மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

ஆடித் தவமிருந்து பெற்ற ஆனந்த தரிசனம்! எஸ்.கண்ணன்கோபாலன்

தான் பெற்ற தன் பிள்ளைகள் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும் என்று நினைப்பதுதான் ஒவ்வொரு தாயின் இயல்பு! அப்படி தன் பிள்ளைகள் ஒற்றுமையாக இல்லாமல், ஒருவருக்கொருவர் பேதம் கற்பித்துக்கொண்டிருந்தால், தன்னை வருத்திக்கொண்டாவது தன் பிள்ளைகளிடையே நிலவும் பேதத்தை அகற்றி, அவர்களை ஒற்றுமையுடன் வாழச் செய்வாள் அந்தத் தாய். அதுவே தாய்மையின் சிறப்பு!

மண்ணில் பெண்ணெனப் பிறந்து, ஒருசில குழந்தைகளுக்குத் தாயாகும் பேறுபெற்ற தாய்மையின் இயல்பே இப்படி என்றால், உலக உயிர்கள் அனைத்துக்கும் தாயாய், தயாபரியாய்த் திகழும் அம்பிகையின் இயல்பை நம்மால் விவரிக்க முடியுமா என்ன? அனைத்து ஜீவராசிகளையும் படைத்து ரட்சிக்கும் ஜகன்மாதா அல்லவா அந்த ஆதிசக்தி! உலக மக்களாகிய நாம் நமக்குள்ளே பேதங்களைக் கற்பித்துக்கொண்டு, பேதைகளாய் சண்டையிட்டுக் கொள்வதை அவளால் எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்? தன்னை வருத்திக்கொண்டாவது உலக மக்களிடையே அன்பும் சாந்தியும் நிலவச் செய்பவள் அல்லவா அவள்!

அப்படி உலக மக்களின் நலனுக் காக அம்பிகை ஒற்றைக் காலில் நின்றபடி தவம் இயற்றி, தன்னை வருத்திக்கொண்ட ஒரு சம்பவத்தை  நினைவுகூரும் வகையில், ஆண்டு தோறும் ஓரிடத்தில் நடைபெற்று வரும் உன்னத விழாவினை நாம் தரிசிப்பதுடன், சில அனுபவப் படிப்பினைகளையும் பெறலாமே!

அந்த ஓரிடம்...
அன்பின் திருவிடம்;
பண்பின் உறைவிடம்;
சாந்தியின் இருப்பிடம்;
சந்தோஷத்தின் பிறப்பிடம்!

அன்னை உமையவள் கோமதியாக வும், தேவர்கள் மலர் தரும் விருட் சங்களாகவும், தேவமாதர்கள் ஆநிரை களாகவும் தோன்றி அத் திருவிடத்தை புனிதப்படுத்தினர். அத் திருவிடமே சங்கரன்கோவில் என்னும் புண்ணியத் தலம்!

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அத் திருத்தலத்துக்கு வந்து அம்பிகை தன்னை வருத்திக் கொண்டு தவம் இயற்ற என்ன காரணம்?

அது பற்றி இடையில் பார்ப்போம். அதற்கு முன், சங்கரன்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும், 'ஆடித் தவசு’ விழாவை தரிசிக்கச் செல்லலாம். இந்த ஆடித் தவசு விழா ஒவ்வொரு வருடமும், ஆடி உத்திராடம் அன்று நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு 9.8.14 சனிக்கிழமை அன்று நடைபெற்ற விழாவைக் காணச் சென்றோம்.

அன்று காலை 8 மணிக்கு அங்கே சென்றிருந்தபோது, நாம் எதிர்பார்த்துச் சென்றதைவிட பக்தர்கள் குறைந்த அளவிலேயே காணப்பட்டனர். வியப்பும் திகைப்புமாக கோயிலுக்குள் சென்று ஸ்ரீசங்கரலிங்கப் பெருமானை தரிசித்துவிட்டு, அன்னை கோமதியின் சந்நிதிக்குச் செல்லத் திரும்பிய ஒரு மணி நேரத்துக்குள், எங்கிருந்துதான் வந்தார்களோ, எப்படித்தான் வந்தார்களோ தெரியவில்லை... நாம் மலைத்துப் போகும்படியாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள்ளும் வெளியிலும் திரண்டுவிட்டனர்.

நாம் கோமதி அன்னையை தரிசிக்கச் சென்றால், அம்பிகையின் சந்நிதிக்குப் பின்புறம் உள்ள மண்டபத்தில், ஸ்வாமிக்கும்  அம்பிகை உற்ஸவ மூர்த்தங்களுக்கு நடைபெறப் போகும் அபிஷேகத்தை தரிசிக்க முடியாமல் போகும் என்பதால், நேரே மண்டபத்துக்குச் சென்றோம். மண்டபத்தில் அபிஷேக மேடையில் அன்னை கோமதி, ஸ்ரீசங்கரநாராயணர் விக்கிரகங்கள் வைக்கப் பெற்று அபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

அபிஷேகம் தொடங்குவதற்கு முன்னதாக அன்றைய நிகழ்ச்சிகளைப் பற்றி அங்கே இருந்த சிவராஜ பட்டரிடம் கேட்டோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

''சரியா 9-30 மணிக்கு அபிஷேகம் தொடங்கிடும். அபிஷேக அலங்காரங் கள், தீபாராதனை முடிஞ்சு 11-30 மணிக்கு அம்பாள் தவக்கோலத்தில் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, நாலு ரத வீதிகளையும் வலம் வந்துட்டு, தெற்கு ரத வீதியும், மேற்கு ரத வீதியும் சந்திக்கிற இடத்துல இருக்கிற தவசு மண்டபத்தில் எழுந்தருளுவாள். மாலை 6 மணிக்கு ஸ்வாமி ஸ்ரீசங்கர நாராயணராக தரிசனம் தர்றவரை அந்த மண்டபத்துலதான் அம்பாள் இருப்பா. அதுவரை அம்பாளை அந்த மண்டபத்துல பக்தர்கள் தரிசிக்கலாம். மாலை 3 மணிக்கே தெற்கு ரத வீதியில் இருபதடி இடைவெளியில் இரண்டு பூப்பந்தல்கள் போடப்பட்டுவிடும். அதேநேரத்தில் கோயிலில் ஸ்ரீசங்கரநாராயணருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதற்குப் பிறகு ஸ்ரீசங்கரநாராயணர் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி தெற்கு ரத வீதியில் போடப்பட்டிருக்கிற பூப்பந்தலுக்கு வருவார். அம்பாளுக்குக் காட்சி தர்ற வரைக்கும் ஸ்ரீசங்கரநாராயணரை யாரும் பார்க்க முடியாதபடி திரை போடப்பட்டிருக்கும். கொஞ்ச நேரத்துல தவசு மண்டபத்துல தவசுக் கோலத்துல இருக்கற அம்பாள் அங்கேருந்து புறப்பட்டு வந்து, ஸ்ரீசங்கரநாராயணரை மூணுமுறை வலம் வந்துட்டு, இன்னொரு பந்தல்ல எழுந்தருளிய கொஞ்சநேரத்துல, ஸ்வாமியை  மறைச்சிருக்கிற திரை விலகி, அம்பாளுக்கு தரிசனம் தருவார்'' என்றார்.

சரியாக 9.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பித்துவிட்டது. அபிஷே கம் முடிந்து திரை போடப்பட்டு அலங்காரம் நடைபெற்ற இடை வெளியில் நாம் மீண்டும் கோயிலை வலம் வந்தோம். இப்போது ஸ்ரீசங்கரலிங்கேஸ்வரர், ஸ்ரீகோமதி அம்மன், ஸ்ரீசங்கரநாராயணர் சந்நிதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. எல்லோர் முகங்களிலுமே விரைவாக தரிசனத்தை முடித்துக்கொண்டு அம்பாளின் தவக்கோலத்தை தரிசிக்கவேண்டுமே என்ற பரபரப்பும் பரிதவிப்பும் காணப்பட்டது.

அலங்கார ஆராதனைகள் முடிந்து அம்பாளின் தவக்கோல வீதியுலா ஆரம்பிக்க இருப்பதாகத் தெரியவரவே, நாம் மறுபடியும் அபிஷேக மண்டபத்துக்கு வந்தோம். அம்பாள் தவக்கோலத்தில் எளிமையான அலங்காரங்களுடன் திருக்காட்சி தந்தாள். 11-30 மணிக்கு அம்பாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருள, வீதியுலா தொடங்கியது. சந்நிதித் தெருவில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகளையும் வலம் வந்தபிறகு, ரத வீதியின் தென்மேற்குப் பகுதியில் அமைந்திருந்த தவசு மண்டபத்துக்கு அம்பாள் வந்து சேருவதற்குள் மணி 1-30 ஆகிவிட்டது.

இனிமேல் 3 மணிக்கு மேல்தான் கோயிலில் ஸ்ரீசங்கரநாராயணருக்கு அபிஷேகம் தொடங்கும் என்பதால், நாம் நான்கு ரத வீதிகளையும் சுற்றிப் பார்த்தபடி வந்தோம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுவிட்டதால், நெரிசலில் நம்மால் மெள்ள ஊர்ந்துதான் செல்ல முடிந்தது. வடமேற்குப் பகுதியில் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் அன்னதானம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த இடத்தில் ஒரு மகானின் ஜீவசமாதி இருப்பதாகத் தெரியவரவே, அதுபற்றி அங்கே இருந்தவர்களிடம் கேட்டபோது, அவர்கள் ஒருவரைக் காட்டி, 'அவரைக் கேட்டால் விளக்கமாகச் சொல்லுவார்’ என்றார்கள்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

கோமதி அம்மனின்ஆழ்ந்த பக்தரான கந்தவேல் என்ற அந்த அன்பர் அங்கே ஜீவசமாதி கொண்ட மகானைப் பற்றிக் கூறுகையில்...

''திருவாவடுதுறை 10-வது ஆதீனகர்த்தராக இருந்த வேலப்பதேசிக சுவாமிகள், ஒருமுறை சங்கரன்கோவில் மேல ரத வீதியில் இருக்கும் திருமடத்தில் எழுந்தருளியிருந்தபோது, தினசரி கோமதி அம்மையை வழிபட்டு வந்ததுடன், அம்பாள் சந்நிதிக்கு முன்பாக மந்திர சக்தி வாய்ந்த ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து வைத்தார். அதன்மீது அமர்ந்து அம்பிகையை தியானித்தால், தீராத பிரச்னைகளும் தீரும்; வேண்டும் வரங்கள் வேண்டியபடியே கிடைக்கும். தீராத வயிற்றுவலியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நெற்கட்டுஞ்செவலின் குறுநிலமன்னராக இருந்த பூலித்தேவர், வேலப்ப தேசிக  சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை தரிசித்து தன்னுடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். அதற்குக் காணிக்கையாக ஏராளமான பொருளும் நிலங்களும் சாசனம் செய்து கொடுத்தார். அளவற்ற சக்தி கொண்டிருந்த அந்த மகானின் ஜீவசமாதிதான் இங்கே உள்ளது'' என்றார்.

மதிய உணவுக்குப் பிறகு, மீண்டும் கோயிலுக்குச் சென்றோம். ஸ்ரீசங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அபிஷேக அலங்காரங்கள் முடிந்து ஸ்வாமி புறப்பாடு தொடங்குவதற்குள், அம்பிகை சங்கரன்கோவிலில் தவம் செய்ததற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள, ஆலயத்தின் அர்ச்சகர் சங்கத் தலைவரான ராமஸ்வாமி பட்டரிடம் கேட்டோம். அவர் கூறியதிலிருந்து...

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

முற்காலத்தில் சங்கன், பத்மன் ஆகியோ ரிடையே சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என்பதாக விவாதம் ஏற்பட்டது. சங்கன் சிவன்தான் பெரியவர் என்றும், பதுமன் விஷ்ணுதான் பெரியவர் என்றும் சாதித்ததுடன் சண்டையும் போட்டார்கள். ஆனால், இருவருமே அம்பிகையின் பக்தர்கள். தன்னுடைய பக்தர்களிடையே ஏற்பட்டுள்ள சண்டையைத் தீர்க்க என்ன வழி என்று யோசித்த அம்பிகைக்கு, சிவனும் விஷ்ணுவும் ஒன்றாகக் காட்சி தருவதே சரியான வழியாகும் என்று தோன்றியது. அத்தகைய அற்புத ஆனந்த தரிசனம் எளிதில் கிடைத்துவிடுமா, என்ன? பெரும் தவம் இருந்தால்தானே, அப்படியோர் ஆனந்த தரிசனம் வாய்க்கும்? எனவே, அம்பிகையும் தன் பக்தர்களிடையே நிலவும் பேதத்தை அகற்றவும், அவர்களிடையே சாந்தியும் சந்தோஷமும் நிலைத்திருக்கவும் தவம் இயற்ற எண்ணி, ஈசனிடம் அனுமதி கேட்டபோது சம்மதம் தெரிவித்த சிவபெருமான் அம்பிகையிடம், ''தேவி, அகத்திய முனிவன் தவமியற்றும் பொதிகைமலைக்கு அருகில் இருக்கும் புன்னைவனத்தில் நீ தவம் புரிவாயாக. விரைவிலேயே உன் விருப்பப்படி நாம் சங்கரநாராயணராகக் காட்சி தருவோம்'' என்று கூறினார்.

அம்பிகை தவம் புரிய பூவுலகுக்கு வந்தபோது, அம்பிகையின் பிரிவைத் தாங்கமாட்டாத தேவர்களும் தேவமாதர்களும் அம்பிகையிடம் தாங்களும் உடன் வருவதாக விண்ணப்பித்துக் கொள்ள, அதற்குச் சம்மதித்த அன்னை, தேவ மாதர்களை ஆநிரைகளாகவும், தேவர்களை மலர் தரும் விருட்சங்களாகவும் அந்தப் புன்னை வனத்தில் தோன்றும்படியாகக் கூறியதுடன், முனிவர்களை ஆதிசைவர்களாக அங்கே வந்து பட்டமார் என்ற பெயரில் தன்னை பூஜிக்குமாறும் கூறி அருளினாள். தேவமாதர்கள் ஆநிரைகளாக உடன் வந்தபடியால், அம்பிகை ஆவுடையாள் என்றும் ஒரு திருப்பெயர் கொண்டாள். முனிவர்களை ஆதிசைவர்களாக பட்டமார் என்ற பெயரில் தன்னை பூஜிக்குமாறு கூறவே, ஸ்ரீசங்கரநாராயணர் கோயிலில் பூஜை செய்பவர்கள் பட்டர்கள் என்றே அழைக்கப் படுகின்றனர்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

அம்பிகையின் தவத்தினால் மனம் கனிந்த சிவபெருமான், ஸ்ரீசங்கரநாராயணராகக் காட்சி தந்தார். ஆடித் தவசு என்ற பெயர் பெற்ற இந்த வைபவத்தைதான் இதோ, இப்போது நாம் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

வீடுகளிலும் வீட்டு மாடிகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் அலைமோதியது. சரியாக 5-30 மணிக்கெல்லாம் திரை மூடப்பட்ட வண்ணச் சப்பரத்தில் எழுந்தருளிய ஸ்ரீசங்கரநாராயணர் தெற்கு ரத வீதியில் இருந்த அலங்கரிக்கப்பட்ட பந்தலுக்கு எழுந்தருளினார். சற்றைக் கெல்லாம் தவசு மண்டபத்தில் இருந்து புறப்பட்ட கோமதி அம்மன் ஸ்ரீசங்கரநாராயணரை மூன்றுமுறை வலம் வந்துவிட்டு, மற்றொரு பந்தலில் எழுந்தருளி, கட்டளைதாரர்களின் மாலை மரியாதைகளை ஏற்றுக் கொண்டிருந்த நேரத்தில், கைகளைத் தட்டி ஒலியெழுப்பியபடி பக்தர்கள் முழங்கிய 'சிவ சிவாய’ என்ற பக்தி முழக்கமானது, எங்கும் எதிரொலிக்க... இன்னும் திரை விலகி ஸ்ரீசங்கரநாராயணர் தரிசனம் தராத நிலையில் ஏன் இந்த ஆரவாரம் என்று திகைத்துப் போனோம். நம் திகைப்பைப் புரிந்துகொண்டவர்போல் ஸ்வாமி சப்பரத்துக்கு அருகில் நின்றிருந்த சரவணன் பட்டர், நம்முடைய தோளைத் தொட்டுத் திருப்பி ராஜ கோபுரத்தின் மேலாகப் பார்க்கும்படி கூறினார். அங்கே ஒரு பறவை வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. ''ஒவ்வொரு வருஷமும் இதே நேரத்தில் சொல்லி வைத்ததுபோல் கருடன் ராஜ கோபுரத்தின் மேலாக வட்டமிட்டுப் பறப்பது தப்பாமல் நடக்கும் அற்புதக் காட்சி! ஸ்ரீசங்கரநாராயணர் தரிசனத்துக்கு முன்பு பக்தர்களுக்கு ஸ்ரீநாராயணரின் வாகனமான கருடனின் தரிசனம் கிடைப்பது ஆடித் தவசு விழாவின் தனிச் சிறப்பு!'' என்றார் சரவணன் பட்டர். சங்கரனின் ஒரு பாகமான நாராயணனை தரிசிக்க கருடன் வருவதும், பக்தர்களுக்கு கருட தரிசனம் கிடைப்பதும் ஆடித் தவசு விழாவில் சிலிர்ப்பூட்டும் சிறப்பம்சம் என்பதில் சந்தேகமே இல்லை.

தொடர்ந்து, ''அம்பாளுக்கு ஸ்ரீசங்கரநாராயணராகக் காட்சி கொடுத்ததும், அம்பாள் தான் மறுபடியும் சிவபெருமானை மட்டும் தரிசிக்க வேண்டும் என்று பிரார்த்திக்க, அன்று இரவு சிவபெருமான் கோமதி அன்னைக்கு யானை வாகனத்தில் காட்சி தருவார்'' என்றார் சரவணன் பட்டர்.

ஒரு நாள்... ஓரிடம்... ஓர் அனுபவம்..!

சரியாக 6 மணிக்கு ஸ்வாமியின் சப்பரத்தில் திரை விலக, ஸ்ரீசங்கர நாராயணர் கோமதி அன்னைக்கு மட்டுமல்லாமல், அங்கே அந்த அற்புத திவ்விய தரிசனம் காணக் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் மங்கல இசை முழங்க, 'சிவ சிவாய; நமசிவாய’ என்ற பக்தர்களின் பரவசக் குரல் திசையெட்டும் எதிரொலிக்க, தீபா ராதனை ஒளியில் திவ்விய தரிசனம் தந்து அருளினார்.

தன்னுடைய குழந்தைகள் எந்த ஒரு பேதமும் இல்லாமல், அன்போடும் பண்போடும் எப்போதும் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக தன்னை வருத்திக் கொண்டு தவமியற்றிய அன்னையின் கருணைத் திறத்தைப் போற்றும் வகையில் நடைபெறும் இந்த ஆடித் தவசு விழாவினை தரிசித்த நாம்...

'கோமதி அன்னையே! நின் தவத் திருக்கோலமும், அதன் பலனாக ஸ்ரீசங்கரநாராயணரின் திவ்விய தரிசனமும் காணும் பேறு பெற்ற பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் வாழ்க்கையில் எப்போதும் சாந்தியும் சந்தோஷமும் மட்டுமே நிலைத்திருக்க அருள் புரிவாய் அம்மா!’ என்று மனதுக்குள் பிரார்த்தித்தபடி, பேதங்கள் அகற்றி பேரின்பம் சேர்க்கும் அந்த புனிதத் தலத்தில் இருந்து புறப்பட்டோம்.

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தி.ஹரிஹரன்