகுதியை மட்டும் வைத்து, குருவுக்கு ஊக்கமளிக்க செயல்படுவார்கள்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

இயல்பை வரையறுக்கும் த்ரிம்சாம்சகம்

ராசியின் பாகுபாடு (வெப்ப- தட்ப ராசியா, ஒற்றை- இரட்டை

ராசியா), ராசிநாதன், த்ரேக்காணதி

பதியின் தரம், ஹோரையின் அதிபதிகள்- இவற்றுடன் இணைந்த த்ரிம்சாம்சகம், பிறந்தவரின்

இயல்பைச் சுட்டிக்காட்டும் என்கிறது ஜோதிடம். த்ரேக்காணத்தில்

1, 5, 9-ன் இணைப்பு, ஹோரையில் சூரிய-சந்திரர்களின் இணைப்பு, இவற்றுடன் சேர்ந்து த்ரிம்சாம்சகம் இயல்பை இறுதி செய்கிறது.

லக்னம்- பிறந்தவேளை, நட்சத்திரம்- சந்திரன் இருக்கும் இடம். லக்னமும் மனமும் சேர்ந்த இடம்.  1 - ஆயுள், 5 - பூர்வ ஜன்ம கர்மவினை, 9 - அதன் அளவு (பாக்கியம்)ஆகியன த்ரேக்காணத்தில் அடங்கும். ஹோரையில் ஆன்ம காரகனான சூரியனும், மனதுக் குக் காரகனான சந்திரனும் அடங்குவர். ஒருவரது இயல்பை வரையறுக்க, இந்தத் தகவல்கள் போதுமானது என்று  ஜோதிடம் அறிவுறுத்துகிறது. பிறந்தவேளை, நட்சத்திர பாதம், இவற்றுடன் கர்மவினையை இணைத்து, காரக கிரகங்களின் ஒத்துழைப்பில் த்ரிம்சாம்சகம் இயல்பை வரையறுக்கிறது.

இப்படியிருக்க, '6, 8, 12 அதிபதிகளில் ஒருவன் லக்னத்தில் இருப்பதால், அவள் நல்லவள் அல்ல; 6, 8, 12 அதிபதிகளில் ஒருவன் 5-ல் இருப்பதால் பூர்வ புண்ணியம் குறைந்தவள்; 6, 8, 12 அதிபதிகளில் ஒருவர் 7-ல் இருப்பதால் திருமணம் தடைப்படும்; அவள் விவாகரத்தை ஏற்பாள்’ என்றெல்லாம் பலன் சொல்லும் தெம்பு ஜோதிடர்களுக்கு வரக்கூடாது. கர்க்கடக ராசியில் புனர் பூசம் 4-ம் பாதத்தில் பிறந்தவள். புனர்பூசத்தின் கிரகம் குரு. அவர் 8-ல் இருப்பதால் அல்பாயுள், புனர்பூச நட்சத்திர குரு 6-ல் இருப்பதால் சண்டை சச்சரவில் தவிப்பாள், 12-ல் இருப்பதால் எல்லாம் இழந்து தெருவுக்கு வருவாள் எனப்போன்ற விளக்கங்களில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.

ஜோதிட உடன்பாடு இல்லாத விஷயங்கள்!

நட்சத்திர பாதம் சந்திரனோடு இணைந்திருப்பதால், நவாம்சகத்தில் இணைந்த நட்சத்திராதிபதி, கிரகங்களை இணைத்துப் பலன் சொல்லும் நடைமுறைகளிலும் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. உதாரணமாக, புனர்பூசம் 4-ல் பிறந்தவள், கர்க்கடக ராசியில் முதல் த்ரேக்காணத்தில், முதல் ஹோரையில், சுக்கிர த்ரிம்சாம்சகத்தில் இணைந்திருப்பாள். சந்திரன் வாயிலாக புனர்பூசம் 4-ம் பாதமும், முதல் நவாம்சகமும் சுட்டிக்காட்டப்பட்டு, சந்திரனின் தரம் வரையறுக்கப்பட்டு, அதன்படி பலன் சொல்வது உண்டு. இங்கு புனர்பூசம் 4-ம் பாதம் பலனும் அடங்கிவிடும். 'புனர்பூசத்தை வைத்து, அதன் கிரகமான குரு இருக்கும் ராசி, அவளது தரம் ஆகியவற்றின் இயல்பை வரையறுக்கத் தேவையில்லை’ என்பதை த்ரிம்சாம்சகம் சுட்டிக்காட்டுவதைக் கவனிக்காமல், திசைதிருப்பும் செயல்பாடுகள் ஜோதிடத்தின் தரத்தை சிதைக்கின்றன. பலனை இறுதியாக்க எதையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற கோட்பாட்டைப் புறக்கணித்துச் செயல்படுவது அதர்மம்.

புனர்பூசம் 4-ல் சந்திரன். அவனுக்கு வர்க்கோத்தமம் என்கிற உயர்வு கிடைத்திருக்கிறது. நன்றாகத்தான் தென்படுகிறது. ஆனால், புனர்பூச நட்சத்திரத்தின் கிரகமான குரு, மகரத்தில் நீசம் பெற்று இருக்கிறான். நீசம் பெற்ற குரு இருப்பது உத்திராட நட்சத்திரம். அதன் அதிபதி சூரியன் துலாத்தில் நீசம் பெற்றிருக்கிறான். துலாத்தில் சூரியன் இருக்கும் நட்சத்திரம்-

சித்திரை. அதன் நட்சத்திரமான செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருக்கிறான்.

மகரத்தில்- திருவோண நட்சத்திரத்தில் செவ்வாய் இருக்கிறான். அதன் கிரகமான சந்திரன் கடகத்தில் வர்க்கோத்தமம் பெற்று விளங்குகிறான். இப்படி கிரகங்களையும், கிரகம் இருக்கும் நட்சத்திரங்களையும் மாற்றி மாற்றிக் குறிப்பிட்டு, எங்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று தெரியாமல், நல்லதும் கெட்டதும் கலந்த பலனை வெளியிடுவதில் ஜோதிடத்துக்கு உடன்பாடில்லை.

'த்ரிக’ ராசிகள்

மாதங்களை எண்ண ஆரம்பித்தான் ஒருவன். சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, வைகாசி, ஆனி... இப்படி, கார்த்திகை வந்ததும் நட்சத்திரத்தில் நுழைவதும், சித்திரை வந்ததும் மாதத்தில் நுழைவதுமாக, எல்லையில்லா எண்ணிக்கையில் இரண்டும் முற்றுப்பெறாமல் திண்டாடினான். அதுபோல் நட்சத்திரத்திலிருந்து கிரகத்தில் தாவி, கிரகத்தில் இருந்து நட்சத்திரத்துக்குத் தாவி முற்றுப்பெற இயலாமல், ஏதாவது ஒன்றை வைத்துப் பலனை இறுதி செய்யும் அவலம் தென்படுவது நமது துரதிர்ஷ்டம்.

ராசியில் 1, 4, 7, 10 ராசிகளுக்குக் கேந்திரம் என்று பெயர். 1, 5, 9 ராசிகளுக்கு த்ரிகோணம் என்று பெயர். கேந்திரத்திலும் த்ரிகோணத்திலும் இருக்கும் கிரகங்களுக்குத் தொடர்பு உண்டு. கிரகங்களுக்கான தொடர்பைச் சொல்வது இந்தக் கேந்திரமும், த்ரிகோணமும். தொடர்பு அற்றதைச் சொல்லும் ராசிகளும் உண்டு. 6, 8, 12 ராசிகள் கெடுதலுக்கு துணைபோகும் ராசிகள். அதற்கு 'த்ரிகம்’ என்று தனிப்பெயர் உண்டு. 6, 8, 12 அதிபதிகள் மற்ற ராசிகளில் அமர்ந்தால் விபரீதமான பலனை அளிக்கும். மற்ற இடங்களின் அதிபதிகள் 6, 8, 12-ல் அதாவது 'த்ரிக’த்தில் இருந்தால், அவர்கள் தாங்கள் அளிக்கவேண்டிய பலனை அளிக்க இயலாமல் போய்விடுவர் என்று சொல்லும். இந்த 'த்ரிக’த்தை வைத்துக்கொண்டு, மொத்த பலனையும் செப்படி வித்தைபோல் விளக்கம் அளிப்பதில் ஜோதிடத்துக்கு உடன் பாடில்லை. ஷோடச பலம், ஷட்பலம் போன்றவற்றை ஆராயாமல் எந்தப் பலனும் இறுதி பெறாது. இப்படியிருக்க மாறுபட்ட விளக்கங்கள் அளிப்பது ஜோதிடத் துக்கு இழுக்காகும்.

சித்தத்தைத் தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்!

ஜல பூதமும், அக்னி பூதமும்!

ஐம்பெரும் பூதங்களில் ஜல பூதம் தட்பத்தை வெளியிடும். ஜலத்தின் இயல்பு குளிர்ச்சி (சைத்யம்ஹியத்ஸா ப்ரக்ருதிர்ஜலஸ்ய). அக்னி பூதம் வெப்பம். தோற்றம், மாறுதல்- இதுதான் உலகம். தோற்றத்துக்குத் தட்பமும், மாறுதலுக்கு வெப்பமும் வேண்டும். தட்பம் சிந்தனையைத் தோற்றுவிக்கும். வெப்பம் பலவிதமான சிந்தனை மாற்றத்தை எட்டவைக்கும். சிந்தனைக்கு இருப்பிடம் மனம். அதற்குக் காரகன் சந்திரன். அவன் தட்பமானதால் சிந்தனையைத் தோற்றுவிக் கிறான். மனம் தட்பம். அதை இயங்க வைக் கிறான் சூரியன். அவன் வெப்பம். உண்மையில், சூரியனின் வெப்ப கிரணங்கள் சந்திரனில் விழுந்து, அதன் தட்பத்தில் (ஜலம்) குளிர்ச்சி பெற்றுச் சிந்தனையைத் தோற்றுவிக்கிறான்.

மனதில் எண்ணம் உதயமாவதற்கு சூரிய வெப்பம் ஒத்துழைக்கும். எப்படி என்றால், அவனது வெப்ப கிரணம் தட்பமாக மாறியதும் தோற்றத்தை உண்டுபண்ணுகிறது. அப்படித் தோற்றம் பெற்ற பொருள்களில் மாறுபாட்டை ஏற்படுத்த வெப்பம் ஒத்துழைக்கிறது. இருப்பது இரண்டு. அதன் மாறுபட்ட கலவைகள், எண்ணி லடங்கா சிந்தனைகளுக்குக் காரணமாகின்றன.

தோற்றுவிக்கும் தட்பம்; மாற்றுவிக்கும் வெப்பம்!

சூரியனையும் சந்திரனையும் தவிர, மற்ற ஐந்து கிரகங்களும் பலவித மாறுதலுக்கு ஊக்கமளித்து, வாழ்க்கையில் சுக-துக்கங்களை ஏற்கவைக்கின்றன.

சூரியன்- ஆன்மா; சந்திரன்- மனம். மனதை இயக்குவது ஆன்மா. சந்திரனை இயக்குவது

சூரியன். மனதில் வாசனை வடிவில் குடிகொண்டிருக்கும் எண்ணங்கள் உதயமாவதற்கு தட்பம் தேவை. அது பல மாறுபாடுகளுடன் வளர்வதற்கு வெப்பம் தேவை. செவ்வாய், சனி, ராகு, கேது - இந்த வெப்ப கிரகங்களும் புதன், சுக்கிரன், குரு இந்த தட்ப கிரகங்களும் விகிதாசாரக் கலவையில், பலவிதமான மாற்றங் களை அடைந்து, துயரத்தையும் மகிழ்ச்சியையும் சந்திக்கவைக்கின்றன.

இங்கு செவ்வாய்- சூரியன் ஆகிய இரு வெப்ப கிரகங்களும் சந்திரன்- குரு ஆகிய இரு தட்ப கிரகங்களும் இணைந்த கலவையில்

ஏற்பட்ட மாறுதல், த்ரிம்சாம்சகத்தில் உருப்பெற்று, அதில் தோன்றியவளை குணக் குன்றாக வார்த்தெடுத்தது.

குணங்கள் உதயமாக தட்பத்தின் தொடர்பும், அது சிறப்புற்று மாறுதலை அடைந்து பலனை இறுதியாக்குவதற்கு வெப்பத்தின் தொடர்பும் ஒத்துழைத்தன. இப்படி, சராசரங்களின் தோன்றலுக்கும் மாறுதலுக்கும் காரணமான ஜல பூதமும் அக்னி பூதமும்... கிரகங்களில் தட்ப-வெப்ப வடிவில், பூமியில் பிறந்தவளின் இயல்பை உறுதி செய்கின்றன.

- சிந்திப்போம்...