Published:Updated:

கரைபுரண்டு ஓடிய வெட்டாறு... மருதாணி வாசம்..! ஒரு வாசகரின் ஆடிப்பெருக்கு அனுபவம்

கரைபுரண்டு ஓடிய வெட்டாறு... மருதாணி வாசம்..! ஒரு வாசகரின் ஆடிப்பெருக்கு அனுபவம்
கரைபுரண்டு ஓடிய வெட்டாறு... மருதாணி வாசம்..! ஒரு வாசகரின் ஆடிப்பெருக்கு அனுபவம்

சறுக்கை, செட்டியார் தோப்பு, ஆலமரம், கோணக்குண்டு,இறக்கம், மூங்கிக்குத்து இவையெல்லாம் எங்கள் ஊர் வெட்டாற்றின் துறைகள். இவற்றில் சறுக்கை, செட்டியார் தோப்பு, ஆலமரம்,மூங்கிக்குத்து ஆகிய துறைகள் ஆண்களுக்கு. மற்ற இரண்டும் பெண்களுக்கானவை. வெட்டாறு தஞ்சாவூரிலிருந்து வரும்போது மெலட்டூரில் இருந்து எங்கள் ஊருக்கு வழிகாட்டும். எங்கள் சங்கராம்பேட்டையைத் தாண்டி திருக்கருகாவூர் வரை ஆற்றின் கரையில்தான் சாலையே. அந்த வகையில் ஆறோடு பின்னிப் பிணைந்ததுதான் எங்கள் அன்றாட வாழ்க்கை. 

ஐந்து, ஆறு வயதான பிள்ளைகளை எல்லாம்  வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆற்றுக்கு அழைத்துப்போக தொடங்கி விடுவார்கள். ஏப்ரல், மே மாதங்களில்கூட ஆற்றில் தண்ணீர் இருக்கும். ஆனால், கால்வாசி ஆற்றில் ஓடிக்கொண்டிருக்கும். மீதமிருக்கும் முக்கால்வாசி ஆறு எங்கள் விளையாட்டுக்கு. கிரிக்கெட் எங்களை ஆக்கிரமித்த மில்லினியம் வரை கபடி, எரிகுச்சி என்று எங்கள் நாள்கள் ஆறோடு நகர்ந்தவை. ஒரு பையன் வீட்டில் இல்லை என்றால் ஆற்றுக்கு விளையாடப் போயிருப்பான் என்று பெற்றோர்கள் தேடிவருவார்கள். தொடர்ந்து ஆறு, ஏழு மணி நேரம்கூட விளையாடுவோம். தாகமோ பசியோ ஆற்றிலேயே ஊற்று தோண்டினால் தித்திப்பானத் தண்ணீர் வரும். இல்லாவிட்டாலும் கவலையில்லை. ‘என் தண்ணி நல்ல தண்ணி’ என்று சொல்லி ஆற்றுத்தண்ணீரிலேயே மேலாக வாயை வைத்துக் குடிப்பார்கள் நண்பர்கள். 

ஆரம்பத்தில் எனக்குத் தண்ணீரைக் கண்டு பயம் இருந்தது. என் தம்பி எனக்கு முன்பே கிராமத்து வாழ்க்கைக்கு பரிச்சயமானவன் என்பதால் அவன்தான் துணிச்சல் தருவான். ஆழத்துக்குக் கொண்டு போய் விட்டு நீச்சல் கற்றுத் தருவான். வயதில் பெரிய அண்ணன்களுடன் குளிப்பது த்ரில்லான அனுபவம். ரமேஷ் அண்ணன் ஒருமுறை, 'கரை புரண்டோடும் ஆற்றில் வா அக்கரைக்கு போகலாம்' என்றது. மறுத்த என்னை, 'முதுகில் கெட்டியாகக் கட்டிப்பிடிச்சிக்கோ' என்று சொல்லி நீந்த ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் தண்ணீரை வகையாக குடிக்கத் தொடங்கி விட்டேன். கை வேறு வழுக்கத் தொடங்கிவிட்டது. எப்படியோ கரைக்குக் கொண்டு வந்துவிட்டது. வீட்டில் இதைச் சொல்ல ’எம்புள்ளய கொல்லப் பார்த்தியே...?’ என்று அது இரு குடும்பங்களுக்கான சிலநாள் பகையாகிப் போனது.  

ஜுன் இரண்டாம் வாரத்தில் தண்ணீர் வரும்போதே கரை புரள ஓட ஆரம்பிக்கும் வெட்டாறு. 'டேய்... ஆத்துல தண்ணி வந்துடுச்சு...' என்று ஊருக்குள் யாராவது ஒருவர் அதிகாலையிலேயே வந்து சொல்லி விடுவார்கள். ஆற்றில் கரை புரளும் புதுத்தண்ணீரைப் பார்க்க அத்தை மகளைப் பார்க்கும் உற்சாகத்துடன் செல்வோம். முதல் இரண்டு நாள்களுக்குத் தண்ணீரில் நுரைக்கட்டிகள் மிதந்து வரும். கிட்டத்தட்ட பீச்களில் விற்கும் பெரிய பஞ்சுமிட்டாய் சைஸுக்கு. ’ரெண்டு நாளைக்குப் புதுத் தண்ணீ வரும்டா...குளிச்சா உடம்புக்கு ஆகாம போயிடும்’ என்று வீட்டில் கண்டித்து அனுப்புவார்கள். ஆனால், வாய்க்காலில் குளிக்கலாம். வெட்டாற்றில் எங்கேயோ பிரியும் இரண்டு வாய்க்கால்கள் எங்கள் தெரு முடியும் இடத்தில் இருக்கும். இரண்டு வாய்க்கால்களுக்கும் ராஜா, ராணி என்று பெயர்கள். அங்கே குளிக்கலாம். பெண்கள் பெரும்பாலும் வாய்க்கால்களில்தான் குளிப்பார்கள். 

ஜுன் முதல் வாரத்தில் பள்ளி திறந்த பிறகு பழையபடி விளையாட முடியாதே என்ற வருத்தத்தில் இருக்கும் எங்களுக்கு ஆற்றில் தண்ணீர் வருவது இன்னும் சோகத்தைக் கொடுக்கும். விளையாட ஏதாவது தரிசு வயலைத்தான் பார்த்து ரெடி பண்ண வேண்டும். ஆனால் ஆற்றில் குளிப்பது அவ்வளவு சுகமான அனுபவம். அப்பாவுடன்தான் எப்போதும் செல்வேன். சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களுடன். அப்பா அனுபவித்தெல்லாம் குளிக்க மாட்டார். சோப்புக்கு முன் ஒரு முக்கு, சோப்புக்குப் பின் இரண்டு முக்கு அவ்வளவுதான். ஆனால் திருநாவுக்கரசுடனும் முத்துக்குமாருடனும் போனால் நான் வீட்டுக்குத் திரும்பக் குறைந்தது இரண்டு மணி நேரம் ஆகும். 

முன்பு சொன்னதுபோல பெண்களுக்குக் கோணக்குண்டும், இறக்கமும்தான் சொந்தம். ஆனால், இந்த விதிகள் எல்லாம் ஆண்டுக்கு இரண்டு நாள்கள் காணாமல் போகும். அவை கன்னிப்பொங்கலுக்கும், ஆடி 18க்கும்தான். இந்த இரண்டு நாள்களும் எங்கள் ஊர் பெண்களுக்குக் கொண்டாட்டமான நாள்கள். ஆடி 18-க்கு நாங்கள் எப்போதும் விளையாடும் மூங்கிக்குத்துத் துறைக்கு வந்து சாமி கும்பிடுவார்கள். சாதாரணமாக அழுக்கு வடியும் பெண்கள்கூட இந்த நாள்களில் தங்களை வெகுவாக அலங்கரித்துக்கொள்வார்கள். முதல்நாளே செவ்வந்தி பூ ரேட் ஏறிவிடும். செவ்வந்தி பூவை பேப்பர் அட்டையில் நீளமாகத் தைத்து சடையில் அணிந்துகொள்வார்கள். எதிர் வீட்டு முருகேசன் மாமாவுக்கு ஆறு பெண்கள். இந்த நாள்களில் எல்லாம் காலையிலேயே முருகேசன் மாமா வீட்டுப் பெண்கள் அம்மாவிடம் வந்து பூ சுற்றிக்கொள்வார்கள். அதுவரை பாவாடை சட்டையில் பார்த்த பெண்களை எல்லாம் பாவாடை தாவணியிலோ புடவையிலோ பார்க்கும்போது பரவசமாக இருக்கும். 

காலையில் சாப்பிட மாட்டார்கள். எடுத்துச் செல்வதற்கு வீட்டிலேயே புளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், வடகம் ஆகியவற்றைத் தூக்கு வாளிகளில் வைத்து வயர்கூடையில் எடுத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாகக் கிளம்புவார்கள். ஆற்றுக்கு வந்து சேர்பவர்கள் அங்கேயே ஒரு பிள்ளையாரைப் பிடித்து அதை சாணத்தால் மெழுகி வாழை இலையில் வைத்து அதன் முன் அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவார்கள். தேங்காய், பூ, பழம், மஞ்சள் துணி, காதோலை கருகமணி, மஞ்சள் கயிறு ஆகியவை பூஜையில் இருக்கும். முக்கியமாகக் காப்பரிசி, மஞ்சள் தடவிய நூல்கயிறுகள்(இதை கங்கணம் என்று சொல்வோம்) ஆகியவை இருக்கும். பூஜை முடிந்தவுடன் கயிறைக் கட்டிக்கொள்பவர்கள் எங்களையும் கூப்பிட்டு கட்டி விடுவார்கள். முதல் நாள் போட்ட மருதாணியின் குளிர்ச்சி பெண்களின் கைகளில் அப்போதும் இருக்கும். வீட்டிற்கு வந்தால் அம்மா ‘நம்ம வீட்டு கயிற்றைக் கட்டுறதுக்கு முன்னாடி யார் வீட்டுக் கயிற்றையோ கட்டிட்டு வந்துருக்கே...’ என்று அதில்கூட ஈகோ பார்ப்பார்கள். சில நேரங்களில் கரையே தெரியாத அளவுக்கு வெட்டாறு தண்ணீர் இருக்கும். அப்போதெல்லாம் வேறு வழியே இல்லாமல் வீட்டிலோ வாய்க்காலிலோ சாமி கும்பிடுவார்கள். 

விவசாயிகளுக்கு ஆடி 18 அன்று கண்டிப்பாக ஒரு விதை மணியையாவது விதைத்துவிட வேண்டும். ஆடி18-க்கு வயலில் ஏதாவது ஒரு வேலை நடப்பதை நல்ல சகுனமாகவே பார்ப்பார் அம்மா. காலப்போக்கில் எல்லாம் மாறின. நான் சென்னை வந்த புதிதில் ஜுன் 12 என்ற அந்தத் தேதி கொஞ்சம் கொஞ்சமாகத் தள்ளிப்போய் ஆடி18 ஆக வந்து நின்றது.  சில ஆண்டுகளாகவே ஆற்றில் சரியாகத் தண்ணீர் வருவதில்லை. முன்பு ஆடி 18-க்கு மட்டுமாவது தண்ணீர் விடுவார்கள். இப்போது அதுவும் இல்லை. ஆடிப்பெருக்கு என்பதே ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைத்தான் குறிக்கும். ஆனால், வீட்டில் குழாயடியில் ஆடிப்பெருக்கை வேண்டாவெறுப்பாகக் கொண்டாடத் தொடங்கினோம்.

சென்னைக்கு வந்த பின்னும்கூட ஆண்டுதோறும் ஆடி18-க்கு நிச்சயம் சொந்த ஊரில் இருப்பேன். கடந்த ஆண்டு நான் செல்லும்வரை வெட்டாற்றில் தண்ணீர் வரவில்லை. நாளைக்கு வந்துடும்பா… என்று நம்பிய ஊரோடு நானும் காத்திருந்தேன். வரவில்லை. வேதனை தாளாமல் மதியமே கிளம்பிவிட்டேன். 

சிறுவயதில் எத்தனையோ முறை எங்கள் கிரிக்கெட் விளையாட்டை கெடுத்த வெட்டாற்று தண்ணீரைச் சபித்திருக்கிறேன். அதற்கெல்லாம் சேர்த்து இப்போது பழிவாங்குகிறதோ என்ற உணர்வு. ஆற்றில் தண்ணீர் ஓடியதற்கான அறிகுறிகள் சிறிது சிறிதாக மறைந்து வருகிறது. மணலைக்கூட மனிதர்கள் யாரும் விட்டுவைக்கவில்லை. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் சமதரையாக்கி ஃப்ளாட் போட்டு விடலாம் என்னும் அளவுக்கு வறண்டுவிட்டது ஆறு. விளைவு திறந்துவிடும் தண்ணீர் சற்று மெதுவாக நின்று ஓடியதெல்லாம் மறைந்துபோய் திறந்து விட்ட அடுத்த சில நாள்களிலேயே கடலை அடைந்துவிடுகிறது. 

கடந்தாண்டு திரும்பி வரும்போது உள்ளே குமைந்துகொண்டுதான் வந்தேன். நான் பள்ளி சென்றபோது ஆடி ஓடித் திரிந்த இடங்கள், மரங்கள் எல்லாம் இப்போது பொட்டல் காடாக நிற்கின்றன. இனி ஆடி18-க்கு வரவே கூடாது என்ற முடிவுடன் ஊரைவிட்டு தஞ்சையை நோக்கி வந்தேன். இந்த ஆண்டு செல்லவே இல்லை. அம்மா போனில் ‘கொஞ்சமா தண்ணி நிக்கிது. வர்றியா?’ என்று கேட்கிறார். கர்நாடகாவில் மழை அதிகமானதால் திறந்துவிடப்பட்ட தண்ணிர் இன்னும் வந்துகொண்டிருக்கிறது போல... 

கடந்தாண்டு ஊரிலிருந்து திரும்பும்போது பாதி வழியில் செல்ஃபோனில் டவர் கிடைக்கவே வாட்ஸப், ஃபேஸ்புக் ஓப்பன் ஆனது. 18 எண் கொண்ட ஆடி காரை படமாகப் போட்டு ஆடி18 வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருந்தனர். மறுநாள் செய்தித்தாளில், ஆடிப்பெருக்கில்கூட மது விற்பனையில் சாதனை படைத்திருந்தது தமிழக அரசு. ஆடிப்பெருக்கைக் கூட குடித்துக் கொண்டாடும் அளவுக்கு மாறிவிட்டோம் நாம். சரிதான்... ஒரு கொண்டாட்டத்துக்கான அடையாளங்களையும் காரணங்களையும் எல்லாம் அழித்து விட்டால் நாம் என்ன செய்வோம்?

நாம் ஒரு விசேஷத்தை, பண்டிகையை, நம் அடையாளத்தை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதைக் கூட அரசாங்கம்தான் முடிவு செய்கிறது. கிட்டத்தட்ட அது நம்மை எல்லாம் பாழுங்கிணற்றில் தள்ளிக்கொண்டிருக்கிறது. அந்தக் கொடூரத்தை நாம் கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒன்று மட்டும் உண்மை - பெரும் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். அது நம்மை பாதிப்பதை விட நம் பிள்ளைகளை இன்னும் அதிகமாகப் பாதிக்கும்.