Published:Updated:

துங்கா நதி தீரத்தில்... - 11

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

துங்கா நதி தீரத்தில்... - 11

குரு தரிசனம்! பாரதி காவலர் டாக்டர் கே.ராமமூர்த்தி, ஓவியம்: ஸ்யாம்

Published:Updated:

ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகள் பால ஸ்வாமிகளுடன் மேற்கொண்ட தக்ஷிணதேச யாத்திரை, சுமார் 12 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்றது. யாத்திரையின்போது ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளின் தவப் பயனாய் நிகழ்த்திய எண்ணற்ற அற்புதங்களைக் கண்டு, பால ஸ்வாமிகளுக்குத் தம் குருநாதரிடம் அளவற்ற அன்புடன், மிகுந்த பயபக்தியும் ஏற்பட்டுவிட்டது. குருநாதர் என்ன சொன்னாலும் அதை மீறுவதே இல்லை என்பதை ஒரு சங்கல்பமாகவே கொண்டுவிட்டார் பால ஸ்வாமிகள்.

ஸ்வாமிகள் இருவரும் தக்ஷிணதேச யாத்திரை புறப்பட்டு சுமார் 9 வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1873-ம் வருடம் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

துங்கா நதி தீரத்தில்... - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அப்போது பால ஸ்வாமிகளுக்கு 16 வயது. ஸ்வாமிகள் இருவரும் திருநெல்வேலியில் தங்கியிருந்து, ஆன்மிக மணம் பரப்பிக் கொண்டிருந்தனர்.

ஒருநாள், நெல்லையப்பர் கோயில் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. ரத வீதிகளில் அது கட்டுக்கடங்காமல் கண்ணில் பட்டதை எல்லாம் துவம்சம் செய்தபடியும், கேட்பவர்கள் காது செவிடாகும்படி பிளிறியபடியும் ஓடிக் கொண்டிருந்தது. இதனால், ஊரெங்கும் பதற்றம் நிலவியது. மக்கள் அலறியடித்து ஓடி, வீடுகளுக்குள் புகுந்துகொண்டு, கதவுகளைச் சாத்திக்கொண்டனர்.

ஊரில் மட்டுமல்லாது, நெல்லையப்பர் கோயிலிலும்கூட பதற்றம் தொற்றிக்கொண்டது. கோயில் யானைக்கு அல்லவா மதம் பிடித்துக்கொண்டது! கோயிலைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளிடம் சென்று முறையிட்டுப் பிரார்த்தித்தனர்.

சற்று நேரம் கண்களை மூடியபடி தியானத்தில் இருந்த ஸ்வாமிகள், பால ஸ்வாமிகளை அழைத்து, தம்முடைய கமண்டல தீர்த்தம் சிறிதளவு கொடுத்து, மதம் பிடித்த யானையை அடக்கி வசப்படுத்தி அழைத்து வருமாறு பணித்தார். குருநாதர் இட்ட கட்டளையை மீறுவதில்லை என்று சங்கல்பம் கொண்டிருந்த பால ஸ்வாமிகள் எந்தத் தயக்கமுமின்றி உடனே புறப்பட்டுவிட்டார். 'மதம் பிடித்து அலையும் யானையை அடக்கச் செல்லும் இந்த பால ஸ்வாமிகளுக்கு ஏதும் விபரீதம் நிகழாதிருக்க வேண்டுமே!’ என சுற்றிலும் இருந்தவர்கள் அச்சம் கொண்டார்கள்.

மதம் பிடித்த யானையைத் தேடிப் புறப்பட்ட பால ஸ்வாமிகள், யானை வடக்கு ரத வீதியில் இருப்பதாகத் தெரிந்துகொண்டு, அங்கே சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த வீதியில் தன்னந்தனியராக வந்துகொண்டிருந்த பால ஸ்வாமிகளைப் பார்த்ததுமே, அவரை நோக்கி ஆக்ரோஷமாகப் பிளிறியபடி பாய்ந்து வந்தது யானை. பால ஸ்வாமிகள் கொஞ்சமும் அச்சம் கொள்ளாமல், தம்மை நோக்கிப் பாய்ந்து வரும் யானையை நெருங்கிச் சென்று, தம்முடைய குருநாதரைப் பிரார்த்தித்தபடி, அவர் தம் கமண்டலத்தில் இருந்து கொடுத்த தீர்த்தத்தை யானையின் மேல் புரோக்ஷணம் செய்தார். என்ன ஆச்சர்யம்! அதுவரை மதம் பிடித்து அலைந்துகொண்டிருந்த யானை சாந்தமாகி, சகஜ நிலைக்குத் திரும்பியதுடன், பால ஸ்வாமிகளின் அருகில் வந்து, அவருடைய தெய்விக மேனியைத் தன் தும்பிக்கையால் தடவிக் கொடுத்தது. பால ஸ்வாமிகள் அந்தத் தும்பிக்கையைத் தம் திருக்கரங்களால் வளைத்துப் பிடித்து, யானையை சாந்தப்படுத்தி, தம் குருநாதரிடம் அழைத்து வந்தார். அதன்பின்பே, அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தம் 9-வது வயதில் சந்நியாசம் பூண்டு, குருநாதருடன் யாத்திரை மேற்கொண்ட பால ஸ்வாமிகள், தக்ஷிணதேச யாத்திரையை முடித்துக் கொண்டு சிருங்கேரிக்குத் திரும்புவதற்குள் 12 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டபடியால், இனி பால ஸ்வாமிகளை இளைய ஸ்வாமிகள் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும்.

ஸ்ரீநரஸிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு 80 வயது நிறைவடைந்த நிலையில், ஸ்ரீசாரதா ஸ்ரீசந்திரமவுலீஸ்வர பூஜைகளை இளைய ஸ்வாமிகளே செய்து வரும்படியாக நியமித்த பெரிய ஸ்வாமிகள் பெரும்பாலும் யோக நிலையிலேயே இருந்து வந்தார். என்னதான் உடலளவில் முதுமை ஏற்பட்டிருந்தாலும், பெரிய ஸ்வாமிகளின் மனோ பலமும் சரி, ஆத்ம பலமும் சரி... சிறிதளவும் குறையவே இல்லை. பூஜை நேரம் போக மற்ற நேரங்களில் தம்முடைய குருநாதருக்குப்  பணிவிடைகள் செய்வதிலேயே தம்மைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொண்டார் இளைய ஸ்வாமிகள்.

துங்கா நதி தீரத்தில்... - 11

குரு சேவைக்கான பலன் விரைவில் கிடைக்கவே செய்தது. ஆம். இளைய ஸ்வாமிகள் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டிய தவ வலிமையையும் யோக ஸித்தியையும் குருவின் சேவையினால் பெற்றுவிட்டார். பெரிய ஸ்வாமிகளின் சங்கல்பத்தினால், அதை இளைய ஸ்வாமிகள் உணரும்படியாக ஒரு சம்பவம் நடைபெற்றது.

ஒருநாள், பெரிய ஸ்வாமிகள் யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்தார். அந்தப் பக்கமாக வந்த இளைய ஸ்வாமிகளின் மனதில், பெரிய ஸ்வாமிகளின் திருவடிகளை ஸ்பரிசிக்க வேண்டும் என்பதாக ஓர் எண்ணம் தோன்றியது. மனதுக்குள் குருநாதரைப் பிரார்த்தித்தபடி, குருநாதரின் பாதங்களைத் தொட்டார். இளைய ஸ்வாமிகளின் கைகள் பட்டதுமே, நிஷ்டையில் இருந்து விடுபட்ட பெரிய ஸ்வாமிகள் கால்களை இழுத்துக்கொண்டு, ''என்ன காரியம் செய்து விட்டாய் நீ?'' என்று கண்டிப்பது போன்ற பாவனையில் கேட்டார்.

'தாம் ஏதேனும் அபசாரம் செய்துவிட்டோமோ?’ என்று அச்சம் கொண்ட இளைய ஸ்வாமிகள், ''தங்களின் பாத கமலங்களை ஸ்பரிசித்துக் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.அதனால்தான் அப்படிச் செய்தேன். அபசாரமானால் தயைகூர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டும்'' என்று விநயத்துடன் கூறினார்.

''ஆம். அபசாரம்தான்! நீ என்னைத் தொட்டதுமே நெருப்பைத் தொட்டதுபோல் சுடுகிறது. நீ பெற்றிருக்கும் தபஸ் சக்தி அந்த அளவுக்கு உன்னுள் அனலாகத் தகிக்கிறது. அந்த தபஸ் சக்தியானது, உன்னை தரிசிப்பவர்களின் பாவ வினைகளை எல்லாம் அறவே அகற்றிவிடும்'' என்றார் பெரிய ஸ்வாமிகள்.

'அப்படியானால், பெரிய ஸ்வாமிகளின் தவ வலிமையும் யோக ஸித்தியும் என்ன ஆயிற்று?’ என்ற கேள்வி இங்கே எழலாம்.

துங்கா நதி தீரத்தில்... - 11

தாம் அதுவரை பெற்றிருந்த தவ வலிமை, யோக ஸித்தி அனைத்தையும், தமக்கு ஆத்மார்த்தமாகப் பணிவிடைகள் செய்து வந்த இளைய ஸ்வாமிகளுக்கு தம்முடைய சங்கல்பத்தின் மூலமாகவே மாற்றிவிட்டார் பெரிய ஸ்வாமிகள்.

அப்படி மாற்றவேண்டிய அவசர அவசியம்தான் என்ன?

துங்கா நதி தீரத்தில்... - 11

இனிமேல் ஸ்ரீசாரதா பீடம் என்னும் பெரிய ஆன்மிக சாம்ராஜ்யத்தை இளைய ஸ்வாமிகள்தான் நிர்வகிக்க வேண்டும் என்று கருதியே, பெரிய ஸ்வாமிகள் அப்படிச் செய்துவிட்டாரோ? இதன் உண்மையான காரணம் பெரிய ஸ்வாமிகளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

இந்த நிலையில், ஒருநாள் பெரிய ஸ்வாமிகள், ஸ்ரீமடத்து நிர்வாகிகளை அழைத்து, ''நாம் இன்றே இப்போதே திருக்கோகர்ணம் சென்று, கோகர்ணேஸ்வரை தரிசிக்க வேண்டும். உடனே பல்லக்கு பரிவாரங்களை ஏற்பாடு செய்யுங்கள்'' என்றார்.

ஆனால், பயணம் செய்யும் அளவுக்கு அவருடைய உடல் ஆரோக்கியமாக இல்லையே என்று ஸ்ரீமடத்து நிர்வாகிகள் அச்சப் பட்டனர்.

ஆனாலும், அப்படியான நிலையிலும் பெரிய ஸ்வாமிகள் திருக்கோகர்ணம் சென்று, கோகர்ணேஸ்வரரை தரிசிக்கவே செய்தார்.

எப்படி..?

- தொடரும்

தொகுப்பு: க.புவனேஸ்வரி

படம்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism