Published:Updated:

மண்ணுக்கு உயிர் கொடுக்கும் தண்ணீருக்கு மரியாதை... ஆடிப்பெருக்கு ஆனந்தம்! #AadiSpecial #DataStory

மண்ணுக்கு உயிர் கொடுக்கும் தண்ணீருக்கு மரியாதை... ஆடிப்பெருக்கு ஆனந்தம்! #AadiSpecial #DataStory
மண்ணுக்கு உயிர் கொடுக்கும் தண்ணீருக்கு மரியாதை... ஆடிப்பெருக்கு ஆனந்தம்! #AadiSpecial #DataStory

மண்ணுக்கு உயிர் கொடுக்கும் தண்ணீருக்கு மரியாதை... ஆடிப்பெருக்கு ஆனந்தம்! #AadiSpecial #DataStory

ஆடிப்பெருக்கு... தண்ணீரை வணங்கி நன்றி செலுத்த தமிழகத்தில் கொண்டாடப்படும் உற்சாகமான விழா. இந்த விழாவை காவிரி ஆறு பாய்ந்தோடும் டெல்டா பகுதி மக்கள் இன்றும் சிறப்பாகவும் விமர்சையாகவும் கொண்டாடுகிறார்கள். காரணம், காவிரி நீர் வந்த பிறகுதான் டெல்டாவின் வாழ்க்கை தொடங்கும். விவசாயப் பணிகள் ஆரம்பமாகும். அவர்களின் வாழ்வில் பசுமை சூழ்ந்து, வளர்ச்சியும் வளமும் பெருகும். காவிரித் தாய்தான் அந்தப் பகுதி மக்களின் பெரும் வாழ்வாதாரம். தங்கள் வாழ்வில் பெரும் மகிழ்ச்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும் அந்தத் தண்ணீரை வரவேற்பதோடு, அதற்கு மரியாதை செய்து நன்றி செலுத்தும்விதமாகவே ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. 

``தமிழ் மாதமான ஆடியில் வரும் 18-ம் நாளைத்தான் `ஆடிப்பெருக்கு’, `ஆடி 18’, `பதினெட்டாம் பெருக்கு’... எனப் பல பெயர்களில் கொண்டாடுகிறார்கள். இந்த நாளை, தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து மஞ்சள் குங்குமத்தால் வாசலில் பொட்டு இட்டு, வரவேற்று மகிழ்வார்கள் பெண்கள்’’ என்கிறார் கும்பகோணம் பெட்டி காளியம்மன் கோயில் குருக்கள் ரவி. 

``காவிரியை அம்மனாக, தாயாக நினைத்து ஆற்றில் தண்ணீர் வரும் நாளில் அங்கு சென்று வணங்கி ஆசி பெற்றால், எல்லாம் நல்லபடியாக நடக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் சுபிட்சமும் ஆற்று நீரைப்போல் பெருக்கெடுத்து ஓடும் என்ற நம்பிக்கையோடு அதற்கு மரியாதை செய்யும்விதமாகவே அந்த நாளில் காவிரிக் கரையில் கூடுகிறார்கள் மக்கள்.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். படிதுறைகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாகக் கூடுவார்கள். சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்கள், அந்த வருடத்தில் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகள் என அனைவரும் தங்கள் சொந்த பந்தங்களோடு காவிரிக் கரைக்கு வந்துவிடுவார்கள். ஆற்றில் தண்ணீர் வெள்ளமும், படித்துறையில் மக்கள் வெள்ளமுமாக காவிரிக் கரைகளில் மகிழ்ச்சி வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடும். அந்த நாளில் ஆற்றுப் படிகளில் தலைவாழை இலை போட்டு, அதில் காப்பரிசி, (அரிசி, எள்ளு, பொட்டுக்கடலை, வெல்லம் எல்லாம் சேர்த்துக் கிளறுவது) காதோலைக் கருகமணி, கறுப்பு மணி, கண்ணாடி வளையல், மஞ்சள் கயிறு, கண்ணாடி, பூ, பழங்கள், தேங்காய், பால், மரப்பலகையில் செய்யப்பட்ட சப்பரம்... அதில் அம்மன் படம், பெண்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தாலிச் சங்கிலி எல்லாவற்றையும் வைத்து பூஜை செய்து காவிரித் தண்ணீரைப் பார்த்து மனமுருகி சாமி கும்பிடுவார்கள். தாம்பூலத்தில் மஞ்சள் தண்ணீர் இட்டு, கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்து, காவிரி நீருக்கு வரவேற்புக் கொடுத்து வணங்குவார்கள்.

அதன் பிறகு கழற்றப்பட்ட தாலிச் சங்கிலியில் உள்ள பழைய மஞ்சள் கயிற்றை மாற்றி, புது மஞ்சள் கயிற்றில் கோத்து சுமங்கலிப்

பெண்களை வைத்து அணிந்துகொள்வார்கள் பெண்கள். திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்க வேண்டிக்கொண்டு மஞ்சள் நூலை கழுத்தில் கட்டிவிடுவார்கள் பெரியவர்கள். அதன் பிறகு தங்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என காவிரித் தாயிடமும் பெரியவர்களிடமும் வணங்கி ஆசிர்வாதம் வாங்குவார்கள் சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும். புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலையைப் பாதுகாப்பாக வைத்திருந்து, அந்த நாளில் ஆற்றுக்கு எடுத்து வருவார்கள். படியில் அதைவைத்து சாமி கும்பிட்ட பிறகு, அந்த மாலையை ஆற்றில்விட்டு, பிறகு குளித்து, புது உடைகள் உடுத்தி, தாலி பிரித்து கோத்துக் கட்டிக்கொள்வார்கள். சிறுவர்கள் சப்பரத்தை இழுத்துக்கொண்டு உற்சாகமாக தெருக்களில் வலம் வந்து வீட்டுக்குச் செல்வார்கள். இதனால் அம்மன் தங்கள் வீட்டுக்கே வருவதாக எண்ணி மகிழ்வார்கள். இதன் மூலம் விவசாயம் நன்றாக இருக்கும், வாழ்கை வளம் பெறும், தண்ணீர்ப் பஞ்சம், வறட்சி இல்லாமல் பூமி பசுமை சூழ இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் காலம் காலமாக இந்த விழா கொண்டாடப்பட்டு வருகிறது’’ என்கிறார் குருக்கள் ரவி.

 தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்தில் பணிபுரியும் தமிழ்ப் பண்டிதர் மணி.மாறனிடம் பேசினோம்... ``சங்க இலக்கியங்களில் `புனலாடுதல்’ என்ற பெயரில் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும் விழாக்கள், தண்ணீரில் கொண்டாடப்படும் விளையாட்டுகள் பற்றிய குறிப்புகள் நிறைய இருக்கின்றன. நீரை, கடவுளாகவும், வழிபடும் பொருளாகவும் கொண்டாடி இருக்கிறார்கள். பெரிய ஏரிகள், குளங்களில் நீர் தேங்கி வெளியேறும் பகுதிகளின் ஊர்களை நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து `புனல்வாசல்’ என நீரைக் குறிக்கும் வகையில் ஊர்ப் பெயர்கள் வைத்திருக்கிறார்கள். அது, காவிரிப் பகுதியில் இன்றளவும் இருக்கிறது. `சீவகசிந்தாமணி’ காப்பியத்தில் `போரில் வெற்றி பெற்றால், ஆரவாரம், மகிழ்ச்சி என ஆர்ப்பரித்துக் கொண்டாடுவார்கள். அதே அளவு கொண்டாட்டத்தை உற்சாகத்தோடு தண்ணீரில் கொண்டாடியிருக்கிறார்கள்’ என குறிப்புகள் உள்ளன. உயரமான மாடத்தில் இருந்து பெண்கள் தண்ணீரில் குதித்து விளையாடியிருக்கிறார்கள். நீரைப் பற்றி அதிகளவில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன. தமிழ் மாதத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விழா கொண்டாடப்பட்டுள்ளது. ஆடி மாதத்தில் தண்ணீருக்கான விழாவாகக் கொண்டாடியிருக்கிறார்கள். மலைகளில் உருண்டு, மூலிகைகளில் பட்டு, அருவியாகக் கொட்டும் நீரில் குளித்தால் உடலில் உள்ள நோய்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவார்கள். அதுபோலவே காவிரியில் வரும் புது நீரை வரவேற்று, அதில் குளித்து, கும்பிட்டால் எல்லா கஷ்டங்களும் நீங்கி புத்துணர்வோடு இருப்பார்கள். அதனாலேயே ஆடி 18 அன்று காவிரிக் கரையில் கூடி ஆரவாரம் பொங்க ஆர்ப்பரித்துக் கொண்டாடுகிறார்கள்.  

புலவர் தொடித்தலை விழுத்தண்டினார் என்பவர் தன் இளமைக் காலத்தில் ஆற்றில் குதித்து, நீச்சல் அடித்து விளையாடுவார். வயதானவுடன், `இனிமேல் நம்மால் இந்த ஆற்றில் முன்புபோல் விளையாட முடியாதே...’ என வருத்தப்பட்டு பாடல் பாடியிருக்கிறார். அந்த அளவுக்கு தண்ணீர் வறட்சி இல்லாமல் செழிப்பாக இருந்திருக்கிறது என்பதை அந்தப் பாடல் காட்டுகிறது’’ என்கிறார் மணி.மாறன். 
ஆறு, ஏரி, குளம் எனப் பெரும் வெள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க கொண்டாடப்பட்ட இந்த விழா, இன்று கடுமையான வறட்சியாலும் போதுமான தண்ணீர் இல்லாமலும் வருடா வருடம் வெடித்துக் காணப்படும் வயல் வெளியைப்போலவே உற்சாகம் இன்றி வறண்டு கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கல்லணை வந்து சேர்ந்ததும் கண்கொள்ளாக் காட்சியாகக் கடல்போல் இருக்கும். கல்லணை திறக்கப்பட்டவுடன் கடைமடை வரை கரைபுரண்டு பாயும். கடந்த 2002, 2003, 2012-ம் வருடங்களில் கல்லணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இன்னும் சில வருடங்களில் ஆடிப்பெருக்கை ஒட்டி தண்ணீர் திறப்பார்கள். அந்தத் தண்ணீர் கடைமடைப் பகுதிக்கு வந்து சேராது. இந்த வருடமும் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை. இதுதான் கடந்த இருபதைந்து ஆண்டுகளாக டெல்டா காவிரி ஆற்றின் நிலை. ஆடி மாதம் ஆற்றில் தண்ணீர் வரும். ஆடிப் பட்டம் தேடி விதைப்பார்கள். விளைச்சல் அமோகமாகும். விவசாயிகள் வாழ்வில் வளம், வளர்ச்சி எல்லாம் பெருகும். அந்த நிலை இப்போது இல்லை. கடும் வறட்சியால் அவர்கள் வாழ்வு காவிரி ஆற்றைப்போலவே வறண்டு கிடக்கிறது. வேதனைபடுகிறார்கள் மக்கள்.

மண்ணுக்கு உயிரூட்டி தண்ணீருக்கு மரியாதை செய்தவர்கள் விவசாயிகள். அவர்களின் வாழ்க்கையே இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனாலும் இந்த ஆடிப்பெருக்கிலும் நீருக்கு உரிய மரியாதையை இந்த மக்கள் அளிக்கத்தான் போகிறார்கள்!

அடுத்த கட்டுரைக்கு