Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

பெட்ரோலும் ஆன்மாவும்!வீயெஸ்வி

த்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதற்கு மறுநாள், கையில் காலை நாளிதழுடன் வந்தார் நண்பர்.

''ஒரு நல்ல செய்தி பார்த்தீங்களா? பிரீமியம் பெட்ரோலின் விலை அஞ்சு ரூபாய் குறையுதாம்..''

''அதனால எனக்கென்ன? நான்தான் ஒரு சைக்கிள்கூட வச்சுக்கலையே!'' என்றேன். நண்பரின் முகத்தில் காற்று இறங்கியது. ''உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? பெட்ரோல்ங்கறது ஆன்மா மாதிரி...'' என்று நான் தொடர்ந்தபோது, நண்பரின் புருவம் உயர்ந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''எப்படிச் சொல்றீங்க?'' என்று கேட்டார்.

நான், ஸ்வாமி பார்த்தசாரதி சொற்பொழிவில் கேட்டதை என்னுடையது போல் நண்பரிடம் பிரஸ்தாபித்தேன்!

கலகல கடைசிப் பக்கம்

''எல்லா கார்களையும் இயக்கறது பெட்ரோல்தான். ஆனா, பெட்ரோல் இயங்கறது இல்லே. ஓர் இடத்துக்குப் போகணும்னு அதுக்கு ஆசை கிடையாது; எங்கேயும் போகாம இருக்கணும்னும் அது ஆசைப்படறதில்லே. இருப்பினும், பெட்ரோல் இல்லாம எந்த காரும் நகராது; அதே மாதிரிதான் ஆத்மாவும். எல்லா உயிர்களையும் செயல்பட வைப்பது ஆத்மா; ஆனா, அது செயல்படறது இல்லே. செயல்படணும்கற ஆசையும் ஆத்மாவுக்குக் கிடையாது; செயல்படாம முடங்கிக் கிடக்கணும் அப்படிங்கற ஆசையும் கிடையாது. இருப்பினும், ஆத்மா இல்லாம எந்த இயக்கமும் சாத்தியப்படாது...''

''அடாடா! நீங்க சொல்றதைப் பார்த்தா பெட்ரோலின் விலையை இருபது ரூபாய் அதிகப்படுத்தினாலும் தப்பில்லே போலிருக்கே!'' என்றார் நண்பர். நான் தொடர்ந்தேன்...

''இன்னொரு விஷயத்தையும் நீங்க கவனிக்கணும். ஒரு கார் விபத்துக்குள்ளானா, அதுல பயணம் செஞ்சவங்களுக்கு மரணமோ காயமோ ஏற்படுது. இன்னொரு கார்ல பயணம் செய்யறவங்க பாதுகாப்பா போகுமிடத்துக்குப் போயிடறாங்க. ஆனா, ரெண்டு கார்லேயும் பயன்படுறது ஒரே பெட்ரோல்தான். ஆகவே, விபத்துக்கு பெட்ரோல்தான் காரணம்னு பழி சுமத்திடவும் முடியாது; இன்னொரு கார் பத்திரமா போய்ச் சேர்ந்ததற்கும் பெட்ரோல்தான் காரணம்னு சொல்லிட முடியாது. ஆன்மாவும் அதே மாதிரிதான்... அழிவுச் செயல்லே ஈடுபடற தீவிரவாதிகளிடமும், அன்பைப் பொழியும் துறவிகளிடமும் இருப்பதும் ஒரே ஆத்மாதான். எப்போதும் நடுநிலையாகத்தான் அது செயல்படும். பாவம், புண்ணியம் இரண்டுக்கும் ஆன்மா காரணமாக இருப்பதில்லை. 'ஆன்மா அழிவற்றது; பழைய ஆடைகளைக் களைந்து புதிய ஆடைகளை அணிவது போலத்தான் ஆன்மாவானது பழைய உடல்களை உதறி, புதிய உடல்களை ஏற்கிறது’ என்கிறார் பகவான் கிருஷ்ணர்! பெட்ரோலும் அப்படித்தான்...''

நான் முடிப்பதற்குள்ளாக, ''வெரிகுட்... நான் உடனே டெல்லிக்குப் போய், பிரதமர் மோடியை சந்திக்கப்போறேன்..'' என்று கிளம்பிவிட்டார் நண்பர்.

''எதுக்கு?''

''உங்களை பெட்ரோலியத்துறை அமைச்சர் பதவிக்கு சிபாரிசு செய்யத்தான்!''