Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 10

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 10

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீசாரதா பீடத்துக்கு சிவஸ்வாமியை பீடாதிபதியாக நியமித்து பட்டாபிஷேகமும் நடைபெற்ற பின்னர், சில நாள்கள் மைசூரில் இருந்துவிட்டு, சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிப்பதற்காக பச்சிமவாஹினி என்ற ஸ்தலத்துக்கு பால ஸ்வாமிகளுடன் விஜயம் செய்தார் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள்.

சாதுர்மாஸ்ய விரதம் முடிந்த பிறகு, ஸ்வாமிகள் இருவருமே சிருங்கேரிக்குச் செல்லாமல், தென்னிந்திய திருத்தலங்களுக்கு யாத்திரை புறப்பட்டுவிட்டனர்.

வழியில், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள் புரியும் ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசிப்பதற்காக, ஸ்வாமிகள் இருவரும் நஞ்சன்கூடு சென்றனர். அவர்கள் நஞ்சன்கூட்டை அடைந்தபோது, பால ஸ்வாமிகளுக்கு உடல் நலம் குன்றியது. 'தம்மால் குருதேவருடன் சென்று ஸ்ரீகண்டேஸ்வரரை தரிசிக்கமுடியாமல் போய்விடுமோ?’ என்பதாக பால ஸ்வாமிகளின் மனதில் சற்றே சஞ்சலம் ஏற்பட்டது. ஆனால், பால ஸ்வாமிகளிடம் தாயினும் சாலப் பரிந்து அன்பு செலுத்தும் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் அப்படி விட்டுவிடுவாரா என்ன? பால ஸ்வாமிகள் உடல் நலம் பெறவேண்டி, ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் ஸ்ரீகண்டேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று, விசேஷ பூஜைகள் செய்ததுடன், பால ஸ்வாமிகளைப் போலவே ஒரு தங்க விக்கிரகம் செய்து, அதை ஆலயத்தில் இருந்த சோமாஸ்கந்த மூர்த்தி பீடத்தில் ஸ்திரமாக இருக்கும்படியாகப் பொருத்திவிட்டார். உடனே, பால ஸ்வாமிகள் பூரண குணம் அடைந்துவிட்டார். அன்றைய தினமே தம் குருநாதருடன் ஆலயத்துக்குச் சென்று ஸ்ரீகண்டேஸ்வரரை பக்தியுடன் பூஜித்து வழிபட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

துங்கா நதி தீரத்தில்... - 10

பின்னர், ஸ்வாமிகள் இருவரும் தங்கள் யாத்திரையைத் தொடங்கினர். யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள், மாடுகள், பல்லக்குகள், ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள், சேவகர்கள், ஸ்ரீமடத்து அதிகாரிகள் என ஒரு பெரிய பரிவாரத்துடன் நடைபெற்ற அந்த யாத்திரை தஞ்சாவூர் பக்கமாக வந்தபோது...

'சிருங்கேரி ஸ்ரீசங்கராசாரிய ஸ்வாமிகள் தேச சஞ்சாரமாய் வருகிறபடியால், அவருடனேகூட வருகிறவர்களையும், மற்றுமுள்ள யாவற்றையும் வழியில் ஒருவரும் தடங்கல் செய்யாமல் தாராளமாய் விட்டுவிட வேண்டியது. இவர்கள் தங்கக்கூடிய இடத்தில் யாதொரு திருட்டு பிரட்டு நடக்காமல் பார்த்துக்கொள்வதுடன், அவர்களுக்குத் தேவையான கூலி ஆள், பொருள் வகையறாக்களைத் தருவித்துக் கொடுக்க வேண்டும்’ என்று அன்றைய தஞ்சை கலெக்டர் ஓர் உத்தரவே பிறப்பித்திருந்தார்.

இப்படி ராஜ உபசாரங்களுடன் நடைபெற்ற ஸ்வாமிகளின் யாத்திரை காளஹஸ்தி, திருப்பதி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தஞ்சை, மதுரை, திருநெல்வேலி எனப் பல ஊர்களாகத் தொடர்ந்து, பல ஆண்டுகள் நீண்டது. யாத்திரையின்போது, ஸ்வாமிகள் இருவரும் பிரதான நகரங்களிலும் க்ஷேத்திரங்களிலும் மட்டுமே முகாம் அமைத்துக்கொண்டு, ஸ்ரீமடத் துக்குரிய சம்பிரதாயங்களின்படி பூஜை வழிபாடுகளை நடத்திக்கொண்டும், சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நாடி வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டும் இருந்தனர்.

ஸ்ரீசாரதா பீடத்தின் பீடாதிபதியாக நியமனம் செய்யப்பட்ட உடனே பால ஸ்வாமிகள் தம் குருநாதருடன் தேச யாத்திரையை மேற்கொண்டு விட்டபடியால், அவருக்கான சாஸ்திரப் பயிற்சிகள் எல்லாம் யாத்திரையின்போதே நடைபெற்றன. கணகாலூர் ராமா சாஸ்திரிகளும், பால ஸ்வாமிகளின் பூர்வாசிரம தமையனாரான லக்ஷ்மிநரஸிம்ம சாஸ்திரிகளும் பால ஸ்வாமிகளுக்கு சகல சாஸ்திரங்களையும் பயிற்றுவித்து வந்தனர். பால ஸ்வாமிகளின் 12-வது வயதிலேயே தர்க்கம் சம்பந்தமான பாடங்களைத் தொடங்கிவிட்டனர். ஒருமுறை சொன்னாலே புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு, பால ஸ்வாமிகள் 'ஏகசந்தகிராஹி’யாகத் திகழ்ந்தார். ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளும் அவ்வப்போது பால ஸ்வாமிகளுக்கு தர்ம சூட்சுமங்களை போதித்து வந்தார்.

யாத்திரையின்போது, குருநாதரிடம் பால ஸ்வாமிகள் கொண்டிருந்த அளப்பரிய அன்பையும் பக்தியையும் வெளிப்படச் செய்யும் விதமாக பல அற்புத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

12 ஆண்டுகள் யாத்திரையை முடித்துக்கொண்டு, ஸ்வாமிகள் இருவரும் சிருங்கேரிக்குத் திரும்பி வந்தார்கள். பால ஸ்வாமிகள் சந்நியாசம் பெற்றுக் கொண்டதுமே குருநாதருடன் யாத்திரை சென்றுவிட்டு, இப்போதுதான் சிருங்கேரிக்கு முதல்முறையாக விஜயம் செய்கிறார் என்பதால், ஸ்ரீமடத்து நிர்வாகிகளும் சிருங்கேரி மக்களும், ஸ்வாமிகள் இருவரையும் சிறப்பான முறையில் வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

துங்கா நதி தீரத்தில்... - 10

ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளும், ஸ்ரீசச்சிதானந்த சிவா அபிநவ நரஸிம்ம பாரதி ஸ்வாமிகளும் பரிவாரங்களுடன் சிருங்கேரியை அடைந்ததும், ஸ்ரீமடத்து நிர்வாகிகள் பூரண கும்ப மரியாதைகளுடன் வரவேற்று, பெரிய ஸ்வாமிகளை தங்கப் பல்லக்கிலும், இளைய ஸ்வாமிகளை வெள்ளிப் பல்லக்கிலும் அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். ஊர்வலம் சிருங்கேரி அக்ரஹாரம் வழியாகச் சென்றபோது, 'நாமும் ஒருநாள் இந்தத் தங்கப் பல்லக்கில் ஏறும் காலம் வரும்’ என்பதாக இளைய ஸ்வாமிகளின் மனதில் ஓர் எண்ணம் நொடிப்பொழுது தோன்றி மறைந்தது.

ஊர்வலம் ஸ்ரீமடத்தை அடைந்ததும், இளைய ஸ்வாமிகள் பல்லக்கை விட்டு இறங்கி, குருநாதரிடம் சென்று, பணிந்து நின்றார். பெரிய ஸ்வாமிகள் பல்லக்கை விட்டு இறங்காமல் இளைய ஸ்வாமிகளைப் பார்த்து, 'தங்கப் பல்லக்கில் ஏறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியதோ?’ என்று கேட்டார். 'அப்படித் தோன்றவில்லை. நானும் ஏறும் காலம் வரும் என்று ஒரு கணம் தோன்றியது உண்மைதான்!’ என்றார் இளைய ஸ்வாமிகள்.

பல்லக்கில் இருந்து இறங்கிய பெரிய ஸ்வாமிகள், ''தங்கப் பல்லக்கில் வெறுமனே ஏறிவிடலாம் என்று நினைக்காதே!'' என்று கூறிவிட்டு, பக்கத்தில் இருந்தவரிடம், உக்கிராண அறையில் இருந்து சிறிது நெல் கொண்டு வரச் சொன்னார். கொண்டு வந்த நெல்லை வாங்கி, தங்கப் பல்லக்கில் தாம் அமர்ந்திருந்த இடத்தில் தெளித்தார். அவ்வளவுதான்... நெல்மணிகள் அத்தனையும் நெல்பொரிகளாகப் பொரிந்துவிட்டன. அதைப் பார்த்துத் திகைத்து நின்ற இளைய ஸ்வாமிகளிடம், ''பார்த்தாயா... தங்கப் பல்லக்கில் ஏறவேண்டுமானால், தபஸ் சக்தியைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்'' என்று கூறினார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இளைய ஸ்வாமிகளுக்குத் தம் குருநாதரிடம் முன்பை விடவும் அதிக பயபக்தி ஏற்பட்டதுடன், தாமும் தம்முடைய தபஸ் சக்தியை அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியமும் தோன்றியது.

இளைய ஸ்வாமிகள் தம் குருநாதரிடம் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்ததுடன், குருநாதரின் கட்டளையை வேத வாக்காக நினைத்துச் செயல்படுவதை ஒரு யோகமாகவே கடைப்பிடித்து வந்தார்.

யாத்திரையின்போது ஸ்வாமிகள் இருவரும் திருநெல்வேலியில் முகாம் இட்டிருந்தபோது, ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

மதம் பிடித்த ஒரு யானை தொடர்பான அந்த நிகழ்ச்சி...

- தொடரும்

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்