மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஆடி பெருவிழா... ஆனந்த திருவிழா..!எஸ்.கண்ணன்கோபாலன்

டி மாதம் பிறந்துவிட்டாலே அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டும். கிராமங்களிலும் நகரங்களிலும் ஆடித் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால், நகரங்களின் பரபரப்புக்கிடையே கொண்டாடப்படுவதைவிடவும், கிராமங்களில் ஆடித் திருவிழா உற்சாகமாக நடைபெறும்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அப்படி ஒரு கிராமியச் சூழலில் நடைபெறும் ஆடித் திருவிழாவைக் கண்டு, அந்த அனுபவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தபோது, சென்னைக்குப் பக்கத்திலேயே, குரோம் பேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள லக்ஷ்மிபுரம் (தற்போது துர்கை நகர் என்று அழைக்கப்படுகிறது) பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு சுயம்பு துர்கை அம்மன் ஆலயத்தில், கிராமியச் சூழலில் ஆடித் திருவிழா நடைபெறவிருப்பதாக ஒரு நண்பர் தெரிவித்தார்.

27-7-14 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9 மணிக்கு ஆலயத்துக்குச் சென்றோம். நாம்

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சென்றபோது நமக்கு எதிரில் பம்பை, உடுக்கை, சிலம்ப இசையுடன், தலையில் அம்மனின் சக்தி ஆவாஹனம் செய்யப்பட்ட பூக்கரகம் தாங்கியபடி ஒரு பக்தர்  ஊர்வலமாக வந்துகொண்டிருந்தார். கோலம் போட்டு, வேப்பிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டு வாசலிலும் பூக்கரகத்தைத் தாங்கிவரும் பக்தர் நின்று நின்று வர, அவரின் பாதங்களில் நீர் விட்டு அலம்பி, மஞ்சள் குங்குமம் இட்டு, தீபாராதனை எடுத்ததைக் கண்டோம். பூக்கரகம் தாங்கி வரும் அந்த பக்தரை அம்மனாகவே பாவித்து பாத பூஜையும், தீபாராதனையும் செய்வதாக ஐதீகம். கரகத்துக்கு தீபாராதனை எடுத்ததும், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், திருவிழா காண வந்த பக்தர்களுக்கு கூழ் கொடுப்பதையும், பக்தர்கள் அதை அம்மனின் பிரசாதமாகப் பெற்று அருந்தியதையும் காணக் காண, இறைவியின் அருளாட்சி நடைபெறும் தலத்தில் பிரிவினைகளுக்கும் பேதங்களுக்கும் இடமே இல்லை என்பது தெள்ளத் தெளிவாக நமக்குப் புரிந்தது.

சற்று தூரம் ஊர்வலத்துடன் சென்ற நாம், பூக்கரக ஊர்வலம் கோயிலுக்கு வந்து சேர்வதற்கு 11 மணி ஆகிவிடும் என்று தெரியவரவே, அதற்குள் ஆலயத்தைச் சுற்றிப் பார்த்துவிடலாமே என்று நினைத்து, ஆலயத்துக்குச் சென்றோம்.

ஆடி மாதத்துக்கும் அம்மன் கோயில்களில் திருவிழா நடப்பதற்கும் என்ன தொடர்பு என்பது பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

ஒரு குழந்தையின் இயல்பு என்ன? பகலெல்லாம் ஓடி ஆடித் திரிந்தாலும், இரவு வந்துவிட்டால் அந்தக் குழந்தை தன் தாயின் மடியைத்தானே தேடி வருகிறது? தாயின் மடியில்தானே இரவைப் பற்றிய அச்சம் நீங்கி ஆறுதலைப் பெறுகிறது! அதேபோலத்தான், கால மாற்றமானது நம்முடைய வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க,  உலக மக்களாகிய நாமும் ஜகன்மாதாவாகிய பராசக்தியின் அம்சமாக அங்கங்கே கோயில்கொண்டிருக்கும் அம்மனை நாடி வந்து, அவளுடைய திருவடிகளைத் தொழுது பணிந்து வேண்டுகிறோம்.

ஒருபுறம் சிறு மலை, மறுபுறம் இரண்டாகப் பிரிந்து அமைந்த ஏரி என்று அழகிய சூழலில் தெப்பக்குளத்துடன் அமைந்திருக்கும் சுயம்பு துர்கை ஆலயத்தின் முகப்பில், அரசமரத்தின் அடியில் அரசடி ராஜ விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. அவரை தரிசித்துவிட்டு, உள்ளே செல்கிறோம். வழியிலேயே ஓரிடத்தில் வரிசை வரிசையாக பெண்கள் பொங்கல் வைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். கோயிலுக்குள் நாம் முதலில் தரிசித்தது ஸ்ரீநாக துர்கை சந்நிதி. சந்நிதியைச் சுற்றிலும் கம்பி போடப்பட்டுள்ளது. உள்ளே ஒரு பெரிய புற்று அமைந்திருக்கிறது. தொடர்ந்து பிராகாரத்தை வலம் வரும்போது விநாயகர், முருகர், வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி, நவகிரகங்கள், காலபைரவர் சந்நிதிகளை தரிசித்தோம். மண்டபத்தின் ஒரு பக்கச் சுவரில் சுயம்பு துர்கை ஆலயம் தோன்றியது பற்றி விவரிக்கும் சித்திரங்கள் வரையப்பட்டிருப்பதைக் கண்டோம். அவற்றைப் பார்த்தபடியே அம்மனின் கருவறைக்குள் செல்கிறோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

கருவறையில் சுதை வடிவத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த முழு உருவ அம்மன் சிலையின் அடியில் சுயம்புவாகத் தோன்றிய துர்கை அம்மன் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. திருவிழா என்பதால், அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுயம்பு துர்கையை தரிசித்து, வெளியே வருகிறோம்.

மண்டபத்தின் ஒரு பக்கமாகத் திரை போடப் பட்டு, அன்று இரவு நடைபெற உள்ள அம்மன் வீதி உலாவுக்கான மலர் அலங்கார வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அங்கே இருந்த திருப்பனந்தாள் சர்வேஸ்வர சிவாச்சாரியாரிடம், கோயில் உருவான விதம் குறித்துக் கேட்டோம்.

''சுமார் 170 வருஷத்துக்கு முன்பு இந்த இடம் வயல்காடாக இருந்தது. ஒருநாள் ஏர் உழுது கொண்டிருந்தபோது, ஓரிடத்தில் கலப்பையில் ஏதோ தட்டுப்பட்டதுபோல் தோன்றவே, அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க, குழவி போன்ற அமைப்பில் ஒரு கல் வெளிப்பட்டது. அந்தக் கல்லின் மேற்பகுதியில் கண்கள், வாய் போலவும், அதன் கீழாக எருமை முகம் போலவும் வரிவடிவங்கள் காணப்பட்டன.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அதுபற்றிய விவரம் அறிந்துகொள்ள பிரச்னம் பார்த்தபோதுதான், வெளிப்பட்டது சுயம்பு துர்கை என்பது தெரியவந்தது. அன்றுமுதல் நான்கு தலைமுறைகளாக அப்பகுதி மக்கள் அந்தச் சிலையை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

கடந்த 30 வருடங்களுக்கு முன்புவரை, திருவிழா நடைபெறும் நாள்களில் மட்டுமே ஓலைக் கொட்டகை போடப்படும். மற்றபடி, வெட்டவெளியில் வானமே கூரையாகத்தான் சுயம்பு துர்கை இருந்து வந்தாள். இந்நிலையில், கடந்த 30 வருஷத்துக்கு முன்பு, துர்கை உபாசகரான ராஜேந்திரன் என்பவரின் கனவில் தோன்றிய சுயம்பு துர்கை, தனக்குக் கோயில் கட்டும்படி உத்தரவு கொடுக்கவே, 1986-ம் வருஷம் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கி, 1993-ம் வருஷம் சிறிய அளவில் கோயில் கட்டப்பட்டது. பின்னர், இப்போது உள்ளபடி கோயில் விரிவுபடுத்தப்பட்டு, 2009-ம் வருஷம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆரம்பத்தில் வரிவடிவமாக இருந்த கண்கள், வாய், மஹிஷனின் வடிவம் ஆகியவை புடைத்துக்கொண்டு வருவதுடன், அம்மனின் திருவுருவமும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தும் வருகிறது'' என்று தெரிவித்தார்.

கோயிலை வலம் வந்துவிட்டு வெளியில் வரவும், பெண்கள் தாங் கள் வைத்த பொங்கலை, அற்புத அலங்காரங்களுடன் திகழ்ந்த சுயம்பு துர்கை உற்சவ மூர்த்தத்துக்கு நைவேத்தியம் செய்து, பக்திப் பெருக்குடன் வழிபடவும் சரியாக இருந்தது. வேப்பிலை ஆடை உடுத்தபடியும், அடிப் பிரதட்சிணம் செய்தபடியும் இருந்த பக்தர்களுக்கும் அங்கே குறைவே இல்லை. அதை எல்லாம் பார்த்தபடி வெளியில் வந்தபோது,  பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.  

கோயிலுக்குள் பக்திப் பரவசம் என்றால், கோயிலுக்கு வெளியிலோ, சிறியதும் பெரியது மான கடைகளும், ராட்டினங்களும் இன்னும் பல பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்று, ஓர் உற்சாகமான சூழ்நிலை காணப்பட்டது. பெற்றோருடனும் உற்றார் உறவினர்களுடனும் கோயிலுக்கு வரும் சிறுவர்களுக்குச் சலிப்புத் தட்டாமல் இருக்கவேண்டும் அல்லவா? அவர்கள் உற்சாகமாக இருந்தால்தானே பெரியவர்களால் பூஜை வழிபாடுகளை நல்லபடியாகச் செய்ய முடியும்! அதற்காகத்தான் கிராமப்புறங்களில் நடைபெறும் திருவிழாக்களில் இத்தகைய பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெறுகின்றனபோலும்!

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

திருவிழாவைக் காண வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கோயிலின் ஒரு பக்கத்தில், சுவரில் மாட்டப் பட்டிருந்த ஒரு சித்திரத்தைப் பார்த்தோம். அந்தப் படத்தில், ஒரு பெண் 10 எலுமிச்சை தீபங்களை வைத்த ஒரு தட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, கோயிலை வலம் வருவது போன்ற காட்சி வரையப் பட்டிருந்தது. நாம் அந்தப் படத்தைப் பற்றிய விவரத்தை யாரிடம் கேட்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய யோசனையைப் பார்த்தபடி அருகே வந்த ஒரு பெண்மணி, தன் பெயர் பார்வதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்தப் படம் பற்றிய விவரத்தை நம்மிடம் கூறினார்.

''துர்கா சஹஸ்ரநாமத்தில், 'சதுர்த் தசி நிசி பூஜ்யாயை நம:’ என்று ஒரு நாமாவளி வரும். அதாவது, கிருஷ்ண பட்சத்து சதுர்த்தசி இரவில் துர்கையை பூஜை செய்வதாகும். அதன்படி, இந்தக் கோயிலில் ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தசி அன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை சிறப்பு பூஜைகளும் ஹோமமும் நடைபெறுகின்றன. இந்த பூஜையில் கலந்து கொள்பவர்கள் 5 எலுமிச்சைப் பழங்களை வாங்கி, அவற்றை இரண்டாகப் பிளந்து, 10 தீபங்களாக ஏற்றி ஒரு தட்டில் வைத்துக்கொண்டு, ஒரு தீபத்தை விநாயகருக்கு வைத்துவிட்டு, 9 தீபங்களுடன் கோயிலை 3 சுற்றுச் சுற்றி வந்து, தீபங்களை விளக்கு மாடத்தில் வைத்துவிட்டு, ஹோமத்தில் கலந்துகொள்ள வேண்டும். அதை விளக்கும் படம்தான் இது. ஹோமம் முடிந்ததும் ஹோம பிரசாதம் வழங்கப்படும். இந்த பூஜையில் கலந்துகொண்ட பின்புதான், என் பிள்ளைக்கு எந்தத் தடங்கலும் இல்லாமல் நல்லபடியாகத் திருமணம் நடந்தது'' என்றார் அந்தப் பெண்மணி.

இந்தக் கோயிலில் வருடத்தில் ஒருநாள், பக்தர்கள் தங்கள் கையாலேயே சுயம்பு துர்கைக்கு பாலபிஷேகம் செய்யலாம் என்று தெரிவித்தார் ஸ்ரீப்ரியா என்னும் பக்தை. பள்ளி ஆசிரியையாகப் பணியாற்று கிறாராம் அவர்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

''ஒவ்வொரு வருஷமும் பங்குனி உத்திரத்தன்று சுயம்பு அம்மனுக்கு நாமே நம் கையால் அபிஷேகம் செய்யலாம். பங்குனி உத்திரத்துக்கு 9 நாள்கள் முன்பாக விரதம் இருக்கவேண்டும். 3 நாள்களுக்கு முன்பாக காப்பு கட்டிக் கொண்டு மஞ்சள் அல்லது சிவப்பு ஆடை அணியவேண்டும். பங்குனி உத்திரத்தன்று காலையில் கோயிலுக்கு வந்து, சுயம்பு துர்கை அம்மனுக்கு நம்முடைய கையாலேயே பாலபிஷேகம் செய்யலாம். சொந்தமாக வீடு கட்டவேண்டும் என்ற எனது ஆசை நீண்ட காலமாக நிறைவேறாமலேயே இருந்தது. இரண்டு வருஷங்களுக்குமுன் பங்குனி உத்திரத்தன்று வேண்டிக்கொண்டு, அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்தேன். அதன் பலனாக இப்போது வீடு கட்டி, கிரகபிரவேசமும் செய்துவிட்டேன்'' என்றார்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

மதியம் 1 மணி. அன்று முழுவதும் கோயில் திறந்திருக்கும் என்பதால், பக்தர்கள் வந்தபடியே இருந்தனர். காலையிலேயே வந்துவிட்ட பக்தர்களும் அம்மன் வீதியுலா புறப்பாட்டை தரிசித்துவிட்டே செல்லவேண்டும் என்று நினைத்தவர்களாக கோயில் பகுதியிலேயே சுற்றி வந்தபடி இருக்க, பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அங்கே அமைந்திருந்த கடைகளில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றதுடன், ராட்டினம் போன்ற பொழுது போக்கு அம்சங்களில் சிறியவர்கள் உற்சாகமாகப் பங்கெடுக்க, வியாபாரிகள், ராட்டினக்காரர்கள் அத்தனைபேர் முகங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுத்திருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. தங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த சுயம்பு துர்கை அம்மனிடம், அவர்களின் மனதில் நன்றி உணர்ச்சியும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

மாலை 6 மணிக்கு, அம்மனின் உற்சவ விக்ரஹம் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறத் தொடங்கியது. 6 மணிக்குத் தன் வீதி உலாவைத் தொடங்கிய அம்மன், எல்லா வீதிகளையும் வலம் வந்து முடித்து கோயிலுக்கு வந்து சேர, மறுநாள் காலை 6 மணி ஆகிவிடும் என்று பேசிக் கொண்டார்கள்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

பரபரப்பான நகர வாழ்க்கையிலேயே சலித்துச் சளைத்துப் போயிருக்கும் நமக்கும்கூட, கிராமியச் சூழலில் நடைபெற்ற சுயம்பு துர்கை ஆலய ஆடித் திருவிழாவை தரிசித்த மாத்திரத்தில், சலிப்பும் களைப்பும் போன இடமே தெரியாதபடி, நம் மனதில் புத்துணர்ச்சியுடன் கூடிய சந்தோஷம் நிறைந்து நிலைத்தது!

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்