Published:Updated:

பெண்களுக்கானது ஆடி மாதம்... ஏன்? #AadiSpecial

பெண்களுக்கானது ஆடி மாதம்... ஏன்? #AadiSpecial
பெண்களுக்கானது ஆடி மாதம்... ஏன்? #AadiSpecial

ருள் நிறைந்த பண்டிகைகளைக் கொண்ட ஆடி மாதம் அம்பிகைக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் சிறப்பான மாதம்தான். சக்தி என்றாலே பெண்கள்தானே. ஆடி மாதத்தில் பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக அமைந்த சிறப்பான திருநாள்களை இங்கு காண்போம்.

* ஆடி மாதத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அனைத்தும் பெண்களுக்கான விரத நாள்கள்தான். இந்த நாளில் செய்யப்படும் விளக்கு பூஜைகள் சிறப்பானது. கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பெண் தெய்வங்கள், குலதெய்வங்களாக இருக்கும் பெண் சக்திகளை இந்த மாதத்தில் வழிபடுவது சிறப்பானது. ஆடிப்பூரமும், நாக சதுர்த்தியும் பெண்களுக்கே உரித்தான திருநாளாகும்.

* ஆண்டாளும், பொறுமைக்கு இலக்கணமான பூமாதேவியும் பிறந்தது ஆடி மாதத்தில்தான். எனவே ஆடி மாத சுக்கிலபட்ச துவாதசி அன்று  துளசியை வழிபட குடும்ப நலன் மேம்படும் என்பது பெண்களின் நம்பிக்கை.

* ஆடியில் வளர்பிறை நாளில் வரும் வெள்ளி, செவ்வாய்களில் அம்மன் பூஜை செய்தால் சிறப்பான பலன்களை தரும். கோலமிட்டு, குத்து விளக்கேற்றி, பூஜையின்போது ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் அம்மன் பாடல்களைப் பாடி சக்தியை வணங்குவது நல்லது. பால், பழங்கள், சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம் போன்றவற்றைப் படைத்து பூஜையை நிறைவு செய்யலாம். அப்போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக அலங்கரித்து உணவளித்து, மங்கலப் பொருள்களை அளித்து அவர்களிடம் ஆசியைப் பெறலாம். இதனால் பெண்கள் மாங்கல்ய பலம் பெறுவார்கள்.

* ஆடிப்பெருக்கு பெண்களுக்கே உண்டான திருநாள். பெண்களின் வடிவாகக் கொண்டாடப்படும் ஆற்றினை கொண்டாடி வழிபடுவதே ஆடிப்பெருக்கு. அன்றைய நாளில் புதுத் தாலியை பெருக்கிப் போடுவதும், முளைப்பாரி எடுப்பதும், கருகமணி, கருவளையல்களை ஆற்று நீரில் படையல் அளிப்பதும் பெண்களின் புனிதமான சம்பிரதாயங்கள். புதிய பணிகளைத் தொடங்குவதும், சொத்துகள் வாங்குவதும்கூட அந்த நாளின் விசேஷம்தான்.

* இதே மாதத்தில் வரும் வரலட்சுமி விரதம் மணமான பெண்களின் முக்கிய விரத நாள். வரலட்சுமியை வணங்கி வீட்டிற்கு வருமாறு பாடல் பாடுவது இந்த நாளில் வழக்கம். பலவித நைவேத்தியங்கள் படைத்து மற்ற சுமங்கலிப் பெண்களை அழைத்து, அவர்களுக்கு அன்னமிட்டு, ரவிக்கைத்துணி, மங்கலப்பொருள்கள் அளித்து அவர்களிடம் ஆசி பெறுவது வழக்கம். 

* ஆடிப் பௌர்ணமி தினத்தில்தான் ஹயக்கிரீவர் அவதரித்தார் என்பதால், அன்றைய நாளில் பெண்கள் அவரை வணங்கி தங்கள் பிள்ளைகளின் படிப்புக்காக விரதம் இருப்பார்கள். சங்கரன்கோவில்  கோமதி அம்மன் ஆடிப் பௌர்ணமியன்று புன்னை வனத்தில் இருந்த கடும் தவம்தான் அவளுக்கு சங்கரநாராயணரை தரிசிக்க வாய்ப்பு பெற்றுத் தந்தது. எனவே ஆடிப் பௌர்ணமி விழா அங்கு சிறப்பானது.  

* ஆடி மாதத்தின் இறுதியில் வர இருக்கும் ஆடிக் கிருத்திகைத் திருநாளில் முருகப்பெருமானை வணங்கி குடும்ப நலனுக்காக விரதமிருந்து ஆசி பெறுவார்கள். 

* ஓர் ஆண்டில் வரும் நான்கு நவராத்திரிகளில் வாராஹி நவராத்திரி ஆடி மாதத்தில் வருகிறது. ஆடி மாத வெள்ளிக்கிழமையில் வாராஹி இருக்கும் ஆலயங்களில் இது கொண்டாடப்படுகிறது. தருமபுரி கோட்டை ஸ்ரீகல்யாண காமாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கும் சூலினி துர்கையின் திவ்ய ரூபத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். ஆண்டின் மற்ற எல்லா நாள்களிலும் சூலினியின் முகதரிசனம் மட்டுமே கிடைக்கும் என்பதால் அன்று பெண்களின் கூட்டம் அலைமோதுகிறது. அகிலாண்டேஸ்வரி அன்னைக்கு இந்த மாதத்தின் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஸ்ரீ வித்யா பூஜை பெண்களுக்கானது. 

* ஆடி மாதத்தில் ஈசனின் சக்தியை விட பராசக்தியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது நம்பிக்கை. இதனால் ஆடி மாதம் சுக்ல தசமி அன்று திக் தேவதா விரதம் இருக்கிறார்கள். திக் தேவதைகளை அந்தந்தத் திக்குகளில் வணங்கி அவர்களுக்கான துதியை ஜபித்து எல்லா தடைகளையும் நீக்க வேண்டிக்கொள்கிறார்கள். 

* ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அம்மனுக்கு எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவது நல்லது. இதனால் பயங்கள் நீங்கி செழிப்பு உண்டாகும்.  ஆனால், எலுமிச்சம் பழ விளக்குகளை ஒருபோதும் வீட்டில் ஏற்றக் கூடாது. 

* ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி அன்று அரசமரத்தைப் பெண்கள் வலம் வருவது குழந்தைப்பேற்றினை அளிக்கும். அம்மனுக்குச் சாற்றப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்தால் திருமண பாக்கியம், குழந்தைப்பேறு கிடைக்கும்.