Published:Updated:

ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!

Vikatan Correspondent

கடலாடி ஸ்ரீகரைகண்ட ஈஸ்வரர் கோயில்இ.லோகேஸ்வரி

ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!
ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!

சன் சுயம்புவாகத் தோன்றியதும், ரிஷிகள், முனிவர்களால் பிரதிஷ்டை செய்து வழிபட பெற்றதும், மன்னர்களால் நிர்மாணிக்கப் பெற்றதுமான சிவாலயங்கள் எத்தனையோ நம் நாட்டில் அமைந்திருப்பதையும், அத்தகைய ஆலயங்களில் சிவபெருமானின் அருள்திறம் பூரணமாகப் பொலிந்திருப்பதையும் நாம் கேட்டும், தரிசித்தும் இருக்கலாம். ஆனால் சிவகுமாரனாகிய முருகப் பெருமானால் பிரதிஷ்டை செய்து வழிபடப் பெற்ற பெருமையுடன் திகழ்கிறது ஓர் ஆலயம்!

முருகப்பெருமான் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது?

சூரபத்மனை சம்ஹாரம் செய்த தோஷத்தால் பீடிக்கப் பெற்ற முருகப் பெருமான், தன்னுடைய தோஷம் நீங்குவதற்கான உபாயம் என்ன வென்று காஞ்சியில் அருள் புரியும் அன்னை காமாட்சியிடம் சென்று கேட்கிறார். அதற்கு அம்பிகை, முருகப் பெருமானின் வேலை எறியுமாறும், அது எந்த இடத்தில் சென்று ஊன்றி நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டால் தோஷம் விலகும் என்றும் தோஷ நிவர்த்திக்கான வழியைக் கூறி அருளினாள். அதன்படியே முருகப் பெருமான் தன் கை வேலை எறிய, அது சென்று ஊன்றிய இடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து, அனுதினமும் சிவபூஜை செய்து தோஷ நிவர்த்தி பெற்ற திருத்தலம்தான், இதோ இப் போது நாம் தரிசித்துக் கொண்டிருக்கிறோமே இந்த கரைகண்ட ஈஸ்வரர் திருக்கோயில்!

ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!

அப்படி முருகப் பெருமான் தன் கை வேலை எறிந்தபோது, ஜவ்வாது மலையில் முருகனின் கை வேலால் முக்தி பெற வேண்டி தவம் இருந்த ஏழு முனிவர்கள் அந்த வேலால் துளைக்கப்பட்டு முக்தி அடைந்தனர். அப்போது அவர்களின் உடலில் இருந்து பெருக்கெடுத்த ரத்தம் சிவப்பு ஆறாக ஓடியதாலும், சேயோனாகிய முருகப் பெருமானால் உருவாக்கப்பட்டதாலும் இந்தத் தலத்துக்கு அருகில் ஓடும் ஆறு செய்யாறு என்று பெயர் பெற்றது.    

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில், செய்யாற்றின் கரையோரம் அமைந்திருக்கிறது ஆலயம். சுற்றிலும் மலைகள், வயல்வெளிகள் என்று ரம்யமான சூழலில் அமைந்திருக்கிறது கோயில். இங்கு அருள் புரியும் ஈசன் கரைகண்டஈஸ்வரர் என்ற திருநாமமும், அம்பிகை பெரியநாயகி என்ற திருநாமமும் கொண்டு அருள் புரிகிறார்கள். கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்தத் திருத்தலம், பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி ஸ்தலமாகவும் இருக்கிறது. சரித்திரக் கால கல்வெட்டுச் சான்றுகளின்படி முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருப்பதாகத் தெரியவருகிறது (கடலாடி கல்வெட்டு என்ற ஒரு கல்வெட்டு தற்போது முற்றிலும் சிதிலமடைந்து இருக்கிறது).

ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!

பல வருட காலமாக வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்திருந்தாலும், கோயிலின் மதில்களும், கருவறை விமானங்களும், மண்டபங்களும் சிதிலம் அடைந்துவிட்டன. இந்நிலையில் ஊர்மக்கள் ஒன்றுசேர்ந்து 1989-ம் ஆண்டு, ஆலயத்தில் சிறிய அளவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்தனர். அதன் பிறகு, கிட்டத்தட்ட இருபது  ஆண்டுகள் பழைய கோயில் அதன் கம்பீரம் குறையாமலும் அழகு மாறாமலும் அப்படியே இருந்துள்ளது. ஆனால் தற்போது கோயிலின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா...

கோயில் கல்தூண்கள் இடிந்து விழும் நிலையிலும், கோயில் விமானமும், மதில் சுவர்களும் செடிகளும் கொடிகளும் புதரென மண்டிக் கிடக்க பரிதாபமான நிலையில் திகழ்கின்றன. மொத்தத்தில் கோயில் முழுவதையும் புதிதாகத்தான் கட்டவேண்டும் என்ற நிலையில், முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது, முருகப் பெருமான் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஈசனின் திருக்கோயில்.

ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!

  ''கோயில் முழுதும் சிதிலமடைஞ்சு இருக்கு. முழுசா பிரிச்சிட்டு, புதுசாத்தான் கட்டணும். கோயில் மண்டபமும் பழுதடைஞ்சிருச்சி. அதையும் புதுசா கட்டணும். கோயிலில் விநாயகர், ஆறுமுகன், அம்பாள், சூரியன் சந்நிதிகளையும் புதுப்பிக்கணும். கோயில் மேற்குப் பக்கச் சுவர்கூட இடிஞ்சு போச்சு. இந்த நிலையில், தற்போதுதான் ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டிருக்கு. இப்போதைக்கு கோயிலில் பிரதோஷ வழிபாடு மட்டும் நடந்துண்டிருக்கு. வரும் ஆவணி மாசம் அல்லது தை மாசத்தில் பாலாலயம் செய்யலாம்ணு இருக்கோம்'' என்று கோயில் சிவாச்சாரியார் கிருபாகரன் நம்மிடம் தெரிவித்தார்.

ஆலயம் தேடுவோம் - குமரன் வழிபட்ட சிவாலயம்!

செய்யாறு நதிக்கரையோரம் இருக்கும் திருத்தலம் இது. இங்கே செய்யாறு வடக்கு நோக்கி உத்தரவாகினியாகச் செல்வதால், இந்தத் தலம் காசிக்கு நிகரானது என்கிறார்கள். இங்கு வந்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்கிறார் எம்பெருமான். அதோடு மட்டுமல்லாது முருகப்பெருமானின் தோஷத்தையே நீக்கிய திருத்தலம் ஆதலால், இங்கு வந்து செய்யாறில் குளித்து இங்கு அருளும் எம்பெருமானை தரிசித்தால் சகலவித தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இங்கு உறைந்திருக்கும் அம்பிகை பெரியநாயகியை வெள்ளிக் கிழமைகளில் விளக்கேற்றி வழிபட, வேண்டிய வரங்களை எல்லாம் வேண்டியபடியே அருள்கிறாள். மேலும் இத்திருத்தலத்தில் முருகப் பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்க மூர்த்தத்தையும் முருகப் பெருமானையும், கார்த்திகை மாதம் சோமவார தினத்தில் வழிபட்டு வர, வாழ்வில் உள்ள அனைத்து தடைகளும் நீங்கி, வாழ்வு செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 1942-ல் காஞ்சி மகாபெரியவா இந்தக் கோயிலுக்கு வந்து எம்பெருமானை தரிசித்துச் சென்றுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள். தொடக்கத்தில் ஸ்தல விருட்சமாக இருந்த இலுப்பை மரம் காலப்போக்கில் பட்டுப் போகவே, தற்போது வில்வ மரத்தை நட்டு வளர்த்து வருகிறார்கள்.

முருகப்பெருமானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பெற்ற சிவாலயத் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவேறி, சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற, நாமும் நம்மால் ஆன பொருளுதவியும், நிதியுதவியும் செய்வதன் பலனாக சிவபெருமானின் பேரருளுடன், சிவகுமரனாம் முருகப் பெருமானின் திருவருளையும் நாம் மட்டும் இல்லாமல் நம் சந்ததியினரும் பெற்றிடச் செய்வோமே!

படங்கள்; கா.முரளி