Published:Updated:

சக்தி சங்கமம

நமக்கு இஷ்டம்... கடவுளுக்கு இஷ்டமா?டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவுடன் வாசகர்கள் கலந்துரையாடல்

சக்தி சங்கமம

நமக்கு இஷ்டம்... கடவுளுக்கு இஷ்டமா?டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணாவுடன் வாசகர்கள் கலந்துரையாடல்

Published:Updated:

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மியூஸிக் அகாடமிக்கு அருகிலேயே, இன்னொரு மியூஸிக் அகாடமி இருக்கிறதே... தெரியுமா உங்களுக்கு? அந்த அகாடமியை, இசைத் துறையின் பல்கலைக் கழகம் என்றும் சொல்லலாம். சங்கீத ஜாம்பவான் என்றும் பெருமைபட விவரிக்கலாம். அந்த இசைமேதை... டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா.

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்று இவர் பாடி அழைத்தால் போதும்... அந்தக் கண்ணனே ஓடி வந்துவிடுவான். அவரின் குரலும் அதில் இருந்து வெவ்வேறு விதமாக வெளிப்படுகிற குழைவும், நெகிழ்வும் இசை ரசிகர்களுக்கு மெகா விருந்து; மகா மருந்து.

சக்திசங்கமம் நிகழ்ச்சியில் இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவை சந்திக்க, பத்மலதா ராமானந்த், சேதுராமன், லலிதா, சுகன்யா சிவா, ராதா சுதர்சனம், நல்லசிவம், சுபஸ்ரீ, ஸ்ரீநிவாசன், உமா, சாருலதா, புவனேஸ்வரி ஆகியோர் ஆர்வத்துடனும், அதேநேரம் மூன்று தலைமுறைக்கும் மேலாக கர்னாடக சங்கீதத்தில் ஒரு ராஜாங்கமே நடத்திவரும் மேதையைப் பார்க்கப் போகிறோம் என்கிற லேசான பதற்றம் ப்ளஸ் பயத்துடனும் வந்திருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சக்தி சங்கமம

''நீங்க எல்லாரும் வந்தது ரொம்ப சந்தோஷம். வாங்கோ, வாங்கோ!'' என்று பளீர் புன்னகையும், வாஞ்சையான பார்வையுமாக வரவேற்றார் பாலமுரளி கிருஷ்ணா.

''நீங்க எல்லாரும் பாடுவேளா? பாட்டுன்னா, கச்சேரி பண்றதையெல்லாம் சொல்லலே! சாதாரணமா பாடுவீங்களானு கேட்டேன். எல்லாரும் பாடுங்கோ. பாட்டு, ஆத்மாவிலேருந்து வர்ற விஷயம். அதனாலதான் ஒரு பாட்டு, நம்மளை உற்சாகமாக்கிடுது. மொத்தக் கவலையையும் போக்கிடுது'' என்றார், சிரித்துக் கொண்டே!

ஒரு சின்ன அமைதி. அந்த அமைதி, கேள்விகள் கேட்க வாசகர்களை தயார் படுத்துவதுபோல அமைந்தது. அதையடுத்து வாசகர்கள் மெள்ள கேள்விகளைக் கேட்கத் துவங்கினார்கள்.

''உங்களுக்குள் இருந்த இசை ஞானத்தை முதலில் அறிந்தவர் யார்?'' என்று வாசகி சுகன்யா உரையாடலைத் தொடங்கி வைத்தார்.

 ''எல்லாம் பகவானின் அருள். இதோ... இந்த நிமிஷம் வரைக்கும் குரல் பயிற்சி எடுத்துக்கிட்டதில்லை. சங்கீதம் பெரிசா தெரியாது. கச்சேரிக்கு முன்னாடி, இப்படி இப்படில்லாம் பாடணும்னு எந்தத் திட்டமிடலும் வெச்சுக்கறது இல்லை. இது, தெய்வ சங்கல்பம். இதைப் பெருமையாவோ தன்னடக்கமாவோ சொல்லிக்கலை. நிஜம் இதுதான்.

ஏழு வயசுல கச்சேரி பண்ண ஆரம்பிச்சேன். பாருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுதான் என்னோட குருநாதர். அவர்தான் எனக்கு என்னெல்லாம் வரும், எங்கிட்டேருந்து எதெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும்னு பயிற்சி கொடுத்து உருவாக்கினார். என் அப்பா பட்டாபிராமய்யா மிகப்பெரிய புல்லாங்குழல் வித்வான். அம்மா பிரமாதமா வீணை வாசிப்பாங்க. தாத்தாவும் இசைக்கலைஞர்தான். பாரம்பரியம் மிக்க ஓர் இசைக் குடும்பத்துலேருந்து வந்ததுகூட, என் இந்த வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் காரணமா இருக்கலாம்.''

சக்தி சங்கமம

''இசைத் துறை மட்டும் இல்லாம, சினிமாலயும் நடிச்சிருக்கீங்க. பக்த பிரதலாதன் படத்துல நாரதரா நடிச்சதுக்கு நிறையப் பாராட்டுக்கள் குவிஞ்சுதாமே..?'' என்று வாசகி சுபஸ்ரீ கேட்டார்.

 ''நாரதர் வேஷத்துக்குப் பாராட்டுக்கள் கிடைச்சது இருக்கட்டும். ஆனா, அதுக்குப் பிறகு சான்ஸ் ஏதும் வரலியே! தவிர, அடுத்தடுத்தும் நாரதர் மாதிரியான கேரக்டரே வந்துச்சு. நான் வேணாம்னுட்டேன். ஏன்னா, நாரதருக்கு ஜோடி கிடையாது. ஹீரோயின் இல்லாம எதுக்காக  நடிக்கணும்னு விட்டுட்டேன். சான்ஸ் வேற கிடைக்கலியா... நல்லதாப் போச்சுனு  பேசாம இருந்துட்டேன்'' என்று வெடிச்சிரிப்பு சிரித்தார் பாலமுரளி கிருஷ்ணா. அவருடன் சேர்ந்து வாசகர்களும் பலமாகச் சிரித்தார்கள்.

''நீங்கள் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறீர் கள். அதில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்று எதைச் சொல்வீர்கள்?'' என்று வாசகர் நல்லசிவம் கேட்க...

''மன்னிக்கணும். பிடிக்காத விஷயங்களை நான் செய்யறதே இல்லை. ஒரு விஷயத்தை பிடிச்சுப் பண்ணணும். மனசு லயிச்சுப் பண்ணணும். பிடிச்சும் லயிச்சும் பண்ற விஷயங்கள் நல்ல விதமாத்தான் வெளிப்படும்னு நம்பறேன்!'' என்று உறுதியான பதில் வந்தது பாலமுரளிகிருஷ்ணாவிடம் இருந்து.

''கற்றுக் கொடுத்த குருவின் பெயரைக் காப்பாற்றிவிட்டதாக முதன்முதலில் எப்போது உணர்ந்தீர்கள். அவருக்கு எதைச் சமர்ப்பிக்க விரும்புகிறீர்கள்?'' - என்று வாசகி சாருலதா தன் கேள்வியை முன்வைத்தார்.

''என் குருநாதர், வருடாவருடம் அவருடைய குருவுக்கு ஆராதனை விழா நடத்துவார். அந்த விழாவில் என்னையும் பாட வைச்சார். எனக்கு அடுத்தாப்ல, முசுனூரி சூரிய நாராயண மூர்த்திங்கறவரோட, கதா காலட்சேபம் இருந்துச்சு. மிகப்பிரமாதமா கதை சொல்வார். அதைக் கேக்கறதுக்கு ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவாங்க. அவருக்கு முன்னாடி என்னைப் பாட வைச்சா, அந்தக் கூட்டம் என் பாட்டையும் கேக்கும்னு யோசிச்சு, நேரம் ஒதுக்கினாங்க. 8 மணிக்கு ஆரம்பிச்சு, 9 மணிக்கு முடிக்கணும். ஆனா, பாட்டு பாட ஆரம்பிச்சதும் நேரம் போனதே தெரியலை எனக்கு. பத்தரை மணியைத் தாண்டியும் பாடினேன். அப்புறம் குருநாதர் வந்து, 'போதும்டா! முடிச்சுக்கோ’ன்னார். மேடைக்குப் பின்பக்கம் என்னை கூட்டிட்டுப் போய் திருஷ்டி சுத்திப் போட்டார். கட்டியணைச்சுக் கண்ணீர் விட்டார். இதுதான் குருவின் பெயரைக் காப்பாத்தறதுன்னு நினைக்கிறேன். தவிர, எல்லாமே குருவுக்கு சமர்ப்பணம். இந்த ஞானம், புகழ், கௌரவம் எல்லாத்தையுமே அவருக்கு சமர்ப்பணம் செய்றேன்.

என்னோட குரு, ஆல் இண்டியா ரேடியோல டாப் ஆர்ட்டிஸ்ட்! நான் ஏ கிரேடு. குருவுக்கு வெள்ளிக்கிழமை பாட வாய்ப்பு கிடைக்கும். எனக்கு ஞாயித்துக் கிழமை கிடைக்கும். இதுக்காக ரெண்டு பேரும் வியாழக்கிழமை சாயந்திரம் சென்னைக்குக் கிளம்புவோம். ரயில்ல அஞ்சு ரூபா டிக்கெட். குருவோட சகோதரர் மயிலாப்பூர் லஸ் பக்கத்துல இருந்தார். அவரைப் பார்த்துட்டு ரேடியோ ஸ்டேஷனுக்குப் போவோம். வெள்ளிக் கிழமை குருநாதர் பாடுவார். அப்புறம் சனிக் கிழமை ரெஸ்ட். ஞாயித்துக்கிழமை நான் பாடுவேன். அப்புறம் கிளம்பி ஊருக்கு வருவோம். அப்பா என் குருநாதரா இருந்தார். அதேபோல குருநாதரும் அப்பா மாதிரியே என்னைப் பார்த்துப் பார்த்து வளர்த்தார்'' என்று பழைய நினைவுகளில் மூழ்கித் திரும்பினார்.

சக்தி சங்கமம

''உங்களின் இஷ்ட தெய்வம் எந்தக் கடவுள்னு தெரிஞ்சுக்கலாமா சார்?'' - என்று வாசகி புவனேஸ்வரி கேட்டார்.

''நமக்கு இஷ்டமான தெய்வத்தை தேர்ந்தெடுக்கறதா  அல்லது தெய்வத்துக்கு இஷ்டமா நாம இருக்கறதா... இதுல எது முக்கியம்? கடவுளுக்கு இஷ்டமா நாம நடந்துக்கணும். அது இசைத் துறையாகட்டும், வேற துறையாகட்டும். எதுவா இருந்தாலும் சரி... வாழ்க்கையை அர்த்தம் உள்ளதா மாத்திக்கணும். எல்லாருக்கும் உபகாரம் பண்ணிண்டு, ஒருத்தருக்கும் சின்ன உபத்திரவம்கூட பண்ணாம, வாழ்ந்தா... கடவுளுக்கு இஷ்டமானவங்களா நாம ஆகிடலாம். ஒவ்வொரு மனுஷாளுக்கும் இதுதான் அவசியமும்கூட!  

மத்தபடி என் இஷ்ட தெய்வம்னு நீங்க கேட்டதால சொல்றேன். அனுமார்தான் என் இஷ்ட தெய்வம். சின்ன வயசுலேருந்து வந்த பழக்கம் இது. எந்தவொரு செயலா இருந்தாலும் சரி, சட்டுன்னு அனுமார்கிட்ட ஒரு வேண்டுதல் வைச்சிருவேன். அவரோட திருநாமத்தை அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பேன். ஸ்ரீஅனுமன் மேல அலாதி பிரியமும் பக்தியும் உண்டு எனக்கு'' என்றார்.

''சொந்த ஊருக்கு, குலதெய்வக் கோயிலுக்கு என்று அடிக்கடி செல்வது உண்டா?'' என்று கேட்டார் வாசகர் சேதுராமன்.

''ஆந்திர மாநிலம்தான் பூர்வீகம். அங்கே, கிழக்கு கோதாவரி மாவட்டத்துல, அந்தர்வேதி பாலம்தான் ஊரு. சொந்த ஊருக்கு போறதுங்கற வழக்கம்லாம் இல்லை. சந்தர்ப்பம் அமையும் போது, நேரம் கிடைக்கும்போது போயிட்டு வர்றதோட சரி!

ஆனா, சொந்த ஊரை நினைக்கும்போது, என் பால்யம் சட்டுனு நினைவுக்கு வரும். அப்பாவே குருநாதரைப்போல இருந்து கத்துக் கொடுத்ததெல்லாம் ஞாபகத்துல வந்து மனசை என்னவோ பண்ணும். 'முரளி... கல்யாணி ராகம் பாடு! அப்பதான் ஓமப்பொடி தருவேன்’னு அப்பா ஒரு வார்த்தை சொல்லுவார். உடனே எங்கிருந்துதான் புறப்பட்டு வரும்னே தெரியாது... அப்படி ஒரு வேகம் வரும். கல்யாணி ராகத்துல ஒரு பாட்டுப் பாடுவேன். கை கொள்ளாத அளவுக்கு ஓமப்பொடியும் கிடைச்சிடும். எனக்கு கர்னாடக சங்கீதமும் இஷ்டம்; ஓமப்பொடியும் இஷ்டம்!'' என்று சொல்லிச் சிரிக்கிறார் பால முரளி கிருஷ்ணா.

''இசை, நாடகம், சினிமாத்துறை என பல துறைகளில் இருந்திருக்கிறீர்கள். அந்தக் காலத்துக்கும் இந்தக் காலத்துக்குமான வேறுபாடு களை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' - வாசகி புவனேஸ்வரியின் கேள்வி இது.

''மாறுதல்ங்கறது இயற்கை; இயல்பு! இப்படி மாறிக்கிட்டே இருக்கறதை நாம ஏத்துக்கிட்டுதான் இருக்கோம். ஏத்துக்கத்தான் வேணும். இன்னிக்கு பாலமுரளி கிருஷ்ணாவைப் பார்க்கணும்னு தேடி வர்றீங்க. நாளைக்கு, அப்ப பாப்புலர் யாரோ, அவங்களைத் தேடிப் போவீங்க. இதுல தப்பில்லை. இந்த மாற்றம் எல்லாத் துறைலயும் உண்டு. இசைத் துறையிலயும் இருக்கு. இருக்கணும்!''

சக்தி சங்கமம

''இந்தக் கால இசையைக் கேட்கிறீர்களா? கர்னாடக சங்கீதத்துடன் மேற்கத்திய இசையும் கலப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?'' என்று வாசகி பத்மலதா கேட்டார்.

''ஓய்வு நேரங்கள்ல கேப்பேன். ஆனா, ஓய்வுக்குன்னெல்லாம் நேரம் ஒதுக்கறதே இல்லை. எப்பவும் ஏதாவது பண்ணிக்கிட்டே இருக்கணும். அதான் என் விருப்பம். தவிர, கர்னாடக சங்கீதம் மேற்கத்திய சங்கீதம்னெல்லாம் தனித் தனியா இருக்கிறதா நினைக்கலை. காதுக்கு இனிமையான சங்கீதம் எதுவா இருந்தாலும், அது கர்னாடக சங்கீதமே!'' என்றார் அழுத்தம் திருத்தமாக.

''உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் நிறையப் பேர் உண்டு. குறிப்பாக, கமல்ஹாசன்கூட உங்களிடம் சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாராமே...'' - என்று வாசகர் ஸ்ரீநிவாசன் கேட்க...

''கமல், மகா கலைஞன். கூர்மையான புத்திசாலித்தனம் உண்டு. எதையும் சட்டுன்னு உள்வாங்கிப்பார். அவ்வளவு ஏன்... இப்போ நம்ம தமிழ்நாட்டை ஆட்சி செஞ்சிட்டிருக்கிற ஜெயலலிதா கூட எங்கிட்ட பாட்டு கத்துட்டிருக் காங்க. இசைல பெரிய ஆர்வம் உண்டு அவங்களுக்கு. அவங்க குரலும் பாடுறதுக்கு அத்தனை தோதா இருக்கும். அவங்க கச்சேரிலயோ இல்ல சினிமாலயோ இன்னும் நிறையப் பாடியிருக்கலாம். ஏன் பாடலைனு தெரியலை. ஆனா, இப்ப கமலும் சரி, ஜெயலலிதாவும் சரி... என்னை அடியோடு மறந்துட்டாங்கன்னுதான் சொல்லணும்'' என்று வெள்ளந்தியாகச் சொல்லிப் புன்னகைத்தார் பாலமுரளி கிருஷ்ணா.

''மேடையில் கச்சேரி பண்ணும்போது கையில், பாக்கெட்டில் அல்லது பக்கத்தில் ஏதேனும் ஸ்வாமி படம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற சென்டிமென்ட் உண்டா, உங்களுக்கு?'' என்று வாசகி லலிதா கேட்டார்.

''அப்படியெல்லாம் எந்த சென்டி மென்ட்டும் கிடையாது. இந்தக் கலர், இந்த ஸ்வாமி படம், இப்படி திசை பார்த்து உட்கார்றதுன்னு எந்தப் பழக்கமும் கிடையாது. பகவான் எப்பவும் எல்லா பக்கத்திலயும் பக்கத் துணையா இருக்கார். பக்க வாத்தியக்கார கலைஞர்களும் பக்கத் துணையா இருக்காங்க. எதிர்ல இருக்கற ரசிகர்களும் நம்ம மேல மிகுந்த வாத்ஸல்யத்தோட, பிரியத்தோட இருக்காங்க. இவங்க எல்லாரையும் திருப்திப்படுத்தணும்; சந்தோஷப் படுத்தணும்; பெருமைப்படுத்தணும். அவ்வளவுதான் நினைச்சுப்பேன்!

சக்தி சங்கமம

திருவையாறில் ஒரு ஆராதனை விழா. அப்ப எனக்கு 11 வயசு. அங்கே விழாவுல, முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திருந்தேன். ஸ்வாமிக்கு அபிஷேகம் நடந்துட்டிருந்துது. யாரோ ஒருத்தங்க பாடிட்டிருந்தாங்க. அவர் பாடி முடிச்சதும், 'நீ பாடு... நீ பாடு...’னு முத்தையா பாகவதர் சொல்ல, நான் பாட ஆரம்பிச்சேன். மொத்தக் கூட்டமும் 'யார் பாடுறது?’னு சுத்திச் சுத்திப் பார்க்க ஆரம்பிச்சுது. கடைசியாதான், முத்தையா பாகவதர் மடியில உக்கார்ந்திண்டிருக்கிற பய பாடுறான்னு தெரிஞ்சுது அவங்களுக்கு.

பெங்களூரு நாகரத்தினம்மாங்கறவங்க, 'நாளைக் காலைல இவன் பாடட்டும். நான் என் டைமை இவனுக்காக விட்டுத் தரேன்’னு சொன்னாங்க. மறுநாள், மாபெரும் இசைக்கலைஞர்களோட நிகழ்ச்சிகளுக்கு நடுவே பாடினேன். 'என் நேரத்தையும் பையனுக்கே தரேன்’னு அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முன்வந்தார். மகாராஜபுரம் விஸ்வநாத அய்யரும் அவர் நேரத்தை எனக்குத் தந்து பாடச் சொன்னார். ஓர் இளம் பாடகன், திருவையாறு கச்சேரில ஒன்றரை மணி நேரம் பாடினது, அதுதான் முதல்முறை. மேடையேறும்போது பல தருணங்கள்ல, 11 வயசுல திருவையாறில மேடையேறின அனுபவம்லாம் சட்டுன்னு நினைவுக்கு வரும். இப்பவும் ஞாபகம் வந்துடுச்சு!'' என்று சொல்லிப் பூரிக்கிறார் பாலமுரளி கிருஷ்ணா.

தொடர்ந்து...

? இசையால் மனசை அமைதிப் படுத்த முடியுமா?

? அமிர்தவர்ஷினி ராகத்துல பாடினா மழை வரும்னு சொல்லுவாங்க. அதைப் பற்றி சொல்லுங்களேன்...

? 'ஒருநாள் போதுமா’ன்னு ஆணவத் த்வனியில் ஒரு பாட்டு, 'தங்கரதம் வந்தது வீதியிலே’னு குழைஞ்சும் இழைஞ்சும் ஒரு பாட்டு...

சக்தி சங்கமம

- இதுக்காக என்ன முயற்சி எடுத்துக்கிட்டீங்க?

- வாசகர்கள் தொடுத்த இதுபோன்ற இன்னும்பல கேள்விகளும், அதற்கு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அளித்த சுவாரஸ்ய பதில்களும் ... அடுத்த இதழில்!

அடுத்த சங்கமம்...

வாசகர்களே! அடுத்த சக்தி சங்கமத்தில் உங்களுடன் கலந்துரையாடப் போகிறார்... டாக்டர் பத்மா சுப்ரமணியம். ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை 26.8.14-க்குள் எங்களுக்குக் கிடைக்குமாறு அனுப்பி வையுங்கள். சிறந்த கேள்விகளை எழுதியனுப்பிய வாசகர்களில் சிலர், 'சக்தி சங்கமம்’ கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism