Published:Updated:

ஆலயம் தேடுவோம்...

கும்பாபிஷேகத்துக்கு காத்திருக்கும் கோட்டை கோயில்! காஞ்சி முனிவர் வழிபட்ட காரீசநாதர்! இ.லோகேஸ்வரி

காஞ்சி மகா பெரியவா, காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டது கலவை என்ற ஊரில்தான். இந்த ஊரில்தான் காஞ்சி மடத்தின் 63 மற்றும் 64-வது பீடாதிபதிகளின் அதிஷ்டானங்களும் அமைந்திருப்பதால், மகா ஸ்வாமிகள் அவ்வப்போது கலவைக்கு விஜயம் செய்வார். அப்போதெல்லாம், கலவையில் இருக்கும் திருக்காரீசநாதர் கோயிலுக்குச் சென்று இறைவனை பூஜிப்பது வழக்கம்.

மகா ஸ்வாமிகளின் அபிமானம் பெற்ற பல சிவ ஸ்தலங்களில், கலவை திருக்காரீசநாதர் கோயிலும் ஒன்று. அந்தத் கோயிலுக்கு அவருடைய கட்டளைப்படி திருப்பணிகள் செய்யப்பட்டு, 1978-ம் வருடம் கும்பாபிஷேகமும் விமரிசையாக நடைபெற்றது.

இத்தலத்தில் ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டவர். அப்படி சுயம்புவாக வெளிப்பட்டு, திருக்காரீசநாதர் என்ற பெயர் பெற்றதன் பின்னணியில் சிவனடியார் ஒருவரின் சரிதமும் சேர்ந்தே உள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்’ என்று திருத் தொண்டத் தொகை போற்றும் காரி நாயனார்தான் அந்தச் சிவனடியார். திருக்கடவூரில் தோன்றிய அவர், 'காரி கோவை’ என்ற நூலை இயற்றியவர். தாம் இயற்றிய, சொல் விளங்கும் ஆனால் பொருள் விளங்காத அந்த நூலுக்கு, தமிழ் மன்னர்கள் மூவரிடமும் பொருள் விளக்கிச் சொல்லி, அவர்களுடைய பாராட்டுக்களுடன் பெரும்செல்வத்தையும் பரிசாகப் பெற்றார். எப்போதும் சிவ தியானத்திலேயே திளைத்திருக்கும் அவர், தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டியும், சிவனடியார்களுக்குக் கொடுத்தும் மகிழ்ந்தார்.

ஆலயம் தேடுவோம்...

ஒருமுறை, அவர் சிவாலயங்களைத் தரிசித்து வழிபட விரும்பி யாத்திரை மேற்கொண்டார். அப்படி வரும் வழியில், ஓர் இடத்தில் அவர் கண்ட காட்சி அவரை மெய்ம்மறக்கச் செய்துவிட்டது. அந்தப் பொட்டல் வெளியில் காணப் பட்ட ஒரு புற்றின் மேல் பசு ஒன்று பாலைச் சொரிந்தபடி இருந்ததுதான் அந்தக் காட்சி! அந்த இடத்தில் தெய்வ சாந்நித்தியம் இருக்க வேண்டும் என்று காரி நாயனாரின் உள்ளத்தில் தோன்றியதால் அங்கேயே தங்கி விட்டார். மறுநாள் சென்று பார்த்தபோதும், முந்தின தினம் போலவே அந்தப் பசு வந்து புற்றின் மேல் பாலைச் சொரிந்தது.

இற்கான காரணத்தை ஈசன்தான் வெளிப் படுத்த வேண்டும் என்று நினைத்த காரி நாயனார், சிவபெருமானை நினைத்து மனம் உருகப் பாடினார். அவர் பாடப்பாட, அவருடைய சிவபக்திக்குப் பலன் தருவதுபோல், மழையைப் பொழியச் செய்தும், மழைநீரில் புற்று மண்ணைக் கரையச் செய்தும் சுயம்புவாக அங்கே காலம்கால மாக இருந்து வந்த தம் லிங்கத் திருமேனியை வெளிப்படுத்தி அருள்புரிந்தார் சிவபெருமான்.

சுயம்புவாக வெளித் தோன்றிய சிவபெருமானுக்கு, அப்பகுதியை ஆண்டு வந்த சோழ மன்னனின் உதவியுடன்  ஆலயம் அமைத்தார் காரி நாயனார். அம்பிகையாக தர்மசம்வர்த்தினியின் திருமேனி விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தார். கி.பி. 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் இத் திருக்கோயில் அமைந்திருந்த பகுதி 'உலகளந்த சதுர்வேதி சோழமங்கலம்’ என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் 2-ம் குலோத்துங்க சோழன் இத் திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

ஆலயம் தேடுவோம்...

கிருஷ்ணதேவராயரின் காலத்தில் இந்த ஊர் 'சதுர்வேதி சோழமங்களம் பரிமளபுரம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. திருக்காரீசநாதரின் திருவருளால் பிரசித்தியுடன் திகழ்ந்த இந்த ஊர்,  அந்நியர்களின்  படையெடுப்பின் காரணமாகச் சிதைக்கப்பட்டபோது, ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கோயிலில் இருந்த தெய்வ மூர்த்தங்களுடன் சுயம்பு வாகத் தோன்றிய சிவலிங்கத் திருவுருவத்தையும் மணல் குவியலுக்கு இடையில் மறைத்து வைத்துப் பாதுகாத்தனர்.

ஈசனின் திருக்கோயிலையே தங்கள் கோட்டையாக அமைத்துக் கொண்ட அந்நியர்கள், ஊரின் பெயரை 'கலவை’ என்று மாற்றி விட்டனர். இன்றைக்கும் கலவை என்ற பெயரே வழக்கத்தில் உள்ளது. ஒரு காலத்தில் அந்நியர்களின் கோட்டையாக, இக்கோயில் இருந்ததினால் கோட்டைக் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. அந்நியர் ஆதிக்கம் முடிந்ததும், ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து திருக்கோயிலைப் புதுப்பித்து வழிபடத் தொடங்கினர்.

ஆனால், தற்போது கோயிலின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?..

கோயில் மதில் பல இடங்களில் இடிந்து கிடக்கிறது. கருவறை விமானங்களும் விரிசல் விழுந்தும் புதர்கள் மண்டியும் காணப்படுகின்றன. சிவபெருமானின் மற்ற சுயம்பு மூர்த்தங்களைவிடவும் இங்கு உள்ள சிவலிங்கத் திருமேனி சற்றே பெரிதாக உள்ளது. அம்பிகை தர்மசம்வர்த்தினி யாகத் திருப்பெயர் கொண்டு அருட்காட்சி தருகிறாள். விநாயகர், ஷண்முகர், தட்சிணாமூர்த்தி சந்நிதிகளும் உள்ளன. பசு புற்றுக்குப் பால் சொரிந்ததை நினைவுகூரும் வகையில் ஒரு கற்சிலையும் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் தேடுவோம்...

கோயிலின் வடகிழக்கில் ஷோடசமுக லிங்கம் (பதினாறு பட்டைகளுடன் அமைந்திருப்பது) காணப்படுகிறது. இங்கு உள்ள சிவகாமி அம்மை சமேத நடராஜரின் திருவுருவம் சுமார் 6 அடி உயரம் உள்ளது. இந்த நடராஜரின் சிலை சிதம்பரம் நடராஜரின் சிலையை விடவும் பெரியது என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. இந்த நடராஜர் சிலையின் திருமுடியின் மேல் அபிஷேகம்செய்யப்படும் தீர்த்தம் சிலையின் வலப்புறக் கால் வழியாக மட்டுமே வழிந்து செல்லும். அந்த அளவுக்குக் கலைநுட்பத்துடன் கூடிய திருவுருவம் இது.

''இந்தக் கோயில் காஞ்சி மகா ஸ்வாமிகளின் உத்தரவுப்படி புதுப்பிக்கப்பட்டு, 1978-ம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மகா பெரியவா அவ்வப்போது கலவைக்கு விஜயம் செய்வது வழக்கம். அப்போதெல்லாம் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனை பூஜித்து, வெகுநேரம் தம்மை மறந்து தியானத்தில் திளைத்திருப்பார்'' என்றார் கோயிலின் விஸ்வநாத குருக்கள்.

திருப்பணிக் குழு உறுப்பினர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி, ''சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கோயில் சிதிலம் அடைந்து பல வருடங்களாகிவிட்டது. கோயிலைப்

ஆலயம் தேடுவோம்...

புதுப்பிக்கவேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, 'கலவை சிவனடியார்கள் அறக்கட்டளை’ என்று ஓர் அமைப்பை ஏற்படுத்தி, கோயிலைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள் தான் பாலாலயம் செய்து, திருப்பணி களைத் தொடங்கி வைத்தார்'' என்றார்.

''ஈசனின் கருவறை விமானம் புதுப்பிக்கப்பட்டு, ராஜ கோபுரமும் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. தற்போது பணம் இல்லாத காரணத்தால் திருப்பணிகள் முடங்கியுள்ளன. முற்றிலும் சிதைந்து காணப்படும் அம்பாள் கருவறையின் விமானமும் மதிலும் கட்டி முடிக்கப்பட்டுவிட்டால், கும்பாபிஷேகத்தை நடத்திவிடலாம்'' என்கிறார்கள் ஊர்மக்கள்.  

ஸ்ரீதிருக்காரீசநாதர் திருக்கோயில் திருப்பணிகள் நல்லவிதமாக நிறைவு பெற்று, விரைவிலேயே கும்பாபிஷேகம் நடைபெற, நாமும் நமது பங்களிப்பைச் செய்வோம். காரி நாயனார் அளவுக்கு நம்மால் பெருஞ்செல்வம் கொடுக்க முடியாவிட்டாலும்கூட, நம்மால் இயன்ற பொருளுதவி செய்து திருப்பணியில் பங்கேற்பது நம்முடைய கடமை அல்லவா? நாம் கொடுப்பது குறைவாக இருந்தாலும், திருக்காரீசநாதரின் பரிபூரண அருள் நிறைவாக கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

படங்கள்: கா.முரளி  

எங்கே இருக்கிறது? எப்படிச் செல்வது?

வேலூர் மாவட்டம் கலவை யில் உள்ளது திருக்காரீசநாதர் திருக்கோயில். வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இருந்து காஞ்சிபுரம், திண்டிவனம் செல்லும் சாலையில் சுமார் 15கி.மீ தொலைவில் அமைந்துள்ள கலவைக்கு பேருந்து வசதி உள்ளது.