Published:Updated:

விதைக்குள் விருட்சம் - 19

கீதையின் தத்துவமே வாழ்க்கையின் சாரம் சேவாரத்னா டாக்டர் டி.எஸ்.நாராயணஸ்வாமி

ஒரு சிறு விதையில் ஒரு விருட்சமே மறைந்திருப்பதுபோல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அமானுஷ்யமான சக்தி நிறைந்திருக்கிறது. அந்தச் சக்தியை அறிந்து, உணர்ந்து, பயன்படுத்தினால், எந்தப் பிரச்னையையும் எளிதில் சமாளிக்கலாம்; தோல்வியைத் தோற்கடிக்கலாம்; வெற்றிப் படிகளில் ஏறி, தொடமுடியாத சிகரங்களைத் தொடலாம் என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம்.

'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்’

என்கிறார் வள்ளுவர். வாழ்க்கையில் வெற்றி பெற, இடைவிடாத முயற்சி ஒன்றுதான் வழி என்று ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறியுள்ளனர்.

முயற்சி எனும் சக்திக்கு ஆதாரமானது தன்னம்பிக்கை. 'உன்னை நீ நம்பினால், உலகம் உன்னை நம்பும்; உன்னை நீ எடை போட்டு உன்னைப் பற்றிய உண்மைகளை நீ உணர்ந்தால், உன்னை நீ நம்ப முடியும்’ என்று கூறியுள்ளார் தத்துவ ஞானி சாக்ரட்டீஸ்.

அந்தத் தன்னம்பிக்கைதான் நம்முள் ஒளிந்திருக்கும் உன்னத சக்தி. எதை இழந்தாலும், இந்தத் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது.

உடல், அதில் ஒளிரும் மனம், அதை ஆட்சி செய்யும் அறிவு, இவற்றை எல்லாம் இயக்கிக்கொண்டிருக்கும் ஆத்மா, இவற்றுக்குள் அமைந்திருக்கும் ஆதார சக்தி, தொடர்பு ஆகியவையே மானிட சக்தியாக நம்மை எல்லாம் வழிநடத்திச் செல்கின்றன.

விதைக்குள் விருட்சம் - 19

மானிட வாழ்வின் மகத்தான சக்தியே ஆத்ம சக்திதான் என்று ஞானிகளும் அறிஞர்களும் கூறியுள்ளனர். நாம் உடலை அறிகிறோம்; உணர்வுகளை அறிகிறோம்; நம் அறிவாற்றலையும் அறிகிறோம்; ஆனால், ஆத்மாவை அறிவதுமில்லை; அறிய முயற்சிப்பதும் இல்லை. உடல், மனம், அறிவு ஆகியவற்றை ஆத்மாவோடு இணைத்து நாம் வாழக் கற்றுக்கொள்ளும்போது நம் வாழ்வில் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடிகிறது; அகங்காரத்தை அழிக்க முடிகிறது; மனித நேயத்தை வளர்த்துக்கொள்ள முடிகிறது; சுக துக்கங்களை சமமாக பாவிக்க முடிகிறது; பிறர் குற்றங்களை மன்னிக்கும் மனப்பான்மை ஏற்படுகிறது; திருப்தியும் தன்னடக்கமும் உள்ள ஒரு யோகியாக வாழ முடிகிறது. அப்போது நம் வாழ்க்கை ஓர் ஆனந்தப் பூங்காவாக மாறுகிறது; அங்கு நிலையான சாந்தி ஏற்படுகிறது. அதைவிட உயர்ந்த நிலை வேறு இல்லை.

இத்தகைய உன்னத குணங்களை வளர்த்துக்கொண்டு நிம்மதியாக வாழும் மார்க்கத்தைதான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகின்றார்.

வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கீதையின் சில தத்துவங்களை இங்கே நினைவுகூர்வோம்.

அச்சம் தவிர்!

மனித வாழ்க்கையைத் துயரத்தில் ஆழ்த்துவது பயம் ஒன்றுதான். மரண பயம், செல்வத்தை இழந்துவிடுவோமோ என்ற பயம், உடல் நலக் குறைவு பற்றிய பயம்... இத்தகைய பயங்களை அறவே ஒழித்துவிட்டால், வாழ்க்கை ஒளிமயமாகிவிடும்.

நம்பிக்கையே வாழ்க்கை!

நம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் இன்னும் சில குணங்கள் அவநம்பிக்கையும் சந்தேகமும். சந்தேகத்தோடு வாழும் மனிதன் சந்தோஷத்தைப் பெற முடியாது. அவன் முதலில் தன்னை நம்ப வேண்டும்; ஆன்றோர் வாக்கினை நம்ப வேண்டும்; முன்னோர் சொல்லை நம்ப வேண்டும்; சாஸ்திரங்களை நம்ப வேண்டும்; கடவுளை நம்ப வேண்டும். நல்லதே நடக்கும் என நம்ப வேண்டும். நம்பிக்கைதான் வாழ்க்கை!

ஆசைகளை அகற்று!

ஒரு தடாகத்தின் நீர் தெளிவாக இருந்தால் தான், அதன் அடித்தளத்தைப் பார்க்க முடியும். மேலே படர்ந்திருக்கும் பாசிகளை அகற்றினால்தான் அடி வரை பார்க்க இயலும். அதுபோல, மனதில் உருவாகும் ஆசைகளை அகற்றினால், ஆன்மாவைத் தெளிவாகப் பார்க்கலாம். ஆன்மாவை அறிந்துகொண்டால், வாழும் வழிகளை அறிந்துகொள்ளலாம்.

செய்யும் தொழிலே தெய்வம்!

வெற்றி- தோல்விகளை மட்டுமே மனதில்கொண்டு செயலாற்றும்போது, வேலையின் பளுவைத்தான் உணர முடியும். வேலை செய்வதையே ஒரு நல்வாய்ப்பாக எண்ணிச் செயல்பட்டால், வேலை பளுவாகத் தெரியாது. வேலை செய்வதே, உண்மையாக உழைப்பதே கடவுளுக்குச் செய்யும் சேவையாகத் தோன்றும். 'செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பாரதியின் வாக்கும் இந்தத் தத்துவத்தையே விளக்குகிறது.

கர்மமும் பலனும்

கர்மத்தைச் செய்யும் அதிகாரம் உன்னிடம் உள்ளது. பலனை அடையும் அதிகாரம் உன்னிடம் இல்லை.

'கர்மண்யே வா அதிகாரஸ்தே மாபலேஷி கதாசனஹ’

நீ செய்யும் கர்மம், ஒரு நல்ல நோக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு அமையலாம். ஆனால், அதில் நீ எதிர்பார்த்த குறிப்பிட்ட பலன் கிடைக்காவிட்டால், அதை உன் தோல்வியாக எண்ணி, வருத்தப்பட்டு, கர்மத்தைக் கைவிடாதே. தொடர்ந்து செயலாற்றிக் கொண்டு இரு. அதற்கான பலன் உன்னைத் தேடி வரும்.

தாமரை இலைத் தண்ணீர்

வாழ்க்கையின் பிரச்னைகளுக்கு பயந்து, கடமைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஞானத்தைத் தேடுகிறேன் என்று சொல்லி தனிமைப்படுத்திக்கொள்வது, உண்மையான துறவறம் ஆகாது. கடமைகளுக்கு பயந்து விலகுவது கோழைத்தனம். குடும்பத்தையும், சுற்றத்தையும், நம்பி இருப்பவர்களையும் ஒதுக்கிவிட்டுக் கடவுளைத் தேடுவது சரியான தர்மம் ஆகாது. தாமரை இலை எப்போதும் தண்ணீரில்தான் இருக்கும். ஆனால், தண்ணீர் அதில் ஒட்டாது. அதுபோல, ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல், உலக வாழ்க்கையின் பொறுப்புகளை ஏற்றுக் கடமை உணர்வுடன் பணியாற்றும் மனிதனே உயர்ந்தவன்.

கடவுள் எனும் சூத்திரதாரி

'எல்லாம் வல்ல இறைவன் எப்போதும் என்னுடன் இருக்கிறான்; என்னை வழிநடத்திச் செல்கிறான்; அவன் நிழலில் நான் பயமும் கவலையும் இன்றி வாழ்கிறேன்’ என்கிற ஆழ்ந்த நம்பிக்கை வேண்டும். 'வாழ்க்கை ஒரு பொம்மலாட்டம். கடவுள் சூத்திரதாரி. நான் வெறும் பொம்மைதான். அவன் ஆட்டி வைக்கிறான்; நான் ஆடுகிறேன்’ என்ற தத்துவத்தில் நம்பிக்கை வைத்து வாழ வேண்டும்.

தூசு படிந்த கண்ணாடி

ஒரு கண்ணாடியில் தூசு படிந்திருந்தால், அதில் நம் உருவத்தைத் தெளிவாகப் பார்க்க முடியாது. அதுபோல, மாசு படிந்த உள்ளமும் சுயநலமும் நிறைந்த மனிதனால் தன்னையே சரியாகத் தெரிந்து கொள்ள முடியாது. முன்னேற்றங்களைவிட தோல்வியையும் ஏமாற்றத்தையுமே அவன் அதிகம் சந்திப்பான். அவன் மெத்தப் படித்தவனாக இருக்கலாம்; பணம் படைத்தவனாக இருக்கலாம்; ஆனால், அவனால் தனக்கோ பிறருக்கோ பயனுள்ளவனாக இருக்க முடியாது.

ஆத்மா அழியாதது!

உடல் அழியக்கூடியது; ஆத்மா அழியாதது. உடல் வலிமை குறையலாம்; முதுமையும் நோயும் உடலை வாட்டலாம்; உடலைச் சார்ந்த பெருமையும் புகழும் மறையலாம். ஆனால், ஆத்மா அழியாதது; மறையாதது; மாறாதது. அந்த ஆத்மாதான் உடலைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை உணர்ந்தால், பயமின்றி வாழலாம்.

(நிறைவுற்றது)

கீதை வரிகளில் கிருஷ்ணன்

து 11-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம். கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரப்பிய ஸ்ரீசைதன்ய மஹாபிரபு வாழ்ந்த காலம்.

ஒருமுறை, நாம சங்கீர்த்தனத்தின் மகிமையைப் பரப்பும் நோக்கில், தென்னிந்திய யாத்திரை மேற்கொண்டு, கால்நடையாகவே பூரியிலிருந்து புறப்பட்டு தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்துக்கு வந்தார் மஹாபிரபு.

அந்தக் காலத்தில் ஸ்ரீரங்கத்தில் கோபால பட்டர் என்ற விஷ்ணு பக்தர் ஒருவர் இருந்தார். அவர் மிகச் சிறந்த சமஸ்கிருத பண்டிதர். தினமும் ரங்கநாதர் ஆலயத்துக்குச் சென்று, சந்நிதியில் அமர்ந்து, பகவத்கீதை பாராயணம் செய்வார். ஆனால், அவர் கீதை படிக்கும்போது தட்டுத் தடுமாறிப் படிப்பார். வார்த்தைகளைத் தப்பும் தவறுமாக உச்சரிப்பார். தொடர்ச்சி இல்லாமல் படிப்பார். ஆலயத்தில் பூஜை செய்யும் பட்டர்களும் பட்டாச்சாரியார்களும் இதனால் மிகவும் மனம் வருந்தினார்கள். பலமுறை கோபால பட்டரை அணுகி, ''இப்படி ஆலயத்தில் வந்து தப்பும் தவறுமாக கீதை பாராயணம் செய்வது  பகவத் அபசாரம் அல்லவா?  இதை நிறுத்திவிடுங்கள்; அல்லது, வேறு எங்காவது சென்று பாராயணம் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

விதைக்குள் விருட்சம் - 19

கோபால பட்டர் அவர்கள் பேச்சைக் காதிலேயே வாங்கவில்லை. ''பகவத் கீதையை பகவத் சந்நிதானத்தில் படிப்பது ஒரு வைஷ்ணவனின் உரிமை. என்னை யாரும் தடுக்க முடியாது. தடுத்தால் அதுதான் பகவத் அபசாரமாகும். அது தெய்வ நிந்தனையும் ஆகும்'' என்று கூறிவிட்டார். அவரிடம் வாதிட்டுப் பயனில்லை என்று அனைவரும் ஒதுங்கிவிட, ஆலயத்தில் கோபால பட்டரின் பாராயணம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது.

ஸ்ரீசைதன்ய மஹாபிரபு ஸ்ரீரங்கம் வந்தபோது, ரங்கநாதர் ஆலயத்தில் அவரை வரவேற்க, சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர் வருகிற நேரத்தில் கோபால பட்டர் கீதையைத் தப்பும் தவறுமாகப் பாராயணம் செய்து கொண்டிருந்தால், அது மஹாபிரபுவின் மனதை வேதனைப்படுத்துமே என்று எண்ணிய ஒரு சில பட்டர்கள் கோபால பட்டரை அணுகி, அன்றைக்கு ஒருநாள் மட்டுமாவது பாராயணத்தை வடக்கு கோபுர வாயிலில் வைத்துக்கொள்ளுமாறு பணிவன்போடு கேட்டுக் கொண்டனர். கோபால பட்டரும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

சைதன்ய மஹாபிரபுவை மேளதாளம் முழங்க, வேத கோஷம் ஒலிக்க, ஆலயத்துக்கு அழைத்து வந்தார்கள். ஆலயத்தின் ராஜகோபுரத்தில் நுழைந்ததுமே, சைதன்ய மஹாபிரபு பரவச நிலையடைந்தார். ''இங்கு எங்கோ பகவத்கீதை பாராயணம் நடக்கிறது. நான் அங்கே போகவேண்டும்'' என்று கூறி, கூட்டத்தினரைத் தாண்டிக்கொண்டு ஓட்டமாக ஓடி, கோயிலுக்குள் நுழைந்து, வடக்கு கோபுர வாசலை அடைந்தார். அங்கே கோபால பட்டர் கீதை பாராயணம் செய்வதைக் கேட்டுப் பரவச நிலையை அடைந்தார். கண்களில் நீர் மல்க கோபால பட்டர் பாராயணம் செய்ததைக் கேட்ட மஹாபிரபுவின் கண்களிலிருந்தும் வெள்ளம்போல் நீர் சுரந்தது.

கோபால பட்டர் பகவத் கீதையில் ஓர் அத்தியாயம் படித்து முடித்ததும் தலை நிமிர்ந்து, மஹா பிரபுவைப் பார்த்ததும் பரவசமானார். மஹா பிரபு, கோபால பட்டரைப் பார்த்து ''ஸ்வாமி, நீர் மஹா பெரிய பண்டிதர். ஆனாலும், கீதை வரிகளைப் படிக்கும்போது ஏன் உச்சரிப்புப் பிழை ஏற்படுகிறது?'' என்று கேட்டார். அதற்கு, ''பிரபு, எப்படியாவது கீதையை மனப்பாடம் செய்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் தினமும் தவறாமல் பாராயணம் செய்கிறேன். ஒவ்வொரு முறையும் ஏடுகளைத் திறந்தால் அதில் பகவான் கிருஷ்ணன்தான் என் கண்களுக்குத் தெரிகிறானே தவிர, எழுத்துக்கள் சரியாகத் தெரிவதில்லை'' என்றார்  கோபால பட்டர். உணர்ச்சிவசப்பட்ட சைதன்ய மஹா பிரபு, கோபால பட்டரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார்.

''எவன் ஒருவன் கீதையின் வாசகங்களிலும் வரிகளிலும் கிருஷ்ணனைக் காண்கிறானோ, அவனால்தான் கீதையின் தத்துவங்களை நன்கு உணரமுடியும்'' என்றார் மஹாபிரபு.