Published:Updated:

கலகல கடைசிப் பக்கம்

எல்லாம்... தலையெழுத்து!வீயெஸ்வி, ஓவியம்: சசி

கலகல கடைசிப் பக்கம்

எல்லாம்... தலையெழுத்து!வீயெஸ்வி, ஓவியம்: சசி

Published:Updated:

''எல்லாமே என் தலையெழுத்து. வேறென்னத்த சொல்ல..!'' - புல் தடுக்கித் தரையில் விழுந்தாலும், தலைவிதியை நொந்து கொள்ளும் எனது நாற்பதாண்டு கால நண்பர் ஒருவரின் தாரக மந்திரம் இதுதான்!

ப்ளஸ் டூ தேர்வில் எல்லா சப்ஜெக்டுகளிலும் ஜஸ்ட் பாஸ் செய்தபோதும் சரி... 'கல்லூரி படிப்பிலாவது ஒழுங்கா கவனம் செலுத்து’ என்று பெரியவர்கள் அக்கறையோடு அட்வைஸ் சொன்னபோதும் சரி... ''என்ன படிச்சு என்ன பிரயோஜனம்? எனக்குக் குறைஞ்ச மார்க்தான் கிடைக்கப் போகுது. ஹூம்... என் தலையெழுத்த மாத்த முடியுமா, என்ன?'' என்று எதிர்க் கேள்வி கேட்டு, தனது தாரக மந்திரத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொண்ட பராக்கிரமசாலி அவர்!

கலகல கடைசிப் பக்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீண்ட நாட்களுக்கு பிறகு, போன வாரம் அவரைச் சந்தித்து, ''என்ன... ஆபீஸ் வேலையெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?'' என்று விசாரித்தேன்.

''ப்ச்... எதுவும் சொல்லிக்கிற மாதிரி இல்லே. எனக்குப் பின்னாலே வந்தவனெல்லாம் இன்னிக்கு மானேஜர் நாற்காலில உட்கார்ந்து காலாட்டிட்டு இருக்கான். நான் மட்டும் இன்னமும் குமாஸ்தாவாவே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன். எல்லாம் என் தலையெழுத்து!''

எனது ஒற்றை வரி விசாரிப்புக்கு, அநேக புலம்பல்களுடன் முத்தாய்ப்பாக தனது தாரக மந்திரத்தையும் உதிர்த்துவிட்டார் நண்பர். அது மட்டுமா? அலுவலகத்துக்கு தினமும் கால் மணி நேரம் தாமதமாகச் சென்று, அரை மணி நேரம் முன்கூட்டியே கிளம்பிவிடுவதைச் சொல்லிக்கொள்வதில், அவருக்குக் கூச்ச நாச்சம் இல்லாத பெருமிதம் வேறு!

சரிதான், மனிதர் இன்னும் மாறவில்லை! பேச்சை  மாற்றலாம் என்று எண்ணி, குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன். அதற்கும் ''என்னத்தச் சொல்றது? வீட்ல அவ வெச்சதுதான் சட்டம். பசங்களுக்கும் அவ சொல்றதுதான் வேத வாக்கு. ம்... எல்லாம் என் தலையெழுத்து!'' என்று தன் நீள் புலம்பலைத் தொடங்கிவிட்டார். அவர் பேசப் பேச... எங்கோ புராணப் பிரசங்கம் ஒன்றில் கேட்ட குட்டிக் கதை ஒன்று நினைவுக்கு வந்தது.

காட்டில் ஒரு விறகுவெட்டியும் சந்நியாசியும் சந்தித்துக் கொண்டார்கள். சந்நியாசி, தான் இல்லறம் வெறுத்துத் துறவு ஏற்ற கதையை விறகுவெட்டியிடம் சொல்லிக்கொண்டு வந்தார்.

''ஏன் சாமி... கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தீங் கன்னா, பொஞ்சாதி பிள்ளைகளை விட்டுட்டு, இப்படித் தனி மரமா அலைய வேண்டியது வந்திருக்காதே?'' என்றான் விறகுவெட்டி.

''என்னடாப்பா பண்றது? தலையெழுத்த மாத்த முடியுமா? இப்ப, உன்னையே எடுத்துக்கோ. மாடா உழைச்சு, விறகு வெட்டி கஷ்ட ஜீவனம் நடத்துறே! என்னைப் பாரு... ஊருக்கு ஊர் பி¬க்ஷ வாங்கிச் சாப்பிட்டுக்கிட்டு, பிக்கல்- பிடுங்கல் இல்லாம சொகுசா இருக்கேன்'' என்றார் சந்நியாசி.

அதற்கு விறகுவெட்டி, ''இந்தத் தலையெழுத்தை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருதுங்க சாமி!''என்றான். ''ஏண்டாப்பா?'' என்று கேட்டார் சந்நியாசி.

''நல்லா உத்துக் கேளுங்க... உறுமல் சத்தம் கேட்குதா? பக்கத்துப் புதர்ல கரடி இருக்குன்னு நினைக்கிறேன். எப்ப வேணாலும் அது நம்ம மேல பாயலாம்!'' என்றவன், சட்டென்று அருகில் இருந்த மரத்தில் ஏறத் தொடங்கினான். ''ஐயையோ..! எனக்கு மரம் ஏறத் தெரியாதே!'' என்று சந்நியாசி கத்த... ''அதுக்கென்னங்க பண்றது சாமி! உங்க தலையெழுத்து இப்படின்னா மாத்தவா முடியும்!'' என்றானாம்.

விதி மீது பழிபோடுபவர்கள் கதி இப்படித்தான் ஆகும்!  

திருவள்ளுவர் அழகாகச் சொல்லியிருக்கார்...

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

சோம்பலில் மூழ்கிப்போய்விடாமல் இடைவிடாமல் முயற்சி செய்பவர்கள், இடையூறு செய்யும் விதியைக்கூட வென்று, செயலை முடித்துக்காட்டுவார்களாம்.

இதையெல்லாம் நண்பரிடம் எடுத்துச்சொல்ல விரும்பவில்லை. சொன்னாலும், 'அவருக்கென்னங்க... ஈஸியா ஒண்ணரை வரியில எழுதிட்டுப் போயிட்டாரு. அனுபவிக்கிற எனக்குத்தானே தெரியும்! ஹூம்... எல்லாம் என் தலையெழுத்து!’ என்பார். இவர்களுக்கெல்லாம் விதியேதான் தக்க பாடம் நடத்தவேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism