மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்

திருஷ்டி பூசணிக்காய் தேவையா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? வெள்ளிக்கிழமை, அமாவாசை தினங்கள், ஆயுத பூஜை என்றாலே வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை வாசலில் திருஷ்டி பூசணிக்காய் உடைக்கிறார்கள். அதேபோல் தீபாவளி என்றால், நடுவீதியில் தவுசன்வாலா, டென்தவுசன்வாலா என சர வெடிகளை வெடித்துப் பட்டாசுக் கொண்டாட்டம்! வாகன ஓட்டிகளையும், பாதசாரி களையும் விபத்துகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கும் இதுபோன்ற சம்பிரதாயங்கள் தேவையா? இவை சுற்றுச் சூழலை சீர்கெடுக்கும் விஷயங்கள் அல்லவா?!

- கே.சுடலைமுத்து, ஆத்தூர்

முதல் கோணம்...

முன்பெல்லாம், திருஷ்டி தோஷம் விலகுவதற்காக பயன்படுத்தப்படும் பூசணிக்காயை ஆள் நடமாட்டம் இல்லாத, வேற்று நபர்களின் கண்ணில் படாத இடத்தில் மறைத்துவிடுவார்கள். அவற்றைப் பார்த்தால், திருஷ்டி தோஷம் ஞாபகத்துக்கு வந்து, மனம் பாதிப்புக்கு உள்ளாகும். உடைந்து சிதறிய பூசணித் துண்டங்களை மிதித்தால், 'நாமும் பாதிக்கப்படுவோமோ’ என்று பயத்தில்  மனம் ஆழ்ந்துவிடும். ஆகவே, திருஷ்டிப் பூசணிக்காயை உடைப்பவர்கள், மற்றவர்கள் மனதைப் பாதிக்காதவாறு செயல் படுவார்கள். மற்றவர்கள் பார்க்கவோ, மிதிக்கவோ வாய்ப்பளிக்கமாட்டார்கள்.

அதேநேரம், திருஷ்டிக் கழிப்பை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் மூடநம்பிக்கையாகச் சித்திரிப்பது தவறு.

? உயிருக்கு உலைவைக்கும் இந்தச் செய்கையை மூடநம்பிக்கை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வதாம்?!

நிறைய விஷயங்களைச் சொல்லலாம்! வயல்களில் சோளக்கொல்லை பொம்மை, வீடுகளில் வைக்கோல் பொம்மை, குழந்தைகள் அலங்காரத்தில் அதன் கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு, மஞ்சள்- சுண்ணாம்பு கலந்த தண்ணீரில் ஆரத்தி எடுப்பது, பச்சைப் பிடி சுத்திப்போடுவது, வரவேற்பறையில் அலங்கார பொம்மை, வாசல் உத்திரத்தில் கற்களைக் கட்டித் தொங்கவிடுவது, கைகளில் கலர் நூல்களால் காப்புக்கட்டுவது, இரும்பு வளையல் தரிப்பது, இரும்பிலும் வெள்ளி யிலும் மோதிரம் போட்டுக்கொள்வது, வெளி தேசத்து நம்பிக்கையில் சீன பொம்மை, அந்தத் தேசத்தின் மணிகள், ஜெர்மனி வளையம் ஆகியவற்றை வீட்டில் கட்டித் தொங்கவிடுவது, எருக்குப் பிள்ளையார், பஞ்சலோகப் பிள்ளையார் என்று வரவேற்பறையை மறைத்துக்கொண்டும், வாசல் சுவரிலும் பல வடிவங்களில் பிள்ளையார் சிலைகள், உருவங்கள், வாஸ்து உருவம், பலவித யந்திரங்களை செப்புத் தகட்டில் செய்து வாசற்கதவில் தொங்கவிடுவது போன்றவையும் உங்கள் பட்டியலில் சேரும்.

அதுமட்டுமா? வாகனங்களில் எலுமிச்சை கட்டித் தொங்கவிடுவது, சந்தனம்- குங்குமம் வைத்து பூமாலை யால் அலங்கரிப்பது, டிரைவருக்கு முன்னே தெய்வ உருவங்கள் வைத்திருப்பது, பல்வேறு பொம்மை கள் தொங்கவிடுவது, வாகனம் கிளம்பும் போது டயர்களில் எலுமிச்சையை வைத்து நசுக்குவது, கழுத்திலும், கையிலும், அரைஞாண் கயிற்றிலும் தாயத்து கட்டுவது, புலி நகம் அணிதல், பெண் குழந்தைகளின் இடுப்பில் வெள்ளியால் ஆன அரசு இலையை அணிவிப்பது, ஆண் குழந்தைகளுக்கு அரைஞாண் கயிற்றில் நாய் உருவம் பதித்த டாலர் சேர்ப்பது... இவையும்கூட புதிய பகுத்தறிவு வாதிகளின் கண்ணோட்டத்தில்  மூடநம்பிக்கைகளே! இந்த மூடநம்பிக்கைகள், பல நகைச்சுவை மன்னர்களையும் உருவாக்கி இருக்கிறது.

கேள்வி - பதில்

? எது எதெல்லாம் மூடநம்பிக்கைகள் என்று பட்டியல் தேவையில்லை! திருஷ்டிப் பூசணி தேவையா என்பதுதான் கேள்வி?

அவசரம் வேண்டாம். நம்மையும் அறியாமல் நாம் எந்த விஷயங்களை எல்லாம் சட்டென்று விலக்க முடியாதபடி ஏற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைத் தெளிவுபடுத்தவே இந்த விவரங்கள்!

வீடு, வாகனம், உடை அலங்காரம், கழுத்து, கை கால், மார்பு அணிகலன்களில் குறிப்பிட்ட நிறம், குறிப்பிட்ட உலோகம் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள் பலர். வீட்டு எண், வாகன எண், தொலைபேசி எண் ஆகியவையும் எண்கணிதப்படி அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் பலருண்டு. பெயரின் எண் எண்கணிதப்படி இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி தங்கள் பெயரை மாற்றிக்கொள்பவர்களும் உண்டு. அடுத்து, ராசிக் கற்கள். கற்களின் பெருமையை மனதில் கொண்டு, அவற்றை கட்டை விரலைத் தவிர, மற்ற விரல்களில் எல்லாம் பதித்து மோதிரங்கள் அணிபவர்களும் உண்டு. பெயரியல் மேதைகளைச் சந்தித்து, பொருத்தமான ராசிக் கல்லைத் தேர்ந்தெடுத்து அணிவதும், புதிய பகுத்தறிவு வாதிகளின் கண்ணோட்டத்தில் மூடநம்பிக்கைகளே! ஆனால், இவை பழங்காலத்தில் இருக்கவில்லை. இவை அனைத்தும் விஞ்ஞானம் அளித்த மூடநம்பிக்கை கள் ஆகும்.  

வியாபாரத்தில் முதலில் போணியா கும் காசை தரையில் தட்டி, கண்களில் ஒற்றிக்கொண்டு, பணப்பெட்டியில் போடுவது, வியாபாரம் முடிந்து கதவைச் சாத்தும்போது எலுமிச்சைப் பழத்தை எதிரும்புதிருமாக மூன்று தடவை சுற்றி நசுக்கி எறிவது போன்ற செயல்களையும் மூடநம்பிக்கைகள் என்றே சொல்வார்கள்.

? அதெல்லாம் சரிதான். ஆனால், இந்த விஷயங்களால் மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லையே?!

ஒற்றையடிப் பாதைகளிலும், நடைபாதை களிலும் திருஷ்டிக் கழிப்புகள் தென்படாது. நடைபாதையை விட்டுவிட்டு கழிப்புகள் கிடக்கும் இடத்தில் நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டு, அதையே நடைபாதையாகவும் மாற்றி, 'எங்களுக்கு இடையூறாக இருக்கிறது’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். மக்கள் பெருக்கத்தின் காரணமாக நடைபாதைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிவிட, சட்டத்தை மீறிச் செயல்படும்போது, கழிப்பைச் சந்திக்கவேண்டி வருகிறது. வாகனப்பெருக்கம் நடைபாதையையும் அடைத்துக்கொண்டு, வேறு வழியின்றி கழிப்பில் இணைந்துவிடுகிறது. முன்னேறிய சமுதாயம் நடைபாதையில் நடக்காமல் வாகனங்களின் பாதையைப் பயன் படுத்துவதை அன்றாடம் பார்க்கிறோம். புதுப்புது விஞ்ஞானக் கண்டுபிடிப்பை ஏற்று, தங்கள் வசதிக்கு மற்றவர்களைப் பணியவைக்கும் போக்கு வலுவடைந்து இருக்கிறது. தங்கள் சௌகரியத்துக்கான இடையூறுகளை அகற்றி, செல்வாக்கால் சாதிக்கும் விஞ்ஞான ஆக்கிரமிப்புக்கு உதவுவது பெருந் தன்மை ஆகாது.

பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் சாலை யில் குவியும் குப்பைகளை குப்பை லாரி வந்து ஏற்றிக்கொண்டு செல்கிறது. ரோட்டில் குப்பை கொட்டுவதை இடையூறாகச் சித்திரிப்பது இல்லையே! இதே பாணியில் திருஷ்டிக் கழிப்பு களையும் ஏற்றிச் சென்று அப்புறப்படுத்தலாமே?! திருமண மண்டபத்தின் குப்பைகள் வாகன ஓட்டிகளுக்கும், நடைபாதைக்கும் இடையூறாக இருக்கும். அதை விமரிசிக்க மாட்டார்கள். மிகப் பொறுமையாக குப்பை லாரியைக் கொண்டுவந்து அவற்றை அகற்றுவார்கள். மாமிச உணவின் மிச்சங்கள் தெருவிலும் நடைபாதையிலும் சிதறிக்கிடக்கும். அதை அகற்றுவதற்கும் குப்பை வண்டிகள் தயார் நிலையில் இருக்கின்றன. ஆனால், பூசணிக்காய் மட்டும் இடையூறாக கண்ணை உறுத்துகிறது!

? எனில், நமக்கான பொறுப்பைத் தட்டிக் கழிக்கச் சொல்கிறீர்கள்; அப்படித் தானே?

அப்படி இல்லை. நம்பிக்கை சார்ந்த ஒரு விஷயத்தை உள் நோக்கத்துடன் பார்க்கும் எண்ணம், பொதுச்சேவையில் இருப்பவர்களுக்கு இருக்கக்கூடாது என்கிறேன். குப்பைத் தொட்டியின் துர்நாற்றம் நடப்பவர்களையும், வண்டி யோட்டிகளையும் பாதிக்கும். அதை யாரும் கண்டுகொள்வது இல்லை.

கோழிகளையும் மாமிசங்களையும் ஏற்றி வரும் வாகனங்கள் பலவும், நடை பாதையில் செல்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கும். துர்நாற்றத்தை நுகர்வோர் பலவிதமான பிணிகளில் அகப்பட்டுத் துன்புறுவ தும் இடையூறுதான். அதேபோன்று குண்டும் குழியுமான சாலைகள் வாகனங்களுக்கும் நடப்ப வர்களுக்கும் இடையூறாகத் திகழும். ஆக, திருஷ்டிப் பூஷணிக்காய் மட்டும் உயிரைப் பறிக்க வில்லை; மற்ற இடையூறுகளும் கொஞ்சம் கொஞ்சமாக உயிரைப் பறிக்கும்.

காலத்தை ஒட்டித் தங்கள் கண்ணோட்டம் மாறவேண்டும். திருஷ்டி தோஷத்தில் நம்பிக்கை கொண்டவனும் குடிமகன்தான். அவனுக்கும் உரிமை உண்டு. கழிப்புப் பொருட்களை அகற்றும் பணியை அரசு இயந்திரம் ஏற்கவேண்டுமே தவிர, அவை வேண்டாம் என்று தடை விதிப்பது பெருமையல்ல.

? அப்படியெனில், இதற்கு என்னதான் வழி?

தீபாவளிக் கொண்டாட்டத்தில், விடிவதற்கு முன்பு நிகழும் பட்டாசு வெடிப்பு எவரையும் பாதிக்காது. அதேபோன்று, அவரவர் வீட்டு முற்றத்தில் நடைபெறுவதை வாகன ஓட்டி தடுக்க இயலாது. அரசாங்கம் மனது வைத்து, அன்றாடம் குப்பைகளை அகற்ற முற்பட்டால், பட்டாசுக் குப்பையும் அகன்றுவிடும். தினந்தோறும் வாகனப் புகை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்பை விடவும், வருடத்தில் ஒரு சில நாள் மட்டுமே வெடிக்கப்படும் பட்டாசுகளின் புகை ஏற்படுத்தும் பாதிப்பு மிகையானது அல்ல.

கேள்வி - பதில்

ஒவ்வொரு சிக்னலிலும் நிற்கும் வாகனப் புகையால் நோயை ஏற்பவர்கள் பலர் உண்டு. மாசு படிந்த காற்றை சுவாசிப்பதோடு, இரைச் சலால் செவிகளுக்கும் பாதிப்பு அதிகம். 'நித்ய கண்டம் பூர்ணாயுசு’ என்ற அளவுக்கு, சாலைகளில் நடப்பவர்கள் பயந்து நடுங்கி, நடந்துகொண்டிருக்கிறார்கள் வாகனங்களின் புகை மண்டலம் பாதிப்பைத் தரும் என்பதை அறிந்தும், மௌனமாகக் காலத்தைத் தள்ளவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிருக்கிறார்கள்.

எனவே, பூசணிக்காய் அளவில் உள்ள பெரிய குறைகளை மறைத்து, கடுகளவு குறையை பெரிதாக்கிக் காட்டி, மற்றவர்களின் உரிமையை பறிக்க எண்ணுவது தவறு. 'பந்த்’ - கடையடைப்பு என்ற பெயரில் மக்களை வெளியே வரவிடாமல் அலைக்கழிப்பதும், பேரணி, சவ ஊர்வலம் என்ற பெயரில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடைஞ்சல் தருவதும் தவறு என்று தெரியாதவர் களுக்கு, திருஷ்டிப் பூசணியும், பட்டாசுப் புகையும் பெரிய இடையூறாகத் தெரிவதையும், அவற்றைத் தடைசெய்ய எண்ணுவதையும் நினைக்கும்போது, நாம் குடியரசில் இருக்கிறோமோ, முடியரசில் இருக்கிறோமோ என்று சந்தேகம் உண்டாகிறது.

இரண்டாவது கோணம்...

ங்கள் பதில்களில் திருப்தி இல்லை. விஞ்ஞானத்திலும் பொருளாதாரத்திலும் நாடு முன்னேற வேண்டும். உலக நாடுகளுக்கு இணை யாக வளர்ந்தால் மட்டுமே மக்களுக்கு மகிழ்ச்சி நிலைக்கும். ஆகவே, பத்தாம்பசலித்தனமான நடைமுறைகளை கட்டிக்காத்துக் கொண்டு, சொந்த வாழ்க்கையைப் பாலைவனமாக்கக் கூடாது. சூழலுக்கு உகந்த மாறுபாடுகளே வளர்ச்சியின் படிக்கட்டுகள். உழைத்து உடலை வலுவாக்கி, சிந்தித்து மனதையும் உயர்த்தி நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும். மூட நம்பிக்கை களைக் களைந்து விஞ்ஞான விளக்கத்தில் தெளிவுபெற்று வாழ்வது சிறப்பு.

? அதற்காக, பழம்பெருமைகளை ஒவ்வொன் றாக மறந்துவிடச் சொல்கிறீர்களா?

தினம் தினம் ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் மாறுபாட்டைச் சந்திக்கும் நாம், பழம்பெரும் செயல்பாட்டை சிரஞ்சீவியாக்க நினைப்பது அறியாமை எனச் சொல்லவருகிறோம்.

அவசர உலகில் சாதிக்க வேண்டியது ஏராளம். வாழ்வின் எல்லை போதுமானதாக இருக்காது. பழைய நடைமுறைகள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக அமையும்போது, அவற்றைத் துறப்பதற்கு முன்வர வேண்டும். அதற்கு முன் வராதவர்களை வலுக்கட்டாயமாகப் பணிய வைக்க வேண்டும். பழைமைகள் இன்றையச் சூழலுக்குப் பொருந்தாது. உலகத்தோடு இணைந்து வாழ, உலகவியல் மாற்றத்தை ஏற்று, நமது மூட நம்பிக்கைகளைத் துறக்கவேண்டும். திருஷ்டி கழிக்க பூசணிக்காய் அல்லாத வேறு வழிமுறைகள் எத்தனையோ உண்டு! தீபாவளிப் பட்டாசுகளில் புகைக்காத வகைகள் ஏராளம் உண்டு. அவற்றைப் பயன்படுத்தலாம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியே கொண்டாட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

பூசணிக்காய் திருஷ்டி தோஷத்தை அகற்றுமா என்று நமக்குத் தெரியாது. தீபாவளிக் கொண் டாட்டத்தில் பட்டாசுகளின் பங்களிப்பு என்ன, ஏன் என்பதும் தெரியாது. பழைய நடைமுறைகள் என்று எண்ணி ஏற்கிறோம்; அவ்வளவுதான்! எத்தனையோ நல்ல நடைமுறைகளைத் துறந்து இருக்கிறோம். நமது வேஷம், கோலம், நடைமுறை அத்தனையும் மேல்நாட்டு பாணியில் இருக்கின்றன. உணவு முறையும், சிந்தனைகளும் கூட மாறிவிட்டன. அப்படியிருக்க, திருஷ்டிப் பூசணிக்காயும் பட்டாசும் ஏன் மாறக்கூடாது? ஆகவே, பிடிவாதம் பிடிக்காமல், மற்றவர்களுக் கான இடையூறுகளைத் தவிர்க்க, அவற்றைத் துறப்பதுதான் புத்திசாலித்தனம்!

மூன்றாவது கோணம்...

ழைய நடைமுறைகளைத் துறக்கும்படி பரிந்துரைக்கிறீர்கள். ஆழமாகப் பதிந்த நம்பிக்கை அவ்வளவு எளிதில் மனதைவிட்டு அகலாது. பல தேர்வுகளில் வெற்றி கண்ட பேனாவைத் துறக்க மனம் வராது. பணத் தட்டுப்பாடு இல்லாமல் சிறப்பளிக்கும் பர்ஸைத் துறக்கவும் மனம் வராது. அப்போதெல்லாம் தங்களது நம்பிக்கை உயர்ந்ததா, தாழ்ந்ததா என்ற ஆராய்ச் சியில் மனம் இறங்காது. தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, நம்பிக்கையில் ஈர்ப்பு தளராமல் இருக்கும். மற்றவர்கள் அதை மூட நம்பிக்கையில் சேர்த்தாலும், தனது மன உறுதிக்கு அது கட்டியம் கொடுப்பதால், அதை விட்டுவிடப் பரிந்துரைப்பது, மன உறுதிக்கு ஊறு விளைவிக்கும். மன உறுதியை நிலைநாட்ட அந்த நம்பிக்கைகள் ஒத்துழைக்கும்.

கேள்வி - பதில்

? எனில், நம்பிக்கைகள் மனம் சார்ந்த விஷயம் என்கிறீர்களா?

நிச்சயமாக! வாலியையும் சுக்ரீவனையும் போரில் இறங்கவைத்தார் ஸ்ரீராமன். 'சந்தர்ப்பம் வாய்க்கும்போது வாலியை அழிக்கிறேன்’ என்று வாக்குறுதியும் தந்தார். ஆனால், சண்டையில் வாலியிடம் அடிபட்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பி ஓடிவந்தான் சுக்ரீவன். ''ஏன் இப்படி வேடிக்கை பார்க்கிறீர்கள்? அவனிடம் போர் புரிவது எனது வாழ்வை இழக்கவைக்கும்'' என்று புலம்பினான். பின்னர், சுக்ரீவனின் கழுத்தில் ஒரு மாலையை அணிவித்து, மீண்டும் போருக்கு அனுப்பிவைத்தார் ஸ்ரீராமன்.

மாலையை ஏற்ற சுக்ரீவனுக்கு அதிகப்படியான தெம்பு வந்து விட்டது. மாலை தன்னை வெற்றி பெறச் செய்யும் என்ற நம்பிக்கை, அவன் உத்வேகத் துடன் பொருத பயன்பட்டது. இங்கே மாலை அணிவது மூடநம்பிக்கையாகப் படலாம். ஆனால், அவனது மனம் உறுதி பெற அது ஒத்துழைத்தது. நம்பிக்கை அத்தனையும் மனம் சார்ந்த விஷயம். அசையாத நம்பிக்கை இருப்பவர்களின் மனதை ஆராய்ச்சி விளக்கங்களால் அசைக்க முடியாது. நமது சிந்தனைக்குப் பொருந்தாமல் இருக்கலாம்; ஆனால், ஆழமான அவனது நம்பிக்கை அவனுக்குத் தேவையான உறுதியை அளித்து, வெற்றியை எட்ட வைத்துவிடும். அவனைப் பொறுத்தவரையிலும் அது நல்ல நம்பிக்கைதான்.

? இதை எல்லோரும் ஏற்க வேண்டுமே?!

ஏற்றுக்கொள்ளாதவர்களும்... அதாவது மூட நம்பிக்கையை எதிர்ப்பதாகச் சொல்பவர்களும் கூட சில விஷயங்களில் உறுதியாக இருப்பார்கள். 8, 13-ம் எண்கள் உள்ள வீட்டை வாங்க முன்வர மாட்டார்கள். தேர்த லில் வெற்றி பெற ஜோதிடரை அணுகுகிறார்கள்; கோயில்களைச் சுற்றி வருகிறார்கள்; தலைவனிடம் ஆசி பெறுகிறார்கள்!

8, 13 ஆகிய எண்களை நிர்ணயம் செய்தது நாம். தெருவில் முதலில் உள்ள வீட்டை இடித்து, அந்த வீட்டு எண்ணான 8-ஐ 7-ஆக மாற்றினாலும் வாங்க மாட்டார்கள். 'முன்பு எட்டாக இருந்த வீடு’ என்கிற எண்ணம் அவனை இணையவைக்காது. ஜோதிடம் என்பது அவனைப் பொறுத்தவரையில் மூடநம்பிக்கை. ஆனாலும், அவன் இந்த விஷயத்தில் நம்பிக்கை வைக்கிறான். ஆக, மனதை எந்த நம்பிக்கை உயர்த்துகிறதோ அல்லது திருப்திப்படுத்துகிறதோ, அது அவனைப் பொறுத்தவரையிலும் நல்ல நம்பிக்கையே! நம்பிக்கையே மனதுக்கு ஊக்கம் அளித்து, செயலில் வெற்றியை எட்டவைக்கிறது. காதலியை நம்புகிறான்; திருமணத்தில் இணை கிறான். வேலையை நம்புகிறான்; வாழ்வில் முன்னேறுகிறான். ஓட்டுநரை நம்புகிறான்; பேருந்துப் பயணம் வெற்றி பெறுகிறது. கடவுளை நம்புகிறான்; நம்பிக்கை ஊக்கமளித்து, வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டுகிறது. அந்தரத்தில் பறக்கும்போது, விமானியை நம்புகிறான்; தாய்நாட்டை அடைகிறான். ஆக, நல்ல நம்பிக்கை-மூடநம்பிக்கை என்பதற்கெல்லாம் அளவுகோல், அவர்களது விருப்பத்தை ஈடேற்றும் மன உறுதியே! அதை அளிக்கும் நம்பிக்கை ஏற்கத்தகுந்தது.

காலம் காலமாகத் தொடரும் சில நம்பிக்கைகள், அப்பாவி மக்களுக்கு மன உறுதியை அளிக்கின்றன. சிந்தனை வளம் பெற்ற அறிஞர்கள் கண்களுக்கு அவை மூடநம்பிக்கைகளாக இருந்தாலும், நம்பிக்கை வைத்த அப்பாவிக்கு அவை நல்ல நம்பிக்கைகளே! திடமான நம்பிக்கை, மனதைத் தளரவிடாது; உறுதி குலையாமல் பாதுகாக்கும். அது வேண்டும். நம்பிக்கையை ஆராய்ச்சி செய்து, நல்லதையும் கெட்டதையும் பாகுபடுத்தித் தெரிந்துகொள்ள முற்படுவது, அப்பாவி மக்களால் முடியாத ஒன்று. அறிஞன் நல்ல நம்பிக்கையில் வாழ்கிறான். அப்பாவியும் அவன் மனதுக்கு திருப்தி தரும் விஷயங்களை நல்ல நம்பிக்கைகளாகக் கருதி வாழ்க்கையின் முழுமையை எட்டுகிறான்.

தங்கள் சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

விஞ்ஞானம் என்பது உலகவியல் உபயோகங் களுக்கு வேண்டுமானால் ஊக்கமளிக்கலாம். ஆனால், மனம் சார்ந்த விஷயங்களுக்கு விஞ்ஞானம் ஒத்துழைக்காது. மனம் விரும்பும் விஷயங் களுக்கு, அவற்றை எட்ட மனதில் உறுதி முக்கியம். அந்த உறுதியை விஞ்ஞானம் அளிக்காது. மூடநம்பிக்கைகள் என்று சுட்டிக்காட்டப்படும் அத்தனை விஷயங்களும், ஒரு காலத்தில் வாழ்வின் வெற்றிக்கு ஒத்துழைத்திருக்கின்றன. மனதின் போக்கு பலவிதம். அதில் நேரான ஒரே வழியை எல்லோருக்கும் வழங்க இயலாது. மனப்போக்குப்படி சிலருக்கு மூடநம்பிக்கைகளும் மன உறுதியை அளிப்பதுண்டு. அந்த நம்பிக்கைகள் இன்று வரை அழியா மல் இருப்பதே அதற்குச் சான்று!

- பதில்கள் தொடரும்...

படங்கள்: ஆர்.யோகேஸ்வரன்

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.