றைவன் கோயில்களில் குடியிருக்கிறார். ஆனால், கருவறையில் மட்டுமே! நம்பாவிட்டால், கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். கருவறையைத் தவிர, மற்ற இடங்களில் எல்லாம் கோடுகள் தீட்டி, பெயர்களை எழுதி, வகுப்பு - உட்பிரிவு (செக்ஷன்) எனப் பதித்துக் கோயிலையே அலங்காரமாக ஆக்கி இருப்போம்.

பொறுப்புடன் பாதுகாத்துப் பராமரிக்கவேண்டிய பொதுச் சொத்தான, புனிதமான கோயிலின் நிலையே இப்படி என்றால்...

பாடல் சொல்லும் பாடம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்த புருஷர்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்த சிவவாக்கியர் ஏதோ சொல்கிறாரே... அதைக் கேட்போம், வாருங்கள்!

பூ நிலாய ஐந்துமாய் புனற்கண்நின்ற நான்குமாய்
தீ நிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய்
மீகிலாய ஒன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீ நிலாய வண்ணம் நின்னை யாவர் காண வல்லரே!

சிவவாக்கியரின் அற்புதமான பாடல்களில் இதுவும் ஒன்று.

சிவவாக்கியர் எவ்வளவோ சொல்லியும், ஜனங்கள் கேட்பதாக இல்லை. அவர்கள் எல்லாம் சிவவாக்கியரைச் சூழ்ந்து, ''உங்க பேச்செல்லாம் கிடக்கட்டும். சித்த புருஷர்கள் தங்கம் செய்வாங் களாமே! அந்த டெக்னிக்கை எங்களுக்குச் சொல்லிக் கொடுங்க!'' என்று வற்புறுத்தினார்களே தவிர, சிவவாக்கியர் காட்டிய நல்வழியில் நடக்க யாருமே தயாராக இல்லை.

''இறைவா! என்ன அநியாயம் இது? இந்த மக்கள், மேலும் மேலும் சுமைகளைத் தூக்கித் தலையில் போட்டுக்கொண்டு, மூச்சுவிட முடியாமல் தவிக்கிறார்களே! அவர்களுக்கு அமைதியான மனம் அமையாதா? அருமையான இத்தமிழ் நாட்டில் எத்தனை ஆலயங்கள்! எத்தனை அருள் நூல்கள்! இவர்களுக்கே உரிமையானதும், உயர்ந்ததுமான உபதேசங்கள் கோடிக்கணக்காக இருந்தும், இவர்கள் உருப்படமாட்டேன் என்கிறார்களே! இறைவா! இவர்களால் உன்னை உணரவே முடியாதா?'' என்று உள்ளம் உருகிப் புலம்பினார் சிவவாக்கியர். அப்போது உருவான பாடல்தான் நாம் மேலே கண்டது. ஐந்தில் ஆரம்பித்து ஒன்றில் முடியும் அபூர்வமான பாடல் இது.

எந்த விஞ்ஞான உண்மையாக இருந்தாலும், 'அயல்நாட்டுக்காரன் சாதிச்சான். சாப்பிடத் தான் லாயக்கு நம்ம ஆளுங்க’ என்று மாலையைத் தூக்கிக்கொண்டு, அயல்நாட்டுக்காரர்களுக்குப் பாராட்டு விழா நடத்த ஓடும் அன்பர்கள் மனதில் ஆணி அடித்தாற்போல அரும்பெரும் உண்மைகளைப் பதிய வைக்கும் பாடல் இது.

சற்று நிதானமாக அனுபவிக்கலாம், வாருங்கள்! முதலில்...

பூ நிலாய ஐந்துமாய்...

மண்ணில் ஐந்து குணங்கள் இருக்கின்றன. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்பவையே அவை. பூமியில்- மண்ணில் உள்ள இந்த ஐந்து குணங்களாகவும் இறைவன் மலர்ந்திருக்கிறார். அடுத்து...

புனற்கண் நின்ற நான்குமாய்...

நீரில் நான்கு குணங்கள் உள்ளன. அவை சுவை, ஒளி, ஊறு, ஓசை எனப்படும். இந்த நான்காகவும் இறைவன் இருக்கிறார். இதைத் தொடர்ந்து மூன்று வருகிறது.

தீ நிலாய மூன்றுமாய்...

தீயில் ஒளி, ஊறு, ஒலி எனும் மூன்று குணங்களாகவும் இருக்கிறார் இறைவன்.

அடுத்தபடியாக இரண்டு. சிறந்த கால் இரண்டுமாய்...

காற்றில் ஊறு, ஒலி எனும் இரண்டு குணங்களாக இருக்கிறார் இறைவன்.

இனி, ஒன்று! மீநிலாய ஒன்றுமாகி...

ஆகாயத்தில் ஒலி எனும் குணமாகி எங்கும் பரந்திருக்கிறார் இறைவன்.

பாடல் சொல்லும் பாடம்

இப்படி, ஐந்தில் தொடங்கி ஒன்றில் முடியும் இந்த அபூர்வ பாடலை நிறைவு செய்யும்போது, 'வேறுவேறு தன்மையாய்’ என்கிறார் சிவவாக்கியர். பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றிலும் வேறுபட்ட குணங்கள் கொண்டவராக இருக்கிறார் இறைவன். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களையும் வரிசையாகச் சொல்லி, அவற்றின் தன்மைகளையும் படிப்படியாக இப்பாடலில் விவரித்திருக்கிறார் சிவவாக்கியர்.

இந்தப் பஞ்ச பூதங்களில் ஒன்றே ஒன்று இல்லாமல் போனாலும்கூட, ஜீவராசிகள் உயிர் வாழ முடியாது. இந்தத் தகவல் இன்றைய விஞ்ஞான உலகில் ஓரளவுக்காவது அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் என்ன செய்கிறோம்?

நிலம் - நிலத்தின் அடியில் இருந்த அரும்பெரும் செல்வங்களை எல்லாம் அடியோடு அகழ்ந்து எடுத்து, நிலத்தைத் தாங்கும் ஆதாரமான மலைகளையும் துண்டு துண்டாக்கித் தூளாக்கிவிட்டோம்.

அடுத்தது, நீர். நீரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், நீர் நிலைகளெல்லாம் தூர்க்கப்பட்டு, நீண்ட உயரமான கட்டடங்களாகி, 'வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ எனப் புகழ் பெற்ற தமிழகத்தில், தண்ணீர் பாட்டில்கள் பஞ்சம் இல்லாமல் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.

அடுத்தது,  நெருப்பு. இயற்கையாக இருந்த மரங்களையெல்லாம் அசுர வேகத்தில் அழித்து, எரிவாயுவின் விலையையும் தூக்கி ஆகாயத்தில் நிறுத்தியிருக்கிறோம்.

நான்காவதாக, காற்று. இலவசமாகக் கிடைத்த காற்றையும் பலவிதங்களிலும் தூய்மையைக் கெடுத்து, காற்று உலா வருகிறதோ இல்லையோ, 'காற்று மண்டலம் வெகுவேகமாக மாசடைந்து வருகிறது’ எனும் அறிக்கையை உலா வரச் செய்திருக்கிறோம். 'தூய்மையான காற்று - ஒரு மணிநேரம் சுவாசிக்க 100 ரூபாய்’ என அறிவிப்புகள் வேறு!

கடைசியாக, ஆகாயம். ஆகாயத்தில் ஓட்டை போட்டு (ஓசோனில் ஓட்டை) உலகையே வெப்பமயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒரு மனிதனின் கை- கால்- தலை ஆகியவற்றை தனித்தனியாகப் பிய்த்துப் போட்டுவிட்டு, 'எது போனா, என்னங்க... இதயம் பத்திரமா இருக்கு’ என்பதுபோலத்தான் இருக்கிறது தற்போதைய நிலை.

ஞான நூல்கள் அனைத்தும், 'இறைவன் பஞ்ச பூதங்களாகவும் இருக்கிறார்’ என்று போதிக்கக் காரணம், பஞ்ச பூதங்களையும் நாம் நல்லவிதமாகப் பராமரிக்க வேண்டும்; அப்போதுதான் அவை நம்மையும் நம் எதிர்கால சந்ததியையும் வாழ வைக்கும் என்பதை உணர்த்துவதற்காகத்தான்!

- இன்னும் படிப்போம்...