அருட்களஞ்சியம்
யசோதை பாக்யம்!
பாடல்கள் நிரந்தரமாக இருக்கவேண்டுமானால், எங்கும் நிறைந்து, என்றும் இருந்து வரும் ஒரு பொருளைப் பாட வேண்டும். அப்படி பாடக் கிடைப்பதே பாக்யம். அத்தகைய பேறு படைத்தவர்கள் ஆழ்வாராதிகளும் நாயன்மார்களும்.
ஆழ்வார்கள் பாட்டு அன்பில் விளைந்தவை. பக்தியில் திளைத்து தனை மறந்து, பகவானுடன் உறவு கொண்டாடிப் பாடியிருப்பதனால், ஆத்மானுபவச் சுவை மிகுந்தவை. அவர்களில் ஒருவரான பெரியாழ்வாரோ பாடல், பக்தி எல்லாவற்றிலுமே பெரியாழ்வாராக இருந்து வந்திருக்கிறார்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் கோதைக்குத் தாதையானவர். பெருமாளை மருமகனாக அடைந்த மஹா பாக்கியசாலி. அவருடைய திருமொழிகள் அமுதச் சுவையுடையன. அவற்றில் இருந்து கிருஷ்ண பகவானுடைய குணவிசேஷங்களைக் கூறும் பாடல்களில் சிலவற்றின் கருத்துக்களை இங்கே சித்திரித்திருக்கிறோம்.
கண்ணபிரானை யசோதை எப்படி வளர்த்தாள் என்பதைத் தாமே யசோதையாக இருந்து பாடிப் பாடி அவர் அனுபவித்த ஆனந்தமே பின்வரும் காட்சிகள்.





